தொடர்கள்
Published:Updated:

பிள்ளை வரம் அருள்வார் பால மணிகண்டன்!

பால மணிகண்டன்!
பிரீமியம் ஸ்டோரி
News
பால மணிகண்டன்!

பால மணிகண்டன்!

பகவான் சாஸ்தாவின் 4-ம் திருக்கோயில் குளத்துப்புழை. கல்லிடை யாற்றின் பிரிவான குளத்துப்புழை நதியின் கரையில் அமைந்துள்ள எழில்மிகு கேந்திரம் இது. பரசுராமரால் இங்கு ஆதியில் உருவாக்கப் பட்ட சாஸ்தா க்ஷேத்திரம் காலவெள்ளத்தில் மறைந்துவிட்டது.

பிள்ளை வரம் அருள்வார் பால மணிகண்டன்!

இந்தப் பகுதியில் கொட்டாரக்கரை மஹாராஜா ஆட்சி செய்த காலம். அந்தணர் ஒருவர் ராமேஸ்வரம் யாத்திரையை முடித்து இவ்வழியே திரும்பிக்கொண்டிருந்தார். அவருடன், சமையல் வேலை யைக் கவனித்துக்கொள்ள `குரூப்' எனும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் வந்தார். இருவரும் குளத்துப்புழை ஆற்றின் கரையில் சற்று இளைப்பாறினார்கள். அன்றைய பொழுதை அங்கேயே கழிக்கவும் முடிவு செய்தார்கள்.

சமையற்கார அன்பர் சமையலுக்காக அடுப்பு தயார் செய்தார். அதன் பொருட்டு கற்களை அடுக்கினார். அவற்றில் ஒன்று சற்று உயரமாக இருந்தது. எனவே, இணையாக வேறோரு உயரமான கல்லை வைத்தார். இப்போதும் குறிப்பிட்ட கல் மேலும் உயரமாகத் தெரிந்தது. சமையற்கார அன்பர் வேறு வேறு கற்களைப் பயன்படுத்தியும் இதே நிலைதான் தொடர்ந் தது. அதனால் எரிச்சல் அடைந்தவர், வேறொரு கல்லை எடுத்து இந்தக் கல்லை ஓங்கி அடித்தார்.

அந்தக் கல், எட்டு துண்டுகளாகச் சிதறியது. அத்துடன் குருதியும் கொட்டத் தொடங்கியது. பதறிப்போனார் சமையற்கார அன்பர். விஷயத்தை அந்தணரிடம் தெரிவித் தார். அந்தணர் அந்த இடத்தில் சாஸ்தாவின் சாந்நித்தியம் இருப்பதை அறிந்தார். தர்ப்பையால் உடைந்த கல் துண்டு களைக் கட்டி சாஸ்தாவைப் பூசித்தார்.

அன்றிரவே பகவான் அவர் கனவில் தோன்றி, பரசு ராமரால் உருவாக்கப்பட்ட குளத்துப்புழை க்ஷேத்திரம்தான் இது என்று விளக்கி, தனக்கு மீண்டும் ஆலயம் எழுப்பும்படிப் பணித்தார். இந்த விவரத்தை அறிந்த கொட்டாரக்கரை அரசனும், அங்கு ஐயனுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டிக் கொடுத்தார். குளத்துப்புழையில், இன்றும் அந்த உடைந்த கல்லுக்குத்தான் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

புழை என்றால் `ஆறு' என்று பொருள். ஆற்றின் ஒழுக்கு போல் ஆண்டவனின் அருள் என்றும் வற்றாமல் சுரக்கும் தலம் இது. மன அமைதிக்காகவும் பக்தர்களுக்கு நல்ல ஆறுதலைத் தருவதற்காகவும் பகவான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பர்.

குளத்துப்புழை திருத்தலத்தில் சாஸ்தாவின் சாந்நித்தியம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. பகவான் இங்கே வீரமணி கண்டனாக - குழந்தை அம்சத்தில் அருள்வதாக ஐதிகம். இன்றும் குழந்தைப் பாக்கியம் இல்லாத எத்தனையோ பேர், இங்கு வந்து ஐயனைத் தரிசித்து வழிபட்டு, அவரருளால் பிள்ளை வரம் அடை கின்றனர்.

பால சாஸ்தாவாக இருந் தாலும், பகவான் இங்கே கடுமையான ப்ரம்மசார்யம் கொண்ட உக்கிரமூர்த்தியாகவும் மங்கலப் பிரதாயனாக வும் காட்சியளிக்கிறார். உப தெய்வங்களாக யக்ஷி, கணபதி, பூதநாதர், நாகர் ஆகியோர் அருள்கின்றனர்.

மூலக்கற்களையே வெள்ளியால் கட்டி வழிபட்ட போதும், அலங்கார பூஜைகளுக்காகப் பஞ்சலோக விக்கிரஹம் ஒன்று சமீப காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஆலயம் பரந்துவிரிந்து திகழ்ந்தாலும், கருவறை அமைந்திருக்கும் அம்பலம் மிகச் சிறியதாகவே காணப்படுகிறது. முயற்சி ஏதுமின்றி, மனமானது தானே ஒடுங்கும் நிலையே உண்மையான தியானம். அந்த நிலை சிலிர்ப் பும் சிறப்புமாகக் கைகூடுவ தைக் குளத்துப்புழை தலத்தில் உணர்ந்து அனுபவிக்கலாம்.

இந்தக் கோயில் பந்தளம் அரசரால் உருவாக்கப்பட்டது என்றாலும், பிரதிஷ்டை கொட்டாரக்கரையைச் சார்ந்த அந்தணரால் அமைக் கப்பட்டதால் ஆலயம் கொட்டாரக்கரை அரசரின் கைவசமே இருந்தது. பின்னர் கோயில் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக் குக் கைமாறியது.

இந்தக் கோயிலின் அருகில் பாயும் நதி குறிப்பிடத்தக்கது. அழகுமிகு குளத்துப்புழை ஆற்றைக் கடந்தே ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். இந்த ஆற்றிலுள்ள மீன்களெல்லாம் பகவானின் பரிவாரக் கணங்களாகும். அதனால் இங்கே மீன்ஊட்டு எனப்படும் வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

குளத்துப்புழை நதி
குளத்துப்புழை நதி
குளத்துப்புழை
குளத்துப்புழை
யக்ஷி அம்மன்
யக்ஷி அம்மன்

சருமநோய் நீங்குவதற்காகப் பக்தர்கள் ‘மீனூட்டு வழிபாடு’ (மீன்களுக்கு உணவு அளித்தல்) நடத்துவது உண்டு. இங்குள்ள மீன்களைப் பிடிப்பது கூடாது. இதுகுறித்து சுவாரஸ்யமான சரித்திரம் ஒன்றும் சொல்லப் படுவது உண்டு.

ஆங்கிலேயர் காலத்தில் இந்தப் பகுதிக்கு அதிகாரியாக வந்த வெள்ளையர் ஒருவர், குளத்துப்புழை ஆற்றில் அளவில் பெரிதான மீன்களைக் கண்டு வியந்தார். அவற்றைப் பிடித்துச் சமைத்து உண்ண எண்ணினார்.

``அவை பகவானின் பரிவாரங்கள். அவற்றைப் பிடிப்பதோ உண்ண முயல்வதோ கூடாது. பகவானின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்'' என்று பலரும் எடுத்துச் சொன் னார்கள். ஆனால் அதிகாரி கேட்கவில்லை.

வலுக்கட்டாயமாக ஆற்றில் மீன் ஒன்றைப் பிடித்து வர ஆணையிட்டார். அன்று இரவே அந்த அதிகாரியின் உடல் முழுக்க மீன்களுக்கு உள்ளது போன்று செதில் செதிலாகத் தடிப்புகள் தோன்ற ஆரம்பித்தன. உடம்பில் நெருப்பு பட்டது போல் தகிப்பு வேறு!

சற்று நேரத்தில் அவரின் மனைவி, பிள்ளைகளும் இப்படியான நிலைக்கு ஆளா னார்கள். அதிகாரி பயந்துபோனார். சாஸ்தாவின் கோபமே காரணம் என்று உதவியாளர்கள் எடுத்துக்கூறினர்.

தவற்றை உணர்ந்த அதிகாரி, தனக்கு உடம்பு சரியாகிவிட்டால் ஐயனை வணங்கி காணிக்கை செலுத்துகிறேன் என்று வேண்டிக்கொண்டார். ஆற்றில் மூழ்கி பகவானைப் பிரார்த்தித்தார். அவரும் குடும்பத்தாரும் நலம் பெற்றார்கள்.

அதிகாரி நன்றிக்காணிக்கையாக குளத்துப் புழை பகவானுக்கு இரட்டை மீன் உருவத்தைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார். இன்றும் உற்சவத்தின்போது, உற்சவமூர்த்தியின் அருகில் காலடியில் அதை வைத்திருப்பதைக் காண முடியும்.

எப்படிச் செல்வது?: கொல்லம் செங்கோட்டை நெடுஞ்சாலையில், செங்கோட்டை ஆரியங்காவு-தென்மலை பாதை வழியில் அமைந்துள்ளது குளத்துப்புழை. காலை 5 முதல் 11:45 மணி வரையும்; மாலை 5 முதல் 8 மணி வரையும் ஐயனை தரிசித்து வழிபடலாம்.

பூதநாதனே... வீரமணிகண்டனே!

பால சாஸ்தாவாய் அருளும் குளத்துப்புழை ஐயனைப் போற்றி, கீழ்க்காணும் துதிபாடலைத் தினமும் படித்து வழிபட்டால், சகல நன்மைகளும் உண்டாகும்.

பாசத்துடன் நெடும்பாறைத் தடத்து நீர் பாரச்சுமடு

எடுக்கவில்லையோ - பம்பா நதிக்கு உபரி உன்

பாரவச்யராம் பக்தரை காக்கவில்லையோ?

ஆசை அளவில்லாமலே சைலவீதியில் அந்தணர் அவலை

வாங்கி, ஆற்றைக் கடத்தி சுமடேற்றும், ஜவந்தியூர்

அத்தாழம் உண்டு அனுதினமும் பூஜிப்பதும் மேல

வாசல் ப்ரதானி என் பரிபூரணானந்தனே - என்

புண்பாடறிந்து என்னைக் கண்பார்த்து

இரங்குவாய் கவி பலது பாடினேன்

தேசம் புகழ்ந்த மணிதாஸ குல வரதனாம்

தேவனே பூதநாதா... திருமாலரன் பெற்ற

செல்வக்குமார நிதி ஜயவீர மணிகண்டனே!