சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

சிவமகுடம்

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

சிவமகுடம்

அன்றொரு நாள் கல் யானை உயிர்ப்பெற்றுக் கரும்பைத் தின்றுக் களித்தது. வேறொரு நாள்... மண் சுமப்பவனின் முதுகில் விழுந்த பிரம்படியின் வலி, உலகின் எல்லோர் முதுகிலும் உறைத் தது. அதுபோலவே, வாதத்தின் விளைவால்-நெற்றிக்கண் திறந்ததால் பொசுங்கிச் சாம்பலான புலவன், பொற்றாமரைக் குளத் தில் உயிர்த்தெழுந்த அற்புதம்கூட நிகழ்ந்தது ஒருநாள்.

சிவமகுடம்
சிவமகுடம்


இந்த அற்புதங்களுக்கெல்லாம் காரணம் அந்தப் பரமனின் - ஆலவாய் அண்ணலின் அறக்கருணை அன்றோ! அவ்வண்ணமே இப்போதும் பாண்டியர் மாறவர்மனின் அவையில் ஓர் அற்புதம் நிகழக் காத்திருந்தது.

`அவரவர் மார்க்கம் சார்ந்த உண்மைப்பொருளை ஏட்டில் எழுதி எரியும் நெருப்பில் இடுவோம். வேகாத ஏடு எழுதியவர் வெற்றி பெற்றவர்’ என்ற நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு, அனல் வாதத் துக்குத் தயாராக இருந்தனர் சமணர்கள்.

மாமன்னரின் கட்டளைப்படி விறகுகள் அடுக்கப்பட்டன. நெருப்பு மூட்டப்பட்டது. விறகுகளைப் பற்றிக்கொண்ட அக்னி தேவன் பேரொளியைப் பரப்பினான் அந்த அவை மண்டபத்தில். அதனால் உண்டான வெளிச்சத்தில் மேலும் பிரகாசமாய் ஒளிர்ந் தது திருஞானசம்பந்தரின் திருமுகம்.

அவர், தாமரைப் பாதங்களைத் தரையில் பதித்து நகர்ந்து அவையின் மையத்துக்கு வந்தார். `எங்கள் நாதனே மெய்ப்பொருள்’ என்று உரக்க உரைத்தார். திருக்கரங்களைச் சிரமேற் குவித்து ஐந்தெழுத்து நாதனை மனதார வணங்கினார்.

பின்னர், தாம் இயற்றிய பதிகங்கள் அடங்கிய சுவடிக் கட்டு ஒன்றைப் பெற்று, சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் கயிற்றினை மெள்ள அவிழ்த்தார். இமைப்பொழுதும் மறவாமல் தான் துதித்துப் போற்றும் ஈசனாகிய மெய்ப்பொருளை உள்ளடக்கிய ஏட்டுக் கட்டினை திருக்கரங்களால் பிரித்தார்.

பிரித்ததும் கண்ணில் தென்பட்ட பதிகம் திருநள்ளாற்றுப் பதிகம். ஆம், முன்னர் திருநள்ளாற்றில் அவர் பாடியருளியது. `போகமார்த்த பூண்முலையாள்’ எனத் தொடங்கும் பதிகம் அது.

அதைத் தனியே பிரித்தெடுத்துக் கைகளில் வைத்துக்கொண்டது ஞானப் பிள்ளை. பின்னர், `உலகாளும் - அடியார்தம் உள்ளத்தை ஆளும் அரசனாம் ஆடல்வல்லானின் திருப்பெயர் ஒன்றே என்றென்றும் மெய்ப்பொருள்’ என்பதை எல்லோருக்கும் உணர்த்தும் விதம் செயலாற்றினார்.

சிவமகுடம்
சிவமகுடம்

பரமனை வணங்கி `தளரிள வளரொளி’ என்று தொடங்கி அந்த இடத்தில் ஓர் பதிகம் பாடி அருளினார். தொடர்ந்து திருநள் ளாற்றுப் பதிகத்தைக் கொண்ட ஏட்டினை, அவையில் இருந்த அனைவரும் பார்க்கும் வண்ணம் தீயில் இட்டார்.

வெகுநேரம் ஆகியும் அந்த ஏடு எரியாமல் - வேகாமல் பசுமை யாய் ஜொலித்தது. ஆம் மதுரை மண்ணில் திருவிளையாடல்களை பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய சொக்கநாதரின் திருவரு ளால் மீண்டும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

`போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும்’ என்று தொடங்கும் பதிகம் அல்லவா? அம்பிகையின் காருண்யத்தை நினைவூட்டும் பாடலாயிற்றே... அவளின் திருவருள் ஏட்டினைக் காத்ததோ! `வெஞ்சுடர்த் தீ அங்கையில் ஏங்கி’ என்று பரமனைத் திருஞானசம்பந்தர் போற்றிப் பரவியது இந்தப் பதிகத்தில்தானே. தனலைக் கையில் ஏந்திய கடவுளைப் போற்றும் பதிகத்தைக் கொண்ட ஏட்டினை நெருப்பு சுட்டெரிக்குமா என்ன?

