திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

அவிர்சடை முனிவர்

அவிர்சடை முனிவர்
பிரீமியம் ஸ்டோரி
News
அவிர்சடை முனிவர்

அவிர்சடை முனிவர்

சிபிச்சக்கரவர்த்தியின் பெருமை யைப் பேசும் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் `சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும்' என்னும் வரி காணப்படுகிறது. இதில் அவிர்சடை முனிவர் என்பதற்கு விளக்கம் சொல்லும்போது சூரியன் என்றும், சடை தாங்கிய முனிவர்கள் என்றும் பொருள் கூறுவார்கள். `சூரியனோடு வலம்வரும் முனிவர்' என்றும் இந்த வரிக்குப் பொருள் சொல்வதுண்டு.

இது ஒருபுறம் இருக்க, அதர்வண வேதத்தின் முதல் ஸ்லோகத்தை நோக்கினால் அது சூரியனையே போற்றுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வலம்வரும் சூரியனோடு கவிகள் வலம்வருவதாகச் சொல்கிறது. வேதமும் தமிழும் ஒப்புமை உடைய பல இடங்களில் இதுவும் ஒன்று.

சூரியனை வழிபடுவது என்பது, சூரிய மண்டலத்தின் நடுவிலே அந்தர்யாமி யாக விளங்கும் பரமேஸ்வரனை வழிபடுவதுவே ஆகும். ராமச்சந்திர மூர்த்திக்கு அகத்தியர், தாம் பார்வதி தேவியிடமிருந்து பெற்ற ஆதித்ய ஹிருதயம் என்னும் அற்புதமான ஸ்லோகத்தை உபதேசித் தார். ஆதித்ய ஹ்ருதயத்தை அனுதினமும் ஜபம் செய்பவர்களுக்கு சத்ருபயம் நீங்குவதாகவும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காஷ்யபருக்கும் அதிதிக்கும் பிறந்தவரே சூரிய பகவான். அவருக்கு மிருத்தா, அண்டம் என்ற இரு வார்த்தைகளை அடக்கி மார்த்தாண்டன் எனப் பெயர் வைத்தார் முனிவர். அவர் ஜனனம் செய்த நாள் ஒரு சப்தமி திதி என்கிறார்கள். எனவே சப்தமி சூரிய வழிபாட்டுக்கு மிகவும் உகந்த திதியாகப் போற்றப்படுகிறது.

சூரியபகவானுக்கு பன்னிரண்டு திருநாமங்கள் உண்டு. அவை :1.லோலார்க்கர், 2.உத்திர அர்க்கர், 3.ஸாம்பாதித்யன், 4.திரௌபதி ஆதித்யன், 5.மயூகாதித்யர், 6.கஷோல்கா ஆதித்யர், 7.அருணாதித் யர், 8.விருத்தாதித்யர், 9.கேசவாதித்யர். 10.விமலாதித்யர், 11.கங்காதித்யர், 12.யம ஆதித்யர்.

சூரிய ரதத்திற்கு ஒரே சக்கரம். அதுவே காலச்சக்கரம். அவனுக்கு மூன்று நாபிகள் உண்டு என்கிறார்கள். அவன் அணிந்திருக்கும் மூன்று மேகலைகளே, காலை, நடுப்பகல், பிற்பகல் ஆகியன. அவனைச் சுற்றியிருக்கும் வெளிவட்டம் ஆறு. அவையே ஆறு ருதுக்கள். அவற்றில் வசந்த ருது பழுப்பு நிறத்திலும் க்ரீஷ்ம ருது பொன்நிறத்திலும் வர்ஷ ருது வெள்ளைநிறத்திலும் சரத் ருது கறுமை நிறத்திலும் ஹேமந்த ருது தாமிரவர்ணத் திலும் சிசிர ருது சிவப்புநிறத்திலும் திகழும் என்கின்றன புராணங்கள்.

சூரியனுக்கு பல ஆயிரம் கிரணங்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமான கிரணங்கள் ஏழு. அந்த ஏழிலிருந்துதான் கிரகங்கள் ஏழும் தோன்றின என்றும் சொல்லப்படுகிறது. பிறகு ஏழு கிரகங்களுக்கு உரிமையாக ஏழு கிழமைகள் உண்டாயின என்கின்றன புராணங்கள்.

சூரியன் ஆன்மாவுக்கு அதிபதி. உத்தராயனம் ஆன்ம பூஜை செய்ய உகந்த காலமாகும். இந்தக் காலத்தில் ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம், குடந்தை மகாமகத் தீர்த்தம், குமரிக்கடல் சங்கமம், கோடியக்கரை, திருப் புல்லாணி, திருவெண்காடு, திருவையாறு- பஞ்சநதிக்கரை, திலதர்ப்பணபுரி, பவானி சங்கமம், பூம்புகார், முக்கொம்பு, ரங்கம் அம்மா மண்டபம் ஆகிய இடங்களில் நீராடி வழிபடுவது சிறப்பு.