நமக்கு ஞானமும் கல்வியும் இரண்டு கண்கள். நாம் கற்பது கல்வி. கற்றதை உள்ளத்தில் வைத்து நன்றாக உணர்ந்து, அதன்படி நடந்து அனுபவத்தில் உண்மையைக் காண்பது ஞானம்.
ஞானமும் கல்வியும் இரண்டும் இல்லாதவர்கள் பார்ப்பது, அறியாமை என்ற இருளை மட்டுமே. இந்த இருள் விலகி ஒளி கிடைக்கவும், ஞானம் பிறக்கவும் நமக்கு ஒரு சிறந்த ஞான ஆசார்யர் தேவை. அவரும் ஈடு இணை சொல்ல முடியாதவராக இருக்க வேண்டும். அவ்வகையில், மகிமைமிகு ஞான நூல்களும் மகான்களும் ரிஷிகளும் நமக்குக் காட்டிய ஞான ஆசார்ய வடிவம் ஹயக்ரீவர்.
எல்லாவிதமான வித்தைகளுக்கும் ஆதாரமாக இருப்பவர் இவரே. ஆய கலைகள் அறுபத்து நான்கையும் நமக்கு அருளும் சகலகலாவல்லியான சரஸ்வதிக்கும் குருவாக இருப்பவர் ஹயக்ரீவர். ஶ்ரீவித்யா உபாசகர்கள் புகழும் லலிதா சஹஸ்ர நாமத்தை அகஸ்தியருக்கு வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெறும் இந்தத் தருணத்தில், மகா விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்றான ஹயக்ரீவரின் மகிமையைப் படித்தறிவது சிறப்பு. ஒருவிதத்தில் அதுவும் அவருக்கான சிறந்த வழிபாடு எனலாம். அதனால், கல்வியில் சிறக்கவும் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெறவும், பரிமுகக் கடவுளாம் ஹயக்ரீவரின் பேரருளும் வாய்க்கும்.

மது - கைடபர் எனும் அசுரர்கள் இருவர், பிரம்ம தேவனிடம் இருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றனர். அப்போது, ஶ்ரீமந் நாராயணர் பரிமுகனாய் (ஹயக்ரீவராய்) அவதாரம் செய்தார். குதிரை முகம், மனித உடம்பு, கண்களாக சந்திர சூரியர் திகழ, கங்கையும் சரஸ்வதியும் கண் இமைகளாக விளங்க, சூரியனை மிஞ்சக் கூடிய ஒளிவீசும் வடிவம்கொண்ட மகாவிஷ்ணு அசுரரை வென்று வேதங்களை மீட்டு வந்தார் என்கின்றன புராணங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வசையில் நான்மறை கெடுத்த
அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிவை
பயந்தவனே! எனக்கருள் புரியே...
எனப் போற்றுகிறது நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.
எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமாகத் திகழ்பவர் ஹயக்ரீவர். ஹயக்ரீவரைப் பிரத்தியட்சமாக தரிசித்து, அவரது அருளைப் பரிபூரணமாகப் பெற்ற மகான்களின் கதைகள் பல உண்டு.
`என்னைப் பாருங்கள்... சூரியனைப் பாருங்கள்’
அந்திசாயும் நேரம். பசுக் குலம் அமைதியாக மேய்ந்துகொண்டிருந்தது. அழகும் கம்பீரமும் கொண்ட சிறுவன் ஒருவன் அவற்றைக் கண்காணித்தான். அந்த வழியாகப் பல்லக்கில் வந்தார் ஸ்வர்ண வர்ண பரசுராம தீர்த்தர் (மத்வ மடாதிபதி) என்ற மகான்.
சிறுவனைக் கண்டதும் பல்லக்கை நிறுத்திய மகான் அவனை அழைத்து, ‘‘அப்பூர் கிராமம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?’’ எனக் கேட்டார். சிறுவன் சூட்சுமமாகப் பதில் சொன்னான். ‘‘என்னைப் பாருங்கள்... மாட்டு மந்தையைப் பாருங்கள்... சூரியனைப் பாருங்கள்!’’ என்றான்.
ஏற்கெனவே, சிறுவனின் அழகிலும் கம்பீரத்திலும் லயித்திருந்த மகான் அவனது பதிலைக் கேட்டதும் ஆச்சர்யத்தில் மூழ்கினார்.
சூரியன் மறையும் வேளையில், சிறுவன் ஒருவன் மாடுகளை மேய்க்கிறான் என்றால், பக்கத்தில்தானே ஊர் இருக்க வேண்டும். இதை நாசூக்காகச் சொன்ன சிறுவனின் சாதுர்யம் மகானை வியப்பில் ஆழ்த்தியது. அப்பூரை அடைந்ததும் அந்தப் புத்திசாலி சிறுவனைப் பற்றிய விவரத்தை ஶ்ரீமடத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் விசாரித்து அறிந்துகொண்டார். மைசூர்- சென்னப்பட்டினம் தாலுகாவில் இருக்கும் அப்பூரைச் சார்ந்தவன் அந்தச் சிறுவன். வீட்டுக்கு ஒரே பிள்ளை. பெயர் லட்சுமி நாராயணன். அவனையும் பெற்றோரையும் தன்னிடம் அழைத்து வரும்படி பணித்தார் மகான்.
அவர்களும் வந்து சேர்ந்தனர். பெற்றோரிடம், ‘உங்கள் மகனை ஶ்ரீமடத்துக்குத் தந்து விடுங்கள்!’ என்று கேட்க நினைத்த மகான், பேச்சைத் தொடங்கினார். ‘‘உங்கள் பிள்ளை உங்களுக்கு மட்டும் மகனாக இருந்தால் போதுமா? உலகமே அவனை மகானாகப் போற்றும் தகுதி அவனிடம் இருக்கிறது. திக்குத் தெரியாமல் துயரக் கடலில் தத்தளிக்கும் பலருக்கு, வழிகாட்டும் ஞான தீபமாக அவன் விளங்குவான். அந்த பாக்கியத்தை, ஸ்வாமி உங்களுக்குத் தந்திருக்கிறார். உங்களது அபிப்ராயம் என்னவோ?’’ என்று கேட்டார்.
‘யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்?’ என்று நினைத்த பெற்றோர், மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டனர். பிறகென்ன? சிறுவனுக்கு சந்நி யாச ஆசிரமம் வழங்கியதோடு, ‘லட்சுமி நாராயண தீர்த்தர்’ எனும் திருநாமம் சூட்டப்பட்டது. அந்தச் சிறுவன்தான்... ஶ்ரீபாதராஜர்.
ஆம், லட்சுமிநாராயண தீர்த்தரின் ஞானத்தைப் போற்றி ஶ்ரீஉத்திராதி மடத்தைச் சேர்ந்த ஶ்ரீரகுநாத தீர்த்தர் என்ற மகானை அவரை ஶ்ரீபாதராஜர் என்று போற்றி மகிழ்ந்தார்.
ஶ்ரீபாதராஜரின் வாழ்வில் ஹயக்ரீவரின் அருளால் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.
ஶ்ரீபாதராஜரின் புகழ் திசையெங்கும் பரவியது. இது பலரின் உள்ளங்களில் பொறாமையை விதைத்தது. ஒருமுறை... ஶ்ரீபாதராஜர் காசிக்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட காசி நகரப் பண்டிதர்கள் பொறாமையுடன் ஶ்ரீபாதராஜரை வாதத்துக்கு அழைத்தார்கள்.
ஶ்ரீபாதராஜர் அதற்கு ஒப்புக்கொண்டார். ‘‘இந்த வாத பிரதிவாதம் அரசரின் முன்னால் நடந்தால் நன்றாக இருக்கும்!’’ என்று தன் எண்ணத்தையும் வெளியிட்டார். பண்டிதர்கள் ஏற்கவில்லை.
‘‘அதற்கு அவசியம் இல்லை. நமக்குள்ளாகவே ஒரு நிபந்தனையின் பேரில் வாதம் செய்யலாம். அதாவது, வாதத்தில் நீங்கள் தோற்றுவிட்டால், எல்லோர் முன்னிலையிலும் கங்கையில் விழுந்து உயிரைவிட வேண்டும். நீங்கள் ஜெயித்து நாங்கள் தோற்றுவிட்டால், நாங்கள் சந்நியாசிகளாகி விடுகிறோம்!’’ என்றார்கள்.
நிபந்தனை என்றால், இரு பக்கமும் சரிசமமாக அல்லவா இருக்க வேண்டும்... இது அப்படி இல்லையே என நமக்குத் தோன்றலாம். ஆனாலும் இந்த நிபந்தனைக்கு ஶ்ரீபாதராஜர் ஒப்புக்கொண்டார்.
