திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

குருவே திருவே

குருவே திருவே
பிரீமியம் ஸ்டோரி
News
குருவே திருவே

குருவே திருவே

ஜாம்பு கிராமத்தில் திரும்பும் திசை எங்கும் ராம நாமம் கேட்டது. பிரசவ வலியில் ராணுபாய் துடிப்பது சிறு மனச்சலனத்தை உண்டாக்கினாலும், ஸூர்யோஜியின் மனதில் இந்தப் பெருங் கூட்டம் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது. யார் இவர்கள்... எங்கிருந்து வருகிறார்கள்... வேடிக்கை பார்க்க வந்த கூட்டம்போல இல்லையே!

குருவே திருவே
குருவே திருவே

ஒவ்வொருவரும் தம் ஆன்மாவில் இருந்து ராமநாம ஜபம் செய்பவர்களாக அல்லவா இருக்கிறார்கள். பக்கத்து ஊர்களில் வாழ்பவர்கள் என்றால் இவ்வளவு காலமும் இவர்களில் யாரையும் இதுவரை ஏன் பார்த்தது போலவேயில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் முகமும் அவ்வளவு ஒளி; வானவர்கள் மானுட உருக்கொண்டது போன்ற தேஜஸ்!

அவர்களின் நாமஜபம் கேட்கும்போதே பெரும் துள்ளல் உள்ளூரப் பிறப்பதை அறிந்தார். சில நாழிகைகளுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த இந்தக் கூட்டத்தின் நாம ஜபம் கேட்கத் தொடங்கியதும்தான் ராணுபாயின் வயிற்றில் குழந்தை துள்ள ஆரம்பித்தது. பிரசவ வலி ஆரம்பித்தது. தாதி உள்ளேயும் வெளியேயும் ஓடிக் கொண்டிருந்தாள். ஸூர்யோஜி ராம நாமத்தை சத்தமாக ஜபிக்கத் தொடங் கினார். சற்று நேரத்துக்கெல்லாம் கூட்டம் ஸூர்யோஜியின் வாசலில் கூடிவிட்டது. எல்லோரும் ராம் ஜயராம் என்று உற்சாகமாக முழங்கினர். பதற்றமும் பக்தியும் சேர்ந்து ஏற்படுத்திய அந்த வெறியாட்டின் தன்மையில் ஸூர்யோஜி சோர்ந்தேபோனார். அப்போதுதான் அவரை உற்சாகமூட்டும் விதம் வீட்டுக்குள் இருந்து குழந்தையின் அழுகைக்குரல் பீறிட்டது. அதைக் கேட்டதும் கூட்டம் ஒரு கணம் அமைதியானது. பிறகு மீண்டும் நாம ஜபம் செய்யத் தொடங்கியது.

ஸூர்யோஜி உள்ளே ஓடினார். தாதி அதற்குள் குழந்தையை சுத்தம் செய்து ராணுவின் அருகில் கிடத்தியிருந்தாள். ராணுவின் முகத்தைப் பார்த்தார் ஸூர்யோஜி. சித்திரை மாதப் பௌர்ணமியைப்போல அவள் முகம் பிரகாசித்தது. ஸூர்யோஜி குழந்தையைப் பார்த்தார்.

நிலவுக்கு அருகில் சுடர்விடும் விண்மீன்போலக் குழந்தையின் முகம் பிரகாசித்தது. ஸூர்யோஜி அதை அள்ளிக்கொண்டார். வாசலுக்கு ஓடிவந்தார். கூட்டம் குழந்தையுடன் வெளியே வந்த ஸூர்யோஜியைப் பார்த்தவுடன் உற்சாகமானது. `ராம் ராம் ராம்' என்று விண் அதிரக் கோஷமிட்டது. குழந்தையை அனைவரும் பார்க்குமாறு காட்டினார்.எல்லோரும் ஒரு சேர வான் பார்த்து வணங்கினர். பின்பு குழந்தையை நோக்கித் தம் கைகளை உயர்த்தி, `ஆயுஸ்மான் பவ' என்று ஆசீர்வதித்தனர். பிறகு ராம் ராம் ராம் என்று கோஷமிட்டபடி அங்கிருந்து கலைந்துசென்றனர். ஜாம்பு கிராமம் அமைதியானது.

குருவே திருவே
குருவே திருவே


கண்முன்பாக ஓர் அதிசயம் நடக்கிறது என்றும் இறைவன் தன்னைக் கொண்டு ஒரு லீலையை நடத்துகிறான் என்பதும் ஸூர்யோஜிக்குப் புரிந்தது. குழந்தையைத் தாதி வந்து வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள். ஸூர்யோஜி குழந்தையை ஏந்தியிருந்த தன் கரங்களைப் பார்த்துக்கொண்டே வெகுநேரம் நின்றார். ஜோதிடர்கள் சிலர் வந்து அழைத்து அவரை சுயநினைவுக்குக் கொண்டுவந்தனர். ``பிறந்த நேரத்தையும் காலத்தையும் கணித்து நாங்கள் உங்கள் குழந்தைக்கு ஜாதகம் கணித்திருக் கிறோம். அதன் விவரம் இதோ உள்ளது'' என்று சொல்லி ஜாதகக் கட்டை அவரிடம் கொடுத்தனர்.

``ஸூர்யோஜி, உங்களுக்கு ஒன்றுமட்டும் சொல்ல விரும்புகிறோம். இந்தக் குழந்தை பாரத தேசத்துக்குக் கிடைத்த ஆசீர்வாதம். இவனால் சகல மங்கலங்களும் இந்த தேசத்துக்கு உண்டாகும். மற்ற விஷயங்களை ஜாதகத்தோடு எழுதியிருக்கிறோம். பிறகு வாசித்துக்கொள்ளுங்கள். ராமரின் அருள் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் பரிபூரணமாக உள்ளது'' என்று சொன்னார்கள். இதைக் கேட்ட ஸூர்யோஜி கைகளைக் குவித்து நன்றி தெரிவித்தார். அவர்கள் ஒருசேர ஆசீர்வதித்துப் புறப்பட்டனர்.

ஸூர்யோஜி குழந்தைக்கு நாராயணன் என்று பெயரிட்டார். ஸூர்ய நாராயணர் அளித்த பிரசாதம் அல்லவா... எனவே நாராயணன் என்பது மிகப் பொருத்தம் என்றாள் ராணு.

மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. குழந்தை முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்து விட்டான். ராணுபாய்க்குக் குழந்தையைப் பிரிந்து அடுத்த அறைக்குச் செல்லக் கூட மனம் இல்லை. இருவருக்குமான மொழி ராமநாமமாக இருந்தது. `ராம்... ராம்' என்று சொல்லி ராணு கைவிரலை நீட்டுவாள். உடனே குழந்தை அதைப் பற்றிக்கொள்ளும். மீண்டும் `ராம் ராம்' என்று சொன்னால் கையை விட்டுவிடும். இது ஒரு விளையாட்டு. இதை ஒவ்வொருமுறை விளையாடும்போதும் குழந்தை புன்னகை செய்யும். ராணு விளையாடாமல் பேசாமல் இருந்தால் சிணுங்கும். உடனே ராணு விளையாடுவாள்.

இந்த விளையாட்டைப் பார்க்கப் பக்கத்து வீடுகளில் இருந்து பெண்கள் தினமும் படையெடுப்பார்கள். கண்கொட்டாமல் குழந்தையைப் பார்ப்பார்கள். ஒரு கட்டத்துக்குமேல் அவர்கள் குழந்தையைப் பார்ப்பதை ராணு அனுமதிக்க மாட்டாள். ஏதேனும் காரணம் சொல்லி வெளியே அனுப்பிவிட்டு சுற்றிப்போடுவாள்.

குழந்தை நாராயணன் ஒன்பது மாதத்திலேயே சுவரைப் பிடித்துக்கொண்டு நிற்க ஆரம்பித்தான். பிறகு தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்தான். எங்கேனும் ராம நாமம் கேட்டால் அந்த திசை நோக்கி நின்று துள்ள ஆரம்பித்தான்.

பிறந்து ஒருவருடம் ஆன நாளில் ஆயுஸ்ய ஹோமம் செய்து அன்னம் புகட்டியபோது குழந்தை மெல்ல வாய்திறந்து முதல் வார்த்தையாக, `ராமா' என்றது. இதைக் கேட்டதும் ராணுபாய் சிலிர்த்துப்போனாள்.

நாராயணனுக்கு இரண்டு வயது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நான்கு அல்லது ஐந்துவயதுக் குழந்தையைப் போல இருந்தான். ஒரு கணம்கூட சோர்ந்து உட்காரவே மாட்டான். இங்கும் அங்கும் ஓடிக்கொண்டேயிருப்பான். கையில் கிடைக்கும் பொருள் எதுவானாலும் தூக்கிவிடுவான். கனமான பொருள்களைத் தூக்கி எங்கே தன்மேலேயே போட்டுக்கொள்வானோ என்று ராணு பதறுவாள்.

`ராம் ராம்' என்று சத்தமிட்டுக்கொண்டே ஓடிச் சென்று அவன் கையில் இருக்கும் பொருளை வாங்கிக் கீழே வைப்பாள். அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு சேட்டையைச் செய்துவிடுவான் நாரயணன். ஆனாலும் ராணு அவனைக் கடிந்துகொள்ளவேமாட்டாள்.

இரண்டு வயதில் சரளமாகப் பேச வந்துவிட்டது. தெருவுக்கு ஓடிச் சிறுவர்களை ஒன்று சேர்ப்பான். வட்டமாக அவர்களை நிற்கவைத்து ராமநாம பஜனை செய்வான். இதை எல்லாம் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போவாள் ராணு.

சாலையில் கிழவர்கள் யாரேனும் சென்றால் அவர்களின் கைகளைப் பிடித்து இழுப்பான். நடக்கவே தடுமாறும் அந்தக் கிழவர்கள் இவன் இழுத்த இழுப்புக்கு ஓர் இளைஞனைப் போல ஓடுவார்கள். இதைப் பார்க்கும் ஊர் அதிசயத்துப் போகும். எப்படித் தனக்கு இது சாத்தியமாயிற்று என்று தெரியாமல் கிழவர்கள் திகைக்கும் போது அவர்களைப் பார்த்து நாராயணன் கலகலவெனச் சிரிப்பான்.

அந்த வீட்டின் வரவேற்பரையில் ஒரு ஆஞ்சநேயர் படம் இருந்தது. அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து சிரிப்பான் நாராயணன். ஒரு நாள் துள்ளிக்குதித்து அதைத் தொட முயன்றான். ராணு பார்த்துவிட்டு, ``நாராயணா... நீ ராம தூதனைத் தொட இன்னும் கொஞ்சம் வளர வேண்டும். மேலும் இப்போது தேவையின்றிக் குதித்து அடிபட்டுக் கொள்ளாதே'' என்று கனிவோடு சொன்னாள். அப்போதைக்குப் பேசாமல் இருந்த நாராயணன், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அதைத் தொட முயல்வான். மலர்களை எடுத்துப் படத்தின் மீது போடுவான். அது கீழே விழும். உடனே அதைப் பிடித்துக்கொண்டு மறுபடியும் போடுவான். சந்தனத்தைத் திரட்டி அதன் மீது எறிவான். அது சரியாக அந்தப் படத்தில் ஒட்டிக்கொள்ளும். மீண்டும் அதைத் தொட முயல்வான்.

ஒருநாள் வாயுமைந்தனைத் தொட்டேவிடுவது என்று தீர்மானம் செய்தான். `ஜெய் ராம்' என்று சொல்லித் துள்ளிக் குதித்தான். இந்தமுறை அவன் கை அந்தப் படத்தின் மீது பலமாக விழுந்தது. ஆணியில் தொங்கிகொண்டிந்த அந்தப் படம் அதிர்ந்து கீழே விழுந்தது. அதன் கண்ணாடிச் சட்டகம் உடைந்து சிதறியது.

அந்த அறை எங்கும் கண்ணாடித் துண்டுகள் சிதறிவிழுந்தன. சத்தம் கேட்டு ஓடிவந்தாள் ராணு. நாராயணன் அந்தக் கண்ணாடிச் சிதறல்களுக்கு மத்தியில் நடந்து கீழே விழுந்துகிடந்த ஆஞ்சநேயரின் படத்தைக் கையில் எடுத்தான்.

நாராயணனுக்குக் கண்ணீர் பெருகியது. ராணுபாய் குழந்தைக்கு ஏதேனும் அடிபட்டிருக்கிறதா என்று பார்த்தாள். எதுவும் இல்லை. ஆனால் அவன் அழுகை மட்டும் நிற்கவேயில்லை.

ராணு அவனைத் தூக்கி வாசலில் விட்டுவிட்டு அந்த அறையை சுத்தம் செய்தாள். மீண்டும் நாராயணனிடம் வந்து, ``பயப்படாதே... நானோ அப்பாவோ ஒன்றும் சொல்லமாட்டோம். நீ அழாதே'' என்று சொல்லி சமாதானம் சொன்னாள். ஆனாலும் நாராயணன் அழுகை நிற்கவில்லை.

``சரி... இப்போது எதற்கு அழுகிறாய்... என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டாள் ராணுபாய்.

அதற்கு நாராயணன் சொன்ன பதில் அவளைச் சிலிர்க்க வைத்தது!

- குருவருள் தொடரும்...