திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

கொடை விநாயகர்

கொடை விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
News
கொடை விநாயகர்

கொடை விநாயகர்

கொடை விநாயகர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ளது கண்டியூர். இந்த ஊருக்கு அருகில் உள்ள அழகிய கிராமம் வீரசிங்கம்பேட்டை. இங்கே வாலாம்பிகையுடன் வைத்தியநாதர் அருள்பாலிக்கும் பிரமாண்டமான ஆலயத்தில், கொடை விநாயகர் எனும் திருப் பெயருடன் அருள்பாலிக்கிறார்.

கொடை விநாயகர்
கொடை விநாயகர்


சுமார் 2,000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருத்தலம் இது. இரண்டாம் பல்லவர்கள் இந்த விநாயகரைப் போற்றி வழிபட்டுச் செழித்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. தேசத்தில் வறுமையை நீக்கி, செல்வத்தை அள்ளித் தந்தவர் என்பதால், இவருக்குக் கொடை விநாயகர் என்று திருநாமம் சூட்டினார்களாம், பல்லவர்கள்!

இந்தத் தலத்துக்குச் சென்று வைத்தியநாதரையும் வாலாம்பிகையையும், கொடை விநாயகரையும் அர்ச்சித்து வழிபட்டால், பிணிகள் நீங்கும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெற்று நலமுடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

மாரியம்மன்
மாரியம்மன்


கருவைக் காப்பாள் மாரியம்மன்!

சேலத்தில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது தார மங்கலம். இந்த ஊரின் நடுநாயகமாகக் கோயில்கொண்டிருக்கிறாள் கண்ணனூர் மாரியம்மன். சமயபுரம் அருகிலுள்ள கண்ணனூரில் இருந்து வந்தவள் என்பதால், அம்மனின் பெயருடன் கண்ணனூரும் சேர்ந்து கொண்டுவிட்டது.

தாரமங்கலம் கோயிலின் சிறப்பம்சமே, இங்கு மாரியம்மன், காளியம்மன் இருவரும் சேர்ந்து அருள்பாலிப்பதுதான். திருமணம் நடந்து பல வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் வாடும் பெண்கள் பௌர்ணமி, அமாவாசை மற்றும் மூன்றாம் பிறை நாளில் இந்தக் கோயிலுக்கு வந்து அம்மனை மனதாரப் பிரார்த்தித்துச் சென்றால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்பது உறுதி என்கின்றனர்.

கர்ப்பிணிகள் இந்த அம்மனை மனதார நினைத்து வேண்டிக் கொண்டால் கரு நல்லபடியாக வளர்ந்து சுகப்பிரசவம் ஆகும் வரை, கூடவே இருந்து அருள்பாலிப்பாளாம் இந்த மாரியம்மன்!

திருநேத்ர ஸ்வாமி
திருநேத்ர ஸ்வாமி

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்

திருவாரூர்- மயிலாடுதுறை பேருந்து வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பள்ளிமுக்கூடல். ஜடாயு சிவனருள் பெற்ற திருத்தலம் இது. ஜடாயுவின் வேண்டுதலை ஏற்று அஞ்சநாட்சி அம்பிகையுடன் திருநேத்ர ஸ்வாமியாக காட்சி தந்த சிவனார், அங்குள்ள தீர்த்தத்தில் 16 கிணறுகளை உருவாக்கியதுடன், தீர்த்தச் சிறப்புகளையும் எடுத்துரைத்தார் என்கிறது புராணம்.

சீதாதேவியைத் தேடியலைந்த ராமன், இந்தத் தலத்துக்கு வந்தபோதுதான், ஜடாயுவின் மூலம் சீதையின் நிலையைக் குறித்து அறிந்தாராம். இன்றைக்கும் பிரிந்த தம்பதியை ஒன்றுசேர திருவருள் புரியும் தலமாகத் திகழ்கிறது.

திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்தத் தலத்துக்கு வந்து, அவர்களின் பதிகத்தைப் பாடி, திருநேத்ரநாத ஸ்வாமியை வழிபட, பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர்; சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.