Published:Updated:

லட்சுமி கடாட்சம் - 18

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம் - 18

லட்சுமி கடாட்சம்

Published:Updated:
லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

எத்தனையோ விபத்துகளில் இருந்து எப்படியெப்படியோ காப்பாற்றப்பட்டிருக்கிறேன். ஏன் காப்பாற்றப்பட்டேன்... ஏதோ ஒரு காரணம் இருக்கிறது... எல்லா காரியங்களும் ஒரு காரணத்துடன்தானே நடக்கின்றன!

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்


இன்றைய வாழ்க்கையில், இதோ இந்தக் கணத்தில் இந்த இதழுக்கான கட்டுரை எழுதுவதற்காகக்கூட நான் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இதில் சின்னவர், பெரியவர் என்பதெல்லாம் இல்லை.

அவனுக்கு முன் எல்லோரும் சமம்!

ஏன், எதற்கு, எதனால் என்று கேள்வி கேட்கும் அருகதையே நம்மை மாதிரி மனிதர்களுக்கு இல்லையோ; அப்படிக் கேட்பதே வீணோ... இதுபோன்ற கேள்விகளும் நமக்குள் தோன்றும். எப்போது தெரியுமா?

அடிமனதில் பயங்கர வேதனை தோன்றும்படி அடிபடும்போது, என்ன செய்ய வேண்டும் என்றே புரியாது. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலைதான்.

சில பேர். இதுபோன்ற பிரச்னைகள் வரும்போது, கையில் ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். ‘ஜோஸ்யம் பார்க்கிறேன்... என்ன பரிகாரம்னு பார்க்கிறேன்...’ என்று. சில பேர் விரதம் இருப்பார்கள். இன்னும் சிலர் அதைப் பண்றேன், இதைப் பண்றேன் என்று வேண்டுவார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட சரணாகதி அடைந்துவிடுவது மிக மிக நல்லது!

இப்படிச் சொல்லிவிடலாம்தான். ஆனால் அது முடியுமா... சாத்தியமா?

சாத்தியப்படுத்த வேண்டும்!

`சரணாகதி அடைதல் என்றால் என்ன; நமக்கு எப்படி அந்த ஞானம் வரும்?' சில தருணங்களில் எனக்குள் இந்தக் கேள்விகள் தோன்றும். அப்புறம், ஒரு ‘எஸ்கேப்பிஸ்ட்’ மாதிரி, அன்று ஒரு வேலை நடக்கவில்லை என்றால் ‘பகவானே இதை நடத்திக்கொடு’ என்று அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி, அவருக்கு வேண்டுதல் கடிதங்கள் எல்லாம் எழுதி சமர்ப்பித்து...

ஆச்சா... எல்லாம் முடிந்ததா... அடுத்தது என்ன வேலை?!

`ஆங்... நான் ரெடி. புரொடக்‌ஷன் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணிட்டாங்க. ஷூட்டிங் கிளம்பணும்...' அல்லது.. `ஆஹா அடுப்பில எதையோ வச்சோமே... மறந்து போய்ட்டோமே!' என்று ஓடுவோம்.

இல்லையென்றால், `கேட்ல யாருன்னு பாரு... மோட்டார் போட்டியே, ஆஃப் பண்ணிட்டியா...' என்றெல்லாம் லௌகீகத்துக்குப் புத்தி வந்துவிடுகிறது அல்லவா? அன்றைய பொழுது பற்றிய சிந்தனை நம்மை ஆக்ரமித்துவிடுகிறது... இல்லையா?!

யோசித்துப் பார்த்தால் எது சரி, எது தவறு என்பது புரியவில்லை.

ஒரு பிரச்னை எனில் அதையே நினைத்துக்கொண்டு, கடவுளிடம் அழுது புலம்பி வேண்டிக்கொண்டே இருக்கவேண்டுமா அல்லது அவரிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டோம் அவர் பார்த்துக் கொள்வார் என்று நிம்மதியாக நம் வேலையைப் பார்க்க வேண்டுமா?

என்னைக் கேட்டால், ‘எது நடக்கிறதோ நடக்கட்டும்; நான் உறுதியாக இருப்பேன். ஏனென்றால், நான் இறையம்சம். இறைவன் என்னுடன் இருக்கிறான்’ எனும் மனப்போக்கை வளர்த்துக்கொண்டு வாழ்வது மிக நல்லது.

இந்த மனப்போக்கு எனக்கு ஒரு 17, 18 வயதிலேயே வந்துவிட்டது. 19 வயதில், முதல் குழந்தையைப் பெற்றுக்கொண்டு, அதைத் தூக்கிக்கொண்டு... ஷூட்டிங் இடங்கள், அங்கே இங்கே என்று போகிற இடமெல்லாம் நத்தை தன் ஓட்டைச் சுமப்பது போல பிள்ளையைச் சுமந்துகொண்டு... அப்பப்பா... வாழ்க்கை எத்தனையோ விதமான வண்ணங்களை எனக்குக் காட்டிவிட்டது. கஷ்டங்கள்கூட அந்த வண்ணங்களில் ஒன்றுதான். ஏன், கறுப்பும் ஒரு வண்ணம்தானே! இது கறுப்பு, இது கஷ்டம் என்று ஏன் சொல்ல வேண்டும்! ஒரு கஷ்டம் என்று வந்தால்தானே சுகம் என்ற ஒன்று தெரிகிறது. ஒரேயடியாக சுகமாகவும் சந்தோஷமாகவும் இருந்துவிட்டால், நாம் தெய்வத்தை மதிப்போமா?!

சும்மா ஒரு பெருமைக்கு ‘நானும் பெரிசா பூஜை பண்றேன்; எல்லா விரதங்களும் கடைப்பிடிக்கிறேன். நிறையப் பூ போட்டேன். பிரமாதமா அலங்காரம் பண்றேன். விதம் விதமாகப் பிரசாதம் செய்தேன்... அப்படிப் பண்ணினேன், இப்படிப் பண்ணினேன்...’ என்றெல்லாம் நம் சந்தோஷத்தை வெளிக் காட்டிக்கொண்டு, நம்மை அறியாமல் ஒரு சின்ன அகந்தையோடு நகர்ந்துவிடுவோம் இல்லையா! ஆகவே, அவ்வப்போது கஷ்டங்களும் வரவேண்டும்.

நான் உண்மையிலேயே பகவானிடம், ‘சுவாமி, எனக்கு நீங்க இருக்கீங்க. ஆனாலும் என் கஷ்டங்களை நான் உங்களிடம் கொண்டு வந்து, உங்க பாதங்களில் ஏன் அந்த பாரத்தைப் போட வேண்டும். அதை உங்களிடம் கொண்டுவராதபடி என்னை நடத்திச் செல்லுங்களேன்' என்றே வேண்டுவேன்!

மந்திரங்கள் சொல்வது, அவற்றின் அதிர்வலைகளால் அந்த இடத்தைத் தூய்மையாக்க. அதிலும் உச்சாடனம் சரியாக இருக்க வேண்டும். இயலாது எனில் தாய்மொழியில் இறைவனை வணங்கலாம். அதுவும் இயலவில்லையா? ‘ராம’ என்ற இரண்டே எழுத்துக்கள் போதும்.

மிக எளிய மந்திரம் ‘ராம’ நாமம். அனைத்தையும் அளிக்கவல்ல தாரக மந்திரம் இது. இப்படி, அவரவர் மத வழக்கப்படி மிகச் சுலபமாக எது இருக்கிறதோ அதைச் சொல்லி வழிபடலாம். அதேபோல் வழிபாடுகளிலும் பிரமாண்டம் ஆடம்பரம் எல்லாம் தேவையில்லை. கீதையில் கிருஷ்ணர் சொன்னதுபோன்று வில்வமோ, துளசியோ... உள்ளன்போடு சமர்ப்பித்து `ஆண்டவனே நீயே சரணாகதி' என்ற மனப்பான்மையோடு வழிபட்டாலே போதும்; பேரருள் கிடைக்கும். வழிபாடு என்றதும் சில கேள்விகள் எழும்.

`எவ்வளவோ ஸ்தோத்திரங்கள், துதிப் பாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தைப் போற்றுகின்றன. எனில், பெரிய கடவுள்... எல்லாம்வல்ல இறைவன்... உலகம் மொத்தத்துக்கும் இருக்கும் இறைவன் யார்? ஆணோ, பெண்ணோ... அந்த சக்தியைத் தொழ இப்படியான மந்திரங்கள் தேவையா?' என்றெல்லாம் கேள்விகள் எழும்.

`எல்லாம் வல்ல சக்தியே - இறையே உம்மைப் புகழுதல், பேசுதல் எல்லாம் தேவை இல்லை' என்றும் சிந்திக்கத்தோன்றும். காரணம்... இறையை உணர்ந்து உட்கார்வதற்கு உண்டான வாழ்வை நாம் வாழவில்லையே!

தினப்படி வாழ்வில் அது சாத்தியப்படுகிறதா என்ன? இன்று இருக்கும் பெருந்தொற்று போன்ற பிரச்னைகளுக்கு நடுவில் பிள்ளைகள் படிக்கிறார் களா இல்லையா, அவர்களின் எதிர்காலம் எப்படி, வெளிநாட்டுக்குப் போய் தங்கிவிட்ட பிள்ளைகளை எப்படிப் பார்ப்போம்... இப்படியான பல்வேறு சிந்தனைகளோடு அல்லவா நாள்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன?!

பல பிரச்னைகள் நமக்கு. அனைத்தையும் தாண்டி நாம் இன்று உயிருடன் இருப்பதற்கு நாம்தான் காரணமா? நாமும் காரணம். அதேநேரம் நமக்குள் இருந்து நம்மை வழிநடத்தும் இறைவனின் அருளே முழுமையான காரணம்.

இந்தப் புரிதலுடன் கூடிய எளிய சரணாகதி போதும், இறைவனை மகிழ்விக்க!

சரி, இப்போது மீண்டும் `இறைவன் யார் - பெரிய சக்தி எது' என்ற கேள்விக்கு வருவோம். சரணாகதி அடைவது எனும்போது `யாரிடம் சரண் அடைவது?!' என்ற கேள்வி எழுகிறது அல்லவா?!

உலகை ஆட்டுவிக்கும் சக்தி - உலகைப் படைத்து, காத்து, இஷ்டப்படி விளையாடிக் கொண்டிருக்கும் சக்தி என்றெல்லாம் ஞானநூல்கள் விவரிக்கின்றனவே அந்த சக்தியா... இல்லை, நாம் அனுதினமும் ஓர் உருவை - நமக்குப் பிடித்த வடிவை வணங்கி வருகிறோமே, அந்த மூர்த்தியா... இவற்றில் எது இறை, யாரிடம் நாம் சரணடைவது?

உண்மையில் நம் ஞானநூல்கள் இறைவனை ஆதி அந்தம் இல்லாதவன்; எல்லைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்றே போற்றுகின்றன. அதேநேரம், எந்த உருவிலும் அந்த இறையை வழிபடலாம் என்று வளைந்து கொடுப்பதும் இந்து மதம்தான்.

ஆம்! `எவ்வடிவை வேண்டுமானாலும் அந்த மகாசக்தியாக பாவித்து வணங்கலாம், அந்த சக்தி நிச்சயம் உங்களை வழிநடத்தும்' என்பதே முன்னோர்களும் அறநூல்களும் நமக்குத் தந்திருக்கும் வழிகாட்டல்.

- கடாட்சம் பெருகும்...

'வாழும் வழி இப்படித்தான்!’

மூதாட்டி ஒருத்தி எப்போதும் ஓயாமல் ஒப்பாரி வைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தாள். பெரியவர் ஒருவர், ‘ஏனம்மா எப்போதும் அழுது கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார். ‘பெரியவரே! என் இரண்டு பெண்களில் ஒருத்தியைக் காலணி விற்பவனுக்கும், இன்னொருத்தியைக் குடை விற்பவனுக்கும் மணம் செய்து கொடுத்தேன். மழைக் காலத்தில் காலணி சரியாக விற்காததால் வறுமையில் வாடும் ஒரு மகளின்1 குடும்பத்துக்காக அழுகிறேன். மழை இல்லாதபோது குடை விற்காததால் மற்றொரு மகளின் துயரை நினைத்து அழுகிறேன்’ என்றாள் அந்த மூதாட்டி.

பெரியவர் புன்னகைத்தார். ‘அம்மா, மழைக் காலத்தில் குடை வியாபாரம் செய்யும் குடும்பம் வளமாக இருக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள். வெயில் காலத்தில் காலணி விற்கும் குடும்பம் நலமாக இருக்கும் என்று நிம்மதி கொள். இப்படி நீ நினைக்கப் பழகினால் ஆண்டு முழுவதும் ஆனந்தமாக இருக் கலாமே’ என்றார்.

இதைக் கேட்டவள், ‘நீங்கள் சொல்வதே சரி. மகிழ்ச்சியாக வாழும் வழி இப்போதுதான் எனக்குத் தெளிவாகப் புரிந்தது’ என்றாள்.