திருத்தலங்கள்
Published:Updated:

'அள்ளிக் கொடுப்பவன் கண்ணன்'

கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணன்

கண்ணன்

சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே கண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவன்தானே!’ என்று வைணவப் பெருமக்கள் போற்றுவர்.

விஷ்ணு சகஸ்ரநாமம்
விஷ்ணு சகஸ்ரநாமம்


ஆம்! பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்திருக்கும். வீபீஷணன் வாழ்வு பெற்றதும், பாண்டவர்கள் வெற்றிபெற்றதும் அப்படித்தான். சத்தியமாகிய பகவானின் திருவருள் கடாட்சம் அவர்கள் பக்கம் இருந்ததால்தான் பெரும்பேறு பெற்றார்கள். நாமும் பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவரை மனதார ஸேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன் நிறைவாக வாழலாம்.

விஷ்ணு சகஸ்ரநாமம், பகவானின் திருநாம மகிமைகளைப் போற்றி வழிபடுவதற்கு வழிகாட்டுகிறது.

மண்ணை எடுத்துச் சாப்பிட்டான் கண்ணன். இதை பலராமன் யசோதைக்குச் சொல்ல... ‘எல்லாரும் பொய் சொல்றாங்கம்மா... நான் மண்ணைச் சாப்பிடலை’ என்று குறும்பு கொப்பளிக்கச் சொல்கிறான் கண்ணன். ‘நீ விஷமக்காரனாச்சே... செஞ்சாலும் செய்திருப்பே. எங்கே வாயைத் திறந்து காட்டு’ என்கிறாள் யசோதை.

வேறு வழியின்றி, தன் வாயைத் திறக்கிறான் கண்ணபிரான். அங்கே, ஏழுலகையும் தன் தாயாருக்குக் காட்டி அருள்கிறான் பகவான். அதாவது, பகவான் கிருஷ்ணன் என்பது ஒருவன்தான். ஆனால், அவன் காட்டியது ஏழுலகங்களையும்! ‘வையம் ஏழும் கண்டாள்...’ என்றொரு பாடல், ‘காட்டியது ஒருவன்; கண்டது ஏழு’ எனும் பொருள்படும்படி, அழகுற விவரிக்கிறது.

கிருஷ்ணனுக்கு ‘சஹா’ எனும் திருநாமம் அமைந்தது அதனால்தான்! அதாவது... கொடுப்பது, கொடுப்பவன் என்று அர்த்தம். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளிக் கொடுப்பவன் கிருஷ்ணன் அல்லவா?

அபராஜிதன் என்றும் பகவானைப் போற்றுகின்றன ஞானநூல்கள்.

‘சரக சம்ஹிதை’யின் ஒளஷத சாஸ்திரம், அற்புதமாக ஒரு விஷயத்தை விவரிக்கும். ‘எப்படி வாசுதேவனுக்குத் தோல்வி என்பதே கிடையாதோ, இந்தச் சமுத்திரம் எப்படி வற்றாமல் இருக்கிறதோ, என் தாயாரின் திருமணத்தை எப்படி நான் பார்த்தது கிடையாதோ... இந்த சத் வாக்கியங்கள் அனைத்தும் உண்மையானதைப் போல, இந்த மருந்தும் வேலை செய்து குணமாக்கும்’ என்கிற மந்திரத்தைச் சொல்லியபடி, மருந்து தயார் செய்வார்களாம்.

இத்தனை பெருமைகளைக் கொண்டவன் கிருஷ்ண பரமாத்மா. இதனால்தான், அபராஜிதன் எனும் திருநாமம் அமையப் பெற்றார். அபராஜிதன் என்றால், தோல்வியே இல்லாதவன் என்று அர்த்தம்.

நாமும் பக்தியோடு கேசவா, மாதவா, மாயவா, கோபாலா, மதுசூதனா... என்றெல்லாம் கண்ணனின் நாமங்களைச் சொல்லி வழிபட்டால், அவரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம். கண்ணனின் துணையால் நமக்கும் தோல்வி என்பதே ஏற்படாது!

- கே.குமரேசன், சென்னை-44