புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

சிவமகுடம் - 95

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

சிவமகுடம்

ஒரு தலம்தான் ஆனால் அத்தலத்துக்கு ஒப்பற்ற பலநூறு பெயர் களைச் சூட்டி மகிழ்கின்றன புராணங்களும் ஞானநூல்களும். பிரம்மதேவன் வழிபட்டதால் பிரமபுரம். பரம்பொருள் இறையனார் மூங்கில் வடிவத்தில் தோன்றி வேணுவனம் ஆனதால் வேணுபுரம்.

சிவமகுடம் - 95

பிரளய காலத்தில் உலகம் முழுமையும் வெள்ளத்துக்குள் மூழ்க, உமையம்மையை அருகில் அமர்த்திக்கொண்டு, சுத்த மாயை என்பதையே ஒரு தோணியாக்கி, இறையனார் தங்கியிருந்த இடம் ஆகையால் தோணிபுரம்.

சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் புகலிடமாய் தேடி வந்து சேர்ந்த இடம் ஆதலால் புகலி. குருவாக வணங்கப்படும் வியாழன் பூசித்துத் தனது குருத்துவத்தைப் பெற்றதால் வெங்குரு. பாம்புத் தலை கொண்ட ராகு பூசித்ததால் சிரபுரம்; சண்பைப் புல்லால் அடித்துக்கொண்டு அழிந்துபோன யாதவ குலத்தின் பழி தீர, கண்ண பரமாத்மா வழிபட்ட தலம் என்பதால் சண்பை.

இந்தப் பெயர்கள் மட்டும்தானா... இல்லை இன்னும் பல திருப் பெயர்கள் உண்டு சீர்காழிக்கு. காளி வணங்கிய பதி இது. ஆகவே  + காளி - சீகாழி என்று மருவியது என்பது, ஞான வல்லுநர்கள் தரும் விளக்கம். சீகாழி என்ற பதமே தற்போது சீர்காழி ஆகிவிட்டது என்பார்கள். காழி என்றால் வலிமை. சீரும் வலிமையும் சேர்ந்த ஊர் ஆதலால் சீர்காழி என்று விளக்குவோரும் உண்டு.

எது எப்படியோ... திருப்பெயரை ஒருமுறை வாயால் சொன்னாலே சிவஞானம் அருளும் அற்புதச் சிவத்தலம் சீர்காழி. அவ்வூர் விருந்தாகப் பெற்ற மாமருந்து திருஞானசம்பந்தப் பெருமான். அருளால், திருவருள் பதிகங்களால் உடற்பிணியும் உள்ளப் பிணியும் அகற்றும் அந்த மாமருந்து, வினையெல்லாம் அகற்றிடும் வேறொரு சிவ மருந்தைக் கையில் எடுத்தது. அதன் பெயர் விபூதி.

விபூதியை `சிவ ஐஸ்வர்யம்’ என்று போற்றுவர். நிலையான செல்வம், தீவினைகளை விலகி ஓடச் செய்யும் வல்லமை, கடன் இல்லாத வாழ்வு, நல்ல குடும்பம், ஆரோக்கியமான வாழ்வு, நல்ல நண்பர்களின் சேர்க்கை என்று அளவற்ற நற்பலன்களைத் தரும் பொக்கிஷம் விபூதி.

`பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு’ என்பது பெரியவர்கள் வாக்கு.

இந்தத் திருநீறை இட்டுக்கொள்வதால் சிவனருள் எப்போதும் நம்மைக் காத்து நிற்கும். ஆக அற்புதக் காப்பாகவும் திகழ்வது விபூதியாகிய திருநீறு. `சாம்பலாகிவரும் திருநீறு மும்மலங்களையும் சாம்பலாக்கும்’ என்கிறது தேவாரம். சைவ சித்தாந்தம் கூறியபடி திருநீறு நான்கு வகைப்படும். அவை கல்பம், அணுகல்பம், உப கல்பம், அகல்பம் என்பன.

கன்றுடன்கூடிய ஆரோக்கியமான பசுவின் சாணத்தை பிரம்ம மந்திரம் சொல்லி சிவாக்னியில் எரித்து உருவாக்குவது கல்பத் திருநீறு. காடுகளில் மேயும் பசுக்களின் சாணங்களைக் கொண்டு எரித்துச் செய்வது அணுகல்பத் திருநீறு. தொழுவங்களிலிருந்து எடுத்த சாணத்தைத் தீயில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு. இதுவே நாம் பயன்படுத்தும் திருநீறு. தரையில் விழுந்து கிடக்கும் சாணங்களை எடுத்துத் தயாரிக்கும் திருநீறு அகல்பம்.

திருநீற்றை அப்படியே அள்ளி நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக் கொள்ளும் முறை `உள் தூளனம்.’ ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என மூன்று விரலால் இடைவெளி விட்டு மூன்று கோடுகளாக விபூதியைத் தரித்துக்கொள்ளும் முறை `திரிபுண்டரீகம்’.

வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று, விபூதியை எடுத்து கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல் ஆகியவற்றால் எடுத்து அண்ணாந்து, நெற்றியில் பூச வேண்டும். `திருச்சிற்றம்பலம்’, `சிவாயநம:’ அல்லது ‘சிவ சிவ’ என்று சொல்லி அணிந்துகொள்ள வேண்டும். தலை நடுவில், நெற்றி, மார்பு நடுவில், தொப்புள் மேல், இடது தோள், வலது தோள்... என நம் மேனியில் மொத்தம் 18 இடங்களில் திருநீறு அணியலாம்.

இங்ஙனம் திருநீற்றின் மகிமையை, அணியும் முறையை, அதனால் உண்டாகும் பலன்களை பலவாறு விளக்குகின்றன ஞான நூல்கள். திருஞானசம்பந்தரும் அற்புதங்கள் நிறைந்த திருநீற்றை எடுத்து, தென்னவராம் பாண்டியரின் வெப்பு நோயை அகற்றும் விதமாய், `மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ என்று பாடியபடியே அரசரின் வலப்பாகத்தில் தடவினார் திருஞானசம்பந்தர். அற்புதம் நிகழ்ந்தது!

திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர்

திருநீறு மேனியில் பட்டவுடன், சம்பந்தப் பிள்ளை பாடிய பதிகத்தின் ஒலி பரவியவுடன் மன்னரின் வலப்பாகத்தில் வெப்பம் தணிந்தது; குளுமை பரவியது. சரி... வலப்பாகத்தில் தணிந்துவிட்ட வெம்மை என்னவானது, எங்கே போனது? `அது சமணர்கள் பக்கம் ... அதாவது, மன்னரின் இடப்பக்கத்தில் சென்று சேர்ந்தது’ என்று சித்தரிக்கிறார் சேக்கிழார் பெருமான்!

இரண்டு பக்கமும் இருந்த துன்பம் இப்போது ஒரே பக்கத்தில் கூடி மன்னவரைத் துன்புறுத்தின. அந்தப் பக்கத்தில் சிகிச்சை செய்த சமணர்களும்கூட வெம்மை தாங்காமல் மன்னரிடமிருந்து விலகியே நின்றிருந்தார்கள். மாமன்னருக்கோ, இனம்புரியாத கலவையான உணர்வு. ஏக காலத்தில் சொர்க்க இன்பத்தையும் நரகின் துன்பத்தையும் அனுபவித்தார். ஆம்! ஒருபக்கம் குளிர்ச்சி; மறுபக்கம் பொசுக்கும் வெம்மை!

அவர் துன்பத்தை வெறுத்தார். சமணத் துறவிகளைப் பார்த்தார். ``நீங்கள் தோற்றுவிட்டீர்கள்; தூர விலகுங்கள்’’ என்றார் சீற்றத் துடன். திகைப்பும் அச்சமும் ஒருசேர தங்களை ஆட்கொள்ள, முகங்களில் பீதியுடன் அவர்கள் விலகினார்கள். பிறகு, பாண்டியர் திருஞானசம்பந்தரை நோக்கினார். அவரின் கண்கள் `துன்பத்தை முழுமையாக நீக்கியருளுங்கள்’ என்பதுபோல் இறைஞ்சின.

