Published:Updated:

பசி தீர்க்கும் பரமன்!

திருப்பனங்காடு
பிரீமியம் ஸ்டோரி
News
திருப்பனங்காடு

நீண்ட ஆயுளும் நீங்காத செல்வமும் அருளும் திருப்பனங்காடு சிவாலயம்

பூலோகக் கற்பக விருட்சம் எனப் போற்றப்படும் பனை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்து. அவற்றுள் ஒன்று திருப்பனங்காடு எனப்படும் திருவன்பார்த்தான் பனங்காட்டூர். மற்றவை: திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர். தொண்டை நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் 9-வது தலம் திருப்பனங்காடு. அகத்தியர் வழிபட்ட தாலபுரீஸ்வரர் - அம்பிகை அமிர்தவல்லி; புலத்தியர் வழிபட்ட கிருபாநாதேஸ்வரர் - அம்பிகை கிருபாநாயகி ஆகியோர் அருள்புரிய, இந்தத் தலம் இரட்டைத் தலமாகவே திகழ்கிறது.

பசி தீர்க்கும் பரமன்!

ரண்டு கருவறை, இரண்டு ஈசன், இரண்டு அம்பிகை, இரண்டு நந்தி, இரண்டு கொடிமரம், இரண்டு பனை மரங்கள்... இப்படி எல்லாமே இங்கு இரண்டுதான். மூலவ விமானங்கள் இரண்டுமே கஜபிருஷ்ட வடிவில் அமைந்து, கோயிலின் தொன்மையைச் சொல்கின்றன.

சிவ-பார்வதி திருக்கல்யாணம் கயிலையில் நடக்க, அனைவரும் அங்கு ஒன்றுகூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்தது. உலகைச் சமன் செய்ய அகத்தியரை தெற்கே செல்ல பணித்தார் சிவனார். அவ்வாறு தென்னகம் வந்த குறுமுனிவர், ஆற்காடு தலத்தில் இருந்து காஞ்சிக்குச் செல்லும் வழியில் இந்தத் தலத்துக்கும் வந்தார்.

திருப்பனங்காடு தலத்தில் பனை மரத்தடியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு அருள்பெற்றார். அந்த ஈசன் தாலபுரீஸ்வரர் என்று திருப்பெயர் கொண்டார். தாலம் என்றால் பனை என்று பொருள். ஊரும் திருப்பனங்காடு எனும் பெயர் கொண்டது.

கத்தியர் வழிபட்ட காலத்தில் எதிரில் வனத்தில் இருந்த கோட்டை முனீஸ்வரர் பனம்பழங்களை வீசி எறிந்து தொல்லைகள் கொடுத்தாராம். அவரின் சீற்றம் தணித்த அகத்தியர், அந்தப் பழங்களையே ஈசனுக்கு நைவேத்தியமாகவும் படைத்து வழிபட்டாராம்.

கத்தியரின் சீடர் புலத்தியரும் இந்தத் தலத்துக்கு வந்து வேறோரு பனையின் கீழ் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். அந்த இறைவனின் பெயர் கிருபாநாதேஸ்வரர்; அம்பிகை கிருபா நாயகி. பாடல் பெற்ற தாலபுரீஸ்வரரை வணங்கிய பிறகே, கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும் என்பது இங்கு நியதி. கண்வ மகரிஷி, பனைக் கொடியைக் கொண்ட பலராமன் ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டனர் என்ற தகவல் சொல்லப்படுகிறது.

பசி தீர்க்கும் பரமன்!

சேக்கிழார், பட்டினத்தார், வள்ளலார் போன்றோர் பாடிப்பரவிய தலம் இது. இங்கு வந்து இரு ஈசனையும் வழிபட்டால் பாவ நாசமும் ஜன்ம நாசமும் கிட்டும்; நிம்மதியும் நீடித்த ஆயுளும் வாய்க்கும் என்கிறார்கள் அடியார்கள். மாசி மகத்தில் தாலபுரீஸ்வரருக்கும், கார்த்திகை சோமவாரத்தில் கிருபாநாதேஸ்வரருக்கும் விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.

லயத்துக்கு எதிரே உள்ள சடாகங்கை தீர்த்தம், அகத்தியரின் வேண்டுதல்படி ஈசனின் சடாமுடியில் திகழும் கங்கையிலிருந்து உருவானது. இந்தக் குளக்கரையில் கங்கை அன்னைக்குச் சிலையும் உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் மாசிமகம் தீர்த்தவாரியும் தெப்ப விழாவும் விசேஷம்.

காலியூர்க் கோட்டத்து கழுமல நாட்டுத் திருப்பனங்காடு’ எனும் பெயர் கொண்ட இந்த ஊர் 2000 ஆண்டுகள் பழைமை கொண்டது என்கிறார்கள். இவ்வூர் திருவிளம்பூதூர் என்றும் வழங்கப்பட்டது. முதலாம் ராஜேந்திரன், ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், கிருஷ்ண தேவராயர், விருப்பண்ண உடையார், கம்பண்ண உடையார், தேவகோட்டை ஏகப்ப செட்டியார் என பலரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். இதுகுறித்த விவரத்தை இங்குள்ள 22 கல்வெட்டுகள் கூறுகின்றன.

பசி தீர்க்கும் பரமன்!

யிர் சாந்நித்தியத்துடன் திகழும் பனை மரங்களை இந்தத் தலத்தில் எவரும் வெட்டக்கூடாது. மீறினால் தலைமுறைக்கும் கேடு வரும் என்கிறது ஒரு கல்வெட்டுத் தகவல்.

து கடுமையான கோடை காலம், தொண்டை மண்டலம் முழுக்க தலயாத்திரை செய்து வந்த சுந்தரரும், அவருடன் வந்த அடியார்களும் தாகத்தாலும் பசியாலும் துவண்டனர். அடியார்கள் வருந்துவதை ஆண்டவன் பொறுப்பாரா? திருப்பனங்காட்டூர் செல்லும் வழியில் அழகிய குளம் ஒன்றை அமைத்தார். பின்னர் முதியவர் உருவில் சுந்தரரின் முன் தோன்றி, அவர்களைத் திருப்பனங்காட்டுர் ஈசனைத் தரிசிக்க வரும்படி அழைத்தார். சுந்தரர் குழுவுக்குப் பொதிசோறும் நீரும் வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவித்த சுந்தரரும் குழுவினரும் களைப்பு தீர ஓய்வெடுத்தனர்.

வர்கள் ஓய்வு முடித்து முதியவரைத் தேடியபோது, அவர் இல்லாததை அறிந்து வியந்தனர். வந்தது ஈசனே என்பதை உணர்ந்து சிலிர்த்தனர். அந்த இடத்திலிருந்தே திருப்பதிகம் பாடியபடி (விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை...) திருக்கோயிலை அடைந்து ஈசனைப் போற்றி வணங்கினர்.

பசி தீர்க்கும் பரமன்!


ப்போது சுந்தரரிடம் ஈசன் `‘நான் பனங்காட்டுக்கும் வன்பாக்கத்துக்கும் இடையில் இருப்பவன்’’ என்று மொழிந்தாராம். இக்காரணம் ஒட்டியும், புறவார்பனங்காட்டூர் என்றொரு தலம் இருப்பதால், வேறுபாட்டினை அறியும் விதமும் இந்தத் தலம் வன்பார்த்தான் பனங்காட்டூர் என்றானது என்று கூறுகிறார்கள்.

சன் குறிப்பிட்ட வன்பாக்கம் எனும் பழைமையான ஊர், திருப்பனங்காடு தலத்துக்கு அருகிலேயே உள்ளது. தற்போது வெண்பாக்கம், வெம்பாக்கம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

சுந்தரர் தாகம் தீர்த்த ஊற்றங்குழி எனும் ஊற்றுநீர் தீர்த்தமும், சுந்தரர் ஓய்வெடுத்த மண்டபமும் ஆலயம் செல்லும் வழியில் இன்றும் உள்ளன.

திருப்பனங்காடு ஆலயத்தின் சிற்பங்கள் வெகு சிறப்பானவை. அருள்மிகு தாலபுரீஸ்வரர் சந்நிதிக்குமுன் அகத்தியர் உருவமும் பனை மரமும் சிற்ப வடிவில் திகழ்கின்றன. அதேபோல் கிருபாநாதேஸ்வரர் சந்நிதியின் முன் புலத்தியர்- பனைமரச் சிற்பம் உள்ளது.

பசி தீர்க்கும் பரமன்!

ருள்மிகு தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகியோர் அருள்கிறார்கள். இங்கு சண்டேஸ்வரர் இல்லை. கிருபாநாதேசுவரர் சந்நிதிக்கு அருகே சண்டேஸ்வரர் உள்ளார்.

கிருபாநாதேசுவரரின் கருவறைக் கோஷ்டத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி விசேஷ கோலத்தில் அருள்கிறார். வலது காலை தொங்கவிட்டு, இடது காலை உயர்த்தி குத்துக்காலிட்ட வண்ணம், சின்முத்திரை பாவத்தில் அபய கரத்துடன், வரத ஹஸ்தமும் காட்டி அருள்பாலிக்கிறார்.

ம்பாள் சந்நிதிகளை வலம் வரும்போது பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. வள்ளி தெய்வானையுடன் இந்தக் கோயிலில் அருளும் முருகப்பெருமன் சந்நிதியும் வித்தியாசமானது. முருகனின் வாகனமான மயிலின் முகம் திசைமாறி உள்ளது.

ள்பிராகாரத்தில் தூண் சிற்பமாக அருள்கிறான் ஶ்ரீராமன். அதேபோல் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவன் போரிடும் சிற்பம் ஒன்றும் உள்ளது. ஶ்ரீராமனின் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் வாலி-சுக்ரீவ சிற்பங்களைக் காணலாம். ஆனால் அந்தச் சிற்பங்கள் இருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் ஶ்ரீராமனின் சிற்பம் தெரியாது. ஶ்ரீராமன் மறைந்திருந்து அம்புதொடுத்த இதிகாசச் சம்பவத்தை விளக்கும் விதமாக இந்தச் சிற்பங்கள் அமைந்திருப்பது சிறப்பு.

‘பைகொள் பாம்பரை யார்த்த படிறன் பனங்காட்டூர் ஐயன் எங்கள் பிரானை அறியா தாரறி வென்னே’ - சிவத்தை அறியும் அறிவே அறிவு, பிற அறிவெல்லாம் அறிவல்ல என்கிறது சுந்தரர் வேதம். அதை இந்த ஆலயத்துப் பதிகத்தில்தான் நிறுவியுள்ளார் சுந்தரர்.

பசி தீர்க்கும் பரமன்!

திங்கள்கிழமைகளில் இங்கு வந்து தாலபுரீஸ்வரருக்கும் கிருபாநாதேஸ்வரருக்கும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து, மல்லிகை மலர் சாத்தி வழிபட்டால் வீண் அச்சங்கள், வழக்குத் தொல்லைகள், பொருளாதாரப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். சுந்தரரின் பசி தீர்த்த பரமன் அருளும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், வீட்டில் அன்னத்துக்குக் குறை இருக்காது; பசிப் பிணி நம்மை அண்டவே அண்டாது என்பது அடியார்களின் நம்பிக்கை.

தேபோல் ஆயுள் விருத்தியை அளிக்கும் மங்கல நாயகியாக அமிர்தவல்லியும் ஆரோக்கிய பலம் அளிக்கும் தேவியாக கிருபா நாயகியும் அருள்கிறார்கள். இருவரையும் ஒருசேர வழிபட்டால், நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும், நீங்காத செல்வமும், நீடித்த புகழும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

காஞ்சிபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். காஞ்சிக்கு வெகு அருகில் இருந்தாலும், இது திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து கலவைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி, திருப்பனங்காடு கூட்ரோட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால் கோயிலை அடையலாம். காலை 7 முதல் 12 மணி வரை; மாலையில் 5 முதல் 8 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

மிகப்பெரிய சிவலிங்கம்!

மூன்று ஆண்டுகளுக்கு முன் அருணாச்சல் பிரதேசம் ‘சூபன்ஸிரி’ மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் மிகப் பெரிய சிவலிங்கம் ஒன்றும், அருகில் விநாயகர் சிலை ஒன்றும் ‘கார்டே’ கிராமவாசிகளால் கண்டுபிடிக்கப் பட்டது. லிங்கத்தின் உயரம் சுமார் 25 அடி, அகலம் 20 அடி.

கிராமவாசிகள் மூலம் தகவல் அறிந்த அதிகாரிகளும், சிவ பக்தர்களும், உள்ளூர்க்காரர்களும் சேர்ந்து மிகவும் பழைமையான இந்த சிவலிங்கத்துக்கு கோயில் கட்டி, வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சிவ மூர்த்தத்தை ‘ஸித்தேஸ்வர்’ என்று போற்றி வழிபடுகின்றனர். இந்த சிவலிங்கம் இருந்த இடத்தைச் சுற்றிலும் வில்வ மரங்கள் அதிகம் இருந்ததாகவும் தகவல்.