திருத்தலங்கள்
Published:Updated:

அச்சம் தீர்க்கும் அனுமன் சாலிசா

அனுமன் சாலிசா
பிரீமியம் ஸ்டோரி
News
அனுமன் சாலிசா

அனுமன் சாலிசா

உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் காவியம் ராமாயணம். இந்த ஆதிகாவியத்தை அடியொற்றிப் பல கவிஞர்களும் அடியார்களும் பல்வேறு நூல்களைப் படைத்தனர். அவை ஒவ் வொன்றும் ஒரு சிறப்பினை உடையது. அப்படி ஒரு நூல்தான், `ராம சரித மானஸ்' என்று போற்றப்பெற்ற, `துளசி ராமாயணம்'. இதை இயற்றியவர் துளசிதாசர் என்னும் மகான்.

அனுமன் சாலிசா
அனுமன் சாலிசா


சதா சர்வ காலமும் ராமநாமத்தை ஜபம் செய்துவந்த துளசிதாசர் வாழ்வில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது கனவில் கலிபுருஷன் தோன்றினார்.

``துளசிதாசரே, நீர் ராமநாம ஜப உப தேசத்தின் மூலம் மக்கள் எல்லோரையும் புண்ணிய ஆத்மாக்களாக மாற்றி வருகிறாய். கலியுக தர்மத்துக்கு இது விரோதமானது. இப்படியே நீர் செய்துகொண்டிருந்தால் நான் யாரைப் பற்ற முடியும்... எனவே நீர் இதை நிறுத்தும். அல்லது உம்மைக் கொல்ல வேண்டி வரும்'' என்று சொல்லி மிரட்டினான்.

உடனே உடல் அதிர பயத்தோடு விழித்துக்கொண்டார் துளசி தாசர்.

`ராம பக்தனான தன்னையே கலி புருஷன் இப்படி மிரட்டுவார் என்றால், சாதாரண பக்தர்களின் நிலை என்ன' என்று நினைத்துப் பார்க்கவே அவருக்கு அச்சமாக இருந்தது.

ராம பக்தர்களுக்குத் துன்பம் என்றால் உடனே ஓடிவந்து காப்பவர் அஞ்சனையின் மைந்தன் அல்லவா? ஆகவே, அனுமனை துதிப்பது ஒன்றே துயர் நீங்கும் வழி' என்று கருதினார். உலகம் உய்ய துன்பங்கள் தீர்க்கும் ஆஞ்சநேயர் துதி ஒன்றைப் பாடத் தொடங்கினார். அந்தத் துதி, அனு மனின் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லும் பாடலாக அமைந்தது.

இதோ துளசிதாசர் அருளிய `அனுமன் சாலிசா' விவரிக்கும் அனும னின் மகிமைகள் சில...

அனுமன், வீரதீர பராக்கிரமசாலி. சூரியபகவானின் அருளால் அனுமனின் ஞானம் ஒளிர்ந்தது. அதனால்தான் அவருக்கு, `நவவியாகரண பண்டிதர்' என்று ஒரு பட்டம் உண்டு. இதன் பொருள், `சொல்லின் செல்வர்' என்பதுதான். இந்தப் பட்டத்தை அனுமனுக்கு வழங்கியவர் சாட்சாத் ராமபிரானே.

அனுமன் மனதை அடக்க அறிந்தவர். ராவணனின் அந்தப்புரத்தில் சுற்றித் திரிந்தபோது, அங்கிருந்த பெண்களைக் கண்டு மனம் விகாரம் அடையாத பரிசுத்தமான பிரம்மசாரி அவர்.

அனுமன் சிவபெருமானின் அவதாரம். சிவபெருமான் திரிபுரம் எரித்தார் என்றால் அனுமன் இலங்கையை தகனம் செய்தார். எனவே அனுமனைத் துதித்தால் சிவனருளும் கிடைக்கும்.

ராமச்சந்திரமூர்த்தி அனுமனின் மகிமையை அறிவார். அதனால்தான் அவர் அனுமனைக் கட்டித் தழுவி, `நீ பரதனைப்போலவே எனக்குப் பிரிய மானவன்' என்று போற்றினார். தேவரும் முனிவரும் அடையமுடியாத இந்த மாபெரும் பாக்கியத்தைப் பெற்றவர் அனுமன் என்று புகழ்கிறார் துளசிதாசர்.

அனுமனின் பலம் ராம பக்தி. அனுமனை வசம் செய்ய நாம் சொல்ல வேண்டியதும் ராம நாமம்தான்.

`ராம' எனும் அருமையான மாமருத்து இந்த உலகில் உள்ளது. அதைச் சொல்லிவந்தாலே போதும் அஷ்ட ஸித்திகளும் நவ நிதிகளும் வந்துகுவியும். பிறவிதோறும் செய்த பாவங்கள் தீரும். அதனால்தான் ராமநாமம் ஒலிக்கும் இடங்களில், அனுமன் கை கூப்பி ஆனந்தக் கண்ணீருடன் நிற்கிறார்.

இங்ஙனம் பாடிக் களிக்கும் துளசி தாசர், அனுமனின் பராக்ரமங்களையும் விவரிக்கிறார். அனுமன் சிறிய வடிவில் காட்சி அளித்தது; பிரமாண்டமாக விஸ்வரூபம் எடுத்தது; அழகிய இலங்கையை அழித்தது; அரக்கர்களை வதம் செய்தது; ராமகாரியத்தை நிறைவேற்றியது; ராம லட்சுமணர் உயிரைக் காக்க சஞ்ஜீவி மலையைச் சுமந்துவந்தது என்று அனு மனின் பராக்கிரமங்கள் ராம காதையில் அநேகம். அவற்றை எல்லாம் இந்தப் பாடலில் பாடுகிறார் துளசி தாசர்.

அற்புதமான இந்த அனுமன் சாலிசா வைப் பாடுபவர்களுக்குக் கிடைக்கும் பலன்களையும் துளசிதாசரே பட்டியல் இடுகிறார்.

இதைப் பாடி ஆஞ்சநேயரைத் துதிப்பவர்களுக்குத் துன்பங்கள் தீரும். வெற்றிகள் குவியும். அவரைத் தொடர்ந்து துதித்துவந்தால் தடை இல்லாத ஆனந்தம் பெருகும். சிவன ருளும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார் துளசிதாசர்.

இசையோடு சேர்ந்துபடித்தாலே 5 முதல் 8 நிமிடத்துக்குள் முடித்துவிடக்கூடிய மிக எளிமையான பாடல் அனுமன் சாலிசா. செவிமடுத்தாலே புத்துணர்ச்சி பெருகும் என்பார்கள்.

மன பயம் உள்ளவர்கள், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள், காரியத் தடையினால் கஷ்டப் படுபவர்கள், கிரக தோஷங்களால் துன்புறுவோர் அனுமன் சாலிசாவைப் பாராயணம் செய்து வந்தால், அவற்றில் இருந்து விடுபடலாம்

குறிப்பாக சனிதோஷம், ஏழரைச்சனி, அஷ்டம சனி நடப்பவர்கள் தவறாமல் ஆஞ்சநேயரைத் துதித்துவந்தால் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.