Published:Updated:

லட்சுமி கடாட்சம் பெருகட்டும்!

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

- புவனா கண்ணன்

லட்சுமி கடாட்சம் பெருகட்டும்!

- புவனா கண்ணன்

Published:Updated:
லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

தூய பக்தியோடு வணங்கி விரும்பி அழைப்பவர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் நிரந்தரமாக வாசம் புரிபவள் திருமகள். திருமகளை நெஞ்சில் தாங்கியதாலேயே திருமால் ஸ்ரீநிவாஸன் என்ற சிறப்பையும் பெற்றார். சுத்தமும் சத்தியமும் எங்கெல்லாம் நிலை பெற்று நிற்கிறதோ அங்கெல்லாம் லட்சுமி தாயார் ஆனந்தமாக வசித்திருப்பாள் என்கின்றன சாஸ்திரங்கள்.

சகல சுபிட்சங்களையும் அள்ளி வழங்கும் மகாலட்சுமி தேவியை வழிபட உகந்த நாள்களில் ஒன்று, ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக் கிழமையில் வரும் வரலட்சுமி விரத தினம். இந்த வருடம் வரும் 20.8.21 அன்று வரலட்சுமி விரதம்.

வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம்

புனிதம் மிகுந்த இந்தத் திருநாளில், கலசம் வைத்து விரத நியதிகளோடு அலைமகளை வழிபடுவதோடு, அவளின் சாந்நித்தியம் நிறைந்த தலங்கள் மற்றும் அன்னையின் மகிமையைப் போற்றும் தகவல்களை அறிந்து வணங்குவது நன்மை பயக்கும். கடன் நீங்கும். அவ்வகையில் திருமகளின் திருவருளைப் போற்றும் சில தகவல்கள், தலங்கள் இங்கே உங்களுக்காக...

லட்சுமி கடாட்ச திருத்தலங்கள்

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்), 108 வைணவத் தலங்களுள் முதன்மையானது. வைணவர்கள், ‘கோயில்’ அல்லது ‘பெரிய கோயில்’ என்று குறிப்பிட்டால் அது ஸ்ரீரங்கத்தையே குறிக்கும். இங்கு அருளும் ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் பெருமை அளவிடற் கரியது. இல்லத்திலும் உள்ளத்திலும் லட்சுமிகடாட்சம் நிறைந்திருக்கு அனைவரும் அவசியம் ஒருமுறை திருவரங்கம் ஸ்ரீரங்கநாயகித் தாயாரை தரிசித்து வழிபட்டு வரவேண்டும்.

ஸ்ரீரங்கநாதரின் ஏழு நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் ஆகியோரில் ரங்கநாச்சியாரே முதன்மையான வர். இவருக்குச் செய்யப்படும் எல்லா பூஜைகளும் மற்ற தேவியரைச் சென்றடையும் என்பது ஐதீகம்.

மகாலட்சுமி தாயார்
மகாலட்சுமி தாயார்


திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள் மறவாமல் தரிசித்து வரும் தலம் அலமேலுமங்காபுரம். திருமலை திருப்பதி செல்பவர்கள் முதலில் இங்கு சென்று தாயாரை தரிசித்த பிறகே திருப்பதி பெருமாளைத் தரிசிக்கச் செல்லவேண்டும் என்ற நியதி உண்டு. இந்தத் தாயார் கலியுகம் முடியும் வரையும் பெருமாளுக்காக இந்த திருச்சானூரில் காத்திருப்பதாக ஐதிகம். இந்த தலத்தை மிதித்தாலே போதும், சகல தரித்திரங்களும் நீங்கி ஐஸ்வர்யங்களைப் பெறுவர் என்பது நம்பிக்கை.

சென்னை-திருப்பதி மார்க்கத்தில், சென்னையிலிருந்து சுமார் 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருநின்றவூர். `திரு’வாகிய மகாலட்சுமி தங்கி நின்ற ஊர் என்பதால் திருநின்றவூர் என்று பெயர்பெற்றதாம். இங்குள்ள அருள்மிகு பக்தவத்சல பெருமாள் ஆலயத்தில் அருளும் தாயார், அழகான தமிழில் `என்னைப் பெற்ற தாயார்’ என்றே வணங்கப்படுகிறார். திருமங்கை ஆழ்வாரை மீண்டும் மீண்டும் பாடவைத்த கருணை உள்ளம் கொண்ட தேவி இவர்.

இந்தக் கோயிலில், கிரகச் சக்கரம் ஒன்று உள்ளது. தாயாரின் கிரக நிலையைக் குறிக்கும் அந்தச் சக்கரத்தில் கட்டத்துக்கு ஒன்பது என்று மொத்தம் 81 நாணயங்களை வைத்து வழிபடுவது விசேஷம். தொடர்ந்து ஒன்பது வெள்ளி அல்லது ஒன்பது பௌர்ணமிகள் இப்படிப் பூஜை செய்தால், குழந்தை பாக்கியம், தன வரவு, கல்யாண யோகம் அமையும் என்று ஐதிகம்.

வந்தவாசி அருகிலுள்ள ஊர் ஆவணியாபுரம். ஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள் அருள்வதால், தென் அகோபிலம் எனப் போற்றப்படும் இந்தத் தலத்தில் திருமகள் மிக மிக வித்தியாசமாக சிம்ம முகம் கொண்டு விளங்குகிறாள். கருவறையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மடியில் மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். தாயாரின் திருமுகம் சிம்ம முகமாக இருந்தாலும், கண்களில் அன்பும் கருணையும் பளிச்சிடுகின்றன. இந்த அன்னையை வணங்கிட சகல அச்சங்களும் தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்துக்கு கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது கீழச் சூரிய மூலை. இங்கு அருள்மிகு சூரியகோடீஸ்வரர் ஆலயத்தில் அபூர்வ கோலத்தில் அருள்கிறாள் மகாலட்சுமி. கோயிலின் குபேர மூலையில், பத்மாசன கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியின் வலக்காலில் ஆறாவது விரல் அமைந்துள்ளது. ‘ஆறு’ என்பது சுக்கிரனுக்குரிய எண். எனவே சுக்கிரனின் ஆதிக்கம் அன்னையிடம் நிறைந்திருக்கிறது; இந்த மகாலட்சுமியை தரிசித்தாலே போதும் செல்வகடாட்சம் பெருகும்; சுக்ர யோகம் கைகூடும் என்கிறார்கள்.

லட்சுமிதேவி
லட்சுமிதேவி


சென்னை-திருச்சி சாலையில் தாம்பரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சிங்கபெருமாள்கோவில். இந்த ஊரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் ஆப்பூர். இங்கே ஒளஷதகிரி எனும் மலைக்குமேல் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள்.

இந்தக் கோயிலில் பெருமாளே திருமகளாக தரிசனம் தருவதாக ஐதிகம். இதனால் இங்கே பெருமாளுக்கு ஆறு கஜ புடவை வஸ்திரமாகப் பக்தர்களால் சாத்தப்படுகிறது. கல்யாண வரம் வேண்டுவோர், திருமணத் தடைகள் உள்ளவர்கள், உறவுச் சிக்கல்கள் கொண்டவர் இங்கு வந்து பெருமாளுக்குப் புடவை சாத்தி வேண்டிக்கொண்டால் உடனே நன்மை பெறுவர் என்பது நம்பிக்கை.

சென்னையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது திருமழிசை அருள்மிகு வீற்றீருந்த பெருமாள் ஆலயம். கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்கிறார் ஸ்ரீவீற்றிருந்த பெருமாள். இந்தப் பெருமாளின் கிரீடத்தின் நான்கு புறமும் லட்சுமிதேவி அருள்கிறாள். ஆகவே, இந்தப் பெருமாளை வணங்குபவர்களுக்குச் சகல விதமான செல்வங்களும் சேரும் என்கிறார்கள். இங்கு அருளும் ஸ்ரீசெண்பகவல்லித் தாயாரை ஒருமுறை தரிசித்தாலே போதும்; நம் மனக் கவலைகளை எல்லாம் விலகியோடச் செய்து, வாழ்வில் நிம்மதியை யும் சகல சுபிட்சங்களையும் அருள்வார் என்கிறார்கள் ஆன்றோர்.

சென்னை பெசன்ட்நகரில் உள்ள அஷ்டலட்சுமி ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கே அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம். மேலும், சக்ர வடிவிலும் மேரு உருவாகவும் வழிபடுவது சிறப்பு என்கின்றன ஞான நூல்கள். இங்கே இந்தக் கோயிலின் தரைத் தளம்- சக்ரமாகவும், விமான அமைப்பு- மேரு வடிவிலும் அமைந்துள்ளது.

மேலும், பிரதான மூர்த்தியாம் மகாலட்சுமி உடனுறை மகாவிஷ்ணு சந்நிதி முதல், அஷ்ட லட்சுமியரையும் பக்தர்கள் தரிசித்து வலம் வரும் அமைப்பு, ‘ஓம்’ என்ற பிரணவ எழுத்தின் வடிவில் இருக்கிறது. அஷ்டலட்சுமி கோயிலில் உள்ள சங்கநிதி- பதும நிதி சந்நிதிகள் விசேஷமானவை. சங்கடங்கள் தீர சங்க நிதி சந்நிதியிலும், சகல நலன்கள் பெற பதுமநிதி சந்நிதியிலும் காணிக்கை செலுத்துகின்றனர் பக்தர்கள்.

இன்னும் சில தலங்கள்...

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதர் ஆலயத்தின் பிராகாரத்தில் சிவ லிங்கத்தின் முன் விசேஷ கோலத்தில் மகாலட்சுமி எழுந்தருளியுள்ளாள்.

மும்பை அருகில் ஹேதவடே கிராமத்தில், உள்ள கோயிலில் பாறை வடிவில் ஸ்ரீலட்சுமிதேவி வழிபடப்படுகிறாள். பத்ரிநாத்தில் திருமகள் சாளக்கிராம வடிவில் எழுந்தருளி உள்ளார். ஆந்திராவின் மங்களகிரி நரசிம்மர் கோயிலில் தவலட்சுமியாக அருள் புரிகிறாள்.

காஞ்சிபுரம் காமாட்சி கோயிலில் கருவறை கோஷ்டத்தில் எழுந்தருளி இருக்கும் அரூப லட்சுமி, சௌந்தர்ய லட்சுமி வடிவங்கள் அற்புதமானவை. காமாட்சி தேவியின் சந்நிதியில் தரப்படும் குங்குமப் பிரசாதத்தை அஞ்சன காமாட்சி சந்நிதியில் சமர்ப்பித்து வணங்கி, பின்னர் செளந்தர்ய லட்சுமியை தரிசித்து வழிபடுவது வழக்கம். இதனால் பக்தர்களுக்குச் சகல செல்வங்களும் ஸித்திக்கும் என்பது ஐதிகம்.

திருமகள் பிறந்த இடம் என்று போற்றப்படும் தரங்கம்பாடி திருமால்மாகுடி தலத்தில் சிவகாம சுந்தரி அம்பாளே திருமகளாக வணங்கப்படுகிறார். திருமகள் தங்கிய `திருத்தங்கல்’ தலத்தில், லட்சுமி தேவி நின்ற கோலத்தில் செங்கமல நாச்சியாராக சேவை சாதிக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோல்ஹாப்பூர், திருமகளுக்கான புராதன தலங்களில் ஒன்று. கோலாசுரனை திருமகள் வதம் செய்த தலம் இது. அகத்தியர், ‘லட்சுமி பஞ்சகம்’ பாடியதும் இங்குதான்.

திருச்சி-உறையூரில், கமலவல்லி நாச்சியார் எனும் பெயரில் அவதரித்த திருமகள், அரங்கநாதரை மணந்து கொண்டாளாம். எனவே, இங்கும் அவளுக்கு தனிக் கோயில் உள்ளது.

கோவை அருகே உள்ள காரமடை எனும் ஊரில் அரங்கநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்க, அருகில் உள்ள மலையில் பெட்டத்தி அம்மனாக தனிக் கோயில் கொண்டிருக்கிறாள் திருமகள்!

லட்சுமி தீர்த்தங்கள்!

திருமகள் சிவபூசை செய்யவும் நீராடி மகிழவும் அமைத்த தீர்த்தங்களுக்கு ‘லட்சுமி தீர்த்தங்கள்’ என்று பெயர். திருப்பரங்குன்றம், பனையூர், வலம்புரம், திருப்புத்தூர், காஞ்சிபுரம், ராமேஸ்வரம் முதலான பல தலங்களில் லட்சுமி தீர்த்தங்கள் இருக்கின்றன. இவற்றில் முதன்மை பெற்றது திருவாரூர் திருக்குளமாகும். அது திருமகளின் திருப்பெயரால் ‘கமலாலயம்’ என்று அழைக்கப்படுகிறது.

திருநின்றியூரில் ஆலயத்துக்குத் தெற்கிலும் திருமழபாடியில் அம்பிகை சந்நிதிக்கு எதிரேயும் மகாலட்சுமி தீர்த்தம் அமைந்திருக்கிறது. அதேபோல், திருமாகறல் மாகறலீசுவரர் ஆலயத்துக்கு எதிரிலும், கடிகுளம் கற்பகனார் கோயிலிலும் இன்னும் அநேக தலங்களிலும் லட்சுமி தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் நீராடி சிவபெருமானை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதிகம்.

லட்சுமி கடாட்ச வழிபாடு!

வில்வமரத்தில் லட்சுமி வசிப்பதால், அதற்கு ‘லட்சுமி வாசம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது சாதக நூல்களில் வில்வம் லட்சுமியின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வில்வ இலையால் அர்ச்சிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.

லட்சுமி
லட்சுமி


வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால், அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். இப்படி செய்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் நம்பிக்கை.

பால், தேன், தாமரை, தானியக் கதிர், நாணயங்கள் ஆகிய ஐந்தும் பஞ்ச லட்சுமியின் அடையாளங்களாகும். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வீட்டில் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும். வியாபார இடங்களில் வைத்திருந்தால் தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

வீட்டின் முற்றத்தில் சானத்தில் மெழுகுதல் கோலமிடுதல், அதில் பூக்களை வைத்தல் போன்றவையாவும், மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் அமைப்பாகும். காலையில் தலைவாயிலைத் துய்மைபடுத்தி படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து லட்சுமியைத் துதிக்க வேண்டும். இவற்றையெல்லாம் தினசரி செய்து வந்தால் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism