திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

முருகா என்று அழைக்கவா!

முருகா
பிரீமியம் ஸ்டோரி
News
முருகா

நம் தலையெழுத்தை மாற்றும் திருப்பெயர்

முருகனுக்குப் பல பெயர்கள் உண்டு. விசாகத்தில் பிறந்ததால் விசாகன். உள்ளமாகிய குகையில் இருப்பதால் குகன். கங்கை நதியில் தவழ்ந்ததால் காங்கேயன். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகேயன். சரம் என்றால் தர்பை. தர்பை வனத்தில் வளர்ந்ததால் சரவணபவன்.

முருகா
முருகா


அவரே ஆறுமுகம் கொண்டு அருள்வதால் சண்முகன். வேலேந்தியிருப்பதால் வேலவன். கடம்ப மலர்மாலையைத் தாங்குவதால் கடம்பன். பற்றுக்கோடாக இருப்பதால் கந்தன். என்றும் இளமையாகவே இருப்பதால் குமரன். சுவாமியாகிய சிவபெருமானுக்கே உபதேசித்து குருநாதன் ஆனதால் சுவாமிநாதன். முருகு என்றால் அழகு; அழகாகவே இருப்பதால் முருகன்.

இப்படி பல காரணப் பெயர்கள் முருகப்பெருமானுக்கு உண்டு. அவற்றில் முருகன், குமரன், குகன் ஆகிய திருநாமங்கள் மிகவும் உயர்ந்தவை என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். `இந்தத் திருப்பெயர்கள் மூன்றையும் சொல்லிச் சொல்லி உள்ளம் உருகும் தன்மையைக் கொடு’ என்றும் வேண்டுகிறார் அவர். `முருகன் குமரன் குகனென்று மொழிந்து உருகும் செயல்தந்து உணர்வு என்று அருள் வாய்’ என்பது முருகனிடம் அவர் வைக்கும் வேண்டுதல்!

இந்த மூன்று திருப்பெயர்களிலும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பி யவர் `முருகன்’ என்ற திருபெயரை தேர்ந்தெடுத்துத் தருகிறார். இந்த நாமத்தை ஒருமுறை சொன்னாலேயே போதும்; பலமுறை சொன்ன பலனைத் தரும்.

‘விதிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்’ என்று துதிக்கிறார் அருணகிரியார். `நாமம்’ என்று ஒருமையில் சொல்லாமல் ‘நாமங்கள்’ என்று பன்மையில் சொல்லக் காரணம்? இந்த நாமத்தை ஒருமுறை உச்சரித்தாலே பலமுறை உச்சரித்த பலனைத் தரும் என்பதால் `முருகா எனும் நாமங்கள்’ என்றார் போலும்.

இந்தத் திருநாமத்துடன் ராமாயணக் கதையில் வரும் குகனைச் சம்பந்தப்படுத்தி ஒரு கதைச் சொல்லப்படுவது உண்டு.

ஒருமுறை அரசன் ஒருவன் தன் பாவத்தைத் தொலைக்க வழி கேட்டு, தன் குருவைத் தேடி வந்தான். அப்போது குருநாதரின் மகன் மட்டுமே ஆசிரமத்தில் இருந்தான். அவனிடம் பிராயச்சித்தம் கேட்டான் மன்னன்.

``முருகா என்ற நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் போதும்’’ என்று செல்லி அரசனை வழியனுப்பி வைத்தான் குருவின் மகன்.

ஆசிரமத்துக்குத் திரும்பிவந்த குருவிடம் நடந்ததை விவரித்தான் அவரின் மகன். உடனே “தவறு செய்துவிட்டாயே! முருக நாமத்தை ஒருமுறை சொன்னாலே அனைத்துப் பாவமும் போய்விடுமே. அப்படி யிருக்க, மூன்று முறை சொல்லச் சொன்னது அதன் மகிமையைக் குறைப்பது ஆகுமே. அது தவறல்லவா? நீ செய்த தவறுக்காக, இன்னொரு ஜன்மம் எடுக்கவேண்டும். அந்த ஜன்மத்தில் முருக நாமத்தைத் தாங்கி வாழ்ந்து பிறகே முக்தியடைவாய்’’ என்றார்.

அந்தச் சிறுவனே ‘குகன்’ என்ற முருக நாமத்தைத் தாங்கிப் பிறந்த குகன் என்பது செவிவழிக் கதை. முருக நாமத்தின் பெருமையைச் சொல்வது!

