Published:Updated:

கண்ணன் எனும் கள்வன்!

lord kannan
பிரீமியம் ஸ்டோரி
News
lord kannan

பி.சந்திரமெளலி - ஓவியம்: கேஷவ்

ண்ணனை நினைத்தால், அவன் தனது பதினோரு வயது வரை செய்த லீலைகள்தான், எவர் மனத்திலும் அரியாசனம் போட்டு உட்காரும். கண்ணனின் பால பருவ லீலைகள், சாதாரண மனிதர்களான நம்மைவிட சுகாச்சார்யார், லீலாசுகர், வேதாந்த தேசிகர், நாராயணப் பட்டத்திரி போன்ற மகான்கள் மற்றும் ஆழ்வார்கள் பலரை அதிகமாகக் கவர்ந்துள்ளன. இப்படிப்பட்ட கண்ணனின் லீலைகளை வருங்காலத் தலைமுறைகள் அறிந்து ஆனந்தம் அடைவதற்காக, அவற்றைப் பல்வேறு முறைகளில் வெளியிட்டுள்ளனர் அந்த மகான்கள்.

கண்ணனின் லீலைகளில், குறிப்பிடத் தக்கது வெண்ணெய் திருடியது. கண்ணன் வெண்ணெய் திருடியதற்கான காரணத்தைப் பார்த்த நாம், நாராயணப் பட்டத்திரி சொல்லும் காரணத்தைப் பார்ப்போம்.

கண்ணன் எனும் கள்வன்!

அவர், கண்ணனின் பழைய அவதாரங்களி லிருந்து தொடங்குகிறார். ‘குருவாயூரப்பா... மஹாபலிச் சக்ரவர்த்தி பலம் வாய்ந்தவன். அவனிடம் திருட முடியாது. யாசிக்கத்தான் வேண்டும். ஆனால், கோபிகைகள் அபலைகள். அவர்களிடம் தைரியமாகத் திருடலாம் என்றுதான், யாசிக்காமல் விசித்திரமான முறையில் தயிரையும் வெண்ணெயையும் திருடினீர் களா?’ என பக்தியோடும் உரிமையோடும் கேட்கிறார்.

மேலும் தொடர்கிறார், ‘குருவாயூரப்பா... தங்களது தயிர்- வெண்ணெய்த் திருட்டினால் கோபிகைகள் கோபமோ, வருத்தமோ அடையவில்லை. மட்டுமின்றி தாங்கள், கோபியரின் உள்ளங்களைக் கவர்ந்து, அவர்களை ஆனந்தக் கடலிலும் மூழ்க அடித்தீர்களே? குருவாயூரப்பா... வெண்ணெய் திருடும் காரணத்தால் வீடுகள் தோறும் நுழைந்து, அவர்களின் உள்ளத்தில் ‘ஆனந்தம்’ என்னும் விலையுயர்ந்த பொக்கிஷத்தையும் அல்லவா வழங்கியிருக்கிறீர்கள்?’ என்கிறார் பட்டத்திரி.

‘இதன்படி, நாரதர் முதலான பாகவத உத்தமர்களின் ஏகபோக பாக்கியமான பரம்பொருளை, சின்னஞ்சிறிய இடமான ஆயர் பாடியில் இருக்கும் தங்களது வீடு களுக்கு தினந்தோறும் வரவழைத்து, ‘பிரும்மானந்தம்’ எனும் அமிர்த ரசத்தை அளவில்லாமல் குடித்த கோபிகையர் அல்லவா உண்மையில் திருட்டுக் குற்றம் செய்தவர்கள். திருட்டுக் கொடுத்தவன் அல்லவா ஸ்வாமி?’ என்கிறார் மகான் ஒருவர். அதோ! ஸ்வாமி தன் கும்பலுடன் மறுபடியும் திருடக் கிளம்பிவிட்டார். இந்தத் தகவல், கோகுலத்தின் வீதிகளில் எல்லாம் பரவியது. அதனால் முடிந்தவரையில் அவர்கள் தங்களது வீட்டைப் பாதுகாத்துக் கொண்டனர். வீட்டின் பின்புறம் போய் பால் கறந்தால், கண்ணன் வருவது தெரியாமல் போகுமே என்று கருதி பெண் ஒருத்தி, வீட்டின் வாயிற் பக்கத்திலேயே மாட்டைக் கட்டிப் பால் கறந்தாள்.

