Published:Updated:

நள்ளிரவில் சிம்மக்குளம் திறப்பு; கடும்குளிரில் நீராடிய பெண்கள்! -வேலூரில் களைகட்டிய கடைஞாயிறு விழா

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில், நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக்குளம் திறக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்கள் புனித நீராடினர்.

நீராடிய பெண்கள்
நீராடிய பெண்கள்

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. புகழ்மிக்க இக்கோயிலின் மதில் சிறப்புடையதாகவும் போற்றப்படுகிறது. தஞ்சைக் கோயிலின் அழகு, திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதன் மூலம் விரிஞ்சிபுரம் கோயில் மதில் சுவரின் சிறப்பை அறியலாம்.

சிம்மக்குளம் திறப்பு
சிம்மக்குளம் திறப்பு

கோயிலில் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் விசேஷமானது. கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு திருமண வரம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாக உள்ளது.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு விழாவையொட்டி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக்குளம் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. அதற்குமுன்பு மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் அலங்கார கோலத்தில் தெப்பத்தில் அமர்ந்து குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதையடுத்து, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் சிம்மக்குளத்தைத் திறந்துவைத்தார்.

நீராடிய பெண்கள்
நீராடிய பெண்கள்

குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கான பெண்கள் நள்ளிரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சிம்மக் குளத்தில் நீராடி ஈரச்சேலையுடன் கோயில் பிரகாரத்தில் நீண்டு படுத்து பிரார்த்தனை செய்தனர். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தப்பட்டது.

அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்யப்பட்டு புடவை சாத்தப்பட்டது. பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். சிம்மக்குளம் திறப்பு விழாவில், கலவை சச்சிதானந்தா சுவாமிகள், ஓச்சேரி மோகானந்தா சுவாமிகள், வேலூர் மாவட்ட நீதிபதி வெற்றிச்செல்வி, அணைக்கட்டுத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், ஆவின் தலைவர் வேலழகன், தாசில்தார் முரளிகுமார் உட்பட ஏராளமான பிரமுகர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரார்த்தனை
பிரார்த்தனை

அதைத்தொடர்ந்து, இன்று காலை 6.30 மணிக்கு பிரம்மக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. 9 மணிக்குப் பாலகனுக்கு உபநயன சிவதீட்சையும் அதன்பிறகு திரு மாட வீதி உலாக்களும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. மாலையில் மகா தீபாராதனையும், இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இதனால், விரிஞ்சிபுரம் பகுதியே கடைஞாயிறு விழாவில் களைக்கட்டியுள்ளது.