ஆக, முருக நாமத்தை ஒரு முறை உச்சரித்தாலேபோதும்; பெரும் புண்ணியம் வாய்க்கும்; அவனுடைய இரண்டு பாதக் கமலங்களும் நம்முடைய பாதக மலங்களை - தீமைகளை அகற்றும்விதம் வந்து அருள் செய்யும். இதையே திருப்புகழ், `முருகா எனவோர் தரமோது அடியார் முடிமேல் இணைதாள் அருள்வோனே’ என்று பாடுகிறது. நக்கீரரோ `நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்பு’ என்கிறார்.

இரண்டு பாதக்கமலங்களும் அருள்செய்ய வரும் எனும்போது, ஒரு கேள்வி எழுகிறது. முருகனுக்கு ஆறுமுக முகங்கள்; பன்னிரு கரங்கள். அவ்வாறெனில் கால்களும் பன்னிரண்டாக இருக்க வேண்டுமல்லவா?

முருகனுக்குக் கணக்கு தெரியாதா என்ன? தெரியும். `முருகனின் பாதங்கள்தான் பற்றுக்கோடு என்று பிடித்துக்கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டே இரண்டு கைகள்தான் இருக்கின்றன. ஆகவேதான் இரண்டே பாதங்களுடன் எளிமையாக வருகிறான் முருகன்’ என்பார் சொல்லோவியர் சொ.சொ.மீ.சுந்தரம்.

முருகனின் இரண்டு பாதங்களும் நான்முகன் எழுதிய நம் தலையெழுத்தை மாற்றும் தன்மை வாய்ந்தவை. `அவன் கால்பட்டு அழிந்தது இங்கு என் தலைமீது அயன் கையெழுத்தே’ என்று கந்தர் அலங்காரத்தில் அலங்கரிக்கிறார் அருணகிரிநாதர். அவர் அருளாளர். அதனால் அவருக்கு அந்தப் பாக்கியம் கிடைத்தது. நமக்கும் கிடைக்குமா?

அதற்கான வழியையும் அவரே காட்டுகிறார். `முருகா எனவோர் தரமோது அடியார் முடிமேல் இணைதாள் அருள்வோனே’ என்று பாடுகிறார். நாமும் முருகா என்றழைத்து அவனருளைப் பரிபூரண மாகப் பெறுவோம்.

நக்கீரர் ‘பெரும் பெயர் முருகு’ என்று போற்றுகிறார். இந்த முருக நாமத்தைச் சொன்னால் முருகனை மட்டுமன்றி முப்பெரும் தேவர்களையும் போற்றிய பலன் கிடைக்கும். ‘மு’ என்பது முகுந்தனாகிய திருமாலையும், ‘ரு’ என்பது ருத்ரனான சிவபெருமானையும், ‘க’ என்பது கமலனாகிய பிரம்மாவையும் குறிக்கும். ஆகவே அற்புதமான இந்த முருக நாமத்தால் நம் தலைவிதியையே மாற்றியமைக்க முடியும்!வெயில் உச்சத்தில் இருக்கும் வைகாசியில், ஊர் மக்கள் அனைவரும் கூடி, வேனலின் (வெயிலின்) கொடுமை தெரியாதவாறு, சோலை நடுவில் இருக்கும் தெய்வத்தை எண்ணி ஆடிப் பாடி, கூழ் காய்ச்சி அதை அடுத்தவர்க்கும் ஊற்றி மகிழ்வோடு இருப்பார்கள்.

- சிவ.சதீஷ்குமார்


இளங்கோ பாடிய வேனில் விழா!

அம்பிகை
அம்பிகை


வேனில் காலத்தில் கொண்டாடப்படும் இத்தகைய கொண்டாட்டங்கள் ‘வேனில் விழா’ என்று சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுகின்றன.

கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் - மூவரும் மதுரைக்குச் செல்லும் வழியில் ஐயை கோட்டத்தில் தங்கினார்கள். அப்போது அங்கே வேடர்கள் வேனில் விழா கொண்டாடியதை இளங்கோவடிகள், தான் எழுதிய சிலப்பதிகாரத்தில் விவரிக்கிறார். அதில், வேடர்கள் பாடுவதாக உள்ள இரு பாடல்கள், சிவபெரு மான் திருமேனியில் பாதியாக இடம் பெற்ற அம்பிகையை வேண்டுவதாக அமைந்துள்ளன:

கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து

மங்கை உருவமாய் மறையேத்தவே நிற்பாய்

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்

இடர்கெட அருளும் நின் இணையடி தொழுதேம்...

அம்பிகையைப் பற்றி விவரிப்பதுடன், ‘இடர்களைக் கெடுத்து, அருள் புரியும் உன் திருவடிகளைத் தொழுகிறோம்’ எனச் சொல்லும் பாடல்களின் விளக்கம் மிக அழகு!