முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுங்கள்
அத்தனை மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனைகள் எழுதியவர் முத்துசுவாமி தீட்சிதர். ஆழமான, ஆத்மார்த்தமான பாடல்கள் - அரிதான ராகங்களிலும் கூடக் கீர்த்தனைகளைச் செய்திருக்கிறார். தன் பாடல்களில் அத்வைதத்தை முன்னிறுத்தியவர். இவர் எழுதிய கீர்த்தனைகளில் ‘மஹா கணபதிம்’ அதிகம் அறியப்பட்ட பாடல். தாள ஞானத்தில் தலை சிறந்தவர். ஏழு அடிப்படை தாளவகைகளிலும் கீர்த்தனைகளை எழுதிய ஒரே கர்நாடக இசைமேதை என்று இவரைக் குறிப்பிடலாம். மேற்கத்திய இசையிலும் இவருக்கு நல்ல ஞானம் இருந்தது என்பது சிலருக்கு வியப்பை அளிக்கலாம்.

புதுமைகளில் ஈடுபடத் தயங்க வேண்டாம்
பிறர் தெலுங்குக் கீர்த்தனைகளை மட்டுமே இயற்றிக் கொண்டிருந்தபோது முத்துசாமி தீட்சிதர் சமஸ்கிருதத்தில்தான் தனது பெரும்பாலான கீர்த்தனைகளை இயற்றினார். அதுமட்டுமல்ல அவரது சில கீர்த்தனைகள் மணிப்பிரவாள நடையில் அமைந்திருந்தன. அதாவது சமஸ்கிருதமும் தமிழும் கலந்த நடை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிறரை வளர்த்து விடுங்கள்
தஞ்சை நால்வர் உள்ளிட்ட பலரும் இவரது சீடர்கள். இவரது சகோதரர் பாலசாமி கர்நாடக இசைக் கச்சேரிகளில் வயலினை அறிமுகப்படுத்தியவர். வீணை இசைக் கலைஞர் வெங்கடராம ஐயர், மிருதங்க இசைக் கலைஞர் தம்பி அப்பா, சியாமா சாஸ்திரியின் மகன் சுப்பராய சாஸ்திரி ஆகியோர் இவரது சீடர்கள். தங்கள் குருவின் தடத்தில் சென்று முத்திரை பதித்தவர்கள்.

தனி முத்திரையை உருவாக்கிக் கொள்ளுங்கள்
வைத்தீஸ்வரன் கோவில் முருகப்பெருமான் அருளால் பிறந்தவர் என்பதால் முத்துக்குமாரசுவாமி என்று பெயரிடப்பட்டவர். முருகனை முக்கிய தெய்வமாக ஏற்றுக்கொண்டதால் தனது பாடல்களில் ‘குருகுஹ’ என்ற வார்த்தை இடம்பெறுமாறு பார்த்துக் கொண்டார்.
பயணங்கள் பலனளிக்கும்
பல ஆலயங்களுக்குப் பயணம் செய்வதை வழக்கமாகவே வைத்துக்கொண்டிருந்தார் முத்துசாமி தீட்சிதர். தான் செல்லும் ஆலய தெய்வங்களைப் பற்றிக் கீர்த்தனைகளை இயற்றுவதையும் வழக்கமாக்கிக் கொண்டார். அந்த விதத்தில் மிக அதிகமான தெய்வங்களின் மீது பாடல்களை இயற்றியவர் என்று முத்துசாமி தீட்சிதரைக் குறிப்பிடலாம்.