தொடர்கள்
Published:Updated:

லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம்

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
பொதுவாக, நாம் பெரியவர்கள் காலில் விழுந்து நமஸ்காரம் செய்யும்போது சிலர். ‘நல்லா இரு’ என்பார்கள். இன்னும் சிலரைப் பார்த்திருக்கலாம்... ‘சிவ சிவா’ என்றோ, ‘நாராயணா, நாராயணா’ என்றோ சொல்வார்கள்.

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்

அதாவது, அந்த நமஸ்காரம் தெய்வத் தைச் சேரும் என்று ஓர் ஐதிகம். ஆனால் எனக்கு என்னவோ, ‘வாழ்க வளமுடன்’ எனும் வாழ்த்து மிகவும் பிடிக்கும். ‘எப்போதுமே வளத்தோடு வாழ்’ என்று ஒவ்வொரு முறையும் சொல்வது எவ்வளவு அருமையான வாழ்த்து!

புது வருட நாளில் மட்டுமே நாம் வாழ்த்து சொல்லவேண்டும் என்பதில்லை. எல்லா நாளிலுமே எல்லோரையுமே மனதார வாழ்த்தலாம். ஒவ்வொரு நாளுமே... ஒவ்வொரு விநாடியுமே... ‘இன்று நாம் புதிதாய் பிறந்தோம்’ என்ற உற்சாகத்துடன், இறைவனை நம்பி `அவனைத் தவிர வேறு எதுவும் இல்லை' என்னும் சரணாகதி தத்துவத்துடன் வாழ்ந்துதான் பாருங் களேன்! எல்லா மதங்களுமே சொல்வது ‘அவனிடம் சரணாகதி அடைந்துவிடு; அவன் பார்த்துப்பான்’ என்பதுதான். ஏனென்றால், அவன் நம்மைப் படைத்து விட்டான்; நம்மைப் பார்த்துக்கொள்வான்!

நாம் பால் குடித்த நாளிலிருந்து, சாப்பாடு ஊட்டப்பட்ட நாளிலிருந்து, பசித்தால் உணவு கொடுக்க தாய் இருக்கிறாள் என்ற தைரியத்தில் வாழ்ந்திருக்கிறோம். வெளியூர் போனாலும் தாய் கேட்கும் முதல் வார்த்தை ‘சாப்பிட்டியா?’ என்பதுதானே! இறைவனின் அன்பு போல தாயன்பும் மகத்தானது. நாம் எல்லோருமே தாயாக மாறி, எல்லோருக்குமே நல்லதையே நினைப்போம். எப்போதுமே நம்முடைய வாழ்த்துகளையும் ஆசிகளையும் வாரி வழங்குவோம். புது வருடத்துக்கு மாத்திரம் செல்லுபடி ஆகும் என்றில்லாமல், எல்லா நாள்களிலுமே செல்லுபடியாகும் வாழ்த்து களைப் பரிமாறுவோமே!

தெரிந்தவர், தெரியாதவர் அனைவருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று சொல்வது ஒரு குஷிதான். இரவு 12 மணிக்குப் புத்தாண்டு வாழ்த்து சொல்வது நமது பாரம்பரியம் இல்லை என்றாலும், நம் நாட்டைப் பொறுத்த வரையில் எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவோம்; எல்லா வகை உணவு களையும் சாப்பிடுவோம்; எல்லோரையும் ஏற்றுக்கொள்வோம். ‘ஹேப்பி நியூ இயர்’ கலாசாரமும் அப்படி வந்ததுதான். அதுவும் ஒரு சந்தோஷம்தான்.

`இறைவன் அருளால் எதிர்காலத்தில் எந்த நோய் நொடியும் இல்லாமல், எல்லோரும் மகிழ்ச்சியுடனும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்புடனும், பிரச்னைகளை உருவாக்காமல், எல்லோரும் எல்லோருக்கும் ஆசி வழங்கி வாழவேண்டும்' என நானும் வேண்டிக்கொள்கிறேன்.

12 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, ‘உன்னாலான உதவியை இயலாதவர்களுக்குச் செய்யுங்கள்’ என்பதுதான். முடிந்தால் இந்தப் புத்தாண்டில் அதைச் செய்யுங்கள்.

