Election bannerElection banner
Published:Updated:

மகாபெரியவாவுடன் வாழும் கணங்கள்... நூற்றாண்டு வாழ்வை நிகழ்த்திக்காட்டும் `தெய்வத்துள் தெய்வம்' மேடை நாடகம்..!

மகா பெரியவா
மகா பெரியவா

`தெய்வத்துள் தெய்வம்' என்னும் மஹாபெரியவாவின் வாழ்க்கை வரலாற்று நாடகம், ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. பெரியவா விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பொன்விழா ஜயந்தி தினமாகவும் அந்தநாள் அமைந்தது...

நூறாண்டு கால வாழ்வை மூன்று மணி நேரத்தில் சுருக்கிச் சொல்வதோ அல்லது நடமாடும் தெய்வமாக வாழ்ந்துமறைந்த ஒரு மாபெரும் யோகியின் வாழ்வை பொதுவெளியில் நாடகமாக்குவதோ அத்தனை எளிதான காரியமல்ல. காரணம், மகாபெரியவாவின் பக்தர்கள் அவரை `சாட்க்ஷாத் தட்சிணாமூர்த்தி' ஸ்வரூபமாகவே காண்பவர்கள். ஏதேனும் ஒரு துளி பிழை நேர்ந்தாலும் அதைப் பெரும் குறையாகக் கருத இடமுண்டு. அப்படிப்பட்ட மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் இளங்கோ குமணன்.

மகா பெரியவா நாடகம்
மகா பெரியவா நாடகம்

`தெய்வத்துள் தெய்வம்' என்னும் மஹாபெரியவாவின் வாழ்க்கை வரலாற்று நாடகம், ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. பெரியவா விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பொன்விழா ஜயந்தி தினமாகவும் அந்தநாள் அமைந்தது. நிகழ்வில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்கினார். மகாபெரியவாவை தரிசிக்கக் காத்திருந்த பக்தர்களுக்கு பெரியவாவின் ஆசிகள் மிகவும் உற்சாகம் அளிக்க, நாடகம் தொடங்கியது.

Vikatan

தொடக்கத்திலிருந்தே பெரியவாவின் மகிமைகள் வசனங்களாக, காட்சிகளாக விரிகின்றன. பல நிகழ்ச்சிகள் பேச்சினூடாக விவரிக்கப்படுகிறது. ஆனாலும் அவற்றின் வீரியம் பார்வையாளர்களை சிலிர்க்க வைக்கிறது. 13 வயது சுவாமிநாதனின் பாதங்களைப் பற்றிக்கொண்ட ஜோதிடரிடம், பெரியவாவின் தந்தை `சின்னப் பையனின் கால்களைப் பிடித்துக்கொண்டு இருக்கிறீர்களே?' என்று கேட்டபோது, `விடவேண்டிய பாதமா இது, அனைவரும் பற்றிக்கொள்ள வேண்டிய பாதம் அல்லவா?' என்று சொல்கிறார். சொற்களால் விவரிக்கப்பட்டாலும் அவை மனக்கண்ணில் ஓர் அற்புதக் காட்சியாக விரிகிறது.

``வரதட்சணை வாங்காதீங்கோ... பட்டுப்புடவை எடுக்காதீங்கோ... இதெல்லாம் செய்தா பத்திரிகைல என் பேரப் போடாதீங்கோனு சொல்றேன். வரதட்சணையும் வாங்கிக்கிறா ... பட்டுப்புடவையும் எடுக்கிறா, மறக்காம என் பேரையும் பத்திரிகைல போட்டுடுறா"
- மகா பெரியவா

ஶ்ரீ மடத்தின் அதிபதியான பிறகு, முதன்முறையாக திண்டிவனம் வரும்காட்சி மிகப் பிரமாண்டமாக அமைந்தது. பூரணகும்ப மரியாதையோடு உள்ளூர் பக்தர்கள் காத்திருக்கிறார்கள். கொடிகள், வேதகோஷங்கள், வாத்தியங்கள், மேனாவில் பெரியவா, பின்தொடரும் பக்தர்கள் குழாம் என்று ஒரு ஊர்வலமே காட்சிப்படுத்தப்படுகிறது. பெரியவாவுக்காகப் பூரண கும்பத்தோடு காத்திருக்கிறாள் முறுக்குப் பாட்டி. மேடையில் நடைபெறும் ஒரு நாடகத்தின் காட்சி என்கிற உணர்வைத் தாண்டிய ஓர் அனுபவமாக அது கடந்து செல்கிறது.

