புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

லட்சுமி கடாட்சம் - 25

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி கடாட்சம்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

அந்த வீட்டைப் பற்றி அவர் சொன்ன தகவலைக் கேட்கக் கேட்க எனக்கு உச்சி முதல் பாதம் வரை பரவசத்தில் சிலிர்த்தது. ‘கொஞ்சம் நியம நிஷ்டையுடன் இருந்தா தேவலை’ என்று அவர் கூறியபோது, `‘நாங்க சைவம்தான்.. பூஜை எல்லாம் பண்ணுவோம்’’ என்று பதில் சொன்னேன்.

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்

அதன் பிறகு அந்த அம்மா சொன்னார்: “இந்த வீட்டைக் கட்டும்போது, மகா பெரியவா வந்து, நவரத்தினங்களை வாசல் நிலையடியிலும் பூஜை ரூமிலும் போடச் சொல்லி, அவரும் போட்டார்..!”

பாருங்கள்... எனக்கு என்னவொரு கொடுப்பினை! எனக்குக் கொடுப்பினை என்பதைவிட, ‘இவ இங்கே இருக்கட்டும்’ என்று பகவான் நிச்சயம் செய்துவிட்டான். மகா பெரியவா அப்போதே என்னை ஆசீர்வாதம் செய்து இந்த வீட்டுக்குள் அனுப்பியிருக்கிறார். அதெல்லாம் என்றோ நடந்து முடிந்த அதிசயம்.

இது நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, 1987-ல் இங்கே இருக்கும் ஒரு பிள்ளையார் கோயிலை மகா பெரியவாதான் கட்டினார். கட்டியதோடு மட்டுமல்லாமல், ‘இத்தனை வருஷத்துக்கு அப்புறம் கும்பாபி ஷேகம் பண் ணனும். அது பண்ணனும்... இது செய்யணும்...’ என்று அவரைப் பார்க்கப் போகிறவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பாராம்.

வெறும் பிள்ளையார் மட்டுமே இருந்த அந்தக் கோயிலில், ஈஸ்வரன், அம்பாள், மகா விஷ்ணு, மகாலட்சுமி, முருகன் என்று அவரவர்க்கு இஷ்டமான தெய்வங்களை வைத்துக்கொள்ள பெரியவாளிடம் அனுமதி கேட்டபோது, ‘சரி.. வச்சுக்குங்க!’ என்று அருளியிருக்கிறார்.

யாரோ ஓர் அன்பர், ‘ஆதிசங்கரரும் வைக்கலாம்’ என்று சொல்ல, இப்படியே ஒவ்வொரு தெய்வமாகப் பட்டியலில் சேர்ந்து கொண்டே வந்து, எல்லா விக்கிரகங்களுக்கும் எல்லோரும் நன்கொடை கொடுத்துவிட்டனர். சிலைகள் எல்லாம் செய்த பிறகு, குறிப்பிட்ட திரவத்தில் அந்தச் சிலைகளை எல்லாம் படுக்க வைத்து ஊறப்போடுவார்கள். அதன் பின்னர்தான் பிரதிஷ்டை செய்வார்கள்.

லக்ஷ்மி சிவச்சந்திரன்
லக்ஷ்மி சிவச்சந்திரன்

நானும் என் கணவரும் எங்களால் முடிந்த தொகையைக் கொடுத்துவிட்டோம், ‘எந்தச் சந்நிதிக்கு வேணாலும் வெச்சுக்குங்க’ என்று. திடீரென்று ஒரு நாள் கூட்டமாக சிலர் வந்து, ‘`உங்ககிட்ட தனியாகப் பேசணும்’’ என்றபோது சற்றுத் திகைத்துப் போனோம். ‘என்னன்னு தெரியலியே’ என்று பார்த்துக் கொண்டோம்.

“இல்ல மேடம்... தப்பா நினைக்காதேங்கோ. எல்லாரும் எல்லாத்துக்கும் பணம் கொடுத் துட்டா. மகாலட்சுமி சிலைக்கு மாத்திரம் இன்னும் ஒரு 15,000 ரூபாய் வேண்டியிருக்கு” என்றார்கள்.

1988-89களில் 15000 ரூபாய் என்பது பெரிய தொகை. நானும் இவரும் யோசிக்கும்போதே ஒருவர், “நாளைக்குள்ள கொடுத்தால் தான் அந்தச் சிலையின் வேலைகளை முடிச்சு, அதை எடுத்து ஊற வைக்க முடியும்” என்றார்.

“சரி... பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டேன்.

இவர் உடனே, “என்ன லக்ஷ்மி... நீ பாட்டுக்கு தைரியமா பார்க்கலாம்னு சொல்லிட்ட” என்றார்.

“எனக்குத் தெரியாது. நீங்க இருக்கிற தைரியம்தான்!”

“சரி... கமிட் பன்ணியாச்சு. பிளான் பண்ணலாம்” என்றார் யோசனையுடன்.

என்ன பிளான் பண்ணுவது! ஒவ்வொரு நேரம் நம்மிடம் லட்சக் கணக்கில் வங்கியில் இருக்கும்; எந்தச் செலவும் வராது. சில நேரங் களில் வெறும் ஆயிரத்துக்கே முழிமுழியென்று முழிப்போம். அந்தக் கதைதான் அப்போதும்.

இது, மாதச் சம்பளம் இல்லாதவர்களுக்கு நடக்கக் கூடியது. எங்களுக்கு அந்தக் காலகட்டத்தில் இரண்டு, மூன்று மருத்துவமனை விஷயங்கள்-செலவுகள் வந்துவிட்டன. எல்லாமே நமக்கு உறவில்லை என்றாலும் மிகவும் வேண்டப்பட்டவர்கள்.

