சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

ஐயப்பன் பிரசாதம்!

ஐயப்பன் சிறப்பு வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
News
ஐயப்பன் சிறப்பு வழிபாடு

ஐயப்பன் சிறப்பு வழிபாடு

அவர் பெயர் கிருஷ்ணன். மனதில் பல்வேறு குழப்பங்களோடும் கவலையோடும் பாலக்காடு பாலகிருஷ்ண பணிக்கரைக் காணச் சென்றார். அவரைக் கண்டதுமே, பணிக்கருக்குப் புரிந்துவிட்டது.

ஐயப்பன் சிறப்பு வழிபாடு
ஐயப்பன் சிறப்பு வழிபாடு


``ஐயா, தேவையில்லாமல் ஏன் குழப்பிக் கொள்கிறீர்கள்? நான் முதல்முறை பிரச்னம் பார்த்தபோதே அந்த இடத்தில் ஐயனின் கோயில் கட்டாயம் அமையும். ஆனால் சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஐயனின் அருளால் அவை எல்லாம் தவிடு பொடியாகி, ஐயன் அந்த இடத்தில் கோயில் கொள்வான் என்று சொன்னேனே... நினைவில் இல்லையா...'' என்று கேட்டார்.

கிருஷ்ணனுக்கு நினைவில் இல்லாமல் இருக்குமா..? ஆனாலும் கவலைவிட்டபாடில்லை. தலைகவிழ்ந்திருந்தார். இந்தக் கவலைகள் எல்லாம் சில காலமாகவே அவரை வாட்டி வருகின்றன. கிருஷ்ணன் ஐயப்ப பக்தர். புனலூர் தாத்தாவோடு சபரிமலைக்குச் சென்று வரும் பாக்கியம் பெற்றவர். அதனால்தானோ என்னவோ, ஐயப்பன் இவரைத் தன் கோயிலை எழுப்புவதற்குத் தேர்ந்தெடுத்தார்.

சதா சர்வ காலமும் ஐயப்பனையே தியானம் செய்துகொண்டிருந்த கிருஷ்ணனின் கனவில் ஒருநாள் ஐயப்பன் தோன்றினார். தனக்கொரு கோயில் எழுப்புமாறு கட்டளையிட்டார். திடுக்கிட்டு விழித்தபின்புதான் அது கனவு என்று புரிந்தது. `கனவுதானே' என்று விட்டு விட்டார். மறுநாளும் அதே கனவு. தொடர்ந்து ஒரு வாரம் ஐயன் கனவில் தோன்றி கோயில் எழுப்பப் பணித்துக்கொண்டே இருந்தார்.

கிருஷ்ணனுக்கு அதற்குமேல் அதை அலட்சியம் செய்ய மனம் இல்லை. `நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கோயில் எழுப்ப முடியுமா' என்கிற கவலை ஒருபுறம் இருந்தாலும் ஐயனின் சொல்லை மீறத் துணிவில்லாமல், கோயில் அமைக்க இடம் தேட ஆரம்பித்தார். பல இடங்களில் தேடியும் ஒன்றும் மனதுக்குப் பிரியமானதாக அமையவில்லை.

தர்ம சாஸ்தா - குருவாயூரப்பன் ஆலயம்
தர்ம சாஸ்தா - குருவாயூரப்பன் ஆலயம்

நண்பர் ஒருவர் `பம்மல் சங்கர் நகரில் ஓர் இடம் இருக்கிறது. வந்து பார்க்க முடியுமா?' எனக் கேட்டார். உடன் சென்றார் கிருஷ்ணன். அது மாலை நேரம் இருள் சூழ்ந்துவிட்டது.

நண்பர் சொன்ன இடத்துக்கு அருகே ஒரு மலை இருந்தது. மாலை வேளை ஆனதால் கொஞ்சம் இருளும் சூழ்ந்துவிட்டது. கை விளக்கின் வெளிச்சத்தோடு இடத் தைச் சுற்றிப் பார்த்தார்கள். நடக்கும்போது ஏதோ கிருஷ்ண னின் காலை இடறியது.

என்ன என்று பார்த்தால், ஒரு வில்வச் செடி. கிருஷ்ணன் அவசர அவசரமாக அந்தச் செடியைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார். வில்வம் குடியிருக்கிறது என்றால் நிச்சயம் அது சாந்நித்தியம் உடைய இடம்தான் என்று அவருக்குள் தோன்றியது. ஐயனின் கோயில் அமைய அதுதான் சரியான இடம் என்று முடிவு செய்தார். திருப்பணிகளுக்கான விஷயங்களைத் தொடங்கினார்.

அப்போதுதான் குருவாயூர் மேல்சாந்தியும் பாலக்காடு பாலகிருஷ்ண பணிக்கரும் அங்கு வந்து பிரச்னம் பார்த்து, `அங்கு கோயில் நிச்சயம் அமையும். அதேநேரம், சில பிரச்னைகள் தோன்றும். ஆனாலும் ஐயன் அவற்றை நீக்குவார்' என்று சொன்னார்கள்.

அப்படியே சில பிரச்னைகள் எழுந்தன. அருகில் இருக்கும் குவாரிக்காரர்கள் கோயில் எழுப்பக் கூடாது என்று வழக்குத் தொடுத்தனர். கோர்ட்டுக்கு அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடி ஒருபுறம், இடப் பிரச்னை மறுபுறம் என்று தவித்த கிருஷ்ணன் செய்வதறியாது மீண்டும் பாலகிருஷ்ண பணிக் கரைப் பார்க்க வந்திருந்தார்.

``கிருஷ்ணா! உனக்கு நிறையச் சொல்ல வேண்டியதில்லை. அது சாந்நித்தியம் பொருந் திய இடம். அங்கு நிச்சயம் கோயில் அமையும். அனைத்து வழக்குகளும் உனக்குச் சாதகமாக முடியும். அப்படி அமையவில்லை என்றால் நான் பிரச்னம் பார்ப்பதையே விட்டுவிடுகிறேன். போதுமா...'' என்று பாலகிருஷ்ண பணிக்கர் கூற, கிருஷ்ணன் பெரும் நம்பிக்கையோடு திரும்பினார். அவர் கூறியபடியே வழக்குகளில் வெற்றி கிடைத்தது. வேண்டிய பொருள் வந்து சேர்ந்தது. ஆசைப்பட்டபடியே பம்மல் சங்கர் நகரில் தர்மசாஸ்தாவுக்குக் கோயில் அமைந்தது.

இப்போது அந்தப் பகுதியின் அடையாளமா கத் திகழ்கிறது தர்மசாஸ்தா திருக்கோயில். சபரிமலை ஐயனின் திருவுருவம் போன்றே இங்குள்ள ஐயனின் திருமேனி அமைய வேண் டும் என்று ஸ்தபதியிடம் தன் விருப்பத்தைச் சொன்னார் கிருஷ்ணன். அவரும் மிகுந்த சிரத்தையோடு அதைச் செய்துகொடுத்தார். அந்த விக்ரகத்தைக் கன்னியாகுமரி அம்மன் ஆலயத்துக்கும் சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயி லுக்கும் கொண்டு சென்று பூஜை செய்தனர்.

கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டதும், பம்மலில் பழைமை வாய்ந்த கோயிலாகத் திகழும் சூரி அம்மன் ஆலயத்துக்கு எடுத்துச் சென்று வழிபாடுகள் செய்தனர். பிறகுதான் ஐயன் தற்போதுள்ள ஆலயத்துக்குள் எழுந்தருளினார்.

இந்த ஆலயத்தில் விநாயகர், முருகன், சிவன் துர்கை, நாகராஜர், கருப்பசாமி, கருப்பாயி அம்மன் ஆகியோருக்கும் சந்நிதி ஏற்படுத்தப் பட்டது. பிறகு குருவாயூரப்பன் சந்நிதியும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் செங்கற்களால் கர்ப்பக் கிரகம் அமைத்திருந்தனர். பின்னாளில் கோயிலைப் புதுப்பிக்க பிரச்னம் பார்த்தபோது, `கருங்கற்கள் மற்றும் மரத்தினால் ஆன சந்நிதானம் அமைப்பது விசேஷம்' என்று வந்தது. உடனே, கருங்கற்களால் கருவறையை உருவாக்கினர். மேற்கூரை மரத்தினால் செய்யப்பட்டது. அதற்குச் செப்புத் தகடுகள் வேயப்பட்டு கோயில் மிகவும் பவித்ரமாகவும் பலகாலம் நீடித்திருக்குமாறும் அமைந்தது. இது பக்தர் களுக்கு மனதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத் தியது. அன்றுமுதல் கோயிலின் சாந்நித்தியம் பல்கிப் பெருகி அந்தப் பகுதிக்கே ஓர் ஆசீர்வாத மாக அமைந்தது.

மண்டல பூஜை காலங்களில் சபரிமலையில் நிகழ்வதைப்போலவே இங்கும் பூஜைகள் நடைபெறும். மகரஜோதி அன்று இங்கேயும் அருகில் இருக்கும் மலை மீது ஜோதி ஏற்றப் படும். இதை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்படும்.

மேலும், மண்டல பூஜைக் காலங்களில் கோடி அர்ச்சனை சங்கல்பமும் மேற்கொள்ளப் படுகிறது. கடந்த 2018 - ம் ஆண்டு தொடங்கிய கோடி அர்ச்சனை, இடையே கொரோனா காலத்தில் மட்டும் தடைப்பட்டது. மீண்டும் இந்த ஆண்டு கோலாகலமாகக் கோடி அர்ச்சனை கண்டருளினார் ஐயன்.

இங்கு வந்து ஐயப்பனை வேண்டிக் கொள்ப வர்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. இங்கிருக்கும் நாகராஜா சந்நிதியில் சிறப்புச் சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜைகள் நடைபெறு கின்றன. இதன் மூலம் ராகு - கேது தோஷங்கள் நீங்கி திருமண வரம், குழந்தைப்பேறு, ஆரோக் கியம் ஆகியன கிடைக்கின்றன என்கிறார்கள் பக்தர்கள். மகத்துவமான இந்த ஆலயத்தில், வரும் மகர ஜோதி தரிசன நன்னாளில் (14.1.23) சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

சிறப்புச் சங்கல்பத்துடன் வாசகர்களின் வேண்டுதல்களைச் சமர்ப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன (விவரம் பெட்டிச் செய்தியில்) நீங்களும் முன்பதிவு செய்து, வழிபாட்டில் உங்கள் வேண்டுதல்களைச் சமர்ப்பித்து, ஐயனை வழிபட்டு வரம் பெறலாம்!

சென்னை பம்மல் பகுதியில் அமைந்துள்ள தர்ம சாஸ்தா - குருவாயூரப்பன் ஆலயத்தில் (14.1.23) மகர ஜோதித் திருநாளில், காலை 5 மணியளவில் தொடங்கி இரவு வரையிலும் சிறப்பு ஆராதனைகள் வழிபாடுகள் நடை பெறவுள்ளன. காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 6 மணிக்கு ஐயப்பனுக்கு அஷ்ட அபிஷேகம் நடைபெறும்.

மாலை 3 மணி அளவில் சங்கர் நகர் அருள்மிகு பவானி அம்மன் கோயிலில் இருந்து திருவாபரணப் பெட்டி கொண்டுவரப்படும். பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு திருவாபரணப் பெட்டி கொண்டுவரப்படுவது போன்றே, இங்கும் திருவாபரணப் பெட்டியை விரதமிருக்கும் பக்தர்கள் சுமந்து வருவார்கள். சபரிமலை போன்றே இங்குள்ள சுவாமிக்கும் அலங்காரங்கள் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு மேல் ஐயப்பன் கோயிலுக்குப் பின்புறம் உள்ள சிவன் மலையில் மகரஜோதி ஏற்றப்படும். சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் உள்ளது போன்று இங்கும் சிவன் மலைமீது சக்ரம் வைத்து, கோலங்கள் இட்டு அலங்கரித்து மகரவிளக்குப் பூஜை நிகழும். சபரி மலையில் ஜோதி தோன்றும் அதேவேளையில் இங்கும் கற்பூர ஜோதி ஏற்றப்படும். பக்தர்கள் ஜோதி வடிவில் ஐயனைத் தரிசித்து மகிழ்வார்கள். அதேநேரம், கீழே கோயிலிலும் சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை நடக்கும். அருகிலுள்ள திடலில் பிரமாண்ட வாணவேடிக்கைகளும் நடைபெறும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

இந்த வருடம் அற்புதமான இந்த வைபவ-வழிபாட்டில் வாசகர்களின் வேண்டுதல்களையும் உரிய சங்கல்பத்துடன் சமர்ப்பித்துப் பிரார்த்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பொருட்டு வாசகர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாம் சுவாமி ஐயப்பனிடம் மகர ஜோதி நாளில் நம் வேண்டுதலை முன்வைத்துப் பிரார்த்தித்தால், அவை விரைவில் நிறைவேறும்; கஷ்டங்கள் யாவும் ஐயன் அருளால் தீர்ந்து, குடும்பத்தில் சுபிட்சம் நிறையும். சுபகாரியங்கள் கூடிவரும் என்பது திண்ணம்.

வாசகர்கள் கவனத்துக்கு: இந்த `சிறப்புப் பிரார்த்தனை வழிபாடு' வைபவத்தில், வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப் பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாசகர்களின் வேண்டுதல்கள், சிறப்புப் பிரார்த்தனை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு, கோயிலின் விபூதிப் பிரசாதம், திவ்ய ரட்சை மற்றும் சபரி மலை ஐயப்பன் கோயிலின் அபிஷேக நெய்ப்பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

முன்பதிவு விவரங்களுக்கு:

97909 90404