Published:Updated:

கங்காரு தேசத்தில் கணபதி ஆலயம்!

ஆஸ்திரேலிய கணபதி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஸ்திரேலிய கணபதி! ( கணபதி ஆலயம் )

ஆஸ்திரேலியா - வக்ரதுண்ட விநாயகர்!

தமிழ் மக்கள் எங்கு சென்றாலும் தம் அடையாளங்களைப் பெருமையோடு முன் வைக்கத் தவறுவதில்லை. தம் பாரம்பர்யத்தை, கலையை, கலாசாரத்தை, தெய்வத்தை சென்ற இடத்திலும் சிறப்பாகப் போற்றும்படி செய்வர்.

அவ்வகையில் கங்காரு தேசமாம் ஆஸ்திரேலி யாவிலும் கணபதிக்குப் பிரமாண்டமாய் ஆலயம் அமைத்து வழிபடுகிறார்கள் நம் மக்கள். ஆஸ்திரேலியா, மெல்பெர்ன் நகரில் அமைந்திருக்கிறது அருள்மிகு வக்ரதுண்ட விநாயகர் ஆலயம். விக்டோரியா மாகாணத்தில் அமைந்திருக்கும் முதல் கணபதி ஆலயம் இது.

11 சந்நிதிகளுடன் கூடிய இவ்வாலயம் ஆகம முறைப்படி முழுமையும் கருங்கற்களால் கட்டப் பட்டுள்ளது. இதற்கான மொத்தச் செலவு நான்கு மில்லியன் டாலர் என்கிறார்கள், மெல்போர்ன் விநாயகர் இந்து சங்கத்தைச் சேர்ந்த அன்பர்கள்.

இந்த ஆலயம் அமைந்ததன் பின்னணியில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று உள்ளது. 1989-ம் ஆண்டு மெல்போர்ன் வாழ் இந்து மக்கள் ஒன்று கூடி ‘மெல்போர்ன் விநாயகர் இந்து சங்கம்’ தொடங்கி, ஒரு விநாயகர் ஆலயம் அமைப்பது என்று முடிவெடுத்தனர்.

கணபதி ஆலயம்
கணபதி ஆலயம்
விநாயகர் ஆலயம்
விநாயகர் ஆலயம்

ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யவுள்ள விநாயகர் விக்கிரகத்தை, தமிழகத்துக்கு வந்து வாங்கி, காஞ்சி மகாபெரியவரிடம் கொடுத்து ஆசிபெறும் திட்டம் இருந்தது. அதன்படி தமிழகம் வந்த இந்தச் சங்கத்தின் உறுப்பினரான ஷண் தம்பதிக்கு, எதிர்பார்த்தபடி விநாயகர் விக்கிரகம் கிடைக்கவேயில்லை.

‘பெரியவாளிடமே இதற்குத் தீர்வு கேட்போம்’ என்று காஞ்சிபுரம் சென்றார்கள். அங்கு வியப்பு காத்திருந்தது. இவர்கள் தங்களின் தேவையைச் சொல்லும் முன்பே, ஒரு விநாயகர் விக்ரகத்தை ஷண் தம்பதியிடம் கொடுத்தார் மகாபெரியவர். அந்தப் பிள்ளையாருக்கு ‘வக்ரதுண்ட விநாயகர்’ என்று நாமகரணம் செய்து கோயிலில் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாராம் மகா பெரியவர்!

1990-ம் ஆண்டு கோயில் கட்டுமானப்பணி தொடங்கியது. முதல் செங்கல்லை ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுப்பிவைத்தார். அது அந்த ஆண்டு நவம்பர் மாதம் பதிக்கப்பட்டது. அதன்பின் ஆலயம் வளர்ந்த வேகம் அபரிமித மானது. 1992-ம் ஆண்டு அக்டோபரில் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆகம முறைப்படி விக்டோரியா மாகாணத் தில் எழுப்பப்பட்ட முதல் கோயில் என்ற பெருமையைப் பெற்றது இவ்வாலயம். பின்னர் 2007-ல் அடுத்த கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதை நடத்திவைக்க வந்த சென்னையைச் சேர்ந்த சிவாகம திலக நித்யானந்த சிவாசார்யர், அதன்பின் அங்கேயே தங்கி விநாயகருக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார். அவருக்குத் துணையாக இலங்கையிலிருந்து நித்ய சிவானந்த சிவாசார்யரும் வந்து இணைந்துகொண்டார்.