‘எங்களுக்கு வசதியில்லை... கேன்சர்... பண்ணிக் கொடுங்கோ!’ என்று வந்தவர்கள்... சட்டு சட்டென்று அதற்கெல்லாம் செய்து அனுப்பிவிட்டோம். மருத்துவ உதவிக்குப் பணம் போய்விட்டதால், கையில் ஒரு நாலாயிரம் அளவுக்குதான் பணம் இருந்தது. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவேண்டும்.

‘என்ன பண்ணலாம்!’ என யோசிக்கத் தொடங்கினேன்.

“சரி.. ஏதாவது ஒரு நகையை விற்றுக் கொடுத்துடலாம். பகவான் கொடுத்ததுதானே... சாமிக்கே கொடுத்துடுவோம்!” என்று நான் சொன்னதும், “அதெல்லாம் வேணாம். ஒரு எஃப்.டி. முடியப் போகுது. அதை எடுத்துடலாம்” என்றார் இவர்.

இப்படியெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென வீட்டு வாசலில் ஒரு தயாரிப்பாளர் வந்து நின்றார். அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. அவர் பெயர் ஈராளி.

‘யார் இவர்? நம்ம வீட்டு வாசலில் நிற்கிறாரே... சாதாரணமாக யாரும் வருவதாக இருந்தால், மேனேஜருக்கு போன் செய்து கேட்டுவிட்டு வருவார்கள். அப்படி யாரும் போன் எதுவும் செய்யவில்லையே... யார் இவர்?’ என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே, அவர் உள்ளே வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

`‘நான் படம் எடுக்கப்போறேன்’’ என்று அவர் சொன்னதும் உட்காரச் சொல்லிப் பேசினேன். “மேடம்... உங்களையும் பிரேம் நஸீர் சாரையும் வச்சு ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன்” என்றார்.

அப்போது மலையாளப் படங்களில் நான் நிறைய நடித்துக் கொண்டிருந்தேன். “சரி.. கதையைச் சொல்லுங்க” என்றதும் சொல்ல ஆரம்பித்தார். மிக நல்ல கதை. எனக்குப் பிடித்திருந்தது. டேட்ஸ் கேட்டபோது, `மூன்று மாதம் கழித்துக் கொடுத்தால்கூட பரவாயில்லை’ என்றார்.

பொதுவாக மலையாளப் படங்களில் ஒப்பந்தம் செய்தால், உடனேயே ஒரு 10 நாளில் கால்ஷீட் கேட்பார்கள். ‘இவர் பரவாயில்லையே’ என்று தோன்றியது எனக்கு. திருவனந்தபுரத்தில் தான் ஷூட்டிங் என்றார். எல்லாம் பேசி முடித்ததும், “ஒரு அட்வான்ஸ் கொடுத்துட்டுப் போயிடறேம்மா” என்றார்.

“சார்... நீங்க மூணு மாசம் கழிச்சுதான் டேட்ஸ் கேட்கறீங்க. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். நான் 10, 15 நாள் முன்னாடிதான் அட்வான்ஸ் வாங்கிப்பேன். யார்கிட்டயும் முன்னால வாங்க மாட்டேன். ஏன்னா எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னுதான்!” என்றேன்.

“இல்லல்லம்மா... இங்கே வந்து பிரேம் நஸீர் சாரைப் பார்த்தேன். டைரக்டரைப் பார்த்தேன். இப்போ உங்களையும் பார்த்துட்டேன். எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுத்துட்டேன். உங்களுக்கும் கொடுத்துட்டா நான் கிளம்பிட்டே இருப்பேன்!” என்றார்.

கொஞ்சம் யோசித்துவிட்டு, “சரி கொடுங்க” என்றேன்.

“கேஷாதாம்மா இருக்கு... வவுச்சர் கொடுத்துடுங்க”

“நீங்க லெட்டர் எழுதிக் கொடுங்க... நான் கையெழுத்துப் போட் டுட்டு வாங்கிக்கிறேன்” அவர் கடகடவென ஆங்கிலத்தில் எழுதி நீட்ட, நான் அதை வாங்கி வாசிக்கிறேன். முன்பணம் சரியாக 15,000 ரூபாய்! அப்படியே ஆச்சர்யமாய்ப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்த அவர், “என்னம்மா.. வெறும் 15000 ரூபாய் அட்வான்ஸ்... கம்மியா இருக்கேன்னு பார்க்கிறீங்களா?” என்றார்.

“இல்லல்ல... வேற ஒரு விஷயத்தை நினைச்சேன்...’’ என்றேன்.

அட்வான்ஸ் வாங்கியதும் உடனே சுவாமிக்குக் கொடுத்தாயிற்று. நானும் என் கணவரும் யோசிக்க யோசிக்க ஒன்றுமே புரியவில்லை. காலையில்தான் கேட்கிறார்கள். நாளைக்குள் ஏற்பாடு செய்வதாகச் சொல்கிறோம். அரை மணி நேரத்துக்குள் முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஒரு தயாரிப்பாளர் வந்து, அதே 15,000 ரூபாயை அட்வான்ஸாகத் தருகிறார்.

அதாவது… அவன் தன்னுடைய காரியங்களை யார் மூலமாவது தானே நடத்திக்கொள்கிறான். He will choose the person. எதுவாக இருந்தாலும் அவன்தான் செய்கிறான் என்பதைத் திரும்பத் திரும்ப மண்டையில் அடித்த மாதிரி சொல்லிக்கொண்டே இருப்பது புரிந்தது! அதே மாதிரி எத்தனையோ காரியங்கள்! சொல்கிறேன்!

- கடாட்சம் பெருகும்...