Published:Updated:

சரணகோஷம் ஒலிக்கும் கார்த்திகை மாதம்... ஐயப்ப சாமிக்கு விரதம் இருப்பது எப்படி?

ஐயப்ப சாமிக்கு விரதம் இருப்பது எப்படி?
ஐயப்ப சாமிக்கு விரதம் இருப்பது எப்படி?

சபரிமலைக்கு மாலையிட்டு மேற்கொள்ளும் விரதமுறைகள் குறித்த கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்...

கார்த்திகை பிறந்துவிட்டது என்பதை அதிகாலையில் ஆலயங்களிலிருந்து எழும்பும் சரண கோஷம் நமக்கு உணர்த்தும். நேற்றுவரை ஆசாமியாகச் சுற்றிக்கொண்டிருந்த நபர் அதிகாலையில் குளித்து தூய உடையணிந்து நெற்றியில் சந்தனம் குங்குமம் இட்டு, பார்க்கவே தெய்வ கடாட்சம் பொங்கும் சாமியாக மாறியிருப்பார்.

நேற்று அவரைப் பெயர் சொல்லி அல்லது பட்டப்பெயர் சொல்லி அழைத்திருப்போம். ஆனால், இன்று அது சாத்தியமில்லை. அவரை அழைப்பதாக இருந்தால், `ஐயப்பா' என்றோ `சாமி' என்றோ அழைக்க வேண்டும். இன்றிலிருந்து 41 நாள்கள் விரதம் முடிந்து அவர் சபரிமலை சென்று வரும்வரை அவர் சாமிதான்.

சபரிமலை
சபரிமலை

இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானதல்ல. அதில் நாம் அனுபவிக்கும் சுகங்களும் தேய்ந்து மறையக்கூடியவை. ஆனால், இந்த வாழ்வின் மூலம் நம்மால் இறை நிலையை அடைய முடியும். குறிப்பாக, `தத்வமஸி' என்று உணர முடியும். `தத்வமஸி' என்றால் `நீயே அதுவாக இருக்கிறாய்' என்று பொருள். அந்த `அது' என்பது பரம்பொருளைக் குறிக்கிறது.

எல்லா ஐயப்பன் ஆலயங்களிலும் இந்த சத்திய வார்த்தை காணப்படும். ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதம் எடுப்பதன் நோக்கமும் அதுவே. அந்த ஐயப்பனின் வடிவமாக நாம் இந்த உலகில் வாழ 41 நாள் விரதத்தை முறையாகக் கடைப்பிடித்து வாழ்ந்தாலே போதுமானது. இத்தகைய மகிமை பொருந்திய விரதத்தைக் கடைப்பிடிப்பது எப்படி?

மாலை போடுதல்

ஐயப்ப சாமிக்கு மாலைபோடுவது என்பதே இந்த விரதத்தின் தொடக்கம். மாலையை ஒருவருக்கு அணிவிக்கும் தகுதி இருவருக்கு உண்டு. ஒருவர் குருசாமி. மற்றொருவர் பெற்ற தாய். `ஞானமுத்ராம், சாஸ்த்ர முத்ராம்' என்று தொடங்கும் மந்திரத்தைச் சொல்லி சுவாமியைத் துதித்து மாலை அணிந்துகொள்ளலாம். மாலை அணிந்துகொண்ட கணத்திலிருந்து அவர் சுவாமியாகவே கருதப்படுவார்.

சுவாமி என்று பிறர் அழைத்தாலும் சுவாமி ஆக அவர் கடைப்பிடிக்க வேண்டிய முறைமைகள் அநேகம்.

தினமும் இருவேளையும் நீராடி உடலைத் தூய்மை செய்துகொள்ள வேண்டும். பின்பு வீட்டில் சுவாமி படம் அல்லது விக்ரகம் முன்பு அமர்ந்து சரண கோஷம் இட வேண்டும். தவறாமல் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். விரதம் இருக்கும் காலகட்டத்தில் ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக்க வேண்டும். அதாவது ஊனினைப் பெருக்கும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாத்விகமான உணவை அளவாக உண்ண வேண்டும். கூடிய மட்டும் வெளியிடங்களில் உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியே இல்லை என்றால் தூய்மையான இடத்தில் சைவ உணவாக உண்ண வேண்டும்.

எல்லா உடைகளும் அணியலாமா?

இது பலருக்கும் இன்று எழும் சந்தேகம். பொதுவாக மாலை அணிந்தவர்கள், நீலம் மற்றும் காவி நிற உடைகளை அணிவர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலரும் வேலை நிமித்தமாக வழக்கமான உடையே அணிய வேண்டியுள்ளது. அத்தகைய தருணத்தில் ஒரு சிலர் நீலத் துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக் கொள்கின்றனர். அவ்வாறு செய்வது சரியா என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு. இதுகுறித்து 52 ஆண்டுகளுக்கும் மேலாக மலைக்குச் சென்றுவரும் குருசாமி கண்ணன் அவர்களைக் கேட்டோம்.

ஐயப்பன்
ஐயப்பன்

``உடை என்பது உடலை மறைக்க. துறவு என்பது மனநிலை சார்ந்த விஷயம். காவி உடை அணிந்துகொண்டு மனதில் ஆசை கொண்டு அலைபவர்களும் உண்டு. வேலை நிமித்தமாகச் செல்லும்போது அதற்குரிய உடையை அணிய வேண்டியதே அவசியம். எனவே, விரத காலத்திலும் அதைப் பின்பற்றலாம். வீட்டில் இருக்கும் நேரங்களில் காவி அல்லது நீல ஆடைகளை அணியலாம். முக்கியமானது மனமார்ந்த பக்தி மட்டுமே" என்றார்.

தன் முதிர்ந்த அனுபவத்தைக் கொண்டு இன்றும் பலருக்கு அவர் சபரி யாத்திரையை மேற்கொள்ள சிறப்பாக வழிகாட்டி வருகிறார். அவரிடம் மேலும் பல கேள்விகளை முன்வைத்தோம்...

கட்டாயம் கன்னிசாமிகள் வீட்டில் படிபூஜையும் அன்னதானமும் செய்ய வேண்டுமா?

தேங்காய் - நெய் - சமர்ப்பணம் சொல்லும் தத்துவம் என்ன?

சின்னப்பாதையில் சபரிமலைக்குப் போவது முறையானதுதானா?

மாலைபோட்டு ஓரிரு நாள்களில் இருமுடி மலைக்குச் செல்லலாமா?

இவற்றுக்கான அவரின் விரிவான பதில்கள் நாளை...

ஐயப்ப சாமி விரதம்
ஐயப்ப சாமி விரதம்

விகடன் வாசகர்களே...

உங்களுக்கும் விரதமுறைகள் குறித்த கேள்விகள் இருந்தால் அவற்றை lifestyle@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுங்கள்.

அனுபவம் வாய்ந்த பெரியோர்களிடம் கேட்டுச் சொல்கிறோம்.

சுவாமியே... சரணம் ஐயப்பா!

அடுத்த கட்டுரைக்கு