Published:Updated:

திருவிளையாடல்!

திருவிளையாடல்
பிரீமியம் ஸ்டோரி
திருவிளையாடல்

சித்திரை தரிசனம்! மாணிக்கம் விற்ற படலம்

திருவிளையாடல்!

சித்திரை தரிசனம்! மாணிக்கம் விற்ற படலம்

Published:Updated:
திருவிளையாடல்
பிரீமியம் ஸ்டோரி
திருவிளையாடல்

சித்திரைத் திருவிழா தொடங்கப்போகிறது மாமதுரையில். அழகர் உலாவும் சொக்கர்-மீனாளின் திருக்கல்யாண விழாவுமாக களைகட்டும் வைபோகம் மதுரை சித்திரைத் திருவிழா. அழகர் விழாவையும் மீனாட்சி திருக்கல்யாணத்தையும் ஒன்றிணைத்து பெருவிழாவாக உலகம் போற்றச் செய்தவர் திருமலைநாயக்கர் மன்னர்.

திருவிளையாடல்
திருவிளையாடல்


பன்னிரண்டு நாள்கள் நடை பெறும் விழாவில், பத்தாம் நாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். இதற்கு முன்னதாக மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக முடிபுனைந்து செங்கோல் ஏந்தும் விழாவும் சிறப்பாக நடைபெறும். 11-ம் நாள் தேர்த்திருவிழா. விழா நிறைவு நாளான சித்திரைப் பௌர்ணமியன்று கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருள்வார். மண்ணின் மகத்துவம் போற்றும் இந்த விழாவை நேரில் காண கண்ணிரண்டு போதாது.

வீதிகளில் விழா கொண்டாட்டங்கள் என்றால் வீடுகளிலோ கதைகள் பேசி மகிழ்வார்கள் மக்கள். அழகர் கதையையும் ஆலவாய் ஆண்டவன் மதுரை மண்ணில் நிகழ்த்திய திருவிளையாடல் கதைகளையும் பாட்டிமார் சொல்லச் சொல்ல விழிகள் விரிய கேட்டு வியப்பார்கள் சிறார்கள். கல் யானை கரும்பு தின்றது, ரிஷப முத்திரை பதித்தது, ஈசன் பிட்டுக்கு மண்சுமந்தது, பிரம்படி பட்டது என நீளும் அந்தக் கதைகள். அவற்றில் சிவபிரான் மாணிக்கம் விற்ற கதையும் ஒன்று. அந்தக் கதை உங்களுக்காக...

மாணிக்கம் விற்ற படலம்

வீரபாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்த காலம். அவனுக்குத் திருமணமாகிப் பல வருடங்கள் ஆன பிறகும்கூட பட்டத்தரசிக்குப் பிள்ளை வரம் கிடைக்கவில்லை. ஆனால், அவனுடைய ஆசைநாயகியருக்கு பயிரிடை வளரும் களைகளைப் போல் ஐந்து பிள்ளைகள் இருந்தனர்.

பட்டத்தரசி, பிள்ளை இல்லாத தனது குறை தீர ஆலவாய் அண்ணலையே சரண்புக முடிவுசெய்தாள். கணவனிடமும் இதுகுறித்து வலியுறுத்தினாள். இருவருமாக சோமசுந்தரக் கடவுளைப் பிரார்த்தித்து அஷ்டமி, சதுர்த்தசி, சோமவார விரதங்களை மேற்கொண்டனர். விரதத் தின் பலனாக கங்கையினும் சிறந்த தூய்மையும் அருந்ததி போன்ற கற்புத் திறனும் கொண்ட பட்டத்தரசியின் மணிவயிற்றில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது.

தவமாய் தவமிருந்து பெற்ற செல்வமகனுக்கு, மன மகிழ்ச்சியுடன் ஜாதகன்மா முதலிய சடங்குகளைச் செய்து செல்லமாக வளர்த்து வந்தனர் அரச தம்பதியர். இந்த நிலையில், விதிவசத்தின் பலனாக காட்டுக்கு வேட்டையாடச் சென்ற மன்னன் வீரபாண்டியன் புலியினால் வேட்டையாடப்பட்டான். மன்னனின் மரணச் செய்தி கேட்டு நகர மக்கள் அனைவரும் கலங்கிக் கண்ணீர் வடித்தனர்.

நகர மக்களின் நிலை இவ்வாறிருக்க, மன்னனின் ஆசைநாயகிக்குப் பிறந்த பிள்ளைகளோ இரவோடு இரவாக அரண்மனைக் கருவூலத்தில் இருந்த மணிமுடி உள்ளிட்ட அனைத்து ஆபரணங்களையும் களவாடிச் சென்றுவிட்டனர். யானை மற்றும் குதிரைகளையும் கவர்ந்துச் சென்றுவிட்டனர்.

வீரபாண்டியனின் கட்டளைப்படி தவறாமல் நடந்த அமைச்சர்கள், அவனுடைய சிறு பிள்ளைக்கு முடிசூட்டி அரசப் பொறுப்பை ஏற்கச் செய்யவேண்டும் என்று விரும்பினர். அதற்காக அரண்மனைக் கருவூலத்தைத் திறந்து பார்த்தனர். கருவூலத்தில் எதுவுமே இல்லாததைக் கண்டனர். வேறு மணிமுடி செய்வதற்கோ, விலையுயர்ந்த தரமான நவரத்தினங்கள் இல்லை.

செய்வதறியாது கலங்கி நின்ற அமைச்சர்கள், `திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை’ என்றபடி இளவரசனை அழைத்துக்கொண்டு சொக்கநாதரின் கோயிலுக்குச் சென்றனர்.

அவர்கள் கோயிலை அடைவதற்கு முன்பே ஈசனின் அருளாடல் தொடங்கிவிட்டிருந்தது. ஒளி மிகுந்த கோவணம் தரித்து, ஒளி வீசும் நவரத்தினங்கள் அடங்கிய பொதியைத் தன் பிடரியில் வைத்தபடி, மற்போர் வீரனைப் போன்ற திண்மையான தேகத்தில் ஆபரணங்கள் ஜொலிக்க, பருத்த தோள்களில் அணிந்திருந்த வளை சூரியனைப் போல் பிரகாசிக்க, மந்திரம் கூறி அணிந்த பூணூல் மார்பில் புரள, அழகிய இந்திர வில்லையொத்த மணிமாலை மார்பில் விளங்க சோமசுந்தரக் கடவுள் அவர்கள் முன்பு ஒரு வணிகராகத் தோன்றினார்.

கவலை தோய்ந்த முகத்துடன் எதிர் வரும் அமைச்சர்களிடம் `முக வாட்டத்துக்குக் காரணம் என்னவோ’ என்று ஏதும் அறியாதவர் போன்று விசாரித்தார். அவர்களும் விவரம் சொன்னார்கள்.

உடனே அந்த வணிகர், ``கலங்கவேண்டாம். என்னிடம் ஒன்பது வகை ரத்தினங்கள் உள்ளன’’ என்று கூறி, அவர்கள் முன் ஒரு கரிய கம்பளத்தை விரித்து அதில் நவரத்தினங்களை வைத்தார். அனைவருக்கும் வியப்பும் மகிழ்ச்சியும். பின்னர் அவற்றை அவர்களிடமே ஒப்படைத்த வணிகர், இந்த மணிகளைக் கொண்டு அதியற்புதமான அழகுடன் ஒரு மணிமகுடம் செய்து, இந்தப் பாலகனுக்குச் சூட்டுங்கள். அத்துடன் இவனை அபிஷேக பாண்டியன் என்ற பெயரில் அழைப்பீர்களாக’’ என்றார்.

மீனாட்சி அம்மன்
மீனாட்சி அம்மன்


பாலகன் வணங்கினான் அவரை. இறையின் திருவருள் பார்வை அவன் மீது படிந்தது. வந்திருப்பது யாரென்று அறியாத அமைச்சர்கள், நவரத்தினங்களின் விலைக்குரிய பொருளைக் கொண்டுவர ஓடினார்கள். ஆனால் அவர்கள் வருவதற்குள் வணிகர் மறைந்துவிட்டார். வந்தவர் சோமசுந்தரக் கடவுளே என்பதை உணர்ந்த அமைச்சர்கள், ஆலவாயன் திருக்கோயில் சென்று இறைவனைப் பலவாறாகப் புகழ்ந்து போற்றினர்.

இறைவன் தந்த நவரத்தினங்களைக் கொண்டு ஒரு மணிமகுடம் செய்து அரசகுமாரனுக்குச் சூட்டி, அபிஷேக பாண்டியன் என்ற பெயரும் இட்டு பட்டாபிஷேகம் செய்து வைத்தனர். அரசப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அபிஷேக பாண்டியன், அறநெறி வழுவாமல் நாட்டை ஆட்சி செய்து வந்ததுடன், ஆசைநாயகியரின் பிள்ளைகள் களவாடிச் சென்ற செல்வங்களையும் மீட்டுவந்தான்.

சித்திரைத் திருவிழா தருணங்களில் இந்தத் திருவிளையாடல் கதையைப் படிப்போருக்கும் கேட்போருக்கும் ஓர் அரசருக்கு இணையான போகங்களும் யோகங்களும் கைகூடும் என்பார்கள் பெரியோர்கள்.

வணிகராக வந்த சிவனார் அமைச்சர்களிடன் நவரத்தினங்களை ஒப்படைத்தபோது, அவை தோன்றிய வரலாறையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். சிவபெருமான் கூறிய அந்தக் கதையை நாமும் அறிந்துகொள்வோம்.

சிவபெருமான் சொன்ன கதை!

வலன் என்ற அசுரன் சிறந்த சிவபக்தன். சிவனைக் குறித்து கடும் தவம் இயற்றினான். அதன் பலனாக சிவதரிசனம் வாய்த்தது. ``வேண்டும் வரம் கேள்’’ என்றது சிவப்பரம்பொருள்.

``என்னை யாரும் போரில் வெல்லக்கூடாது. நான் மறைந்தாலும் என் உடல் உறுப்புகள் மற்றவர்கள் விரும்பும் வண்ணம் விலை மதிப்பு மிக்க பொருள்களாக மாறவேண்டும்’’ என்று வரம் கேட்டுப் பெற்றான் வலன்.

பின்னர் ஒருமுறை வலனுக்கும் இந்திரனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இந்திரனால் வலனை வெல்ல முடியவில்லை. எனவே, வலனுக்கு அவன் கேட்கும் வரத்தைத் தந்து சமரசம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தான் இந்திரன். வலனிடம் அவன் வேண்டும் வரம் தருவதாகக் கூறினான். ஆனால் வலனோ ``உனது வரம் எனக்குத் தேவையில்லை. வேண்டுமானால் உனக்கு நான் வரம் தருகிறேன்’’ என்றான்.

இதுதான் தருணம் என்று நினைத்த இந்திரன், தான் செய்யப்போகும் யாகத்துக்குப் பலியிடும் பசுவாக வலன் இருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றான். அசுரனானாலும் வாக்குத் தவறாத வலன் பசுவாக மாறி, யாகத் தீயில் தன்னை ஆஹுதியாக அர்ப்பணித்துக்கொண்டான்.

அவன் மறைந்ததும், அவனுக்குச் சிவபெருமான் அருளிய வரத்தின்படி வலனின் எலும்புகள் வைரங்களாகவும், பற்கள் முத்துகளாகவும், ரத்தம் மாணிக்கங்களாகவும், ரோமம் வைடூரியமாகவும், இறைச்சி பவளமாகவும் கண்கள் நீலமாகவும் கபம் புஷ்பராகமாகவும், பித்தநீர் மரகதமாகவும், கொழுப்பு கோமேதகமாகவும் மாறினவாம்.

இதுவே நவரத்தினங்கள் உருவான வரலாறு!சித்திரைத் திருவிழாவுக்குத் தயாராகும் மதுரை.

`வேஷம் கட்டி வரவேற்போம் எங்கள் அழகரை’ அனுமன் வேடம் தரிக்கும் பக்தரின் சிலிர்ப்பூட்டும் பேட்டி - வீடியோ வடிவில்!

மீனாட்சியின் அருளாடல்...

ஆதிசங்கரர், மீனாட்சி அம்மனை தரிசித்து மீனாட்சி பஞ்சரத்தினம், மீனாட்சி அஷ்டக ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாடியுள்ளார்.

காஞ்சி காமகோடி பீடம் மற்றும் சிருங்கேரி சாரதா பீடம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய மகான் தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், பார்வை இழந்து அவதிப்பட்டார். அவர் மீனாட்சி அம்பாளை நோக்கிப் பதினைந்து பாடல்கள் கொண்ட துதி ஒன்றைப் பாடி பார்வை பெற்றார். பார்வை குறைவு உள்ளவர்கள், அந்தப் பாடல்களைப் பாடி அம்பாளை துதிப்பது இன்றும் கண்கூடு.

கொட்டும் மழையில் சிறுமி வடிவில் வந்து, ஆங்கிலேய அதிகாரி ஒருவரை அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தாள் மீனாட்சி. அடுத்த கணம் வீடு இடிந்து விழுந்தது. சிறுமி மறைந்து போனாள். தன்னைக் காப்பாற்றியது மீனாட்சியே என்பதை உணர்ந்த அந்த அதிகாரி ஏராளமான ஆபரணங்களை மீனாட்சி அம்பாளுக்குச் சமர்ப்பித்தார். அவை இன்றும் மீனாட்சி கோயிலில் உள்ளன. அந்த அதிகாரி - பீட்டர் பாண்டியன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism