Published:Updated:

வேலும் மயிலும் துணை!

பண்பொழில் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
பண்பொழில் முருகன்

மகானுக்கு அருளிய திருமலைக் குமரன் பி.சந்திரமெளலி

வேலும் மயிலும் துணைசெய்ய வேதனை போம்
ஆலும் பசிவந்தால் அன்னை- பாலுளாள்
என்றும் குறையில்லை ஏத்துமினோ தொண்டீர்!
பொன்னும் இருள் பிறவிபோம்!

பண்பொழில் முருகன்
பண்பொழில் முருகன்

தவர்; ராமேஸ்வரத்தில் வாழ்ந்த மகான். முருகனை துதித்து ‘திருமலை முருகன் மணங்கமழ் மாலை’ எனும் நூறு பாடல்களைப் பாடியவர். இவர், `ஒரு நாள் தங்கிய ஊரில் மறு நாள் தங்கக் கூடாது. எவர் கூப்பிட்டாலும் அவர்களது வீட்டுக் குச் சாப்பிடப் போகக் கூடாது!’ என்று வாழ்ந்தவர். தென்காசிக்கு அருகில் சுரண்டை எனும் ஊர் உண்டு. அங்கு பாடல் சுவையறிந்த பக்திமான்கள் பலர் இருந்தனர். எனவே, அந்த ஊருக்கு மட்டும் அடிக்கடி போய் வந்தார் ஆதவர். அங்கும் ஒரு நாளுக்கு மேல் தங்க மாட்டார்.

அந்த ஊரில் கொடுஞ்செயல் புரியும் மந்திரவாதி ஒருவனும் இருந்தான். எவரும் அவன் வீட்டருகில் கூட செல்ல மாட்டார்கள். ஒரு நாள் மந்திரவாதி, கடுமையான மந்திர சாதனையில் ஈடுபட்டிருந்தான். உச்சி வேளை. சுரண்டையின் வீதியில் நடந்து கொண்டிருந்த ஆதவர், வெயிலின் கொடுமை தாளாது எதிரில் தெரிந்த குடிசைக்குள் நுழைந்தார். அது, மந்திரவாதியின் குடிசை என்பது அவருக்குத் தெரியாது. குடிசைக்குள் பலகை ஒன்று தென்பட, ‘முருகா!’ என்றபடி அதில் அமர்ந்தார். மந்திரவாதி பதைபதைத்தான்.

``அடேய்! யந்திர ஸ்தாபனம் செய்யப்பட்ட பலகையில் உட்கார்ந்திருக்கிறாயே... நீ இன்றே இறக்கப் போகிறாய்... போ வெளியே!’’ என்று ஆதவரைப் பிடித்து வெளியில் தள்ளினான்.

ஆதவர் அவன் செய்கையைக் கண்டு பரிதாபப்பட்டவராக கோயில் வாசலில் வந்து அமர்ந்தார். அங்கு வந்தவர்கள் நடந்ததை அறிந்து திடுக்கிட்டனர். ``அவன் கொடூரன் ஆயிற்றே. நீங்கள் அங்கு போகலாமா? அவன் சொல்வது பலிக்குமே!’’ என்று ஆளாளுக்கு வார்த்தைகளை வீசினர்.

ஆதவரோ இறப்பதைப் பற்றி கவலைப்படவில்லை. மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். `நடப்பது நடக்கட்டும் மந்திரவாதியின் வாக்கு பலித்தாலும் பலிக்கட்டும்... எனக்கு முருகன் துணையிருக்கிறான்’ என்ற சிந்தனையோடு புறப்பட்டார்.

அந்தி சாயும் நேரம். ஊர்க் கோடியில் உள்ள மயானத்தை அடைந்தார் ஆதவர். அங்கிருந்த செடிகளின் இளந்தளிர்களைப் பறித்துத் தரையில் பரப்பி, அதன் மீது அமர்ந்தார். தொடர்ந்து, ``ஓம் சரவணபவாய நம’’ என்று உருவேற்றினார்.