பஞ்ச பூதங்களும் அவரால் உண்டானவை அல்லவா. அண்ட பிரமாண்டமும் சண்டமாருதமும் அவரின் வடிவே அல்லவா? அவரின் சாந்நித்தியம் நீரிலும் உண்டு நெருப்பிலும் உண்டு. இப்படியிருக்க, அந்தப் பரமனைப் போற்றும் பதிக ஏட்டை அக்னி புசிக்குமா என்ன?

அதிசயத்திலும் அதிசயமாய் எரியாமல் திகழ்ந்தது ஏடு!

சமணத் துறவியரின் உள்ளத்தில் பயத்தால் எழுந்த தீ கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனாலும் அதை அவர்கள் வெளிக் காட்டிக்கொள்ள வில்லை. தங்கள் சார்பாக ஓர் ஏட்டினை தீயில் இட்டார்கள். மறுகணம் பொசுங்கிப்போனது அது. சமணத் துறவியர் செய்வதறியாது திகைத்தார்கள்.

திருஞானசம்பந்தர் இமைமூடிப் பரமனைப் பணிந்து நன்றி கூறினார். எல்லோரும் காணும் விதம் நெருப்பில் தாம் இட்ட எட்டினை எடுத்துக் காட்டினார்.

``நீங்களும் உங்கள் ஏட்டினை எடுத்துக் காட்டுங்களேன்’’ என்றார் மாமன்னர்.

அது எப்படிச் சாத்தியம்? ஆகவே, பதிலேதும் பேசாமல் விழித்தனர் அந்தத் துறவிகள். மன்னர் மீண்டும், ``நீரூற்றி நெருப்பை அணையுங்கள். இவர்களின் ஏடு இருக்கிறதா எனப் பார்க்கலாம்’’ தீ அணைக்கப்பட்டது. அப்போதும் அங்கே சாம்பலே மிஞ்சியது.

துறவிகள் சளைக்கவில்லை. தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள அப்போதும் அவர்களுக்கு மனம் வரவில்லை. மாமன்னரிடம் மீண்டும் விண்ணப்பம் வைத்தார்கள்... `மூன்றாவதாக ஒரு வாய்ப்பு வேண்டும்’ என்று.

``என்ன அது?’’ மன்னர் கேட்டார்.

சமணத் துறவிகள் பதிலுரைத்தார்கள்... ``இந்தப் பிள்ளை புனல் வாதத்துக்குத் தயாராகட்டும். அதில் நாங்கள் நிச்சயம் வெல்வோம்’’ என்று!

அவையில் நிகழ்ந்த அற்புதம் குறித்து தலைநகர் எங்கும் தகவல் பரவியது. இச்செய்தி வணிகர்கள் மூலமும் யாத்ரீகர்கள் மூலமும் மெள்ள வெளியூர்களுக்கும் பரவலாயிற்று. அங்கெல்லாம் திருஞான சம்பந்தர் குறித்தே பேச்சாகிப்போனது!

பாண்டிய தேசத்தின் தலைநகரமும்... சுற்றுவட்டார ஊர்களும் புனல் வாதத்துக்குத் தயாராயின!

சிவனருள் கைகூடினால்...

மாலைச் சந்தியா காலத்துப் பொன்னிற வெயிலின் கதிர்கள், தூரத்தே தெரிந்த மலைப்புறத்தையும், மலைமுகடுகளையும், விருட் சங்களையும் விநோதமான வண்ண ஓவியமாக சிருஷ்டித்திருந்தது. வைகைப் பரப்பைத் தொட்டு மீண்டு, மெள்ள மானுடர்தம் முகம் வருடும் தென்றலும் தன் பங்குக்கு அந்தப் பொழுதை ரம்மிய மாக்கியது.

வணிகம் முடிந்து நடைபயணமாக ஊர் திரும்பிக்கொண்டிருந்த அந்த அன்பர் சிவனடியார் போன்று காட்சியளித்தார். அவரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து உடன் வந்தவரோ, உருவில் சமணத்துறவி போன்று தெரிந்தார்.

பயணங்கள் எப்போதும் புதுவித அனுபவங்களைக் கொடுக்கும். வணிகருக்கோ... அவருடன் வழித்துணையாய் வலிய வந்து சேர்ந்துகொண்ட துறவி மூலம் தர்க்கம் செய்ய வாய்ப்பு கிடைத்தது! தர்க்கத்தின் கருப்பொருள், அன்று தலைநகரில் பாண்டியர் அவையில் நிகழ்ந்த அனல் வாதம் குறித்தே இருந்தது.

`அனல் வாதத்தில் சீர்காழிப் பிள்ளை வென்றது, இறையருளால் நிகழ்ந்த அற்புதம்’ என்பது வணிகரின் பேச்சாக இருந்தது. உடன் வந்தவருக்கோ அதை ஒப்புக்கொள்ள மனம் இல்லை. `அற்புதம் என்றெல்லாம் எதுவும் கிடையாது’ என்று மறுத்தார். அதையொட்டியே அவரின் பேச்சு அமைந்தது.

‘‘அற்புதம் என்று எதைச் சுட்டுவீர்... சொல்லும் பார்க்கலாம்?’’ எனக் கேட்டார் துறவி.

வணிகர் பதில் சொன்னார்: ‘‘உலகில் எதுதான் அற்புதம் இல்லை. ஏன்... நாம் நடப்பதும் உயிர்கொண்டு நகர்வதும்கூட ஒருவகையில் அற்புதம்தானே...’’

‘‘மழுப்புகிறீர்! நாம் கேட்ட வகையில் பதில் சொல்லவில்லை நீர்.’’

‘‘உமது கேள்வி எவ்வகையோ?!’’

‘‘இறந்தவரை உயிருடன் எழுப்பமுடியுமா... அவ்வாறு எழுப்ப இயன்றால் அதுதான் அற்புதம் என்பேன்’’

இதற்கு மிக அமைதியாய்ப் பதில் சொன்னார் சிவனடியாராகிய அந்த வணிகர்...

‘‘அப்படியான அற்புதத்தையும் சாதித்துக் காட்டியிருக்கிறார் எங்கள் சம்பந்தப் பெருமான்.’’

அந்தத் திருப்பெயரைக் கேட்டதும்தான் தாமதம்... கேள்வி கேட்டவரின் ஆவேசம் பன்மடங்கு பெருகியது. கோபத்துடன் இரைந்தார்: ‘‘ஓஹோ! அற்புதங்கள் எல்லாம் உங்கள் சம்பந்தருக்கு மட்டுமே சாத்தியம்போலும்’’

‘‘எங்கள் சம்பந்தர் சிவனருட்செல்வர்; சிவனருள் ஸித்தித்தால் அனைவருக்கும் அது சாத்தியம்தான். உமக்கும்கூட.’’

‘‘நான் நம்பமாட்டேன்!’’

‘‘அது உமது விதிப்பயன்! நாளை வைகைக் கரைக்கு வருவீர் அல்லவா? அப்போது காண்பீர் அற்புதத்தை!’’

அவர் சொன்னது போலவே மறுநாள் வைகைக்கரையில், பார்த்தோர் எல்லாம் வியக்கும் வகையில்... பிற்காலத்தில் அந்த இடம் ‘திருஏடகபுரம்’ என்று திருப்பெயர் கொள்ளவும், மாமன்னர் மாறவர்மன் அரிகேசரி, பரிபூரணமாய் சிவமகுடத்தை சிரத்தில் ஏற்கவும் சிந்தையில் சிவத்தை நிறைக்கவும் காரணமான அந்த அதியற்புதம் மிக உன்னதமாய் நிகழ்ந்தேறியது!

- மகுடம் சூடுவோம்...

கோயிலில் உடைக்கப்படும் தேங்காய் குடுமியுடன் இருக்கவேண்டுமா?

தென்னையில் இருந்து கிடைக்கும் முக்கண் கொண்ட தேங்காய், முக்கண்ணனான ஈசனுக்குச் சமம். ‘உனது குடுமி எனது துயரத்தைத் துடைக்கட்டும்!’ என்ற வேண்டுதலை முன் வைத்து, தேங்காயைப் போற்றும் செய்யுள் ஒன்று உண்டு. உடைக்கும்போது, தேங்காய், குடுமியுடன் இருக்க வேண்டும். உடைத்த பிறகு அதை அகற்றலாம்.

வெற்றிலை-பாக்கு பழம் எப்படிப் படைக்கவேண்டும்?

2, 4, 6 என்ற கணக்கில் இரட்டைப்படை அளவில் வெற்றிலையும், பாக்கும் வைக்கவேண்டும். வெற்றிலை மற்றும் வாழைப்பழத்தின் நுனி, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். காம்புப் பகுதியானது தெற்கு அல்லது மேற்கு நோக்கி இருக்கவேண்டும்.