Published:Updated:

குருவருளும் திருவருளும்!

திருத்தொண்டர் - 19
பிரீமியம் ஸ்டோரி
News
திருத்தொண்டர் - 19

திருத்தொண்டர் - 19

திருத்தொண்டர்களைத் தேடிப் புறப்பட்ட பயணத்தில் நாம் முதல் முதலாக சந்தித்தது அவளிவநல்லூர் உமாபதி சிவாசார்யர். அதன்பிறகு பல்வேறு தொண்டர்களை சந்தித்து எழுதினோம். இப்படி எழுதிச் செல்வதாக இருந்தால் நம் ஆயுள் முழுவதும் போதாதென்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஒவ்வோர் ஊரிலும் யாரோ ஒருவர் இறைப் பணியைத் தன் வாழ்வாகக் கொண்டிருக்கிறார்.

திருத்தொண்டர் - 19
திருத்தொண்டர் - 19


இங்ஙனம் நம் மண்ணில் வலம் வரும் ஆயிரக் கணக்கான திருத்தொண்டர்களால்தான் நம் தர்மங்களும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களும் நிலைத்திருக்கின்றன. இறைப்பணி செய்துவரும் அத்தனை தொண்டர்களுக்கும் நம் வணக்கங்கள் உரித்தாகட்டும்.

இறைப்பணி செய்வது என்பது, ஒருவர் தான் மட்டுமே முடிவெடுத்துச் செய்யும் பணி அல்ல. சிவப்பணி செய்ய அந்த சிவம் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். சுந்தரரைத் தேடிவந்து மீட்டுக்கொண்டதுபோல நம்மை இறைவனால் மீட்டுக்கொள்ள முடியும். அப்படி இறைவனால் மீட்கப் பட்டு இறைப் பணிக்குள் வந்தவர்கள் அநேகர். அவர்களில் ஒருவர்தான் கீரைசாத்து நாகராஜ்.

கீரைசாத்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொன்னை அணைக்கு எதிர்ப்புறம் இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கும் சின்ன கிராமம். நாகராஜின் தந்தை மோகன சுந்தரம் கடவுள் நம்பிக்கையாளரே தவிர தீவிரபக்திமான் அல்ல. அதனாலோ என்னவோ நாகராஜுக்கும் சின்ன வயதிலிருந்தே பெரிய அளவில் இறை பக்தி இல்லையாம். ஆனால் அம்மா பிருந்தா பக்தியில் திளைப்பவர்.

கீரைசாத்து நாகராஜ்
கீரைசாத்து நாகராஜ்


பிருந்தாவைப் பொறுத்தவரை, கணவரைப் போலவே மகனும் பக்தியில்லாமல் இருக்கிறானே என்ற வருத்தம் இருந்தது. அப்போது அவர்கள் வாழ்ந்த வாலாஜாவில் இருக்கும் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்துக்கான பாலாலயப் பணிகள் தொடங்க இருந்தன. அன்றுதான் மூலவரை வணங்கக் கடைசி நாள் என்பதால் ஆலயம் சென்று `என் பிள்ளையையாவது பூஜை புனஸ்காரங்களுக்குள் கொண்டுவரக் கூடாதா' என்று வேண்டிக்கொண்டார்.

வீட்டுக்குள் நுழைந்ததும் வழக்கம்போல நாகராஜ், `எங்கேம்மா போயிட்டுவர்றே...' என்று கேட்டார். பிருந்தாவுக்குக் கண்ணீர் பெருகியது. `மாறாத மனங்கள் எல்லாம் மாற வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்' என்று சொன்னார். தாயின் கண்ணீர் நாகராஜைச் சுட்டது. அவரும் கோயிலுக்குப் போனார்.

இரட்டைப் பிள்ளையார்
இரட்டைப் பிள்ளையார்
மகாபெரியவா பாதுகை
மகாபெரியவா பாதுகை


அதுவரை பார்த்திருந்த அதே லிங்கம்தான். அதே சிவன்தான். ஆனால், இந்தமுறை பார்த்தவுடனே உள்ளூர ஒரு பரவசம் தோன்றி யது. மனமும் உடலும் மெல்ல ஆனந்தமாய் மயங்க அந்தப் பரவச நிலையிலேயே வெளியே வந்தார். அந்தக் கணத்தில் நாகராஜ் பெருமானால் ஆட்கொள்ளப் பட்டார். அந்தச் சந்நிதியிலேயே பிறகு சிவதீட்சையும் எடுத்துக் கொண்டார்.