திருஞானசம்பந்தருக்குப் புரிந்தது. மறைபோற்றும் மகாதேவனை சிந்தையால் துதித்துப் பதிகம் பாடி திருநீற்றை மன்னரின் மேனி முழுவதும் பூசினார். பாண்டிய மாமன்னரின் முன்வினை அப்போதே தீர்ந்தது எனலாம். அவரின் தேகத்திலிருந்து வெம்மை பூரணமாக விலகியது. குளிர்சூழ் தென்பொதிகையின் பொய்கை ஒன்றில் மூழ்கித் திளைப்பது போல் உள்ளம் உவக்கும் குளிர்ச்சியை அனுபவித்தார் பேரரசர்.

அகத்தின் குளிர்ச்சியால் அவரின் திருமுகம் மலர்ந்தது. அக்கணத்தில் பாண்டிமாதேவியாருக்கும் பேரமைச்சருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்க இயலாது. இருவரும் கண்ணீர்மல்க கரம்கூப்பி வணங்கினர் சிவனருள் செல்வராம் திருஞான சம்பந்தரை.

இவர்கள் இப்படியென்றால், மன்னரின் நிலையைச் சொல்லவா வேண்டும். மெள்ள எழுந்தார். சிரம் மேல் கரம் குவித்து பிள்ளையை வணங்கினார். ``பிள்ளைப் பெருமானே! உங்கள் துணையால் நான் பிழைத்தேன்...’’ என்றார் நெகிழ்ச்சியோடு.

சமணத் துறவிகள் நிலைகொள்ளாமல் தவித்தார்கள். பாண்டிய வேந்தர் திருஞானசம்பந்தரைப் போற்றியதையும் வணங்கியதையும் கண்டு பதைபதைத்தார்கள். இனி தங்களின் நிலை என்னவாகுமோ என்ற கலக்கமும் உண்டானது அவர்களுக்குள். அதேநேரம் அவர்கள் தங்கள் நிலையிலிருந்து சற்றும் மாறுபடவில்லை. அடுத்து செய்ய வேண்டியது குறித்தே சிந்தித்தார்கள். இனி வாதம் செய்து பயனில்லை என்று உணர்ந்தவர்கள், நெருப்பாலும் நீராலும் அவரை எதிர்கொள்ள முடிவுசெய்தார்கள்.

இதுகுறித்து தங்களுக்குள் தணிந்த குரலில் பேசி விவாதிக்கவும் செய்தார்கள். திருஞானசம்பந்தர் அவர்களை நோக்கினார்.

``மாமன்னர் நலம் பெற்றார். இனி நாம் தர்க்க வாதத்துக்குத் தயார் ஆவோமா... உங்கள் மார்க்கம் குறித்த உண்மையை விளக்குங்கள்...’’ என்றார்.

இதைக் கேட்டதும் துறவிகளில் ஒருவர் ``இனி தர்க்க வாதம் இல்லை...’’ என்றார் ஆவேசமாக. அதேநேரம், அவர்களில் தலைமையானவராக இருந்தவர் அருகில் நின்றிருந்த துறவியின் செவியில் ஏதோ ரகசியமாய்ச் சொன்னார். அவர் சொல்லி முடித்ததும், சொன்னதைச் செவிமடுத்த இளந்துறவி முன்னால் வந்தார். தங்களின் நிலையை கர்வத்துடன் எடுத்துச் சொன்னார்.

``இரு தரப்பும் அவரவர் சமயக் கருத்துகளின் உண்மைப் பொருளை ஓர் ஏட்டில் எழுதி நெருப்பில் இடவேண்டும். எவருடைய ஏடு வேகாமல் - நெருப்பில் பொசுங்காமல் உள்ளதோ, அவர்களே வெற்றி பெற்றவர். என்ன... இந்தப் போட்டி உனக்குச் சம்மதமா?’’

அவர்களின் போக்கு மாமன்னருக்கு எரிச்சலூட்டியது. அதையொட்டி அவர் பேசமுற்பட, சீர்காழிப் பிள்ளையின் குரல் முந்திக்கொண்டது.

``சம்மதம். ஏடு வேகாமல் இருக்கும் தரப்பு உண்மைத் தத்துவம் நிறைந்தது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் அல்லவா?’’

``நிச்சயமாக!’’

தன் முன் நடக்கும் நிகழ்வுகள் பேரரசருக்கு விநோதமாக இருந்தன. அதைவிடவும் அடிகள்மார் அனைவரின் போக்கும், செயலும், பேச்சும் அவருக்குத் திகைப்பைத் தந்தன. அவர், இதுவரையிலும் அவர்களை இப்படியான கோணத்தில் - நிலையில் பார்த்ததில்லை. எப்போதும் அன்பு நிறைந்த அருளாளர்களாகவே தங்களைக் காட்டிக்கொண்டார்கள். ஆனால் இப்போதோ... அவர்கள் இருக்கும் நிலையே வேறு!

இப்படியான சிந்தனைகளால் எழுந்த குழப்பத்தோடு ``இப்போது என்ன செய்வது?’’ என்று பார்வையாலேயே தன் தேவியிடம் கேட்டார் மாமன்னர். அவரும் `இமைமூடித் திறந்தும் இதழ்களால் புன்னகைத்தும் தலையசைத்தும்’ பாவனைகளாலேயே தன் பதிலைத் தெரிவித்தார். `இது சிவனின் குழந்தை; எதையும் எதிர் கொள்ளும்; நிச்சயம் வெல்லும்’ எனும் பதிலைத் தந்தன, தேவியாரின் பாவனைகள்!

மறுகணம் மன்னரிடமிருந்து ஆணை பிறந்தது. அடுத்த சில நாழிகைகளில் அவைக் கூடத்தில் மன்னரின் திருமுன் வேள்வித் தீ போன்று பெரும் நெருப்பு மூட்டப்பட்டது.

திருஞானசம்பந்தர் முன்னே வந்தார். தான் பாடிய பதிகச் சுவடிகளில் இருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் துதித்தார். `எங்கள் நாதனாகிய சிவபெருமானே பரம்பொருள்’ எனத் தொழுது சுவடிகளின் காப்புக் கயிறை அவிழ்த்தார்.

பதிகம் ஒன்றை எடுத்தார். தன் தலைமீது வைத்து வணங்கினார். அதையே நெருப்பில் இட தீர்மானித்தார்.

மிக மிக அற்புதமான பதிகம் அது!

- மகுடம் சூடுவோம்...

அன்னை காமாட்சி
அன்னை காமாட்சி


ஐந்து முறை வலம் வந்தால்...

அன்னை காமாட்சியை ஐந்து நாள்கள் தொடர்ந்து சென்று, ஐந்து முறை பிராகார வலம் வந்து, அவளின் சந்நிதியில் ஐந்து முறை நமஸ்காரம் செய்து வழிபட்டால், நாம் வேண்டியது வேண்டியபடி பலிக்குமாம். சரி, அதென்ன ஐந்து என்ற கணக்கு? இதுகுறித்து காஞ்சி முனிவர் மகாபெரியவர் வழிகாட்டியிருக்கிறார்.

` அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு. ஐந்து ஐந்தாக பண்ணும் உபசாரங்களில் அதாவது வழிபாட்டு பணிவிடைகளில் சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் செய்பவள் அவள்’ என்று வழிகாட்டி இருக்கிறார் மகாபெரியவர்.

காஞ்சிக்கு செல்ல முடியவில்லையா, அருகிலுள்ள சிவாலயத்துக்கு ஐந்து நாள்கள் சென்று, அம்பாளை ஐந்து முறை வலம் வந்து, ஐந்து முறை வழிபட்டு வாருங்கள் உங்கள் பிரார்த்தனைகளை மகிழ்ச்சியோடு நிறைவேற்றி வைப்பாள் அந்த ஜகதாம்பிகை.