Published:Updated:

அனுமன் ஜயந்தி: படிப்பாயசம் சாப்பிட்டால் குழந்தைப்பேறு அருளும் கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபயஹஸ்த அனுமன்!

ஜெயவீர அபயஹஸ்த அனுமன்

அனுமன் ஜயந்தி 2022: தாம் வாக்களித்த படியே பட்டாபிஷேகம் முடிந்த பின் ஆஞ்சநேயரை அழைத்துக் கொண்டு கிருஷ்ணாபுரம் என்னும் இந்த கிஷ்கிந்தாபுர தலத்திற்கு வந்தார் இராமர்

அனுமன் ஜயந்தி: படிப்பாயசம் சாப்பிட்டால் குழந்தைப்பேறு அருளும் கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபயஹஸ்த அனுமன்!

அனுமன் ஜயந்தி 2022: தாம் வாக்களித்த படியே பட்டாபிஷேகம் முடிந்த பின் ஆஞ்சநேயரை அழைத்துக் கொண்டு கிருஷ்ணாபுரம் என்னும் இந்த கிஷ்கிந்தாபுர தலத்திற்கு வந்தார் இராமர்

Published:Updated:
ஜெயவீர அபயஹஸ்த அனுமன்

அனுமன் அவதரித்தது மார்கழி மாத மூலம் நட்சத்திரம், அமாவாசை திதியில். எனவே இந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி மாலை 6.30 மணி துவங்கி, டிசம்பர் 23 ம் தேதி மாலை 4.27 வரை அமாவாசை திதி நீடிக்கிறது. ஆகவே 23-ம் தேதி அனுமன் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. தென்காசி மாவட்ட பொதிகைத் தென்றலில் செழித்துக் கிடக்கும் வயல்வெளிகளுக்கு நடுவே கிஷ்கிந்தபுரம் என்ற கிருஷ்ணாபுரத்தில் வீற்றிருக்கிறார் எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற ராம தூதர் ஸ்ரீ ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர்.

ஜெயவீர அபயஹஸ்த அனுமன்
ஜெயவீர அபயஹஸ்த அனுமன்

இராமாயண காலத்தில் சீதையைத் தேடிச் சென்ற ஆஞ்சநேயருக்கும் வாணர வீரர்களுக்கும் பசியும் தாகமும் தீவிரமாய் எடுத்தது. அருகில் நீர்நிலைகள் எதுவும் இருக்கின்றதா என்று தேடிய போது ஒரு இடத்தில் குகை ஒன்று இருந்தது. அதனுள்ளே இருந்து வெள்ளை நிற அன்னங்களும் நாரைகளும் இன்னும் பல பறவைகளும் உடல் நனைந்த வண்ணம் சிறகடித்துக் கொண்டு பறந்தன. இதைப் பார்த்த வானர வீரர்களும் ஆஞ்சநேயரும் இந்த குகைக்குள் தண்ணீர் இருக்குமென்று கருதி அந்த ரிஷிபிலத்திற்குள் நுழைந்தனர்.

அந்த குகைக்குள் ஏராளமான மாட மாளிகைகளும் குளங்களும் ஆறும் கோபுரங்களும் இருப்பதைக் கண்டனர். அங்கு தவமுது மகளான சுயம்பிரபையையும் கண்டனர். சுயம்பிரபையை வணங்கிய பகவான் ஆஞ்சநேயர் இந்தக் குகை பற்றியும் குளம் பற்றியும் வினவினார். சுயம்பிரபையும் அந்த வரலாற்றினை கூறினால். பழங்காலத்தில் மயன் என்ற பெயர் பெற்ற மாயைகள் பல செய்யும் ஆற்றல் கொண்ட ஒருவன் இருந்தான். விசுவகருமனாகிய மயன் தனது மாயை சக்தி கொண்டு இந்த குகையையும் இதனுள் அழகிய பட்டணத்தையும் படைத்தான்.

பிரம்ம தேவரிடம் தாம் பெற்ற தவ பலனால் ஹேமை என்ற தெய்வப்பெண்ணுடன் இந்த பட்டணத்தில் சுகமாக இருந்து வந்துள்ளான். ஹேமை மயனுடன் இருப்பதை நாரதர் மூலம் அறிந்த இந்திரன் கோபமடைந்து மயனை அம்பினால் தாக்கிக் கொன்றான். இதனால், இந்திரன் கொலை பழியும் பிரம்மஹத்தி தோஷமும் பெற்று இதே குகையிலிருந்து அவதியுற்றான்.

இதை மற்ற தேவர்கள் ஈசனிடம் முறையிட்டு இந்திரனைக் காப்பாற்ற வேண்டும் என்றும் மகாதேவரிடம் முறையிட்டுக் கொண்டனர். ஈசனும் மனம் இறங்கி அகண்ட கங்கை நதியை இந்த குகைக்குள் பாய விட்டார். அதில் ஸ்னானம் செய்த இந்திரனும் பாவ விமோசனம் பெற்று தேவலோகம் அடைந்தான்.
கிருஷ்ணாபுர ஸ்ரீ ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில்
கிருஷ்ணாபுர ஸ்ரீ ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில்

அதன்பின், இந்த தீர்த்தத்தினை காவல் காக்க என்னை இங்கு வைத்துள்ளார் பிரம்மதேவர் என்றால் சுயம்பிரபை. ராமர் காரியமாக இங்கு அனுமன் வருவார், அப்போது அவரிடம் இதை ஒப்படைத்துவிட்டு இங்கிருந்து நீ விலகுவாயாக என்பது பிரம்மதேவருடைய கட்டளை என்று கூறி முடித்தால் சுயம்பிரபை. இதனைக் கேட்ட அனுமரும் தன்னால் இந்த நேரத்தில் இவ்விடம் இருக்க இயலாது என்றும் இராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்றி இராமனிடம் ஒப்படைக்கும் வரையில் நீ இவ்விடம் காப்பாயாக! என்று கூறி கிளம்பினார்.

