Published:Updated:

கிருஷ்ண தரிசனம்! : ‘இது உனது வீடு கிருஷ்ணா!’

கிருஷ்ண தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கிருஷ்ண தரிசனம்

அதற்குள் அரவம் கேட்டு வெளியில் வந்த விதுரன், கிருஷ்ணரைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.

ஸ்தினாபுரத்துக்குப் பாண்டவர்களின் தூதராக வந்து சேர்ந்தார் கிருஷ்ணர். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் பீஷ்மர். மிக்க அலங்காரத்துடன் திகழ்ந்த மாளிகையைக் கண்ட கிருஷ்ணர், ‘இது, யார் மாளிகை?’ என்று கேட்டார்.

`‘எனது மாளிகைதான். தங்களது வருகையையொட்டி அலங்கரித்துள்ளேன்!’’ என்றார் பீஷ்மர்.

இதைக் கேட்ட கிருஷ்ணர் எதுவும் பேசாமல், அங்கிருந்து மெள்ள நகர்ந்தார். வரவேற்க வந்தவர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அடுத்து ஒரு மாளிகை. அது, பீஷ்மரது மாளிகையை விட பிரமாண்டமாக இருந்தது.

‘`இந்த மாளிகை யாருடையது?’’- மீண்டும் வினா எழுப்பினார் கிருஷ்ணர்.

உடனே துரோணர், ‘`இது என்னுடை யது கிருஷ்ணா. இங்கே எல்லா வசதிகளும் உள்ளன. தாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்துள்ளேன்’’ என்றார்.

அதனுள்ளும் செல்லாமல் நடையைத் தொடர்ந்தார் கிருஷ்ணர். அடுத்து தென்பட்டது துச்சாதனனின் மாளிகை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘`என் மாளிகையை தங்களுக் காக உல்லாசபுரியாகவே மாற்றியுள்ளேன்!’’ என்றான் துச்சாதனன். அவன் சொன்னதை கிருஷ்ணர் தன் காதிலேயே வாங்கவில்லை. மாளிகைகளின் ஆடம்பரமும் ‘என்னுடையது... என் மாளிகை...’ என்ற அவர்களின் வார்த்தைகளில் தொனித்த கர்வமும் கிருஷ்ணருக்கு அறவே பிடிக்கவில்லை.

கிருஷ்ண தரிசனம்
கிருஷ்ண தரிசனம்

அங்கிருந்தும் அகன்றவர், தான் செல்லும் வழியில் சிறிய குடிசை ஒன்றைக் கண்டார்.

‘`அட! இந்தக் குடிசை அழகாக இருக்கிறதே... இதன் உரிமையாளர் யார்?’’ என்று கேட்டார்.

அதற்குள் அரவம் கேட்டு வெளியில் வந்த விதுரன், கிருஷ்ணரைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.

‘`இது உனது வீடு கிருஷ்ணா! உனது அருளால் அடியேன் இங்கு வசிக்கிறேன். இந்த இல்லத்தில் உன் திருப்பாதங்கள் பட, நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். தயவுசெய்து உள்ளே வர வேண்டும்!’’ என்று கூறி, கிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

கிருஷ்ணருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. மிகுந்த உற்சாகத்துடன் அந்தக் குடிசைக்குள் நுழைந்தார். பரமாத்மா அமர்வதற்கு அங்கு தகுந்த ஆசனம் கூட இல்லை. தர்ப்பையால் ஆன பாயைத் தரையில் விரித்து, அதில் அமரும்படி வேண்டினார் விதுரன்.

அடுத்த கணம், எந்தத் தயக்கமும் இல்லாமல் அதில் ஆனந்தமாக அமர்ந்தார் கிருஷ்ணர். பிறகு, ‘`என்ன விதுரரே... உங்களது வீடு தேடி வந்திருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது. சாப்பிட எதுவும் தர மாட்டீர்களா?’’ என்று உரிமையுடன் கேட்டார் கிருஷ்ணர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`காலையில் கஞ்சி மட்டுமே குடிப்பது அடியேன் வழக்கம். இன்றைக்கும் அவல் கஞ்சி உள்ளது. ஆனால், அதை எப்படித் தங்களுக்கு...’’ - தயங்கினார் விதுரர்.

ஆனால், கிருஷ்ணர் குதூகலம் அடைந்தார்.

‘’அடடா! அவல் கஞ்சியா... எனக்கு ரொம்பவே பிடிக்கும். கொடுங்கள் விதுரரே’’ என்று முகம் நிறைய உற்சாகமானார் ஆவலுடன்.

உடனே விதுரர், ஒரு குவளையில் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வந்து கொடுக்க, அதை ரசித்துக் குடித்தார் கிருஷ்ணன். இதைக் கண்டதும் விதுரரின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. ‘`என்ன விதுரரே... ஏன் உங்கள் விழிகளில் நீர் பெருக்கெடுக்கிறது?’’- பரிவுடன் கேட்டார் கிருஷ்ணர்.

‘`பரந்தாமா! உனக்குப் பாலும் தேனும் கலந்து... சுவையான விருந்து படைக்க பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரர் முதலானோர் காத்திருக்கிறார்கள். ஆனால் நீயோ, இந்த ஏழையின் குடிசையில் கஞ்சிக் குடிப்பதில் களிப்புறுகிறாயே..!’’ என்றார் விதுரர்.

அவரைப் பார்த்துப் புன்னகைத்த கிருஷ்ணர், ‘`அவர்கள் ஆடம்பரப் பிரியர்கள். தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்தனர். அவர்களது பேச்சில், ‘நான்’, ‘எனது’ என்ற அகந்தையே வெளிப்பட்டது. ஆனால் நீங்கள் மட்டுமே, ‘இது உனது இல்லம்’ என்று கூறி என்னைப் பெருமைப்படுத்தினீர்கள். கஞ்சி என்றில்லை, தாங்கள் அன்புடன்... சிறிய உத்தரணியில் தீர்த்தம் தந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்!’’ என்று கூறி விதுரரை ஆசீர்வதித்துச் சென்றார்.

நாமும் நம் உள்ளம் எனும் குடிலை கிருஷ்ணனின் மாளிகையாகக் கருதி, அவரிடம் சமர்ப்பிப்போம். அவரும் களிப்புடன் நம்முள் குடியேறி அருள் வழங்குவார்.

- டி.ஆர்.பரிமளரங்கன், திருச்சி

சீடையும் முறுக்கும் எதற்கு?

கிருஷ்ண ஜயந்தியன்று வீடுகளில் சீடை, முறுக்கு என்று நிவேதனம் செய்கிறோமே... இதற்கு என்ன காரணம் தெரியுமா?

கிருஷ்ண பகவான், நள்ளிரவு வேளையில் சிறையில் அவதரித்தார். இந்தத் தகவல் கம்சனுக்குத் தெரிந்தால் ஆபத்தாயிற்றே! எனவே, கண்ணன் பிறந்ததும் மேளதாளம் உள்ளிட்ட மங்கல ஓசை எதுவும் எழுப்பப்படவில்லை.

ஆனால் கண்ணன் பிறந்த நேரத்தில், துர்சொப்பனம் ஒன்று கண்டான் கம்சன். அதன் காரணமாக தூக்கத்திலேயே பற்களை நறநறவென்று கடித்தான். இந்த சத்தமே பகவான் அவதரித்ததற்கான மங்கள ஒலியானதாம்!

இதை உணர்த்தவே... கடித்தால் நறநற வென்று சத்தம் கேட்கும் சீடை, முறுக்கு உள்ளிட்ட பட்சணங்களை கிருஷ்ண ஜயந்தி அன்று நிவேதனம் செய்கிறோம்!

- டி. பூபதிராவ், காஞ்சிபுரம்