
சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழாவால் களைகட்டித் திகழ்கிறது மாமதுரை. அன்னை மீனாளின் திருக்கல்யாணம், வைகையில் கள்ளழகர் வைபோகம் என மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் இவ்வேளையில், நாமும் சித்திரைப் பெருவிழாவை சிந்தித்துச் இன்புற வேண்டாமா?

அவ்வகையில், அன்னை மீனாட்சி - சொக்கேசர் மற்றும் அழகரின் அற்புத தரிசனமும் அபூர்வத் தகவல்களும் இங்கே உங்களுக்காக!
`மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை’ என்று கூறுமளவுக்கு சக்திக்கு முக்கியத்துவம் தரும் தலம் மதுரை. ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று போற்றுகின்றன ஞானநூல்கள்.
அன்னை மீனாட்சி அம்மனின் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது என்பார்கள். மீன் போன்ற கண்கள் கொண்டவள் என்பதால் மீனாட்சி என்ற பெயர் ஏற்பட்டது. மீன் தனது முட்டைகளை, பார்வையாலேயே தன்மயமாக்குவது போல், பக்தர்களை அருட் கண்ணால் நோக்கி அன்னை மீனாட்சியும் அருள்பாலிக்கிறாள்.
மீனாட்சி அம்மனுக்கு பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற பெயர்களும் உள்ளன.






கோயிலின் கருவறையில்... நின்ற திருக்கோலம்; பச்சைத் திருமேனி; வலது கரத்தில் மலர்; இடது கரம் லோல ஹஸ்தமாகத் (தொங்கு கரம்) திகழ... வலது தோளில் பச்சைக் கிளி; இடது பக்கம் சாயக் கொண்டையுடன் தரிசனம் தருகிறாள் மீனாட்சி.
மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் நீண்ட காலமாக மகப்பேறு இல்லாததால், யாகம் செய்ய, அந்த வேள்வித் தீயிலிருந்து தோன்றிய பெண் குழந்தையாகக் காஞ்சனமாலையின் மடியில் அமர்ந்தவள் இவள். தடாதகை என்று திருப்பெயர் ஏற்றாள்.
மீனாட்சி அம்மனை திருமணம் புரிவதற்காக, சுடலையாண்டியான ஈசன், மணக்கோலத்தில் வந்தமையால் சுந்தரேஸ்வரர் என்றும், சொக்கன் என்றும் அழைக்கப்படுகிறார்.
பாண்டியனின் மகளாக- தடாதகைப் பிராட்டியாக அவதரித்த மீனாட்சி, மதுரையின் அரசியாக முடிசூடினாள்; பலரையும் வென்றாள். பின்னர் சுந்தரேஸ்வரரை மணந்தாள். அழகரான திருமால், வசந்த காலத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் வழங்க... மீனாட்சியைக் கரம் பிடித்த சுந்தரேஸ்வரர், மதுரையின் மன்னராகப் பட்டம் சூட்டிக்கொள்ள... மீனாட்சியம்மையும் சுந்தரேஸ்வரரும் தேர்பவனி வர... இவை அனைத்தும் சேர்ந்ததே சித்திரைத் திருவிழா!
ஒரு காலத்தில் மீனாட்சி திருக்கல்யாணமும் தேரோட்டமும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்றும் அழகரின் ஆற்றுத் திருவிழா, சித்திரை மாதமும் நடைபெற்றனவாம். சைவ-வைணவ ஒற்றுமை மேலோங்க வேண்டும் எனும் எண்ணத்தில், இவற்றை ஒன்றாக இணைத்தவர் திருமலை நாயக்கர்!
மாசி-அறுவடை மாதம் ஆதலால், சுற்று வட்டார மக்கள் மதுரைக்கு வர முடியாதே எனக் கவலைப்பட்ட நாயக்கர், கோடையின் வெப்பம் தொடங்குகிற சித்திரையில், எல்லோருக்கும் குளிர்ச்சியைத் தருவதாக இந்த விழா இருக்கட்டுமே என்று சித்திரைக்குக் கொண்டு வந்தார் என்பர்.
விழாவின் 10-ஆம் நாள், மீனாட்சி திருக்கல்யாணம். முன்பெல்லாம், கோயிலுக்குள் திருமண மண்டபத்தில்தான் விழா நடந்ததாம்! ஆனால், அடியார் திருக்கூட்டம் அலைமோத, இப்போது, மேற்கு ஆடி வீதி-வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருப்புகழ் மண்டபத்தில் கல்யாணம் நிகழ்கிறது.



மணமக்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்கள், திருமலை நாயக்கர் செய்து கொடுத்தவையாம். மீனாட்சி திருக்கல்யாணத்தை தரிசித்தால் மணப்பாக்கியம் கிடைக்கும்; மாங்கல்ய பலம் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள்.
11-ஆம் நாள்-தேர்த் திருவிழா. தேர்களில், சிவமகா புராணச் செய்திகளும், திருவிளையாடல் தகவல்களும் வெகு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. 12-ஆம் நாள் - தீர்த்தத் திருநாள்; இந்திரன் சாப விமோசனம் பெற்ற திருவிளையாடல் புராண வரலாறு நிகழும்; பின்னர், திருக் கொடியிறக்கப்பட்டு, சித்திரைத் திருவிழா நிறைவுறும்.
சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளான 12-ஆம் நாளுக்கு அடுத்த நாள், கள்ளழகர் எதிர்ச்சேவையும், அதற்கு அடுத்த நாள் சித்ரா பௌர்ணமியாக அமைந்து அழகர் ஆற்றில் இறங்குவதும் நடைபெறும். ஆதிகாலத்தில்... துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு மண்டூகமாகிவிட்ட (தவளையாக) சுதபஸ் எனும் முனிவருக்கு சாப விமோசனம் தர, மதுரைக்கு மேற்கில் இருக்கும் தேனூருக்கு வந்து ஆற்றில் இறங்குவாராம் அழகர். விழாக்களை ஒன்றிணைத்த திருமலை நாயக்கர், தேனூரில் இறங்கிய அழகரை மதுரை வரை வரச் செய்தார்.
மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம், தான் வருமுன் நடந்து விட்டதன் காரணமாக, தமையனாரான கள்ளழகர் கோபமுற்று வைகையின் வடகரையிலேயே தங்கிவிட்டு, மலைக்குத் திரும்பி விட்டதாக ஒரு தகவல் உண்டு.