அதன்பின் நாகராஜின் வாழ்க்கையே மாறி விட்டது. இப்போது கீரைசாத்து என்னும் சிற்றூரில் ஒரு சிறிய வீட்டில் வாழ்கிறார் நாகராஜ். வீடெங்கும் சுவாமி படங்கள். வீட்டு வாசலிலேயே சின்னக் கோயில் வைத்திருக்கிறார்.அதில் இரட்டைப் பிள்ளையார், பூண்டிமகான், பாம்பன் சுவாமிகள், மகாபெரியவா மூவரின் விக்கிரக மூர்த்திகளை வைத்து வழிபாடு செய்துவருகிறார்.

``இங்கே என் குருவுக்கு ஒரு பீடம் அமைக்கணும்ங்கிறது என் ஆசை'' என்றதும் ``யார் உங்கள் குரு?'' என்று கேட்டோம்.

``சொல்றேன்... திருப்பதி தேவஸ்தானத்துல ஒரு வேலை கிடைச்சது. லட்டு செக்‌ஷன்ல சூப்பர்வைஸர் வேலை. கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அங்கேயே இருந்திருந்தா வசதியா வாழ்ந்திருக்கலாம். ஆனால் சுவாமி நம்மை எதுக்காக ஆட்கொண்டாரோ, அதை நாம செய்யணும்னு மனசுக்குள்ள தோணிண்டே இருந்தது. அந்த வேலையை விட்டுட்டேன். இங்கே மலையப்பட்டு முரளிதர சுவாமிகள் ஆசிரமத்துக்குப் போக ஆரம்பிச்சேன். அப்போதான் `பூண்டி மகான்' என்கிற பேரையே கேள்விப்படுறேன்.

வாலாஜால அவருக்கு ஒரு ஆஸ்ரமம் இருக்கு. அங்கே கோபி சுவாமிகள்னு ஒருத்தர் இருக்கார். அவரைப் போய்ப் பார்த்தேன். சுவாமிகளோட படம் ஒண்ணு கொடுங்கோன்னு கேட்டேன். அவரோ, `இல்லையேப்பா'ன்னு சொல்லிட்டார். எனக்கா மனசே கேட்கலை. ஒரு மாசம் கழிச்சிப் போய் அவரையே பார்த்தேன். அப்பவும் `சுவாமிகளோட ஒரு படம் கிடைக்குமா'ன்னு கேட்டேன்.

அவர் சிரிச்சார். `இதோ ஒண்ணென்ன ரெண்டாயிரம் படம் வச்சிக்கோ. உனக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு வச்சிக்கோ. மிச்சத்தை மத்தவாளுக்குக் கொடு'ன்னு கைல தூக்கிக் கொடுத்ததும் சிலிர்த்துப் போய்ட்டேன்.

நான் சில கோயில்கள்ல பூஜை பண்ணிக் கிட்டு இருக்கேன். ஒருமுறை ஆசிரமத்துக்குப் போனப்போ கோபு சுவாமிகள், ``நாகராஜ் பௌர்ணமிக்குப் பௌர்ணமி இங்கே ஹோமம் பண்ணலாம்னு ஆசைப்படுறேன். செய்றியா''ன்னு கேட்டார்.

அப்ப... எல்லாத்தையும் நாமதான் திட்ட மிட்டுச் செய்றோம்ங்கிற அகந்தை உள்ளூர இருந்திருக்கு. அதனால, ``இல்லை சுவாமி. கோயில் பூஜை எல்லாம் தடைப்படும்''னு சொன்னேன். வீட்டுக்கு வந்தா என் பொண்ணுக் குத் தட்டம்மை போட்டுடுத்து. அடுத்து கொஞ்ச நாள்ல எனக்கும் அம்மை. கோயில் பூஜைகள் ஒவ்வொண்ணா கையைவிட்டுப் போகுது. எதுவுமே இல்லாத நிலைமை. பிழைக்க வேற என்ன வழின்னு தெரியாம பூண்டி சுவாமிகளை மனசுல நினைச்சிக்கிட்டே காசிக்குப் புறப்பட்டுட்டேன். அங்க போய் இறங்கினதும் போன் வருது.

என் மாமாதான். காஞ்சிபுரத்துல தண்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஆயிருக்கு. பூஜை பண்ணனும். அடுத்த ட்ரெயின்லயே வந்துடுன்னு சொன்னார். எனக்கும் அவர் சொல்றதை மறுத்துச் சொல்ல மனம் வரல. காஞ்சிபுரம் வர்றேன். கோயில்ல அப்போ யாரும் இல்லை. நான் அம்மன் சந்நிதியைப் பார்த்துக்கிட்டே உள்ளே போறேன். `ஏய், இங்க பார்'ன்னு ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தா மனுஷங்க யாரும் இல்லை. ஆனா, அங்கே பூண்டி மகானுக்கு ஒரு சந்நிதி மட்டும் இருந்தது. புன்னகையோடு அவர் திருமேனியைப் பார்த்ததுமே இது சுவாமி களோட அனுக்கிரகம்தான்கிறது புரிஞ்சு போச்சு. அன்னைல இருந்து சுவாமியை கெட்டியா பிடிச்சிக்கிட்டேன்.

எங்க வீட்டுல வச்சி அவரை பூஜை பண்ண ஆரம்பிச்சப்புறம் எனக்குக் கவலைகள் எல்லாமே பறந்துபோச்சு. மகாபெரியவா மேலயும் பாம்பன் சுவாமிகள் மேலையும் எனக்கு எப்பவும் ஈடுபாடு உண்டு. அவங்க மூணு பேருக்குக்கும் விக்கிரகம் செஞ்சி பூஜை செய்ய ஆரம்பிச்சேன்.

நான் இப்போ மூணு கோயில்ல பூஜை பண்றேன். அதை வச்சித்தான் ஜீவனம் நடக்குது. அதுக்குள்ளையேதான் பூஜைகள் புனஸ்காரங்கள் எல்லாம் பண்ணிக்கனும். ஆனா ஒரு குறையும் இல்லை. ஏதாவது தேவைப்படும்போது அதுக்கான பணமும் தேடி வந்திடும். அதை மகான் பார்த்திண்டுடுவார்.

என் ஆசையெல்லாம் சின்னதா கொட்டகைல இருக்கிற என் தெய்வங்களுக்கு இந்த ஊருல கோயில் எழுப்பி அந்த குரு பீடத் தில் அவர்களை உட்காரவச்சிப் பார்க்கணும்னு ஆசை. அதுக்காகத்தான் பாடுபடுறேன்.

மேலும் இங்கே ஒரு கோசாலை வைக்கணும்னு ஆசை. இரண்டு நாட்டு மாடுகள் இருக்கு. அது எதுக்குன்னா, தினமும் மகானுக்குப் பாலபிஷேகம் செய்யணும், வர்ற அடியார்களுக்கு காப்பி, பால் சாப்பிடக் கொடுக்கணுமே... அதுக்காக. அவற்றையும் நானே பராமரிக்கிறேன். வேற பணியாளர்கள் கிடையாது. காலைல சூரிய உதயத்துக்கு முன்னாடி எழுந்தா ராத்திரி பத்து மணிக்குத் தூங்கப் போகிற வரைக்கும் வேலை சரியா இருக்கும்'' என்றார்.

ஊரில் இருப்பவர்கள், பலரும் வயதான தாத்தா ஒருவர் அடிக்கடி இவர் வீட்டுத் திண்ணையில் அடிக்கடி வந்து அமர்ந்திருப் பதைப் பார்த்திருக்கிறார்கள். அவர் யாரென முதலில் தெரியாமல் இருந்தவர்கள் பின்பு இவர் வைத்திருந்த விக்ரகத்தைப் பார்த்துவிட்டு, `அட இவரைத்தாங்க உங்க வீட்டு வாசல்ல அன்னைக்குப் பார்த்தோம்' என்று சொல்லி யிருக்கிறார்கள்.

அன்றிலிருந்து நாகராஜ் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் திண்ணையில் ஒரு நிமிஷம் அமர்ந்து தன் பிரச்னையைச் சொல்லி வணங்குவாராம். அந்தப் பிரச்னை இருந்த சுவடே தெரியாமல் போய்விடுமாம். அதற்குப் பல உதாரணங்களை அடுக்குகிறார் நாகராஜ்.

மகான்களின் ஆசி இருந்தால் அந்தப் பரம்பொருளின் ஆசி நம் அனைவருக்கும் கிட்டிவிடும். அப்படிப் பட்ட மகான்களுக்குக் கோயில் எழுப்பி வழிபாடு செய்ய வேண்டும் என்பதே நாகராஜின் ஆசை.

``பலருக்கும் காட்சி கொடுத்த பூண்டி மகான் எனக்கு ஏன் இன்னும் காட்சி கொடுக்கலைன்னு தோணும். என்னைக்கு இங்கே கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்றேனோ, அன்னைக்கு அந்த மகான் நேரிலேயே வந்து எனக்கு தரிசனம் கொடுப்பார்ங்கிற நம்பிக்கை இருக்கு'' என்றார் உறுதியாக. அந்த உறுதியை வாழ்த்தி விடைபெற்றோம்.

திருத்தொண்டர்கள் அனைவரையும் கண்டு பதிவு செய்வது என்பது மிகப்பெரிய பணி. இதில் வெகு சிலரையே நாம் இந்தத் திருத் தொண்டர் பயணத்தில் கண்டு எழுதினோம். எழுதப்படாத பல ஆயிரம் திருத் தொண்டர்களுக்கு நம் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

`தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரியது' என்பார்கள். நாமும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அடியார்களையும் தொண்டர்களையும் நிச்சயம் சந்திப்போம்.