கண்ணன் அவள் முன்னால் வந்து நின்றான். ‘எப்போதும் பத்துப் பேருடன் சுற்றுபவன், இப்போது தனியாக வந்திருக்கிறானே! என்ன நடக்கப் போகிறதோ?’ என்று பயத்துடன், அவள் கண்ணனைப் பார்த்தவாறே பால் கறந்தாள். கண்ணனும் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘இவன் கள்ளன்; ஏதாவது செய்து விடுவானோ!’ என்று கண்ணனின் கருணை முகத்தையே பார்த்தாள் அவள்.

lord kannan
lord kannan

கண்ணனின் விழிகளும் சற்றே குனிந்திருந்த திருமேனியும் இரு திருவடிகளும் அவற்றில் ஊன்றியிருந்த இரு கைகளும் அவள் மனதைக் கொள்ளை கொண்டன. பால் கறப்பது நின்றுவிட்டது. கைகள் ஆடவில்லை, அசையவில்லை. அவனது வடிவழகையே விழுங்கிக் கொண்டிருந்தன அவள் கண்கள். இவ்வளவும் ஒரு சில நொடிகளில் நடந்தன. வீட்டுக்குள் ‘கடபுடா’ என்று பானைகள் உடையும் சத்தம். ஒன்றும் புரியவில்லை. ‘கண்ணன் இங்கே இருக்கும் போது உள்ளே என்ன சத்தம்?’ என்று குழம்பினாள். உடனே உட்புறம் ஓடினாள்.

அங்கே... பாலும் தயிரும் ஆறாக ஓடின. அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைந்த பானைத் துண்டுகள் அசைந்தன. கண்ணனின் நண்பர்கள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர்.

அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை. ‘‘இனி உங்களை விட்டு வைக்கப் போவதில்லை!’’ என்று கத்தியபடி ஓடினாள். அது பலனளிக்கவில்லை. அங்கிருந்தவர்கள், கொல்லைப் புறம் வழியாகப் பறந்துவிட்டனர். ‘அவர்கள் தப்பித்துவிட்டார்களே!’ என்ற ஆற்றாமை, வாயிலில் இருந்த கண்ணன் மேல் திரும்பியது.

‘‘கள்ளக் கண்ணா! நண்பர்களை வீட்டுக்குள் அனுப்பி விட்டு, ஒன்றும் தெரியாதவனைப் போல வாசலில் என்னை வேவு பார்த்தாயா? இதோ வருகிறேன். வசமாக மாட்டிக் கொண்டாய்!’’ என்றபடி வெளியே ஓடி வந்தாள்.

அங்கே கண்ணன் இல்லை. போகும்போது கன்றுக்குட்டியையும் அவிழ்த்துவிட்டிருந்தான். அது, தன் இஷ்டம் போல தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்தது. மீண்டும் உள்ளே ஓடினாள். ‘கண்ணன் வந்திருப்பானோ?’ என்று திரும்பவும் வெளியே வந்தாள். இப்படியே அலைந்தாள்.

‘வாழ்க்கைக் களேபரத்தில் அகப்பட்ட ஜீவன், அதிலிருந்து மீள்வதற்காக தெய்வத்தைத் தேடி அலைவதையும் வாழ்க்கைக் களேபரம் மறுபடியும் அந்த ஜீவனை உள்ளே இழுப்பதையும் ஜீவன் மீண்டும் தெய்வத்தைத் தேடுவதுமாக இருக்கும் உலக இயலைச் சுட்டிக் காட்டுவது போல அந்த நிகழ்ச்சி இருந்தது!’ என்கிறார் மகான் ஒருவர்.

தேடுபவர்களின் கண்களில் சிக்காதிருப்பதும், தேடாதவர்களைத் தேடிப்போய் அருள் செய்வதும் தெய்வத்தின் இயல்பு. அதை நிரூபிப்பது போல் கண்ணனும் அவன் தோழர்களும் அடுத்த தெருவில் நுழைந்து விட்டனர்!