Published:Updated:

ஶ்ரீ நாராயணனும் நரை முடியும்!

நாராயணப் பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
News
நாராயணப் பெருமாள் ( நாராயணப் பெருமாள் )

கற்பூரத் தட்டில் இருந்த பூமாலையை ஸ்வாமிக்குச் சாற்றிவிட்டு அரசரின் கையில் தந்தார் தேவாஜி. பக்தி உணர்வோடு அரசன் அதை வாங்கித் தன் கழுத்தில் அணிந்து கொண்டான்.

திருக்கண்ணபுரம் ஶ்ரீசெளரிராஜ பெருமாளின் மகிமைக் கதையை அறிவோம். பக்தனை ரட்சிக்கும் பொருட்டு தலைமுடியுடன் இவர் காட்சி தந்த கதையை தலபுராணம் சிறப்பித்துச் சொல்கிறது. இதேபோன்றதொரு நாராயணப் பெருமாள் அருளிய சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்திலும் நிகழ்ந்தது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், நான்கு கைகளுடன் கூடிய பெருமாள், திவ்விய தரிசனம் அளிக்கும் திருக்கோயில் ஒன்று உள்ளது. முன்னொரு காலத்தில் தேவாஜி என்பவர் அந்தக் கோயிலில் மிகுந்த பக்தியுடன் பூஜை செய்து வந்தார். தினமும் இரவில் பூஜை முடிந்ததும் அன்று ஸ்வாமிக்குப் போட்ட பூமாலைகளில் ஒன்றை, தன் தலையில் வைத்துக் கொண்டு வீடு திரும்புவது அவரது வழக்கம்.

ஒரு நாள் இரவு, கோயிலை தேவாஜி பூட்டுமுன் வீரர்கள் சிலர் அவசரம் அவசரமாக ஓடி வந்து, ‘‘ஐயா... ஸ்வாமி தரிசனம் செய்ய அரசர் வந்து கொண்டிருக்கிறார். கோயிலைப் பூட்டாதீர்!’’ என்று கேட்டுக் கொண்டனர். வழக்கம்போல் ஸ்வாமிக்குச் சாற்றிய பூமாலையைத் தன் தலையில் எடுத்து வைத்திருந்தார் தேவாஜி. ஸ்வாமி விக்கிரகத்தில் அப்போது வேறு எந்த மாலையும் கிடையாது. எனவே, தலையிலிருந்த பூமாலையை எடுத்து உடனே கற்பூரத்தட்டில் வைத்தார் தேவாஜி.

அரசனுடன் வேறு சிலரும் வந்து சேர்ந்தனர். அவர்களுக்காக ஸ்வாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டினார் தேவாஜி. தரிசனம் முடிந்து அரசன் கிளம்பும்போது, ‘‘ஸ்வாமிக்குச் சாற்றிய பூமாலையைத் தாருங்கள். அந்தப் பிரசாதம் ஒன்றே போதும்!’’ என்றார்.

கற்பூரத் தட்டில் இருந்த பூமாலையை ஸ்வாமிக்குச் சாற்றிவிட்டு அரசரின் கையில் தந்தார் தேவாஜி. பக்தி உணர்வோடு அரசன் அதை வாங்கித் தன் கழுத்தில் அணிந்து கொண்டான். அப்போதுதான் அரசன் கவனித்தான். பூமாலையில் இரண்டு நரைமுடி ஒட்டியிருந்தது. உடனே கடுமையான குரலில் தேவாஜியைக் கூப்பிட்ட அரசன், ‘‘என்ன இது? இது பகவானுக்குப் போட்ட மாலைதானா?’’ என்று கேட்டான்.

தேவாஜி, ‘‘ஆமாம்!’’ என்றார் பயத்துடன். அரசன் நம்பவில்லை. ‘‘நாளை காலை நான் வந்து, ஸ்வாமியின் முடி நரைத்துள்ளதா என்று பார்ப்பேன்!’’ என்று கோபத்துடன் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வீடு வந்து சேர்ந்த தேவாஜி, ‘‘பகவானே, என்னைக் காப்பாற்றும்!’’ என்று இரவு முழுவதும் பிரார்த்தித்தார்.

