புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

ஆஞ்சநேய அற்புதங்கள்!

ஆஞ்சநேய அற்புதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஞ்சநேய அற்புதங்கள்

பிரம்மன் சொன்ன சொல்லே முடிவானது. அது நிகழ்ந்துவிட்டது. ஐயா, நீ நினைத்த அனைத்தையும் சாதிக்க வல்லவன். உன்னால் முடியாதது என்று ஒன்று இல்லை. இனி அறம் வெல்லும் பாவம் தோற்கும். பொன்னால் ஆன நகருக்குள் புகுவாயாக’’ என்று சொல்லி வழிவிட்டாள்.

அவள் பெயர் சத்யசங்கினி. பிரம்மலோகத்தின் காவலாளி. அவள் அனுமதியின்றி அங்கு நுழையவும் முடியாது; வெளியேறவும் கூடாது. அதிகாரமும் அகந்தையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஒரு சிலரே இரண்டையும் பிரித்து வாழக் கற்றவர்கள். சத்யசங்கினி அத்திறம் கொண்டவள் இல்லை!

ஆஞ்சநேய அற்புதங்கள்
ஆஞ்சநேய அற்புதங்கள்


அவள் அகந்தையில் ஆடினாள். முனிவர்களையும் சாதுக்களையும் அவமதித்தாள். தேவர்களை வசைபாடினாள். இவற்றை எல்லாம் அறிந்த பிரம்ம தேவன் கோபம் கொண்டார். அவளை “அரக்கியாக மாறி, அரக்கர் நாட்டை ஆள்பவளாகப் போ” என்று சபித்தார்.

சாபம் அவள் அறிவுக் கண்ணைத் திறந்தது. தவற்றை உணர்ந்து வருந்தினாள். விமோசனம் வேண்டினாள். “எப்போது உன்னை ஒரு குரங்கு வெல்கிறதோ, அப்போது உன் சாபம் நீங்கும்” என்றார் பிரம்மன். சத்யசங்கினி இலங்கையின் காவலாளி ஆனாள். இலங்கையைக் காப்பவள் என்பதால் அவள் பெயர் இலங்கினி என்றே ஆனது. தன் சாபம் நீங்கும் நாளை இலங்கினி எதிர்பார்த் திருந்தாள். அப்படி ஒரு நாளும் வந்தது.

வான் மார்க்கத்தில் பறவைகள் பறக்கலாம். வேறு எதுவும் பறக்க வேண்டுமானால் அந்த நாட்டிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இலங்கையை நோக்கி ஒரு குரங்கு பறந்து வருவதைக் கண்டாள் இலங்கினி. இந்தக் குரங்கு எப்படிப் பறக்கிறது? இந்தக் குரங்கு யாரிடம் அனுமதி பெற்றது. கோபம் கொண்ட இலங்கினி குரங்கைத் தடுத்து நிறுத்தினாள்.

ஆஞ்சநேய அற்புதங்கள்
ஆஞ்சநேய அற்புதங்கள்
Wirestock


“யார் நீ, எங்கு செல்கிறாய்?” என்று கேட்டாள்.

“இலங்கை அழகான நாடு என்றார்கள். அதை நான் இல்லை என்று மறுத்தேன். இப்போது நான் சொன்னது சரிதானா என்பதை அறிந்துகொள்ளச் செல்கிறேன்” என்றது குரங்கு.

இலங்கினியின் கோபம் எல்லை மீறியது. “நீ உள்ளே போகக் கூடாது” என்று தடுத்தது. ஆனால் அந்தக் குரங்கு அதை எல்லாம் கேட்பதாக இல்லை. அவள் அந்தக் குரங்கை அடிக்கத் தன் எட்டுக் கைகளையும் வீசினாள். குரங்கோ எட்டுக் கைகளையும் தன் ஒற்றைக் கையால் பற்றியது.

