Published:Updated:

சிவமகுடம்

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

சிவமகுடம்

சிவமகுடம்

சிவமகுடம்

Published:Updated:
சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம்

மண்ணின் தாரகை!

அரசவை ஆலோசனைகள் நிறைவுபெற்றுத் திரும்பியிருந்தார் மாறவர்மன் அரிகேசரி. நேரம் நடுநிசியைக் கடந்து கொண்டிருந்தது. ஆனாலும் தூக்கத்துக்கு ஆட்படவில்லை அந்தப் பேரரசர். அதேநேரம், தூக்கத்தைக் கெடுத்திருந்த அந்த விழிப்பு நிலை எவ்வித களைப்பையும் அவருக்கு ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

வெகுநேரம் நிகழ்ந்த ஆலோசனைகளும் அதன் விளைவாக எழுந்த கருத்துகளும் பேரமைச்சர் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளும் அவருக்குப் பெரும் திருப்தியை அளித்திருக்கவேண்டும். அதனால் உண்டான நிம்மதியால் பொலிவுடன் திகழ்ந்தது மன்னரின் திருமுகம்.

கூடவே... தண்ணொளி பொலிந்த சந்திரக் கிரணங்களும், மணம் கமழ்ந்த மல்லிகை மலர்களும், எப்போதும் அவர் ரசிப்பதற்கு உகந்ததான அந்த நிசப்தமும் பேரரசரின் சந்தோஷத்தையும் நிம்மதி யையும் இரட்டிப்பாக்கின என்றே சொல்லலாம்.

விண்ணில் ஒளிரும் தாரகைகளை விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் பாண்டியர். அரண்மனையின் நந்தவனப் பகுதியான அந்த இடத்தில் இப்படியான நிலையில் அவரைப் பார்த்து வெகு நாளாகிவிட்டது. நிலவைப் பழிக்கும் களையுடன் திகழ்ந்த அவரின் திருமுகம், அவ்வப்போது உள்ளக் கிடக்கையை வெளிப் படுத்துவதுபோல் காட்டிய வெவ்வேறு பாவனைகள் விநோதமாக இருந்தன பாண்டிமாதேவியாருக்கு!

அவரின் உள்ளத்தில் ஒரு கேள்வி... `வாழ்வில் இவரோடு நான் இணைந்தது விதிப்பயனா வேறு காரணமா?’ என்று!

நமக்குள்ளும் அதேகேள்விதான். இதற்குப் பெரியபுராணம் அற்புதமாகப் பதில் சொல்கிறது. `வரிசிலைத் தென்னவன் தான் உய்வதற்கு வளவர்கோமான் திரு உயிர்த்து அருளும் செல்வப் பாண்டிமாதேவி’ - எனப் பாடுகிறார் சேக்கிழார்.

மாமன்னர் கூன்பாண்டியர் எல்லா நலமும் பெற்று வீடு பேறும் அடைவதற்கு ஏற்ப, இறைவன் கொடுத்த வரமே பாண்டிமா தேவியார் என்பது கருத்து. ஆம், பொன்னியின் செல்வியும் மதுரையின் காவலரும் இணைய இறைச்சித்தமே காரணமன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்.

கால் நாழிகைப் பொழுது கழிந்திருக்கும். தேவியார் வந்ததையோ, அவர் தம் அருகில் அமர்ந்து தன்னை ரசிப்பதையோ கவனிக்க இயலாதபடி சிந்தனை லயிப்பில் ஆழ்ந்து விட்டிருந்தார் பாண்டியர். `வேறு வழியில்லை... தென்னவரின் சிந்தையை வலுக்கட்டாயமாக திசை திருப்பினால்தான் உண்டு’ என்ற முடிவுக்கு வந்தார் தேவியார்.

``மாமன்னருக்கு வணக்கம்!’’

வேண்டுமென்றே மன்னரின் செவிக்கருகில் சென்று, மெல்லிய குரலில் அதேநேரம் அழுத்தம் தொனிக்க மொழிந்தார் தேவியார்.

``வருக தேவி... எப்போது நிகழ்ந்தது தங்களின் விஜயம்..?’’

