Published:Updated:

அத்திவரதர் வைபவம் நிறைவு!- 47 நாள்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

சி.வெற்றிவேல்
JAYAVEL B

ஜூலை 1- ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை சயன கோலத்திலும் அதற்கடுத்து நின்ற கோலத்திலும் தரிசனம் கொடுத்த அத்திவரதர், நாளை முதல் அனந்த சரஸ் குளத்தில் சயன கோலத்தில் ஓய்வெடுக்கப் போகிறார்.

அத்திவரதர்
அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் கடந்த 46 நாள்களாகப் பக்தர்களுக்கு அருள்பாலித்துவந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அத்திவரதர் இன்று ரோஜா மற்றும் மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்து காட்சியளித்தார். அவரைப் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்து வருகிறார்கள்.

ஜூலை 1 - ம் தேதியிலிருந்து 31 - தேதி வரை சயன கோலத்திலும் அதற்கடுத்து நின்ற கோலத்திலும் தரிசனம் கொடுத்த அத்திவரதர், நாளை முதல் அனந்த சரஸ் குளத்தில் சயன கோலத்தில் ஓய்வெடுக்கப் போகிறார். அடுத்ததாக, இனி 40 வருடங்கள் கழித்து 2059- ம் ஆண்டுதான் அத்திவரதைத் தரிசிக்க முடியும்.

அத்திவரதர் வைபவத்தால் கடந்த 46 நாள்களாகக் காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு அத்திவரதரைத் தரிசித்து பேறு பெற்றனர். இந்தியாவின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், தமிழகத்தின் முதல்வர், துணை முதல்வர், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எனப் பல முக்கியஸ்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் காஞ்சிபுரத்துக்கு வந்த பக்தர்கள் அத்திவரதரைத் தரிசித்தார்கள். இதுவரை ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டு அத்திவரதரைத் தரிசித்தார்கள்.

தமிழ்நாடு அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையிலும் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மரணமடைந்த சம்பவமும் நிகழ்ந்தது.

`பாஸ் இல்லாம எப்படி அனுமதிச்சீங்க?' - அத்திவரதர் தரிசனத்தில் போலீஸாரிடம் கடுகடுத்த கலெக்டர்

அத்திவரதரைத் தரிசிக்க இன்றே கடைசி என்பதால் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்து வருகிறார்கள். இன்று நள்ளிரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். திட்டமிட்டபடி, நாளை காலை பூஜைகளுக்குப் பிறகு மீண்டும் அனந்த சரஸ் குளத்துக்குள் ஆனந்த சயனம் மேற்கொள்ளவிருக்கிறார் அத்திவரதர்.

அத்திவரதர்
அத்திவரதர்

அத்திவரதரைத் தரிசிக்கக் கூட்டம் அலைமோதியதால் அவரை நிரந்தரமாக வெளியில் வைக்க வேண்டும் என்றும் தரிசன காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் மற்றும் தமிழக அரசால் நிராகரிக்கப்பட்டது.