“நீ அரக்கி ஆனாலும் பெண்ணாகிப் போனாய். எனவே உன்னைக் கொல்வது பாவம். ஆனாலும் எனக்கு வழி வேண்டும்” என்று சொல்லி அவளை லேசாகத் தாக்கியது. அதுவே அவளுக்கு இடி போல் இருந்தது. கீழே வீழ்ந்தாள். அவள் தலையில் சிறு காயம் பட்டு ரத்தம் வடிந்தது. உடனே அவளுக்குத் தன் சாபம் நினைவுக்கு வந்தது. மனம் மகிழ்ந்தாள்; அந்தக் குரங்கைத் தொழுதாள்.

``பிரம்மன் சொன்ன சொல்லே முடிவானது. அது நிகழ்ந்துவிட்டது. ஐயா, நீ நினைத்த அனைத்தையும் சாதிக்க வல்லவன். உன்னால் முடியாதது என்று ஒன்று இல்லை. இனி அறம் வெல்லும் பாவம் தோற்கும். பொன்னால் ஆன நகருக்குள் புகுவாயாக’’ என்று சொல்லி வழிவிட்டாள்.

இந்தச் சம்பவத்தை `அன்னதேமுடிந்தது ஐய... அறம்வெல்லும் பாவம் தோற்கும்...’ என்ற பாடல் மூலம் விளக்குகிறது கம்ப ராமாயணம்.

இலங்கினியோடு சண்டையிட்ட குரங்கு அனுமன். இந்தப் பாடலின் பொருள் அனுமனின் பராக்கிரமத்தை விளக்குவது. இதைவிட சுருக்கமாக அனுமனைப் புகழ முடியாது. இலங்கினி அப்போதுதான் அனுமனை பார்க்கிறாள். சின்ன சண்டை. ஆனாலும் அவரின் பராக்கிரமம் வெளிப்பட்டுவிட்டது. அவரால் முடியாத காரியம் என்று ஒன்று இல்லை என்று சொல்கிறாள்.

`அசாத்ய சாதக ஸ்வாமிந்| அசாத்யம் தவகிம்வத|

ராம தூத க்ருபாசிந்தோ| மத் கார்யம் சாதய ப்ரபோ|’

என்னும் ஸ்லோகம் சொல்வதும் இதைத்தான். அவருக்கு அசாத்தியமான செயல் என்று ஒன்று கிடையாது. இந்த ஸ்லோ கத்தை அன்னை சீதையே கூறினாள் என்பாரும் உண்டு.

அனுமன் ஜயந்தி
அனுமன் ஜயந்தி
AjayShrivastava

அனுமன்... அசாத்ய சாதக சுவாமி. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம் விழிப்பு, வாக்குவன்மை அனைத்தும் கொண்டவரும் நமக்கு அவற்றை நமக்கு அருள்பவரும் ஆவார். சிவாம்சம் பொருந்திய ராம பக்தர். அவரைச் சரண டைந்தால் கிடைக்கும் பலன்கள் அநேகம்.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் கிருஷ்ணர். அப்படிப்பட்ட மார்கழியில் ‘சிறிய திருவடி’ என்று போற்றப்படும் அனுமன் அவதாரம் செய்தது மிகவும் பொறுத்தமானது. மார்கழி மாதம் அமாவாசை திதி அன்று மூல நட்சத்திரம் கூடியிருக்கும் நாளில் அந்த வாயுபுத்ரனின் அவதாரம் நிகழ்ந்தது. வரும் அனுமன் ஜயந்தி நன்னாளில் அவரைச் சிந்தையில் வைத்துப் போற்றும் விதம், ஆஞ்சநேயரின் அற்புதங்கள் வழிபாடுகள் மற்றும் ஆலயங்கள் சிலவற்றை அறிவோம்.

அனுமனுக்குக் கிடைத்த பரிசு!

ராமருக்கு பட்டாபிஷேகம். ஊரே திரண்டு நிற்க, கோலாகலமாக இருக்கிறது சாகேதபுரி. சீதாதேவி, தன் கழுத்தில் இருந்த முத்துமாலையை கையில் வைத்துக் கொண்டு யாருக்குத் தரலாம் என்று யோசித்தாள்! ‘தேஜஸ், தைரியம், புகழ், திறமை, வல்லமை, அடக்கம், நீதி, ஆண்மை, பராக்கிரமம், அறிவு ஆகியவை எவரிடம் விளங்குகிறதோ அவருக்கு இந்த மாலையைக் கொடு!’ என்றான் ராமபிரான். உடனே, முத்துமாலையை ஆஞ்சநேயனுக்கு வழங்கினாள் சீதாதேவி. பரமாத்மாவின் திருவுளமும் இதுவே!

அடடா... இந்தப் பரிசுக்குத் தகுதி உடையவன் ஆஞ்சநேயனே’ என்று அனைவரும் ஆமோதித்தனர். ‘ராமோ நாந்யத்ர கச்சதி’ எனும்படி ராமனைத் தவிர, வேறு எவரையும் நினைக்காதவன் அனுமன். நாமும் ராம நாமம் சொல்லி வழிபட்டால், அனுமனின் கல்யாண குணங்கள் அனைத்தும் நமக்குப் பரிசாகக் கிடைக்கும்!

அல்லல்கள் நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு!

ஆஞ்சநேயர், வீரத்தின் அடையாளம். அவரை வணங்கினால் மனதில் பயம் அகலும்; புதிய துணிவு பிறக்கும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டால் மன இருள் விலகும். ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டுவர தீராத கடன் பிரச்னைகள் தீரும்.

மூல நட்சத்திர நாளில் விரதமிருந்து மாலை வேளையில் அனுமன் அருளும் ஆலயம் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை முடிக்க, காரியத் தடைகள் விலகி வெற்றி உண்டாகும். அதுவும் அனுமனின் அவதார தினமான அனுமத் ஜயந்தி நாளில் வழிபாடு செய்வது சிறப்பு. அன்று அனுமன் சாலிஸா பாராயணம் செய்யலாம்; நாள் முழுவதும் ராமநாமம் சொல்லி வணங்கலாம். இதனால் அனுமனின் திருவருள் பரிபூரணமாக ஸித்திக்கும்.

அனுமன் ஜயந்தி
அனுமன் ஜயந்தி


வாலுக்குப் பொட்டு வைத்தால்...

அனுமனின் வால் அவரின் வலிமையின் அடையாளம். அதுவே ராவணன் அவையில் அவருக்கு சிம்மாசனம் ஆனது. வாலில் மணி கட்டியிருக்கும் ஆஞ்சநேயரை தரிசித்தால் மனபயம் நீங்கி நல்லருள் கிடைக்கும் என்பார்கள். வீட்டில் அனுமன் படம் வைத்து அவர் வாலுக்கு ஒரு மண்டல காலம் பொட்டுவைத்து வணங்கிவந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆரோக்கியம் அருளும் வடைமாலை

நவதானியங்களில், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சக்தியைக் கொடுப்பது உளுந்து. அனுமனின் தாயார் அஞ்சனாதேவி உளுந்து வடையைச் செய்து கொடுத்ததால், அனுமன் ஆரோக்கியமாகவும் திடமாகவும் திகழ்ந்தாராம். மேலும் உளுந்து ராகுவுக்கு உரிய தானியம். எனவே அனுமனுக்கு உளுந்தினால் செய்த உணவை நிவேதனம் செய்தால் ராகு தோஷங்களும் நீங்குமாம்.

ராகுவின் அருள் கிடைத்துவிட்டால் ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி நிம்மதியாக வாழலாம் என்பதால்தான் நம் முன்னோர்கள் அனுமனுக்கு வடைமாலை சாற்றும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர்

சனி தோஷம் தீர்க்கும் அனுமன்

செங்கல்பட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து கோர்ட் வளாகம் நோக்கிச் செல்லும் வழியில் கோதண்டராம சுவாமி கோயில் இருக் கிறது. இங்கே மூலவர் வரதராஜ பெருமாள். தாயார் பெருந்தேவித் தாயார். இங்கு கோதண்டராமருக்கு ஒரு சந்நிதி உண்டு. ராமரின் அழகினைக் கண்டு மயங்கிய பக்தர்கள், இந்தக் கோயிலைக் கோதண்ட ராம சுவாமி கோயில் என்றே குறிப்பிட ஆரம்பித்து விட்டார்களாம்.

இந்தக் கோயிலில் திருப்பணி நடைபெற்றபோது ஓர் அனுமன் விக்ரகம் கிடைத்தது. ஓர் உருவத்தின் மீது சனிபகவான் தன் திருவடியை வைத்திருப்பது போன்ற கோலத்தில் அந்த விக்ரகம் அமைந்திருந்தது. அந்த உருவம் எது என்பதைத் தெரிந்துகொள்ள காஞ்சி மகாபெரியவரை அணுகினார்கள் பக்தர்கள்.

அவர் மூர்த்தத்தைப் பார்த்துவிட்டு, “அது சனீஸ்வரன். தன்னைப் பிடிக்க முயன்ற சனிபகவானை அனுமன் மிதித்தபடி காட்சி கொடுக்கும் காட்சி இது. இந்த மூர்த்தியை வழிபட்டால் சனி தோஷம் முற்றிலும் விலகும்” என்று ஆசி கூறி அனுப்பினார். பக்தர்கள் அப்படியே செய்தார்கள்.

இங்கு பக்தர்கள் மனக்குறைகளைச் சொல்லி, தேங்காயில் மஞ்சள் தடவி, அதைப் புதிய வஸ்திரத்தில் கட்டி அனுமன் சந்நிதி யில் கட்டும் வழக்கம் இருக்கிறது. இவ்வாறு செய்து வழிபட்டால் சனியின் தீய பார்வை விலகி நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை.

நவகிரக தோஷம் நீங்கும்

தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்திருக்கிறது தஞ்சாவூர் பிரதாப வீர அனுமார் கோயில். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோயில் இது. இவருக்கு மூலை அனுமார் என்ற பெயரும் உண்டு. பிரதாபசிம்மன் என்ற மன்னர் பிரதாப வீர ஆஞ்சநேயரைத் தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தார். ஒருமுறை போர் மூண்ட போது, பிரதாப சிம்மன் மூலை அனுமாரை வழிபட்டு, அவரின் அருளால் எதிர்களை வென்றாராம். அதன்பின் இந்த அனுமனை அனைவரும் பிரதாப வீர அனுமன் என்று அழைக்க ஆரம்பித்தனர் என்கிறார்கள்.

இந்தக் கோயிலை அமாவாசைக் கோயில் என்றும் சொல்கிறார்கள். காரணம் இங்கு அமாவாசை நாளில் ஆஞ்சநேயருக்கு நடைபெறும் விசேஷ பூஜையே! இந்த ஆஞ்சநேயரை மூல நட்சத்திர நாளில் 18 அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இவரை வணங்கி வழிபட கல்வித் தடை, திருமணத்தடை, பிற துன்பங்கள் என அனைத்தும் விலகும் எனபது ஐதிகம்.

நெய் தீபம் ஏற்றினால்...

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில், சுமார் 29 கி.மீ. தொலைவில் உள்ளது அழியாநிலை எனும் கிராமம். இந்த ஊரில், மிகப்பிரமாண்ட திருமேனியுடன் அழகு ததும்பக் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர். இவரை விஸ்வரூப ஆஞ்சநேயர் என்று சிறப்பிக்கிறார்கள் பக்தர்கள். இதே கோயில் பஞ்சமுக அனுமனும் அருள்கிறார்.

இங்கு வந்து நெய் விளக்கேற்றி, வடைமாலை சார்த்தி அனுமனை வழிபட, வியாபாரம் சிறக்கும்; தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும். நினைத்த காரியங்கள் அனைத்திலும் பக்கத்துணையாக இருந்து அருள்வார் விஸ்வரூப ஆஞ்சநேயர்!