சிவமகுடம்
சிவமகுடம்


மன்னரும் கேலி செய்வதில் சளைத்தவரல்ல என்பதுபோல் விசாரித்தார். பதிலுக்கு போலியாக முறைப்பைக் காட்டிய தேவியார், ``அவையின் ஆலோசனை விவாதங்கள் தற்போதும் தங்களின் சிந்தையில் தொடர் கின்றனவோ’’ எனக் கேட்டார்.

``இல்லை தேவி... மனதில் பெரும் திருப்தி. அழுத்திய பாரம் அனைத்தும் கரைந்துபோய் நிம்மதியில் திளைக்கிறது என் உள்ளம். மட்டுமன்றி... இந்த இரவு வானமும் ஒளிரும் தாரகைகளும் என் கண்களுக்கு விருந்தாகி எத்தனை நாள்கள் ஆகின்றன தெரியுமா? ஆக, ரசிக்கத் தலைப்பட்டவன் அப்படியே விண் தாரகைகளின் அழகில் சொக்கிச் சிறைப் பட்டுவிட்டேன். இதோ இப்போது மண்ணின் தாரகையிடம் சிறைப்படப் போகிறேன்...’’ என்றார் சிரித்தபடியே.

``மன்னவா! சிறை என்றதும்தான் நினைவுக்கு வருகிறது... விசாரணை ஏதும் இல்லாமல் அடிகளாரைச் சிறையில் வைத்திருக்கிறீர் களாமே... அதுபற்றிய விவாதங்கள்...’’

``நிறைய நடந்தன... காரணத்தை அமைச்சர் விளக்கினார். எல்லோரும் புரிந்து கொண்டார்கள்!’’

``புரிந்துகொண்டார்களா அல்லது மன்னரை எதிர்க்கத் துணிவின்றி ஏற்றுக் கொண்டார்களா?’’

``பலரும் புரிந்துகொண்டார்கள்... சிலர் வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டார்கள்...’’

``ஒருவேளை அடிகளாரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தால், அந்தச் சிலரால் வீண் குழப்பங்கள் எழுந்திருக்கலாம் அல்லவா?’’

``நிச்சயமாக...’’

``அந்தச் சிலர் ஆபத்தானவர்கள் என்பதைத் தாங்கள் உணர்கிறீர்களா?’’

``தேவி! உண்மையைச் சொல்வதென்றால் சில நாள்களுக்கு முன்பு வரையிலும் நீயும், உன் தந்தை சோழர்பிரானும்... ஏன் பேரமைச்சரும் கூட என்னைப் பொறுத்தவரையிலும் பெரும் ஆபத்து நிறைந்தவர்களாகவே தெரிந்தீர்கள்.

பகைவர் யார், நட்பு யார், துரோகி யார் என்று தீர்க்கமாய் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்தேன். அப்படியொரு மாய வலையில் என்னைச் சிக்கவைத்திருந்தார் அடிகளார். அனைத்துக்கும் காரணம் அவரே. ஆக, மற்றவர்களைச் சந்தேகிப்பது வீண். அவரின் சதிகளைப் பேரமைச்சர் தக்கபடி எடுத்துக் கூறியும் சிலர் ஏற்க தயங்குகிறார்கள் எனில்... அதற்கும் காரணம் உண்டு’’

``என்னவோ...?’’

``அடிகளார் துரோகியாக மாற, தொன்று தொட்டு மிச்சம் இருக்கும் அரசியல் பகையே காரணம் என்பது என் தரப்புக் கருத்து. ஆனால் காரணம் அதுமட்டுமல்ல என்பது அந்தச் சிலரது கருத்தாக உள்ளது!’’

``வேறு என்ன காரணங்கள் இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்?’’

``மதம், எல்லை தாண்டிய அரசியல்... இப்படி என்னென்னவோ...’’

``இதுபற்றி தங்களின் கருத்து?’’

``ஒரு மன்னவனாக எவ்விதக் கருத்தையும் நான் புறந்தள்ளிவிட முடியாது அல்லவா?’’ என்றவர், அமர்ந்திருந்த ஆசனத்தில் தளர்ந்து சாய்ந்துகொண்டார். கண்களை மூடிக்கொண் டார். அவருக்கு உறக்கம் அவசியம் என்பதைப் புரிந்துகொண்ட தேவியார், மேற்கொண்டு விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. அவரின் கால்களைப் பிடித்துவிட ஆரம்பித்தார். மெள்ள உறக்கத்தில் ஆழ்ந்தார் பாண்டியர்.

தேவியாருக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புலப்பட்டது... அடிகளார் விஷயத்தில் ஒருபாதி உண்மையை ஏற்கும் மாமன்னர், மீதியை ஏற்பதில் தயக்கம் காட்டுகிறார். அதற்குக் காரணம் சைவமும் சோழமும்!

நேரம் செல்லச் செல்ல தேவியாரையும் உறக்கம் ஆட்கொண்டது. பொழுது புலர்ந்த போது அந்தத் தகவல் வந்து சேர்ந்தது.

திருக்கொடுங்குன்றத்துக்கு எழுந்தருளி விட்டார் சீர்காழிப்பிள்ளை!

பிரான் மலை எனும் கொடுங்குன்றம்!

சிவனார்-அம்பிகையின் திருமணத் தலமாகவும், தேவர்கள் கூடிய பேரூராகவும், குன்றாடும் குமரனின் சிறப்புத் தலமாகவும், குடைவரைத் தலமாகவும் திகழ்வது திருக்கொடுங்குன்றம். தற்போது பிரான்மலை என்றே வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் சிங்கம்புணரிக்கு அருகே உள்ளது இந்தத் தலம். இங்குள்ள ஆலயம் பூமி, அந்தரம், சொர்க்கம் என்று மூன்று நிலைகளில் திகழ்வதாகச் சொல்கின்றன ஞான நூல்கள். பிரான்மலையை கடோரகிரி என்றும் பிரச்சந்திர கிரி என்றும் வேறு பெயர்களால் அழைக்கின்றன புராணங்கள்.

பிரான்மலை சுமார் 2,000 மீட்டர் உயரம் கொண்டது; இதன் மீது முன்னர் கோட்டை இருந்ததற்கான சிதிலங்கள் உள்ளன. வெகு தூரத்திலிருந்தும் உயரத்தில் இருந்தும் இதைப் பார்த்தால், இந்த மலையே சிவலிங்க வடிவத்தில் இருப்பது தெரியும். அதனால்தான், இதற்கு பிரான்மலை என்று பெயர் என்கிறார்கள்.

`பிரானுக்கு அதாவது சிவபிரானுக்கு உகந்த மலை அதனால் பிரான் மலை’ என்றும் போற்றுவார்கள் அடியார்கள். இங்கு கோயில் கொண்டிருக்கும் சிவனார் கொடுங்குன்றீசர், கொடுங்குன்றநாதர், கடோரகிரீஸ்வரர், பிரச்சந்திரகிரீஸ்வரர், குன்றாண்ட நாயனார், கொடுங்குன்றம் உடைய நாயனார் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்.

ராமாயண காலத்தைச் சேர்ந்த மகோதர மகரிஷி என்பவர், இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டுள்ளாராம்.

வானில்பொலி (வு)எய்தும் மழை மேகம்கிழித்து ஓடிக்

கூனல்பிறை சேரும்குளிர் சாரல் கொடுங்குன்றம்

ஆனில்பொலி ஐந்தும் அமர்ந்து ஆடிஉலகு ஏத்தத்

தேனில்பொலி மொழியாளடு மேயான் திருநகரே

என்று நம் சீர்காழிப்பிள்ளை பாடிக் களிக்கும் இந்தத் தலம் மற்றும் மலையைக் குறித்த புராணக் கதைகள் சிலிர்ப்பூட்டுபவை!

- மகுடம் சூடுவோம்...

யாரை எப்படி வணங்கலாம்?

தலைக்குமேல் ஓர் அடி தூக்கி கரங்களைக்கூப்பி தெய்வங்களை வணங்குதல் வேண்டும்.

மகான்கள், குருவை நெற்றிக்கு நேரே கைகூப்பி வணங்க வேண்டும்.

மன்னர், தந்தை ஆகியோரை வாய்க்கு நேரே கைகூப்பி வணங்க வேண்டும்.

அறநெறியாளர்களை மார்புக்கு நேரே கைகூப்பி வணங்கவேண்டும். வயிற்றுக்கு நேரே கைகூப்பி பெற்ற தாயை வணங்கவேண்டும்.

- எஸ். விஜயா, சென்னை-65

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism