Published:Updated:

லட்சுமி கடாட்சம் - 7

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

லட்சுமி கடாட்சம் - 7

லக்ஷ்மி சிவச்சந்திரன்

Published:Updated:
லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

கோவை பெண்மணியின் சகோதரி போனில் சொல்லச் சொல்ல, நான் நம்ப முடியாமல் நின்றேன். சுத்தத்துக்கும் லட்சுமி கடாட்சத்துக்கும் உள்ள தொடர்பு எனக்கு அப்போது நன்றாகவே புரிந்தது.

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்


“என்னன்னு மேடம் சொல்றது... எங்க அக்கா வீட்டில் சுத்தமும் இல்லை; சுகாதாரமும் இல்லை. குளிக்கிறதே இல்லை... தலையைச் சீவுவதே சாயந்திரம் ஆறரை மணிக்கு விளக்கு வெச்ச பிறகுதான். நினைச்சபோதெல்லாம் படுத்துத் தூங்குறது...’’ என்று ஒவ்வொன்றாகப் பட்டியல் போட்டுக்கொண்டே போனார் அவர்.

``நீங்களே சொல்லுங்க மேடம்... இப்படியெல்லாம் பண்ணினா இந்த வீட்டில் லட்சுமி எப்படித் தங்குவாள்? பிரச்னைதான் வரும்! இந்தளவுக்குத் தரித்திரம் வருதுன்னா... என்னிக்கு எங்க அக்கா வீட்டுக்காரர் ஒழுங்கா காலையில் நேரத்துக்கு எந்திரிச்சு, பல் துலக்கி, குளிச்சிருக்கார்ன்னு கேளுங்க... அவர் மதியம் ஒரு மணிக்கு எந்திரிப்பார்... வாயைக் கொப்புளிச்சிட்டு, பீரைக் குடிப்பார். அப்புறம் ‘சாப்பாடு கொடு’ன்னு கேட்பார். பிறகும் குடிப்பார். மறுபடி தூங்குவார். கடைப்பையன் வந்து எழுப்பினா, எரிஞ்சு விழுவார்.

‘எங்கேயாவது போய் கடன் வாங்கு’ன்னு சொல்வார். இதுதான் அவர் தொழில் செய்த லட்சணம். எப்படியோ அவங்க அப்பன், பாட்டன் சொத்தையும் கடனையும் வெச்சு இத்தனை நாள் ஓட்டிட்டார்...’’ அவர் அந்த வீட்டின் பிரச்னைகளைச் சொல்லிக் கொண்டே போனார்.

அப்பப்பா... எவ்வளவு அழுக்குகள்? வீடு, தொழில், வாழ்க்கை என்று எதிலுமே சுத்தம் இல்லையே. அப்படியானால், ஒவ்வொரு முறை என்னைப் பார்க்க வரும்போதும் அவர்களின் அந்த அலங்காரம் எல்லாம் வெளி வேஷம்தானா?

“ஏங்க... உங்க சகோதரிதானே... நீங்க எடுத்துச் சொல்லக்கூடாதா?”

“ஐயய்யோ... சாமி... அவங்க வீட்டில் எல்லாரும் பேசற வார்த்தைகளைப் பார்த்தீங்கன்னா, நீங்க காதை மூடிக்குவீங்க. உங்களை மாதிரி யாராவது வரும்போதுதான் நல்ல வார்த்தைகள் பேசுறாங்க. இல்லேன்னா வீட்டுக்குள்ளேயே ஒருத்தரை ஒருத்தர் தகாத வார்த்தைகளில் திட்டிக்குவாங்க. ‘தரித்திரம், பீடை’ன்னு காது கூசும் வார்த்தைகளை வீட்டில் அடிக்கடி பேசினா வீடு எப்படிங்க விளங்கும்!” என்று வருத்தப்பட்டார்.

ஆம்! வீட்டில் நீங்கள் என்ன வார்த்தைகள் பேசுகிறீர்களோ, அவை அங்கே விழுந்துவிடுகின்றன அல்லவா? விழுந்தவை அங்கே தங்கி விடும் அல்லவா? அப்போது அவைதானே அங்கு நிற்கும்.

முதலில் உடல் சுத்தம் இல்லை. உடல் சுத்தம் இல்லாதபோது, ஒரு சோம்பேறித்தனமும், அழுக்கும், மேலும் அதற்குண்டான அசிங்கங்கள் அனைத்தும் உடலில் சேர்ந்துபோகும். அப்போது, வீட்டில் தகாத வார்த்தைகளும் சேர்ந்து வந்து விழும். பிறகு ‘எனர்ஜி’ குறைந்துவிடும். அது உடல்நலனில் பிரதிபலிக்கும்தானே?

இப்போது சமீபகாலமாக ஆங்கிலத்தில் சொல்கிறார்களே ‘உன்னுடைய ‘ஆரா’ சரியில்லை; உன்னுடைய எனர்ஜி சரியில்லை’ என்று! அதற்காக 20,000 ரூபாய் செலவழித்து, யாராவது ஒருவர் பேசுவதைப் போய் கேட்டுவிட்டு வந்து வீட்டில் சொல்வோம். ஏங்க... நம் வீட்டுப் பெரியவர்கள் அந்தக் காலத்திலேயே இதைத்தானே சொல்லிக்கொண்டிருந்தார்கள்!

மீண்டும் அந்தத் தொலைபேசி உரையாடலுக்கு வருவோம்..

“அவங்க பொண்ணும் சரியில்லங்க. புருஷன் நகைகளை எல்லாம் எடுத்துக்கிட்டு, விட்டுட்டு ஓடிட்டான். இப்ப அவங்க யாரும் வீட்டில் இல்லாததால், தைரியமா பேசுறேன் மேடம். அந்தப் பொண்ணு மாதவிலக்கு நேரத்தில்கூட, குளிச்சு சுத்தபத்தமா இருக்காதுங்க. அப்படியே படுத்துக் கிடக்கும். அவங்க அம்மாவும், ‘வயிறு வலிக்குதா.... நீ படுத்துக்கோடா’ன்னு இப்படியே கொஞ்சிக் கெடுத்துட்டாங்க.

அவங்க பையனுக்கு வீடு இப்படிக் கிடக்கிறது பிடிக்கல. வீட்டை விட்டு வெளிய போகணும்னு துடிக்கிறான். அவனையாவது நல்லபடியா வளர்த்துப் படிக்க வெச்சு, இவங்களுக்குப் புத்தி வர வைக்கணும்னு நான் நினைக்கிறேன். வாரத்தில் ஒரு நாள் நான் வருவேன். இறைஞ்சு கிடக்கும் துணிமணிகளை மடிச்சு வெச்சு, துவைக்காத துணிகளை எல்லாம் துவைக்கப் போட்டு, வீட்டைப் பெருக்கிச் சுத்தம் பண்ணுவேன். வேற என்ன செய்றது..!’’ ஆதங்கம் பொங்கியது அவர் குரலில்.

‘`நீங்க பேசிப் பாருங்களேன். காசு பணம் வர்றதுக்குக் கூட வீட்டில் சுத்தம் முக்கியம். இந்த மாதிரி சுத்தம் இல்லேன்னா, லட்சுமி எப்படித் தங்குவாள்? அந்த ‘ஆரா’ சரியில்லேன்னா லட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் எப்படி வீட்டில் இருக்கும்னு எடுத்துச் சொல்லுங்களேன்...”

“எவ்வளவோ சொல்லியாச்சுங்க. திருந்தவே மாட்டேங்கிறாங்க. நீங்க வந்துட்டுப் போன அன்னிக்குத்தான் இவங்க எல்லாருமே காலையில் எழுந்து குளிச்சாங்க. வீடெல்லாம் கூட்டித் துடைச்சாங்க. வேலைக்காரங்ககூட யாருமே தொடர்ந்து இங்கே இருக்க மாட்டாங்க. ‘நாங்களும் எவ்வளவுதான் சுத்தப்படுத்துறது’ன்னு புலம்பிட்டுப் போயிடுவாங்க. நீங்க தயவுசெய்து சொல்லி அவங்களைச் சரி பண்ணுங்களேன்” என்று என்னிடம் மனம் விட்டுக் குமுறினார் அவர்.

நான் சொன்னேன்... “அம்மா! என்னை நானே திருத்திக்க வேண்டியது நிறைய இருக்கு. நான் படிச்சுக்க வேண்டிய பாடமும் இன்னும் இருக்கு. எனக்கு ஒரு குடும்பம் இருக்கு. ஒரு புள்ளை இருக்கு. அதை வளர்த்துக்கொண்டு வரணும் (இதெல்லாம் நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. என் மூத்த மகளே சின்னக் குழந்தை.) என்னுடைய பிரச்னைகள் எல்லாம் இருக்கு. அதிலிருந்தெல்லாம் நான் முதலில் மீண்டு வரணும். நான் என்னம்மா அவங்களுக்குச் சொல்றது...” என்று கூறி முடித்தேன். அந்தக் குடும்பத் தலைவி மீண்டு வர பிரார்த்தனை செய்தேன்.

எந்தப் பிரச்னை என்றாலும் எனக்குத் தெரிந்த ஒரே வழி இறை நாமத்தைச் சொல்வதுதான். நான் எல்லோருக்கும் சொல்வது என்னவென்றால், நம் பெரியவர்கள் சொன்னதுதான்... வீடும், சுற்றுப்புறமும் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். தகாத வார்த்தைகளை யாரிடமும் சொல்லவேண்டாம்.

லக்ஷ்மி சிவச்சந்திரன்
லக்ஷ்மி சிவச்சந்திரன்


கோபம் வந்தால் ‘சீ நாயே’ என்றுதான் பலருக்கும் வாயில் வரும். அது என்ன, மனிதனைப் போய் நாய் என்று சொல்வது? அது கண்டிப்பாக சொல்பவரின் ‘ஆரா’வில் நிற்கும். ஒருவர் தகாத வார்த்தை சொல்லி, அது அவருடைய ‘ஆரா’வில் நிற்கும்போது, அந்த ‘ஆரா’வுடன் அவர் வீட்டுக்குச் சென்றால், கண்டிப்பாக அந்தத் தீய சக்தியை அவர் வீட்டில் பரப்புகிறார். அந்தத் தீய சக்தி வீட்டில் பரவும்போது, அதற்குண்டான பலாபலன்களை அவர் அனுபவிப்பார். எங்கேயோ ஒரு லட்சுமி கடாட்சம் குறைந்துவிடும்.

சில வீடுகளில் நுழையும்போதே லட்சுமி கடாட்சம் துலங்குவது நமக்கே தெரியும். பல வருடங்களுக்கு முன்பு நடந்த மற்றொரு சம்பவம் எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது.

திருப்பதியிலிருந்து பல பெரியவர்கள் பிரசாதம் எடுத்துக்கொண்டு இந்தப் பக்கமாக வந்தவர்கள், நம் வீட்டுக்கும் வந்தார்கள். அனைவருமே நன்கு பரிச்சயமானவர்கள்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே அந்தப் பெரியவர், “அடடா.. வைப்ரேஷன் ரொம்ப நல்லாருக்கே!” என்றார் தெலுங்கில்.

‘பரவாயில்லையே... எதைச் சொல்றார்... நாம என்ன அப்படிப் பண்ணிட்டோம்...’ என்று நான் மனதுக்குள் யோசித்தபோதே, மனதைப் படித்தவர் போல அந்தப் பெரியவர் தொடர்ந்து கூறினார்.

“இல்லம்மா... ரொம்ப சுத்தமாயிருக்கு வைப்ரேஷன். லட்சுமி கடாட்சமா இருக்கு!” என்று சொல்லி, பிரசாதத்தைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினர்.

காலையிலிருந்து மந்திரங்கள் சொல்வதால் மட்டுமோ, தெய்வங்களுக்குப் பூக்களால் அலங்காரம் செய்து, அர்ச்சனை செய்வதால் மட்டுமோ, அந்தப் பெரியவர் குறிப்பிட்ட வைப்ரேஷனோ’ லட்சுமி கடாட்சமோ வந்துவிடாது. நம்முடைய சுத்தமான பழக்கங்கள், நல்ல எண்ணங்கள், நல்ல வார்த்தைகள்- நல்ல எண்ணம் உள்ளத்தில் இருந்தால் கண்டிப்பாக வாயில் நல்ல வார்த்தை வரும்... இவை போதுமே!

அந்த இறைவன் என்ன கேட்கிறான். பகவத் கீதையில் பெருமாள் சொல்வது போல, அவனுக்கு ஒரு சின்ன துளசி இலையும் சிறிது தண்ணீரும் போதுமே. அதுவும் இல்லையா... பக்தி..! அந்த பக்திதான் பகவானுக்கு வேண்டும். தோட்டத்தில் இருக்கும் பூவையெல்லாம் பறித்துவைக்க வேண்டிய அவசியம் இல்லை. தோட்டத்தில் மலர்வதெல்லாம் இறைவனுக்குத்தானே?! அரவிந்த அன்னை சொல்வார்களே... ‘மலர்கள் எல்லாமே இறைவனுக்காகத்தானே மலர்கின்றன. நீ பறித்துத்தான் ஆகவேண்டும் என்பதில்லை!’ என்று.

ஆக, நம்முடைய நல்ல எண்ணங்கள்தான் லட்சுமி கடாட்சம்!

- கடாட்சம் பெருகும்...அதிகம் படிச்ச மூஞ்சுறு!

நம் வழக்கில் நிறைய பழமொழிகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஓர் உள்ளார்த்தம் உண்டு. அவ்வகையில் அதிகம் படிச்ச மூஞ்சுறு கழனிப் பானையில் விழும் என்றொரு பழமொழி. இதற்கு என்ன அர்த்தம்? `அதிகம் படிப்பது வீண்’ என்பதா? இல்லை!

முற்காலத்தில் வெண்கலப் பானையில் சமைப்பார்கள். சாதம் நன்கு கொதித்தவுடன் அதை இறக்கி, வடிதட்டில் கஞ்சியை வடிப்பார்கள்.அந்தக் கஞ்சியில், வெண்கலப் பானையில் உள்ள - அதிகம் வடித்த முன்சோறு விழுந்துவிடும்.

இதைத்தான் அதிகம் வடித்த முன் சோறு கழனிப் பானையில் விழும் என்றார்கள் முன்னோர்கள்!

- கே.சுப்பு, திருநெல்வேலி-2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism