எளியோர்க்கு எளியோன் என்று போற்றப்படுபவர் ஐயன் ஐயப்பன். தான் வேட்டையில் இருந்தபோது ஒரு வாய் கம்பங்கூழ் குடிக்கக் கொடுத்த ஒரு குடும்பத்தின் அன்புக்கு நெகிழ்ந்து, ' உங்கள் அன்புக்கும் என்றென்றும் நான் அடிமை. நீங்கள் என்னை நினைத்து எப்போது என்ன வேண்டினாலும் தந்தருள்வேன்’ என்று ஆசிபுரிந்தான் ஐயப்பன். அன்றுமுதல், அந்த வம்சத்தினர் கம்பங்குடி குடும்பத்தார் என்று போற்றப்பட்டனர். இன்றும் அன்போடு எவர் அழைத்தாலும் ஏதோ ஒருவடிவில் வந்து ஆட்கொள்ளும் ஐயப்பன் கேட்டதை எல்லாம் கொடுத்துவிடும் அன்பு மயமானவர்.

இந்த பூவுலகில் வாழும் சகல ஜீவன்களையும் பாதுகாக்கும் வண்ணம் இன்றும் 18 படிகளின்மீது அமர்ந்து ஆட்சி செய்து வருகிறார் இந்த கலியுக தெய்வம். மகிஷியை வதம் செய்த 18 போர்க்கருவிகளையும் (வில், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்திபாவம், வாள், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, கடுதிவை, பாசம், சக்கரம், ஹலம், மழு, முஸலம் போன்றவை) ஒவ்வொரு படியாக அமைத்து அதன்மீது 12 வயது பாலகனாகிய ஐயப்பன் அமர்ந்துள்ளார். அவனை எண்ணி வழிபடுவோருக்கு எந்நாளும் அச்சமோ துன்பமோ உண்டாகாது என்பது நம்பிக்கை.
அதுமட்டுமின்றி ஐயப்பனை எண்ணி மாலையிட்டு சபரிமலையை அடைந்து அந்த 18 படிகளையும் கடந்தால் அத்தனை தெய்வங்களின் கிருபையையும் பெற்றுவிடலாம் என்பதும் நம்பிக்கை. ஆம், 18 படிகளிலும் சகல தெய்வங்களும் உறைந்திருக்க, அந்த திருப்படிகளை தரிசித்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பதும் நம்பிக்கை. அதனால்தான் இங்கு ஐயப்பனுக்கு எத்தனை விதமான ஆராதனைகள் உண்டோ அவை அத்தனையும் திருப்படிகளுக்கும் உள்ளன. அதிலும் நடை திறக்கும் நாள்களில் நடைபெறும் படி பூஜை வெகு விசேஷமானது.

ஒன்றாம் திருப்படியில் சூரிய பகவான், இரண்டாம் திருப்படியில் ஈசன், மூன்றாம் திருப்படியில் சந்திர பகவான், நான்காம் திருப்படியில் பராசக்தி, ஐந்தாம் திருப்படியில் அங்காரகன், ஆறாம் திருப்படியில் முருகப்பெருமான், ஏழாம் திருப்படியில் புத பகவான், எட்டாம் திருப்படியில் விஷ்ணு, ஒன்பதாம் திருப்படியில் குரு பகவான், பத்தாம் திருப்படியில் பிரம்மா, பதினொராம் திருப்படியில் சுக்கிர பகவான், பனிரெண்டாம் திருப்படியில் திருமகள், பதிமூன்றாம் திருப்படியில் சனி பகவான், பதிநான்காம் திருப்படியில் யம தர்ம ராஜன், பதினைந்தாம் திருப்படியில் ராகு பகவான், பதினாறாம் திருப்படியில் சரஸ்வதி, பதினேழாம் திருப்படியில் கேது பகவான், பதினெட்டாம் திருப்படியில் விநாயகப் பெருமான் என சகலரும் வீற்றிருக்கும் அந்த புனிதப்படிகளை ஆண்டுதோறும் தரிசிக்க வேண்டும் என்பது லட்சக்கணக்கான பக்தர்களின் பேராவல் எனலாம்.
ஆனால் கடுமையான வெள்ளம், பெருந்தொற்று அபாயம் என கலவரமான இந்த சூழலில் அனைவருமே சபரிமலைக்குச் சென்று ஐயனை தரிசிக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதனால்தான் வரும் டிசம்பர் 18-ம் தேதி (சனிக்கிழமை) மார்கழி முழு நிலவு நன்னாளில் தஞ்சைக்கு வரவிருக்கிறான் நம் ஐயப்பன்.

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் டிசம்பர் 18-ம் தேதி அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ஸ்ரீஐயப்பனுக்கு சிறப்பு வைபோகங்கள்-விசேஷ யாகங்கள் நடைபெற உள்ளன. காலை 6 மணிக்கு ஸ்ரீமஹா கணபதி ஹோமம் தொடங்கி, ஸ்ரீசண்டிகா தேவி ஹோமம், ஸ்ரீஉமா மாகேஸ்வர பூஜை, ஸ்ரீவிஷ்ணு பூஜை, ஸ்ரீசர்ப்ப பூஜை, ஸ்ரீஹரிஹர ஐயனார் பூஜை, நெய் அபிஷேகம், களபாபிஷேகம், உச்சிகால பூஜை, 1008 தாமரை மலர்களால் ஐயப்பனுக்கு அர்ச்சனை, 108 நீராஞ்சனம், பகவதி பூஜை, படி பூஜை, ஹரிவராசனம், அருள்பிரசாதம் வழங்குதல் என பிரமாண்ட பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம் என்பதும் ஒரு விசேஷம்.
சபரிமலை முன்னாள் மாளிகைபுரம் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ அனிஸ் நம்பூதிரி, பிரம்மஸ்ரீ மனோஜ் நம்பூதிரி ஆகியோர் தலைமையில், காடந்தேத்தி சிவஸ்ரீ. பால சிவாத்மஜன் குருக்கள், மஹாசாஸ்த்ரு பிரியதாசன் ஸ்ரீ அரவிந்த் சுப்ரமண்யன் மற்றும் பெரியோர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறையே வழிபடப்படும் சிறப்பு வாய்ந்த அத்தி மர ஐயப்பனை, மகாகுருசாமி, நடிகர் நம்பியார் சுவாமிகள் பல ஆண்டுகள் வைத்து ஆராதித்த 18 படியில் வைத்து, படி பூஜை நடத்தவுள்ளோம். மேலும் இங்கு மட்டுமே விசேஷமாக நடைபெறும் 'நூறும் பாலும்' என்ற சர்ப்ப தோஷ வழிபாடு சிறப்பானது. இந்த வழிபட்டால் நாக தோஷம் விலகி விரும்பிய வரன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேண்டிய வரங்களை வேண்டிய வண்ணமே அருளும் இந்த சிறப்பான வைபவத்தில் நீங்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள். நலங்கள் பெறுங்கள்!

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404