திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

உதங்கருக்கு கண்ணன் சொன்ன பாடம்!

கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணன்

கண்ணா, நான் வேண்டும்போது நீர் கிடைக்கும் என்ற உன் வாக்கு பொய்யா. உன் விளையாட்டை என்னிடமே காட்டுகிறாயா

தங்க மகரிஷி கண்ணனின் மீது அதீத பக்தி கொண்டவர். அவரின் தவத்துக்கு மயங்கிய கண்ணன் அவர் முன் தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

``பரமாத்மாவான தங்களையே தரிசித்த பின்னர் வேறென்ன வரம் கேட்க முடியும், ஒன்றும் வேண்டாம் கண்ணா!'' என்றார் ரிஷி. கண்ணன் வற்புறுத்திக் கேட்கவும், ``கண்ணா நீண்ட தவமிருக்கும் எனக்கு தாகம் எடுக்கும்போதும் நீர் தேவைப்படுகிறது. அதைத் தேடி அலைவதால் எனக்கு நேரம் விரயமாகிறது. எனவே நான் வேண்டும் போது எனக்கு உடனே நீர் கிடைக்க ஏற்பாடு செய்'' என்றார் ரிஷி. கண்ணனும் ``அவ்வாறே கிட்டும்'' என்று அருளி மறைந்தார்.

கண்ணன்
கண்ணன்

நாள்கள் சென்றன. நீண்ட தவத்தில் இருந்த உதங்கருக்குக் கடும் தாகம் எடுத்தது. `தண்ணீர் வேண்டும்' என்று வேண்டினார். சற்று நேரத்தில் வேடன் ஒருவன் அவருக்கு அருகில் வந்து தன்னிடம் இருந்த குடுவையை நீட்டி,``சாமி, தாகமா இருக்கா...வேணும்னா இதைக் குடியுங்க...'' என்றான். அவன் தோற்றத்தையும், குடுவையில் என்ன இருக்குமோ என்ற தயக்கத்திலும் ரிஷி முகம் சுளித்து ``வேண்டாம்'' என்று கூறிவிட்டார். வேடனும் அவரை வணங்கி விடைபெற்றான்.

உதங்கருக்குக் கடுமையான கோபம் வந்தது. ``கண்ணா, நான் வேண்டும்போது நீர் கிடைக்கும் என்ற உன் வாக்கு பொய்யா. உன் விளையாட்டை என்னிடமே காட்டுகிறாயா...'' என்று ஏசினார்.

சிரித்தவாறே கண்ணன் தோன்றினான்.

``உதங்கரே! நீங்கள் வேண்டியது தாகத் துக்குத் தண்ணீர். அதை யார் கொடுத்தால் என்ன. என் மீது நம்பிக்கை இருந்திருந்தால், வேடன் தந்த நீரை மறுத்து இருக்க மாட்டீர்.

உண்மையில் வேடனாக வந்தவன் இந்திரன். அவன் குடுவையில் இருந்தது அமிர்தம். தோற்றத்தைக் கண்டு அசூயைப்படும் தாங்கள், இன்னும் பக்குவம் அடைய வில்லை. உலகில் வர்ணங்கள் உண்டு. ஆனால் வர்ணபேதம் கூடாது என்பதே என் அறிவுரை. இனியாவது பக்குவத் தோடு சகலமும் இறையே என்று உணர்ந்து வாழுங்கள்!'' என்று போதித்து மறைந்தான்.

உண்மையை உணர்ந்த உதங்கரும் அவ்விதமே வாழ்ந்து வைகுந்தம் அடைந்தார்.

- அ.ராஜா, வள்ளியூர்