தகவல் அரசனையும் எட்டியது. வாதப்போர் தொடங்கியது. கடைசியில் காசி நகரப் பண்டிதர்கள் எல்லோரும் ஶ்ரீபாதராஜரிடம் தோற்றுப் போனார்கள். வேறுவழியின்றி நிபந்தனைப்படி அனைவரும் துறவு பூண்டார்கள். எனினும், அவர்களால் ஶ்ரீபாதராஜரின் மீதுள்ள கோபத்தைத் துறக்க முடியவில்லை. ‘இனி, ஶ்ரீபாதராஜர் எங்கும் வாதம் செய்யக் கூடாது’ என்று தீர்மானித்து, மந்திரத்தின் மூலம் ஶ்ரீபாதராஜரை வாக்பந்தனம் எனப்படும் வாய்க்கட்டு (வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவராதபடி) செய்து விட்டனர்.
நடந்ததை உணர்ந்த ஶ்ரீபாதராஜர், ஶ்ரீஹயக்ரீவ மந்திரம் ஜபித்து அவரிடம் மனதார வேண்டினார். அதிசயம் நிகழ்ந்தது. அந்த இடத்தில் விக்கிரக வடிவமாக ஶ்ரீஹயக்ரீவர் எழுந்தருளி அங்கும் இங்குமாக நடை போட்டார். பின்பு ஶ்ரீபாதராஜரை வாக் பந்தனத்தில் இருந்து விடுவித்தார். இதனால் நெகிழ்ந்த ஶ்ரீபாதராஜர், ஹயக்ரீவரை ஓர் இடத்தில் நிலை நிறுத்தி, தோத்திரம் சொல்லித் துதித்தார். இந்த விக்கிரகம் இன்றும், ஶ்ரீபாதராஜ மடத்து பூஜையில் இருப்பதைக் காணலாம்.
ஶ்ரீபாதராஜர், பெங்களூரு அருகில் உள்ள முளுபாகல் க்ஷேத்திரத்தில் நரசிம்ம தீர்த்தக் கரையில் கி.பி.1486-ல் தன் பூத உடலைத் துறந்தார். அங்கு ஶ்ரீபாதராஜரின் பிருந்தாவனமும் நரசிம்ம தீர்த்தமும் உள்ளன. வாழ்நாளில் ஒரு முறையாவது அனைவரும் தரிசிக்க வேண்டிய இடங்கள் அவை.
ஶ்ரீபாதராஜர் மட்டுமா... ஶ்ரீவாதிராஜர், ஶ்ரீதேசிகர் முதலான மகான்களும் ஶ்ரீஹயக்ரீவரின் பரிபூரண அருளைப்பெற்றவர்கள்.
அதேபோல், ஶ்ரீபாதராஜர் மடம் மட்டுமன்றி பரிமுகன் அருள்நிறைந்த வேறு பல தலங்களும் உண்டு. மாணவர்கள் இந்தத் தலங்களுக்குச் சென்று ஶ்ரீஹயக்ரீவரை வழிபட்டு, அவரின் அருளால் தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறலாம்.
ஹயக்ரீவர் அருளும் திருத்தலங்கள்
திருவஹீந்திரபுரம்: கடலூர் அருகிலுள்ள திருத்தலம் திருவஹீந்திரபுரம். இங்கு அருள்மிகு தேவநாத ஸ்வாமி திருக்கோயில் எதிரில் உள்ள ஒளஷதகிரி மலையில் ஶ்ரீஹயக்ரீவர் காட்சி தருகிறார்.
ஒளஷதகிரி சிறிய குன்று என்றபோதிலும், மேலே விஸ்தாரமான சந்நிதி. மூலவர் லட்சுமி ஹயக்ரீவராக காட்சிதர, அருகே ஶ்ரீவேணுகோபாலன், கருடன் மற்றும் ஶ்ரீநரசிம்மரும் இருக்கிறார்கள். ஹயக்ரீவர் உற்சவமூர்த்தி மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கி, கீழ் வலக்கை அபய ஹஸ்தமும், கீழ் இடக்கை ஶ்ரீகோசத்துடனும் திகழ்கிறது. திவ்விய தேசங்களுள் இங்கு மட்டும் ஶ்ரீஹயக்ரீவருக்குப் பிரதானமான தனிச் சந்நிதி உள்ளது. மலையடிவாரத்தில் தேவநாதன் சந்நிதியில், ஶ்ரீதேசிகனால் வழிபடப்பட்ட ஶ்ரீயோக ஹயக்ரீவர் காட்சியளிக்கிறார்.
செட்டிப்புண்ணியம்: சென்னை- செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள சிங்கப்பெருமாள்கோயில் சென்று அங்கிருந்து 6 கி.மீ பயணித்தால் செட்டிப்புண்ணியத்தை அடையலாம். இங்குள்ள ஶ்ரீதேவநாத ஸ்வாமி கோயிலில் யோக ஹயக்ரீவர் அருள்கிறார். இந்த ஹயக்ரீவர், தேசிகனால் ஆராதிக்கப்பட்டவர் என்றும் திருவஹீந்திரபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர் என்றும் கூறுகிறார்கள்.
சென்னை- மேற்கு மாம்பலம்: அயோத்தியா மண்டபம் அருகே உள்ள அருள்மிகு சத்ய நாராயண பெருமாள் கோயில், மேற்கு மாம்பலத்திலேயே கோவிந்தன் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீஆதிகேசவர் ஶ்ரீபாஷ்யகாரர் தேவஸ்தான கோயில், சென்னை-நந்தம்பாக்கத்தில், ஶ்ரீகோதண்டராம ஸ்வாமி மற்றும் ஶ்ரீநிவாஸர் திருக்கோயில்களிலும் ஶ்ரீஹயக்ரீவரைத் தரிசிக்கலாம். சென்னை - திருமயிலை சித்திர குளம் அருகே உள்ள ஶ்ரீநிவாஸர் திருக்கோயிலிலும் ஶ்ரீலட்சுமி ஹயக்ரீவர் தரிசனம் தருகிறார்.
திருஇந்தளூர்: மாயவரம் - திருஇந்தளூர் பரிமள ரங்கநாதன் திருக்கோயிலின் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது.
புன்னைநல்லூர்: தஞ்சை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஶ்ரீகோதண்டராம ஸ்வாமி கோயிலின் தேர் மண்டபத்தில் ஹயக்ரீவருக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது.
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், ஆடிசன்பேட்டை-ரங்கசாமி குளம் அருகில், தீபப்பிரகாசர் கோயிலில் ஸ்வாமி தேசிகன் சந்நிதியில், லட்சுமி ஹயக்ரீவர் காட்சி தருகிறார். அதே கோயிலில் உள்ள பரகால மடத்திலும் லட்சுமி ஹயக்ரீவரைத் தரிசிக்கலாம். காஞ்சி வரதராஜர் சந்நிதியில் அமைந்துள்ள அண்ணா கோயிலிலும் ஹயக்ரீவர் அருள்கிறார்!
ஹயக்ரீவரின் அருள்பெறுவோம்
வசையில் நான்மறை கெடுத்த
அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிவை
பயந்தவனே! எனக்கருள் புரியே!
உயர்கொள் மாதவிப் போதொடுலாவிய
மாருதம் வீதியின் வாய்
திசையெல்லாம் கமழும் பொழில்
சூழ் திருவெள்ளறை நின்றானே.
(நாலாயிர திவ்யப் பிரபந்தம் இரண்டாயிரத்தில் ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி)
மாணவர்கள், அற்புதமான இந்தப் பாடலை அனுதினமும் பாடி பரிமுகக் கடவுளைத் தியானித்து வழிபட்டால், கல்வியில் சிறக்கலாம். கற்ற கல்வியை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளும் வல்லமையையும் ஹயக்ரீவர் அருள்வார்.
ஶ்ரீவேதாந்த தேசிகர் எழுதிய ஶ்ரீஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 ஸ்லோகங்கள் கொண்டது. இதை பக்தியுடன் பாராயணம் செய்தால், தேர்ந்த அறிவும் வாக்கு வல்லமையையும் பெறலாம் என்று ஶ்ரீதேசிகனே அருளி இருக் கிறார். இதன் முதல் ஸ்லோகத்தையாவது நம் குழந்தைகளுக்குச் சொல்லித் தந்தால், அவர்கள் கல்விமான்களாவது நிச்சயம்.
ஜ்ஞானானந்த மயம் தேவம்
நிர்மல ஸ்ப்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யா நாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே
கருத்து: ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக, மாசற்ற ஸ்படிக மணி போன்ற திருமேனியுடன், எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமாக, குதிரை போன்ற திருக்கழுத்தை உடைய எம்பெருமானை வழிபடுகிறோம்