இருள் சூழ ஆரம்பித்தது. இரவு மணி பன்னிரண்டு. திடீரென்று ஒளி வட்டம் ஒன்று சுழன்று வந்தது. அதன் நடுவில் இருந்து வெளிப்பட்ட அழகு வேல் ஒன்று துள்ளிக் குதித்துக் கூத்தாடியது. அருகில் தோகை மயில் ஒன்றும் நடனம் புரிந்தது. ‘`முருகா... என்னைக் காக்க வேலும் மயிலும் வந்தனவா?’’ என கண்ணீர் மல்க வணங்கினார் ஆதவர்.

அதே நேரம் பனைமரம் போல ஒரு பேய், காடு அதிரக் கூவியபடி நெருங்கியது. அப்போதும் ஆதவர் முருகனையே துணைக்கு அழைத்தார். மறுகணம் பேயின் மேல் மோதியது வேல். இரு துண்டுகளாகிக் கீழே விழுந்தது பேய். அந்தத் துண்டங்களை ஓடி வந்து விழுங்கியது மயில். தொடர்ந்து இன்னும் பல பேய்களும் ஆரவாரத்துடன் ஆதவரை கொல்ல பாய்ந்தன. ஆனால், அவற்றையும் அழித்தது வீர வேல்! சற்று நேரத்தில் சேவல் ஒன்று ‘கொக்கரக்கோ’ என்று கூவியது. வேலும் மயிலும் உடனே அங்கிருந்து மறைந்தன. ஆதவன் உதித்தான்.

தவருக்கு உடலெல்லாம் வியர்த்தது. ‘முருகா!’ என்று ஆகாயத்தை நோக்கி வணங்கியவர், மயானத்தை விட்டு வெளியேறினார். சுரண்டையூரில் இருக்கும் அனுமந்தப் பொய்கையில் நீராடினார். காலை வழிபாட்டை முடித்து ஊருக்குள் நுழைந்தவர், எதிர்ப்பட்ட வீட்டுத் திண்ணை ஒன்றில் ஏறி உட்கார்ந்தார். வீதியில் சென்றவர்கள் பேசியது காதில் விழுந்தது.

``அறிவில்லாத மந்திரவாதி. ஆதவரை எதிர்க்கலாமா? தெய்வபலம் அவருக்குத் துணை. அதனால்தான் மந்திரவாதி அழிந்துவிட்டான்’’

இதைக் கேட்டு ஆதவர் நடுங்கினார். ‘`அடடா... மற்றவர்களை அழிக்கும் பாவத்தை நான் மனதால் கூட நினைத்தது இல்லையே! அடியேனைக் காக்க ஆறுமுகன் செய்த லீலையல்லவா இது!’’ என்று வாய் விட்டுச் சொன்னவர், திண்ணையில் இருந்து எழுந்தார். ‘ஓம்! ஓம்!’ என ஒலித்தது கோயில் மணி. மெய் சிலிர்த்தது ஆதவருக்கு.

பயம் நீக்கி காத்ததோடு, பலமுறை ஆதவரின் பசி தீர்த்தும் அருளியுள்ளான் முருகன். ஒருமுறை அவர் ஓர் ஊரில் சத்திரத்தில் படுத்திருந்தார். இரவு மணி பத்து. பசி வயிற்றைக் கிள்ளியது.அப்போது,``யார் ஐயா அது? சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் இருக்கிறது. வேண்டுமா?’’ என்றபடி கையில் தட்டுடன் வந்தாள் ஒரு பெண்மணி. பார்த்தார் ஆதவர். ‘`அம்மா, தாங்கள் யார்? என் அன்னை வள்ளி நாயகியா?’’ எனக் கேட்டார்.

‘`சரிதான்... பொங்கல் கொடுப்பவர்கள் எல்லாம் உமக்கு வள்ளி நாயகியாகத் தோன்றுமா? கோயிலில் உங்களைப் பார்த்தேன். கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. கொண்டு வந்தேன்’’ என்றபடி கையில் இருந்தவற்றை ஆதவரிடம் கொடுத்து விட்டு, விடைபெற்றாள்.

வயிறாரச் சாப்பிட்ட ஆதவர், முருகனின் கருணையை எண்ணி உருகினார்; பாடினார். அப்படி அவர் பாடியருளியதே கட்டுரையின் தொடக்கத்தில் உள்ளது. நாமும் அந்தப் பாடலைப் பாடி முருகவேளை வழிபட்டு, வினை தீர வரம் பெறுவோம்.