கோயில் கலசம்
கோயில் கலசம்
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்

தற்போது இருக்கும் விநாயகரின் மூலஸ்தானம் கையால் செதுக்கப்பட்ட பதினேழு கருங்கல் அடுக்குகளால் ஆனது. இங்கு இருக்கும் சிகரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. தஞ்சைப் பெரியகோயில் விமானத்தில் இருப்பதுபோல் இங்கும் விமானத்தின் சிகரம் ஆறு டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆனது.

ஆலயம் முழுமைக்குமான கருங்கல் தமிழகத்தில் ஒரே கல் அகழும் இடத்திலிருந்து பெறப்பட்டது. இந்தக் கோயிலை எழுப்பிய பெருமை ஸ்தபதி புருஷோத்தமன் ஜெயராமனையே சாரும். சோழர் பாரம்பர்ய கலையை நவீன காலத்தில் உருவாக்க விரும்பிச் செய்த ஆலயம் இது.

மூலவர் வக்ரதுண்ட விநாயகர் மட்டுமன்றி முருகன், சிவபெருமான், துர்கை, சண்டேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவகிரகங்கள், அனுமன் ஆகிய தெய்வங்களும் இங்கே சந்நிதிகொண்டு அருள்கிறார்கள்.

``மூன்றாவது கும்பாபிஷேகம் ஜனவரி 25-ம் தேதி நடைபெற்றது. இதற்கான யாக சாலை பூஜைகள் ஜனவரி 17 அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்றன. கொரோனா பெருந்தொற்று விதிமுறைகளைப் பின்பற்றிச் சிறப்பாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம். ஜனவரி 26 தொடங்கி மண்டல பூஜை நடைபெற்று வருகிறது (மார்ச் 11-ம் தேதி வரை). விழாப் பணிகளை எங்களின் மெல்போர்ன் இந்து சங்க நிர்வாகிகள் குழுவினரும் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக நடத்தி முடித்தனர்'' என்கிறார், இந்த அமைப்பின் தலைவர் பாலா கந்தையா.

குழந்தை பாக்கியம் முதலாக விசா பிரச்னைக்குத் தீர்வு வரையிலும் கேட்கும் வரங்களைக் கேட்டபடி அருளும் இந்த வக்ரதுண்ட விநாயகர், இந்தப் பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். நாள்தோறும் கோயிலுக்கு வரும் கூட்டமே அதற்கு சாட்சி என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார் பாலாகந்தையா.

வழக்கில் வெற்றி தரும் ஶ்ரீபைரவர் தரிசனம்!

சிவன் கோயில்களில் வடகிழக்கு மூலையில், தெற்கு நோக்கி தரிசனம் தருபவர் ஸ்ரீபைரவர். இவருக்கு க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆகாச பைரவர், ஸ்வர்ண பைரவர் என்று வேறு பெயர்களும் உண்டு.

உடல் நலம், சொத்து வழக்கில் நல்ல தீர்வு காண விரும்புவோர், பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியன்று மாலை வேளையில் பாலபிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம் அணிவித்து அர்ச்சனையுடன் வழிபட்டால் பலன் கிடைக்கும். ஆஞ்சநேயருக்குச் செய்வது போல இவருக்கும் வடை மாலை அணிவித்து வழிபடுவது சிறப்பு.

‘சதுர்வேதி மங்கலம்’ என்று போற்றப்படும் மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் சிவன் ஆலயத்தில், ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் நின்று அடியார்களின் குறை நீக்கி அருள்வது சிறப்பான ஒன்று.

மேலும் வேதாரண்யம் வட்டம் தகட்டூரில் பைரவர், ஸ்வர்ண பைரவியுடன் காட்சியளிக்கிறார். இவர் வலக் கையில் தங்கக் கலசம் ஏந்தி, இடக் கையால் அம்பிகையை அணைத்தபடி அருள்பாலிக்கிறார்.


- எம்.வி.குமார், மதுராந்தகம்