மறுநாள் வழக்கம்போல் பூஜை செய்வதற்காகக் கோயிலுக்கு வந்தார் தேவாஜி. சற்று நேரத்துக்குள் அரசன் தன் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தான். ஸ்வாமிக்குக் கற்பூர ஆரத்தி காட்டும்போது அரசன் கூர்மையாகக் கவனித்தான். பகவானின் தலைமுடி வெள்ளியென மின்னியது. அதை நம்பாத அரசன், ‘‘இந்தப் பூசாரி சூழ்ச்சிக்காரன். ஏதோ சாயமடித்து ஏய்க்கப் பார்க்கிறான்! பகவானின் முடி எப்படி நரைக்கும்?’’ என்று சொல்லிச் சிலையை நெருங்கிச் சென்று, வெள்ளியென மின்னும் பகவானின் நரைத்த முடியைப் பிடித்து இழுத்தார். உடனே, அரசனின் கையிலிருந்து ரத்தம் சொட்டியது. அதைப் பார்த்த அரசன் மயங்கி விழுந்தான்.

சற்று நேரத்துக்குப் பின் மயக்கம் தெளிந்து எழுந்த அரசன், ‘‘தேவாஜி, நீர் எவ்வளவு பெரிய பக்தர். எத்தனை வருடமாக இந்த மூர்த்தியை பூஜை செய்கிறீர். நான் உங்களைக் கோபித்ததும் பரிசோதித்ததும் அந்த நாராயணனுக்கே பொறுக்கவில்லை. என்னை மன்னியுங்கள்!’’ என்று பூசாரியை வணங்கி நெகிழ்ந்தார்.

‘‘ஶ்ரீமந் நாராயணா... இந்த ஏழையைக் காப்பாற்றவா நீங்கள் நரைமுடி சுமந்தீர்?’’ என்று நெகிழ்ந்து கேவிக் கேவி அழுதார் தேவாஜி.

பக்தனைக் காப்பாற்ற எந்த வேளையிலும் எப்படி வேண்டுமானாலும் பகவான் வரலாம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு!

- என். சாரதா, மும்பை

மங்களாம்பிகை
மங்களாம்பிகை

மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகை!

குடந்தையில் மகாமக நாயகன் ஆதிகும்பேஸ்வரர். இவருக்கு மட்டுமே திருப்பெயரில் ‘ஆதி’ என்ற சிறப்பும் சேர்ந்திருக்கும். இங்குள்ள அம்பிகையின் திருப்பெயர் மங்களாம்பிகை. மூன்று மந்திர பீடங்களில் இவள் முதன்மையானவள். மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகை அன்னை சக்தி பீடங்களுக்கெல்லாம் மாத்ரு ஸ்தானமாக விளங்குகிறாள். மக நட்சத்திரத்தில் சிவ பூஜை நியதியை உருவாக்கிய ஈஸ்வரன், சிவ பூஜையைத் துவக்கிய பிறகு, சிவ தத்துவ மந்திரங்கள் 36000 கோடி, சக்தி தத்துவ மந்திரங்கள் 36,000 கோடி... ஆக மொத்தம் 72,000 கோடி மந்திரங்களால் ஆன ஒரு சக்திபீடத்தை ஸ்தாபித்தார்.

உத்திர நட்சத்திரத்தில் தேவி பார்வதியை கயிலையில் இருந்து குடந்தைக்கு வரவழைத்து, தேவியை மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகையாக பிரதிஷ்டை செய்த தலம் இது. திருச் செங்கோட்டின் அர்த்தநாரீஸ்வர தத்து வத்தைப் போன்றே இங்கும் சிவசக்தி அம்சமாக மங்களாம்பிகை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது விசேஷம். இந்த அன்னையை வணங்கி வழிபட மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் என்பது ஐதீகம்.