‘வேண்டாம்’ என்று பரணில் தூக்கிப் போடப்பட்ட பல பொருள்கள் நம் வீடுகளில் கிடக்கின்றன. அதை விற்றால் வரும் காசைக் கொண்டு போய் தேவையானவர்களுக்குக் கொடுங்கள். போர்வைகளைச் சேகரித்து பிளாட்ஃபார்மில் சுருண்டு கிடப்பவர்களுக்கு வழங்குங்கள். பிய்ந்துபோனது, நைந்து போனது போன்றவற்றைக் கொடுக்காமல், அவர்கள் உபயோகப்படுத்துவது போல நல்ல பொருள்களைக் கொடுக்கவேண்டும். வருடத் தில் ஒரு நாளாவது இதுபோன்ற உதவிகளைச் செய்யலாமே!

வரும் ஆண்டிலாவது இந்த உலகம் எந்தப் போரையும் சந்திக்காமல் இருக்கவேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வருடம் முடியும் இந்த நேரத்தில் வருத்தங்களை மறப்போம். இல்லாதவர்களுடன் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டு, அவர்கள் முகத்தில் அரும்பும் புன்னகையைக் கண்டு அந்த நிறைவும் திருப்தியும் தரும் சந்தோஷத் துடன் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்!

சக்தி விகடன் வாசகர்கள் அனைவரின் இல்லங்களிலும் லட்சுமி கடாட்சம் பொங்கிப் பெருகட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

`காரணமும் அவனே, காரியமும் அவனே' என்பதை அழுத்தமாகச் சொல்லும் எத்தனையோ விஷயங்கள், செயல்கள் என் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன.

`இதைச் செய்யவேண்டும்' என்று நினைப் போம். ‘செய்யலாமா, வேண்டாமா’ என்று யோசிப்போம். அப்புறம் அப்படியே விட்டு விடுவோம். ஆனால், நம்மைச் சுற்றி இருக்கும் நம் மேல் அன்புகொன்ட ஆத்மாக்கள், நாம் மறந்த சில விஷயங்களைச் செய்ய வைத்து விடும் என்பதைப் புரிந்துகொண்ட சம்பவம் ஒன்று நடந்தது.

என் தாய் இறந்த பிறகு, இந்த மாதிரிதான் ஒரு விஷயம் நடந்தது. கர்நாடக மாநிலத்தில், கார்வார் தாண்டி முருடேஸ்வரா கோயில் என்றோர் இடம் இருக்கிறது. அக்கோயிலின் அருகே எனக்கு ஷூட்டிங் இருந்தது.

அன்று ஏப்ரல் 17. என் தாயாரின் பிறந்த நாள். அதை மறந்துவிட்டேன். அவர் இறந்து 2 வருடங்கள் ஆகியிருந்தன அப்போது. நான் பாட்டுக்கு ஷூட்டிங் போய்விட்டு, காலை 10, 11 மணி வரை அங்கே ஷூட்டிங் முடித்துவிட்டு, அங்கேயே உட்கார்ந்து சாப்பிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அந்த சிவன் கோயிலில் பிரசாதம் கொடுக்கமாட்டார்கள்.

கோயிலில் பணிபுரியும் குருக்கள் வந்து, “எங்க வீட்டிலிருந்து கொண்டு வர்றேன்... சாப்பிடுங்க... ஷூட்டிங் தொடரும் போலிருக்கே!’ என்றார்.

“சரி கொடுங்கோ” என்று அவர் கொடுத்த உணவை வாங்கிக்கொண்டு, சாப்பிடலாம் என அந்தப் பக்கமாகப் போனேன். அங்கே ஒரு பெண்மணி வந்தார்.

“இன்னிக்கு உங்க அம்மாவோட பொறந்த நாளாச்சே... என்ன பண்ணீங்க...” என்றார். தூக்கிவாரிப்போட்டது எனக்கு.

“என்னது.. அம்மா பொறந்த நாளா? என்ன தேதி இன்னிக்கு..?” என்று யோசித்தேன்.

“ஏப்ரல் 17” என்று அந்தப் பெண் தமிழி லேயேதான் பேசினார். கர்நாடகாவில் இருக் கிறோம் என்பதெல்லாம் எனக்கு மறந்து விட்டது.

