
லக்ஷ்மி சிவச்சந்திரன்
`சினிமா இண்டஸ்ட்ரி’ என்று அழைக்கப்படும் எங்கள் திரைப் படத் துறையிலும், ஆன்மிக ஈடுபாட்டுக்குக் குறைவே இல்லை. எஸ்.பி.பி. சாரைப் பற்றிச் சொன்னேன். அவரைப் போலவே நான் மறக்க முடியாத இன்னொரு ஆத்மா ‘ஆச்சி’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா.

ஆச்சியைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் சொல்லிக் கொண்டே போகலாம். எப்போதும் அவர் வாயில் வரும் வார்த்தை கள், ‘எங்கம்மா... எம் புள்ள..!’ அவருக்கு எல்லாமே அவருடைய அம்மாவும் மகனும்தான். எப்போதும் அவர்களைப் பற்றிய சிந்தனை... கவலை... பிரார்த்தனை... சதாசர்வ காலமும் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற நினைப்புதான்!
இந்த இரண்டு ஜீவன்களுக்காகவே உழைத்த ஒரு ஜீவன் என்று சொல்லலாம். அளவுகடந்த இறைபக்தி; தான் செய்யும் தொழில் மீது அளவிட முடியாத பக்தி அவருக்கு! ஒரு முறை, ஆச்சியின் மகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம். யாரோ அவருக்கு சொல்லியிருக்கிறார்கள்... ‘இந்தப் பூஜைகள் எல்லாம் செய்தால், இப்படியெல்லாம் சாப்பிட்டால் உங்க மகனுக்கு உடல்நிலை சரிஆகும்’ என்று.
ஒரு நாள் கோவளத்தில் ஷூட்டிங். நான் அங்கே போய்விட்டேன். அப்போதெல்லாம் கோவளத்தில் ஒரு ஈ, காக்கை கூட இருக்காது. சென்னையிலிருந்து கோவளம் போகவேண்டும் என்றாலே, ‘ஐயய்யோ அவ்வளவு தூரமா? காடு மாதிரி கிடக்குமே!’ என்றுதான் தோன்றும். இப்போதிருக்கும் கோவளமும் இல்லை; இப்போது போல படப்பிடிப்புகளில் ‘கேரவன்’ வாகனங்களும் அப்போது கிடையாது.
அன்றைய படப்பிடிப்பின் இடைவேளையில் ஓய்வறைக்குச் செல்லவேண்டும் என்றால், ‘கார் எடுத்துக்கிட்டு ஒரு கிலோமீட்டர் போனால் அங்கே ஒரு வீடு வரும் மேடம். அங்கே இருக்கிறவங்ககிட்ட கேட்டுட்டு, ரெஸ்ட் ரூம் போகலாம்’ என்றார்கள். சரியென்று கிளம்பியபோது, ஆச்சி வேகமாக வந்து ‘லக்ஷ்மி.. நானும் வர்றேன்’ என்றார்.
ஆனால் அங்கே போனபிறகுதான் தெரிந்தது, ஆச்சி அவசரமாக வந்து சேர்ந்துகொண்டதன் காரணம். அவர் ஓய்வறைக்காக வரவில்லை. “இங்கே பக்கத்தில் ஒரு புற்றுக் கோயில் இருக்கு. அங்கே பால் ஊத்துறதா வேண்டியிருக்கேன். காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடாம விரதமா இருக்கேன். பால் எல்லாம் கொண்டுவந்திருக்கேன்” என்றார்.
அவர் சொன்ன புற்றுக்கோயில் எங்கோ வனாந்தரத்துக்குள் இருந்தது. யாரோ சொன்னார்கள் என்று வேண்டிக்கொண்டு, அந்தக் கோயிலைத் தேடிப்பிடித்து பாலை ஊற்றிவிட்டு வந்தார்; எதுவுமே சாப்பிடாமல் மாலை வரை வேலை பார்த்தார்.
‘ஆச்சி கொஞ்சம் இளநீர் குடிங்க ஆச்சி...’, ‘ஒரு டம்ளர் தண்ணி யாவது குடிங்க ஆச்சி’ என்றெல்லாம் நாங்கள் எவ்வளவோ சொல் லிப் பார்த்தும் ஆச்சி கேட்கவில்லை.
“வேண்டாம்... வேண்டாம்... எம்புள்ளைக்கு உடம்பு சரியாகணும்” என்று சொல்லி பட்டினியாகவே வீட்டுக்குச் சென்று விட்டார். இரவு 9 மணிக்கு குளித்துவிட்டு `சாப்பிடச்சொன்னார்கள்’ என்று அதன் பிறகு சாப்பிட்டிருக்கிறது அந்த ஜீவன்.
அதேபோல, ஆச்சியின் தொழில் பக்தியைப் பார்த்து நான் வியந்த கணங்கள் அநேகம். அவருடைய இறைபக்திக்குக் கொஞ்ச மும் குறைந்ததல்ல அது.
“இந்த மேக்கப் போட்டுக்கிட்டு வரணும், வாழணும்னு வேண்டிக்கிட்டு வந்திருக்கோம் லக்ஷ்மி. நாம அதுக்கு மரியாதை கொடுக்கணும்” என்பார் அடிக்கடி.
ஒருசில நேரங்களில், காலை 9 மணிக்குத் தொடங்கும் படப் பிடிப்பு மதியம் ஒரு மணியுடன் முடிவடைந்துவிட்டால், அடுத்த நிமிஷமே நாங்கள் எல்லோரும், தலையிலிருக்கும் அலங்காரத்தைக் கலைத்து, மேக்கப்பைத் துடைத்துவிட்டு, வீட்டுக்கு ஓடுவதற்குத் தயாராக இருப்போம். வீட்டுக்குப் போய் குளித்து, ஃப்ரெஷ் ஆகி அடுத்த வேலையைப் பார்க்க ஆவலாக இருப்போம். ஆனால் ஆச்சி அப்படியல்ல. சாயந்தரம் 6 மணி வரையும்கூட அந்த அலங் காரத்துடனேயே (மேக்கப்) அப்படியே இருப்பார்.

“ஏன் ஆச்சி.. ஷூட்டிங்தான் முடிஞ்சிடுச்சே... இன்னும் ஏன் அப்படியே இருக்கீங்க? மேக்கப்பைக் கலைக்கலாமே!” என்று ஒரு முறை நான் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்...
“நாம வேண்டிக்கிட்டு இந்த அரிதாரம் பூசி வந்திருக்கோம். நம்முடைய விருப்பம் நமக்கு நிறைவேறணும். நம்மளுக்காக போறும் போறும்னு மேக்கப் எல்லாம் கலைக்கக் கூடாது. போட்டுக்கிட்டு இருக்கணும்” என்றார் பயபக்தியுடன்.
இன்னொரு சம்பவம்... ஷூட்டிங்குக்குப் போகும்போது, கம்பெனியிலிருந்து ஒரே கார்தான் அனுப்புவார்கள். ஆச்சியை நாங்கள் போய் ‘பிக்கப்’ செய்துகொண்டுதான் போவோம். லேடி ஆர்டிஸ்ட் நான் இருந்தால் ஆச்சியை ‘பிக்கப்’ செய்துகொள்வேன். வித்யா இருந்தார் என்றால், அவர் வந்து என்னையும் ஆச்சியை யும் ‘பிக்கப்’ செய்வது வழக்கம். போகும் வழியில் பக்கத்தில் யார் வீடு இருக்கிறதோ, அவர்களை அழைத்துக்கொள்வோம்.
ஒரு முறை எனக்கு வந்த காரில் நான் ஆச்சியையும் ஏற்றிக் கொண்டு போகவேண்டும், ஆனால் அவருக்குப் படப்பிடிப்பு தாமதமாகத்தான் இருந்தது. அப்போது மொபைல் போன் எல்லாம் இல்லை அல்லவா! நான் அங்கே போய் இறங்கினேன். அதற்குள் போன் செய்து சொல்லியிருப்பார்கள் போல. ‘ஆச்சிக்கு ஷூட்டிங் காலையில் இல்லை. லக்ஷ்மி அம்மாவுக்கு மட்டும்தான், அவங்களை வரச்சொல்லிடுங்க’ என்று.
‘சரி..இறங்கியது இறங்கிட்டோம். ஆச்சியைப் பார்த்துட்டுப் போயிடுவோம்’ என்று எண்ணி, “எங்கே ஆச்சியைக் காணோம்?” என்று வீட்டில் இருந்தவர்களிடம் கேட்டேன். பூஜை அறையைக் காட்டினார்கள்.
அங்கே.. விளக்குகள் எரிந்துகொண்டிருக்க... முருகன் படத்துக்கு முன்னே, ஆச்சி தனியாக அமர்ந்துகொண்டிருந்தார். அவருடைய வாய் எதையோ முணுமுணுத்தபடி இருந்தது.
‘ஏதோ மந்திரம் சொல்லியபடி பூஜையில் இருக்காங்க. தொந்தரவு செய்யவேண்டாம்’ என்று நான் வெளியே வந்துவிட்டேன்.
ஹாலில் அமர்ந்திருந்த ஆச்சியின் அம்மா, “இன்னிக்கு சஷ்டிம்மா. இன்னிக்கு ஒரே நாளில் 37 தடவை கந்தசஷ்டிக் கவசம் சொன்னால், மகனுக்கு உடம்பு சரியாயிடும்னு காலையிலிருந்து சஷ்டிக் கவசம் சொல்லிட்டிருக்காம்மா” என்றார். நான் அப்படியே விக்கித்துப் போனேன். இப்படித் தன் பிள்ளைக்காக பாசத்தோடு இறைவனை உலுக்கிய ஒரு தாயை திரைத்துறையில் நான் பார்த்த தில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு நாள் இல்லை... ஒரு வருடம் இல்லை... கடைசிவரை தன் உடலில் உயிர் ஒட்டியிருந்த கடைசி நொடி வரை... ‘என் மகன் சரியாகணும். நான் எந்தக் கோயிலுக்குப் போகணும். எந்த சாமி யைக் கும்பிடணும். இன்னிக்கு என்ன விரதம் இருக்கணும்...’ – இதுதான் அந்தத் தாயின் சுவாசமாகவே இருந்தது.
‘சினிமாவில் இருக்கறவங்க விதம்விதமா சாப்பிடுவாங்க, அவங்க மணிக்கொரு முறை ஜூஸ் கேட்டால் கொடுத்துடுவாங்க, அவங்க என்ன கேட்டாலும் வந்துரும்’ என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
இல்லைங்க... உணரணும் நீங்க... நாங்க இந்தப் பிறப்பில் இந்த உடலை எடுத்து, மக்களைச் சிறிது நேரம் கவலைகளை மறக்க வைத்து மகிழ்விக்கவே வந்திருக்கிறோம். ஆனால் அந்தத் தொழிலை நாங்கள் தெய்வமாக நினைக்கிறோம். இந்தத் தொழிலைக் கொடுத்த அந்தத் தெய்வத்தையும் விடாமல் கும்பிடுகிறோம்.
‘இறைவா.. உடம்பு சரியாகணும்’ என்று வேண்டி, எத்தனையோ பிரார்த்தனை களைச் செய்யும் பலபேர் திரையுலகில் இருக்கின்றனர். அவர்களில் ஆச்சி மறக்க முடியாத மனுஷி!
- கடாட்சம் பெருகும்...
குபேரனுக்கு வழிபாடு!
தீபாவளி அன்று லட்சுமிகுபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் விசேஷம். குபேரனுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டிலிருந்து நம் இருகைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.
இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, ‘அளகாபுரி அரசே போற்றி...’ என்று தொடங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபடவேண்டும்.
தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்தியம் செய்து, தீப- தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்யலாம். தீபாவளி தினத்தன்று புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் சிறப்பு.
- வி.ராஜு, தூத்துக்குடி