Published:Updated:

கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ - விசிறி சாமியாரின் அவதார தினம் இன்று!

யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்

கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ - விசிறி சாமியாரின் அவதார தினம் இன்று!

விசிறி சாமியார் என்றும் காசி மகான் என்றும் அன்போடு அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஜயந்தி தினம் இன்று. டிசம்பர் மாதம் 1-ம் தேதி அன்று, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஆசிரமத்தில், அவரது ஜயந்தி விழா விமர்சையாக பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாகக் கொண்டாடப்படும். அதேபோல், அவரது பக்தர்களால் தமிழகத்தின் அநேக ஊர்களிலும் யோகியின் ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

தபோவனர்களின் தாயகம் என்று போற்றப்படும் திருவண்ணாமலைக்கு அருள் சேர்த்த அருளாளர்கள் அநேகம் பேர். அந்த வரிசையில் சமீப காலத்தில் வாழ்ந்து பலருக்கும் ஞான குருவாக விளங்கியவர் விசிறி சாமியார்.

யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்

ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீரமண மகரிஷி, பப்பா ராம்தாஸ் ஸ்வாமிகள் ஆகிய மூவரும் உருவாக்கிய அருளாளர் யோகி ராம்சுரத்குமார். காலம் முழுவதும் ராம நாமத்தை உச்சரித்து அதையே மந்திரமாக்கிப் பல அற்புதங்கள் செய்த திருவருள் சித்தர் இவர். தன்னைப் பிச்சைக்காரன் என்று அவ்வப்போது இவர் கூறிக் கொண்டாலும், பக்தர்கள் இவரைக் 'கடவுளின் குழந்தை' என்றே போற்றினார்கள். இவரின் பார்வை பட்டாலே போதும் சகலமும் ஸித்திக்கும் என்று நம்பினார்கள்.

சந்நதித் தெரு இல்லத்தில் வாழ்ந்திருந்த யோகி, அங்கிருந்தே பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அதற்கு முன்பாக திருவண்ணாமலையின் காடுகள், கிரிவலப்பாதை, திறந்தவெளி, கோயிலின் அருகில் இப்படிப் பொதுவெளியில் தங்குவதையே விரும்பினார். சிலருக்குப் பித்தனாகவும், சிலருக்குக் கடவுளாகவும் ஆரம்பத்தில் அறியப்பட்டார். அற்பமான சித்து விளையாட்டுகளைச் செய்தால் தானே மக்கள் ஒருவரை சாமியாக நினைப்பார்கள்... எனினும் அவர் எந்தவிதமான சித்துக்களையும் செய்து காட்டுவதோ, உபன்யாசங்களைக் கூறுவதோ செய்யவில்லை. எவரிடமும் எதிர்காலத்தைக் கணித்து கூறியதில்லை. அன்போடு அணுகும் பக்தர்களின் இதயங்களில் அமைதி மற்றும் ஆனந்தம் தந்து அவர்களின் ஞான குருவாக இருந்தார். அடைக்கலம் அடைந்தவர்களுக்குக் கைகளை உயர்த்தி, “பயப்படாதே!” என சைகை செய்வார். அதுபோதும் அந்த பக்தர்கள் இன்றுவரை அமைதியும் நிம்மதியும் உணர்ந்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.

யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்

“என் தந்தை உன்னை ஆசிர்வதிக்கிறார்!” என அடிக்கடி ஆசீர்வதிப்பார். எப்போதுமே அவர் தன்னை முன்நிறுத்திக் கொண்டதில்லை. இதுவே அவரின் ஞானத்துக்கு அடையாளம். ஒரு குழந்தையைப் போல் எப்போதும் குலுங்கி குலுங்கிச் சிரித்தவாறே இருப்பார். பிச்சைக்காரன் என்று தன்னைக் கூறிக் கொண்டாலும், மக்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டு வருவதைக் கண்டு ஆரம்பத்தில் விலகிச் சென்றார். தன்னிடம் ஏதோ புதையல் இருப்பதாக சிலர் எண்ணிக் கொண்டு தொந்தரவு செய்ததையும் அவர் விரும்பவில்லை. கடவுளைத் தவிர வேறு எந்த செல்வமும் நிலையற்றது என்று உணர்த்தினார்.

எளிய ஆங்கிலத்தில் பேசுவார், சிலசமயம் தமிழில் பேசுவார். பொதுவாக அமைதியாகப் பேசாமலே இருப்பார். மணிக்கணக்கில் சிரிப்பார், பல நாள்கள் ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்ந்துவிடுவார். சித்தன் போக்கு சிவன் போக்கு என்றே வாழ்ந்தார். எந்த உணவைக் கொடுத்தாலும் சிரட்டையில் பெற்றுக் கொள்வார். அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார். இனிப்பு கொடுத்தே பல பக்தர்களின் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி உள்ளார். வெறும் பால் கொடுத்து வயிற்று வழியை நீக்கி உள்ளார். ஆயிரக்கணக்கான மக்கள் இவர் பார்வை பட்டே பல நோய்களும் கடன் பிரச்னைகளும் நீங்கி இருப்பதாக இன்றும் சொல்கிறார்கள்.

யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்

காசிக்கு அருகே சிறிய கிராமமான ‘நர்தரா’ என்ற ஊரில் 1918 டிசம்பர் 1 -ம் நாள் யோகி ராம்சுரத்குமார் பிறந்தார். எளிமையாக அவதரித்தாலும் இவரது வாழ்வு பலருக்கு நம்பிக்கையை அளித்த பிரமாண்ட வரலாறாகவே இருந்தது. அன்றும் இன்றும் நம்மிடையே ஞான சொரூபமாக வாழ்ந்து அருள் செய்யும் மகான் திருவடிகளை வணங்கி ஆனந்தம் பெறுவோம்.

ஜெயகுரு ராயா!...ஜெயஜெய யோகி ராம்சுரத்குமார...

அடுத்த கட்டுரைக்கு