“ஆமா... இன்னிக்குத்தான் பொறந்த நாள்... அது எப்படி உங்களுக்குத் தெரியும்!” என்றேன் ஆச்சர்யம் தாங்க முடியாமல்.

“நான் யார்னு தெரிஞ்சா இன்னும் ஆச்சர்யப்படுவீங்க!” என்ற அந்தப் பெண் வேறு யாரும் அல்ல, அம்மாவின் நெருங்கிய சிநேகிதியின் மகள்.

“எனக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கிறீங்களா? நான் பாம்பேல இருக்கேன்... நாலு நாள் முன்னால அங்கேயிருந்து கிளம்பறச்ச எங்க அம்மா பேசிண்டிருந்தா...

‘17-ம் தேதி ருக்மிணி பிறந்தநாள். நானும் அவளும் அப்படி இருந்தோம்... இப்படி இருந்தோம்’னு அவங்க சிநேகிதத்தைப் பற்றிச் சொல்லிட் டிருந்தா. என் பையன் பொறந்ததும் ஏப்ரல் 17-தான். அதான் இந்தத் தேதி எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அவன் பேரில் அர்ச்சனை பண்றதுக்குதான் இங்கே வந்தேன். நீங்க ஷூட்டிங்கில் இருப்பதைப் பார்த்ததும் அம்மா சொன்னது ஞாபகம் வந்துச்சு” என்று அவள் சொன்னதும் எனக்கு மயிர்க் கூச்செறிந்தது.

எனக்கு எப்படி இருந்திருக்கும்?!

‘அம்மா... எப்படிம்மா இவ கரெக்டா வந்தா? ஏம்மா இங்க வந்து கேட்க வைக்கிறியே... இந்த இடத்தில் ஞாபகப்படுத்துறியே... எதுக் கும்மா...’ என்று யோசித்தேன். தொடர்ந்து யோசித்தபோது, நினைவலைகளில் ஒரு விஷயம் தட்டுப்பட்டது.

பல வருடங்களுக்கு முன்பு... அந்தக் கோயில் அப்போதுதான் ஆரம்பித்திருந்த புதிது. கோயில் ரொம்ப பிரபலம் ஆகாமல் சாதாரணமாக இருந்த நேரத்தில், எனக்கு இதேபோல ஷூட்டிங் இருந்தது. ஷூட்டிங் முடித்து ஹோட்டலுக்குத் திரும்பி வந்தபோது, அம்மா ட்ரங்க் காலில் கூப்பிட்டார்.

“லக்ஷ்மி! நாளைக்கு அந்தக் கோயில்ல ஸ்வாதி நட்சத்திரத்துக்கு ஒரு அர்ச்சனை பண்ணிடறியா?” என்று கேட்டார்.

நமக்கு நமது பிறந்த நாளே மறந்துவிடும். மிகவும் வேண்டப்பட்டவர்களாக இருந்தால் அந்த நேரத்துக்கு ‘சட்’டென்று ஞாபகத்துக்கு வரும். ஏனென்றால் நம் தொழில் அப்படி! இப்போது போல மொபைலில் சேமித்து, ரிமைண்டர் போடுவதெல்லாம் அப்போது இல்லாததால், எழுதிதானே வைத்துக்கொள்வோம்! அதையும் மறந்துவிட்டால் அவ்வளவுதான்.. மாட்டினோம்!

‘மறந்துட்டியா பர்த்டேயை!’ என்று திட்டு வாங்கிய காலகட்டம் எல்லாம் இருந்திருக்கிறது. அம்மா போனில் கேட்டபோது, “பரத்வாஜ கோத்ரம், ஸ்வாதிதானே... சரிம்மா பண்ணிடறேன்” என்றேன். யாருக்கு, என்ன பெயர் என்றெல்லாம் கேட்கவில்லை.

அம்மா தொடர்ந்து, “ஏய்.. நாளைக்கு எனக்குதாண்டி பொறந்தநாள்” என்றதும், “ம்மா... ஸாரிம்மா... மறந்தே போய்ட்டேன்..” என்று அம்மாவைச் சமாதானப்படுத்தினேன்.

மறுநாள்.. அதே கோயிலில் அம்மா பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை பண்ணி னேன். சந்தோஷமாய் அம்மாவிடம் சொன் னேன்.

