Published:Updated:

லட்சுமி கடாட்சம் - 5

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

லட்சுமி கடாட்சம் - 5

லக்ஷ்மி சிவச்சந்திரன்

Published:Updated:
லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

குமுளியில் சிறியதொரு பிள்ளையார் கோயிலில் ஒரு விஷயம் என் கவனத்தை மிகவும் கவர்ந்தது என்று சொல்லியிருந்தேன்!

`அப்படி என்ன விஷயம்... விசேஷம்’ என்று கேட்கிறீர்களா?

சுத்தம் என்றால் சுத்தம்... அப்படியொரு சுத்தம்; அழகென்றால் அப்படியோர் அழகு! கோயிலுக்குள் சென்று பிள்ளையாரை வணங்கினேன். அங்கே ஓர் அம்மா அமர்ந்திருந்தார். கோயிலைப் பராமரிப்பவர் அவர்தான். கோயில் கண்ணாடி போன்று ‘பளிச்’ என்று இருந்தாலும், அந்த அம்மா அவ்வளவு சுத்தமாக இல்லை.

சும்மா அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

“என்ன ஆத்தா.. என்ன பண்ற?”

“வீட்டுக்குக் கிளம்பப் போறேன். இனிமேதான் போய் சாயந்தரமா குளிச்சிட்டு வீட்டு வேலையெல்லாம் செய்யணும். காலையில வந்து கோயில்ல பெருக்கித் தொடச்சி, எல்லா வேலையும் முடிச்சிடுவேன். ஐயர் வந்தப்புறம் வீட்டுக்குப் போவேன்’’ என்றார், காவிப் பற்களைக் காட்டி வெள்ளந்தியாகச் சிரித்தபடி.

அந்த அம்மா குளிக்கவே வேண்டாம். அவர் சுத்தமாகத்தான் இருக்கிறார். ஏனெனில், அவர் செய்யும் காரியம் அப்படி! பிள்ளையார் கோயில் சுத்தமாக இருக்கவேண்டும்; பலபேர் வரும் இடம் என்று ஒரு குப்பைகூட இல்லாமல் அவ்வளவு தூய்மையாக வைத்திருக்கும் அவருடைய மனம் மிகவும் சுத்தமானது இல்லையா? மனச் சுத்தத்தை விட பெரிய சுத்தம் வேறு என்ன இருக்கப் போகிறது. அவரும் தனித்துதான் இருக்கிறார். கூட யாருமில்லை உதவிக்கு!

‘இன்னிக்கு நான் இந்த ஊழியம் செய்றேன்... இறைவனுக்குச் செய்றேன்... உழவாரப் பணி செய்றேன்’ என்பது அவருடைய நித்திய வழக்கம்.

நான் அவரைப் பார்த்துக்கொண்டே நின்றேன். ‘ பணம் ஏதாவது கொடுக்கலாமா... தப்பாக நினைச்சுக்குவாரோ’ என்ற எண்ணம் ஓடியது. சட்டென்று அந்த அம்மா கேட்டார்.

‘`என்ன பார்க்கிற... காசு எதுனா கொடுக்கலாம்னு நினைக்கிறியா?’’ என்றதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

லக்ஷ்மி சிவச்சந்திரன்
லக்ஷ்மி சிவச்சந்திரன்


‘நம்ம மனசைப் படிச்ச மாதிரி கேட்கிறாரே இந்த அம்மா!’

கேள்வி கேட்டபடியே எழுந்து நின்றார் அந்த அம்மா. பருமனான உடல். கண்டிப்பாக வயசு 70-க்கு மேல் இருக்கும்.. (நான் என்னவோ ரொம்பச் சின்னக் குழந்தை மாதிரி!) அவர் எழுந்து நின்றபோதுதான் கவனித்தேன்... அவருக்கு ஒரு கால் ஊனம்.

‘`என்ன பார்த்துக்கிட்டே நிக்கிறியே…’’ என்றதும் சுயத்துக்குத் திரும்பிய நான், ‘`இல்லம்மா... அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல’’ என்றேன்.

‘`எனக்குப் பணம் காசெல்லாம் ஒண்ணும் வேணாம். புள்ளை ஊரில் இருக்கான். அனுப்புறான். இங்க பிள்ளையார் என்னைப் பார்த்துக்கிறார்.’’