பின் இலங்கையில் இராமருடன் இராவணனை வெற்றி கொண்டு புஷ்ப விமானத்தில் இராமர், சீதாதேவி ,அனுமன், இலக்குவன் ஆகியோர் அயோத்தி திரும்பினர். அந்த நேரத்தில் சுயம்பிரபை பற்றியும் அவள் காத்துக் கொண்டிருக்கும் தீர்த்தக்குளம் பற்றியும் ஆஞ்சநேயர் இராமரிடம் கூறினார். அதைக் கேட்ட இராமரும் ஆஞ்சநேயரிடம், `முடி சூட்டுதலுக்குப் பின் நிச்சயம் இத்தலம் செல்வோம்' என்று வாக்களித்தார்.

தாம் வாக்களித்த படியே பட்டாபிஷேகம் முடிந்த பின் ஆஞ்சநேயரை அழைத்துக் கொண்டு கிருஷ்ணாபுரம் என்னும் இந்த கிஷ்கிந்தாபுர தலத்திற்கு வந்தார் இராமர். தாமே இங்குள்ள தலத்திற்கு ஆஞ்சநேயரை எழுந்தருளச் செய்து யாகங்கள் எழுப்பி, "நீ இங்கேயே இருந்து உன்னை நாடி வரும் பக்தர்களுக்கும் இராம நாமம் ஜெபிப்பவர்களுக்கும் அருள்புரிவாயாக" என்று கூறி அந்த இடத்திற்கு தமது அருளும் உண்டு என்று வாக்களித்துச் சென்றார்.

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில்
ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில்

இத்தலத்தில் இராமபிரான், சீதாதேவி, இலக்குவன், ஆஞ்சநேயர் கூட்டாக தனிச்சன்னதியில் வீற்றிருக்கின்றனர். இராமபிரானின் அடுத்த அவதாரமான பகவான் கிருஷ்ணருடன் அனுமருக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்றும் இந்த இடம் கிருஷ்ணாபுரம் என்ற பெயர் பெற்றது என்கின்றனர்.

தெற்கு நோக்கிய கருவறையில் மூலவரான ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் சுயம்பு மூர்த்தியாக ஆறடி உயரத்திற்கு மேல் தென் திசை நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.இதனாலேயே இத்தலம் தனிச்சிறப்பு வாய்ந்தது. பூமிக்கு மேல் ஆறடி உயரத்தில் கம்பீர தோற்றத்துடன் வீற்றிருக்கிறார் மூலவர். ஆஞ்சநேயரின் திருப்பாதகள் பக்தர்களை நோக்கி ஆசி வழங்குவது போல் அமைந்துள்ளது. அவரது திருக்கரம் அபய முத்திரை காட்ட, அது பக்தர்களுக்கு மன‌பயம் நீக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. ஆஞ்சநேயரின் அகண்ட மார்பினை மூன்று மணிமாலைகள் அலங்கரிக்கின்றன.

ஆஞ்சநேயரின் சக்தி மிகுந்த வால் இவரது தலைக்கு மேல் வரை சென்று சிறு மணியுடன் காட்சியளிக்கிறது.

சுயம்பிரபை தீர்த்தம்
சுயம்பிரபை தீர்த்தம்

சுயம்பிரபை என்ற தீர்த்தம் உள்ள இடத்தில் இத்தலம் அமைந்துள்ளதால் இந்த கேயிலில் உள்ள அபயஹஸ்த ஆஞ்சநேயரை வழிபடுவது இரண்டு மடங்கு பலன் தரும். இராமபிரானே இத்தலத்தில் யாகம் செய்ததால், இத்தலத்தில் எங்கு தோண்டினாலும் வெண் சாம்பல் போன்ற திருமண் கிடைக்கிறது. மயன் அமைத்த குளமும் குகையும் இன்றும் காணமுடிகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள குளத்தில் படிப் பாயசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம். இந்த தலத்தின் தலவிருட்சம் நெல்லிமரம். இராமாயணத்தில் உள்ள கிஷ்கிந்தா காண்டத்தை இந்த தலம் எடுத்துரைக்கிறது என்பதால் கிஷ்கிந்தாபுரம் என்றே பெயர் பெற்றது, அதுவே மருவி கிருஷ்ணாபுரம் என்றானது.

எப்படிச் செல்வது? தென்காசியிலிருந்து 17கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணாபுரம். தென்காசியிலிருந்து இராசபாளையம் செல்லும் பேருந்தில் செல்லலாம். இல்லை, கடையநல்லூரிலிருந்து ஆட்டோவில் செல்லலாம்.