“ரொம்ப அழகான கோயில்மா.. “ என்றெல் லாம் கோயிலைப் பற்றி வர்ணித்துவிட்டு, கோயில் பிரசாதம், போட்டோஸ் எல்லாம் எடுத்து வந்தேன் அம்மாவுக்காக.

அப்போது அம்மா சொன்னார்... “உனக்கு கர்நாடகாவில் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும் இல்லையா... மறுபடியும் எப்போதாவது முருடேஸ்வர் கோயிலுக்குப் போனால், என் னையும் அழைச்சிண்டு போறியா?” என்றார் ஆசையாக.

“ஓ.. கண்டிப்பாக அழைச்சிண்டு போறேன்மா!”

இது நடந்து முடிந்து பல வருடங்கள் அகிவிட்டன. அதன் பிறகு கிட்டத்தட்ட 15 வருஷங்கள் கழித்து அம்மா இறந்துவிட்டார். ஆனால் அவர் ஆத்மா எங்கேயிருந்தோ ஞாபகப்படுத்துகிறதோ..! ‘கோயில்ல இருக் கியே... அர்ச்சனை பண்ணிடேன்’ என்கிறதோ..!

அன்றைய தினம் அது எனக்கு அங்கே பிரத்யட்சமானது. அதாவது நம்மைச் சுற்றி ஆத்மாக்கள், நம்முடைய உறவுகள், நல்ல ஜீவன்கள் நம்மை ஆசீர்வாதம் செய்துகொண்டே இருக்கும் என்பதற்கு இது ஓர் அடையாளம்... சாட்சி... என் அம்மா அன் றைய பூஜையைக் கட்டாயம் பார்த் திருப்பார்! நாம் இதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்! இல்லையென்றால் எங்கேயோ பாம்பேயில் இருந்த அம்மாவின் தோழியின் மகள், தன் மகனுக்குப் பிறந்த நாள் என்று ஏன் அங்கே வரவேண்டும்... அவனும் அதே ஸ்வாதி நட்சத்திரம், துலாம் ராசி. அவள் செய்ததுமல்லாமல், ‘நீங்க அம்மாவுக்குப் பண்ணலயா!’ என்று எனக்கும் ஏன் நினைவுப்படுத்த வேண்டும்!

யார் மூலமாகவோ ஞாபகப்படுத்துகிறது பாருங்கள். இந்த மாதிரி எத்தனையோ விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கும். ஆனால் எல்லாவற்றுக்கும் பகவானுடைய கடாட்சம் இருக்கவேண்டும். அதுதான் அங்கே சங்கதி!

புத்தாண்டு பிறக்கப் போகிறது. இன்னும் பல செய்திகளை அசை போடும் புதிய நாள்கள் வரப் போகின்றன. நம்பிக்கையோடு காத்திருப்போம்.

- கடாட்சம் பெருகும்...

சதுர தாண்டவர்
சதுர தாண்டவர்

சதுர தாண்டவர் தரிசனம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து படவேடு செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது காமக்கூர் திருத்தலம். சிவனார் தாண்டவமாடிய தலங் களில் ஒன்று என்பதால், இந்தத் தலத்தை உப விடங்கத் தலம் என்கிறார்கள்!

பரமன், இங்கே சதுர தாண்டவம் ஆடியதாக விவரிக்கிறது `காமாத்தூர் புராணம்'. காமாத்தூரே, தற்போது காமக்கூர் என அழைக் கப்படுகிறது. இங்கே, கால்கள் இரண்டையும் மடக்கி, முன்னும் பின்னுமாக சதுர வடிவில் வைத்தபடி ஆடும் அரிய கோலத்தில் காட்சி தரும் சதுர தாண்டவ நடராஜரை தரிசித்து வணங்குவது சிறப்பான பலனைத் தருமாம்!

குறிப்பாக திருவாதிரைத் திருநாளில், சதுர தாண்டவ நடராஜரை வணங்கினால், பெரும் வல்லமையும் பேராற்றலும் கிடைக்கும்; எவரையும் வெல்லும் திறன் அதிகரிக்கும்; கலைகளில் ஆர்வமும் திறனும் ஏற்படும் என்கிறார்கள் பக்தர்கள்.

- சி.மகேஷ், வந்தவாசி