அசாதாரணமாக வந்தது அவர் பதில். என்ன ஒரு நம்பிக்கை!

‘பிள்ளையார் எப்படி இவரைப் பார்த்துக்குவார்?’ என்று யோசிக்கும்போதே, அடுத்த குண்டை அனாயாசமாகத் தூக்கிப் போட்டார்.

‘`பிள்ளையார் எப்படி பார்த்துக்குவார்ன்னு யோசிக்கிறியா?’’ என்று அவர் கேட்டதும் நிஜமாகவே எனக்கு ‘எப்படி இவர்... நாம நினைக்கிறதை எல்லாம் புட்டுப் புட்டு வைக்கிறாரே’ என்று பெரும் வியப்பு.

‘`ஐயர் காசு கொடுப்பார்ம்மா... வீட்டுல போய் கஞ்சி வெச்சு குடிப்பேன். இங்கே வந்தா வாழைப்பழம் கொடுப்பாரு... சாப்டுவேன். இதைவிட வேற என்னம்மா வேணும். எனக்கென்ன தங்கம் வேணுமா, வைரம் வேணுமா...’’ என்றார்.

எவ்வளவு பெரிய விஷயம்... எவ்வளவு எளிமையாக இரண்டே வரி குறள் மாதிரி சொல்லிவிட்டார் அந்த அம்மா?!

தனித்திருக்கும் அந்தத் தாயார், நமக்கு எது வேண்டும்; வேண்டாம் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்திவிட்டார். கோயிலில் இருந்து கிளம்பிவிட்டாலும் அன்று முழுவதும், அவருடைய உருவமும் குரலும் எனக்குள் சுழன்றுகொண்டே இருந்தன.

‘தனித்திரு’ என்ற தத்துவத்தைப் போதித்த அந்த அம்மா மறக்க முடியாத நபர்.

அதன் பிறகு இரண்டு மாதங்கள் சென்றிருக்கும்... வீட்டில் ஒரு நாள் பீரோவைத் திறந்தேன். அடுக்கடுக்காகப் புடவைகள். ‘இவற்றையெல்லாம் எத்தனை முறை கட்டியிருப்போம்?’

நிச்சயமாகப் பல புடவைகளைக் கட்டியிருக்க மாட்டேன். வேலைக்குப் போகும்போது, ஒரு சல்வார் அல்லது ஜீன், குர்தா போட்டுக்கொண்டு போய்விடுவேன். படப்பிடிப்பில் அவர்கள் கொடுக்கும் துணி. திரும்பி வந்து குளித்ததும் போடுவது இரவு உடைதான். காலையில் எழுந்ததும் ஒரு காஃப்தான் போட்டுக்கொண்டு வீட்டு வேலை, சமையல் எல்லாம் முடிப்பேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதாவது ஒரு புடவை. அதிலும் சென்னை வெயிலுக்கு பருத்தி குர்தாதான் சௌகரியமான உடை!

அப்படியென்றால் இத்தனை புடவைகள் எதற்கு? எத்தனை தடவை இந்தத் துணிமணிகளைக் கட்டியிருப்போம் நாம... ரீசேல் இல்லாத ஒரு பொருள்... எவ்வளவு வேஸ்ட்!’

இப்போது மீண்டும் ‘தனித்திரு’ எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

‘லக்ஷ்மி... நீ தனியா இருக்க. இதெல்லாம் எத்தனை தடவை கட்டுவ? நாளைக்குத் தனிமைன்னு ஒரு வாழ்க்கை வந்துட்டா, இதையெல்லாம் சுமந்துக்கிட்டு எங்கே போவ?’ இப்படியான பல கேள்விகள் மனதுக்குள் உருவாயின.

இறைவா! என்னை உணர வை. பாபா... என்னை உணர வையுங்கள். எது தேவை - எது தேவையில்லை என்று உணரவையுங்கள்!

அந்தப் பெரியம்மா பொட்டில் அடித்தாற் போன்று சொன்னாரே... ‘எனக்கு என்னத்துக்கு இவ்வளவு... இந்த வயசுக்கு மேல..!’ என்று. எவ்வளவு சரியான வார்த்தைகள்? அந்தந்த வயதுக்கு எவ்வளவு வேண்டும் என்பதை அந்த அம்மா உண்ர்ந்திருக்கிறாரே... நம்மில் பலபேர் ஏன் அதை உணர்வதில்லை?

ஏதாவது பொருள் வாங்கக் கடைக்குப் போகிறோம். தோழிக்குப் பரிசு வாங்க நகைக்கடைக்கே போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ‘நமக்கெல்லாம் வேண்டாம்பா. இருக்கிறதே போதும்’ என்ற வைராக்கியத்துடன்தான் போவோம்.

ஆனால் அங்கே போனதும், ஒரு புதுடிசைன் வளையலைக் காண்பிப்பார்கள். உடனே, ‘இந்த மாதிரி டிசைன் நம்மகிட்ட இல்லையே!’ என்று மனம் ஆசைப்பட்டதும், நம் வைராக்கியம் எல்லாம் பறந்து உடனே வாங்கிவிடுவோம்.

இதையெல்லாம் பார்க்கும்போது, எனக்குப் போதிக்க வந்த குருதான் அந்தப் பிள்ளையார் கோயில் அம்மா என்று நினைப்பேன். அவருடைய பெயரைக்கூடக் கேட்கவில்லை. இன்னொரு முறை ஷூட்டிங்குக்கு அந்தப் பக்கம் போனால் கேட்க வேண்டும்!

அவர் தனியாக இருக்கிறார். அவருடன் யாரும் இல்லை. ஆனாலும் பேச்சில் என்னவொரு தெம்பு. ‘எனக்குப் பிள்ளையார் இருக்கார். அவர் என்னைப் பார்த்துக்குவார்; என்னைப் பட்டினி கிடக்கவிடமாட்டார். நீ போடற காசை கோயில்ல போட்டுவிட்டு போ... ஐயர் எனக்குப் பிரசாதம் கொடுப்பார்... வேலை செய்றதுக்குக் காசு கிடைக்குது... அது போதும்’

அப்பப்பா... என்ன ஓர் உறுதி?! இப்படியான தன்னம்பிக்கைதான் இறை நம்பிக்கையோ? அதனால்தான் சான்றோர்கள் `தனித்திரு’ என்று சொல்லிச் சென்றார்களோ?

சான்றோர்கள் சொன்னதையெல்லாம் எந்த அளவுக்கு நாம் புரிந்துகொண்டோம் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது ‘தனித்திரு’வுக்குப் பல அர்த்தங்கள் புரிகிறது. தனித்திருக்கும்போதுதான் பயம் வருகிறது. ‘நான் தனியா இருக்கேனே’ என்ற பயம். அப்படிப் பயம் வரும்போது, நம்மைப் போன்ற மனிதர்களை நோக்கிக் கை நீட்ட முடியவில்லை.

எல்லோருமே என்னைப் போல இந்த மண்ணை விட்டு ஒரு நாள் போகப் போகிறவர்கள்தானே?! எனில், துணைக்கு யாரை தேடுவது எதைத் தேடுவது? இறைவனைத் தேடவேண்டும்.

நாம் தனிமை இல்லாமல் இருப்பதற்கு, நமக்கு இந்தத் தனிமையை உருவாக்கிக் கொடுத்தவன்... ‘என்றைக்குமே நீ தனி இல்லை. நான் உன்னுடன் இருக்கிறேன்’ என்று நமக்கெல்லாம் உணர்த்துபவன்... அந்த இறைவனைத் தேட மனம் அலைபாய வேண்டும்; அலைய வேண்டும்!

விடியற்காலையில் 4 மணிக்கு எழும்போதுதான் இது தோன்றும் என்பதில்லை. ஊர் உலகமே தூங்கும் அந்த வேளை வெகு நிசப்தமாக இருக்கும். மனமும் நினைப்பும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். அந்த நேரத்தில் தேட ஆரம்பித்தால், ஒரு தெளிவு கிடைக்கும். தேடினால் கிடைக்காததில்லை. அந்த நேரத்தில் நமக்குக் கிடைப்பது ஏதோவொரு தெளிவு... ஒரு சந்தோஷம்... இப்படியான உணர்வுகள்தானே ‘பாசிட்டிவ் தாட்ஸ்’! அந்த வைப்ரேஷன் இருந்தாலே வீடு நன்றாக இருக்கும். லட்சுமி கடாட்சம் வீடெங்கும் விளங்கும். நம்மைச் சுற்றியுள்ள எல்லோருமே நன்றாக இருப்பார்கள்.

-கடாட்சம் பெருகும்....