இந்த நாடகம், `இது மகாபெரியவாவுக்கும் அவர் பக்தர்களுக்கும் இடையிலான பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது' என்று தயங்காமல் சொல்லலாம். சுவாமிகளிடம் சீடன் ஒருவர் `சுவாமி நீங்கள் யார்?' என்று ஒரு கேள்வி கேட்பார். அதற்குப் பெரியவா ஒரு பதில் சொல்வார். அந்தப் பதிலில் இருக்கும் உண்மையே ஒட்டுமொத்த நாடகத்தின் காட்சிகள். `பக்தர்களின் குறைகளை பகவானிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சாதாரண போஸ்ட்மேன். அதை பகவானுக்கு நினைவூட்ட அடிக்கடி அவர் நாமத்தை உச்சரிக்கும் போஸ்ட்மேன்' என்று பதிலளிப்பார். தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறையை உடனுக்குடன் தீர்க்கும் அவரின் சாதுர்யமும் தயாள குணமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்.

பெரியவா
பெரியவா

தன் பெண்ணின் திருமணத்துக்கு உதவி கேட்டு பெண் ஒருத்தி வருகிறாள். `பெரியவாவின் ஆசீர்வாதத்தால் தன் தொழில் விருத்தியடைந்தது' என்று ஒரு பணக்காரர் வருகிறார். பெரியவா, அந்தப் பணக்காரர் சமர்ப்பித்த பணத்தைத் தொடக்கூட செய்யாமல் அப்படியே அந்த ஏழைப்பெண்ணுக்குத் தருகிறார். `பெரியவாவின் அருள் வேண்டிவந்த தனக்கு இத்தனை பொருள் கிடைத்தது' என்று அவர் மகிழ்ந்தாலும், `இவ்வளவு பணம் தேவையில்லை' என்கிறார். `இதில் மிக சொற்பமே தன் தேவைக்குப் போதும்' என்கிறார். ஆனாலும் பெரியவா அந்தப் பெண்ணை வற்புறுத்தி பணத்தை வாங்கிக்கொள்ளச் சொல்கிறார்.

``ஒண்ணுமில்லேன்னு சொல்றதுலதான் எல்லாமே இருக்கு"
- மகா பெரியவா

இந்த நாடகத்தின் பெரிய பலம் பெரியவா பேசும் வசனங்கள். எளிமையான மொழியில் இயல்பாக நகைச்சுவை ததும்ப அமைந்திருக்கும் வசனங்கள். ``தன் தேவைக்கு மேல இருக்கிறத குடுக்கணும்ன்னு நினைக்கிற ஒருத்தர், தேவைக்கு மேல வேண்டாம்னு சொல்ற ஒருத்தர்... இவாளெல்லாம்தான் பெரியவா... என்னைப் போய் `பெரியவா, பெரியவா' ன்னு சொல்றேள்" ``வரதட்சணை வாங்காதீங்கோ ... பட்டுப்புடவை எடுக்காதீங்கோ... இதெல்லாம் செய்தா பத்திரிகைல என் பேரப் போடாதீங்கோனு சொல்றேன். வரதட்சணையும் வாங்கிக்கிறா ... பட்டுப்புடவையும் எடுக்கிறா, மறக்காம என் பேரையும் பத்திரிகைல போட்டுடுறா"

மகா பெரியவா நாடகம்
மகா பெரியவா நாடகம்

``ஒண்ணுமில்லேன்னு சொல்றதுலதான் எல்லாமே இருக்கு" இப்படி நாடகம் முழுவதும் நம் கவனத்தை ஈர்க்கும் பொன்மொழிகளாக வசனங்கள். நாடகத்தில் பெரியவாளாக நடித்த நால்வரின் நடிப்பும் ஒப்பனையும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ஒரு காட்சியில் பெரியவா வில்வ மாலையை எடுத்துத் தலையில் வைத்துக்கொண்டு தரும் தரிசனம் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது. ஒருகணம் அந்த ரூப சாந்நித்தியத்தை விட்டு மனம் அகலவேயில்லை. நாடகத்தில் பல காட்சிகள் மத நல்லிணக்கத்தை முன்வைப்பவை. குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தோடு பெரியவாளுக்கு இருந்த நல்லுறவு பல காட்சிகளில் காட்டப்படுகிறது.

நாடகத்துக்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல கனகாபிஷேகக் காட்சி அமைந்தது. இந்தக் காட்சியை சிலர் காணொலியாகக் கண்டிருக்கலாம். மேடையில் அந்தக் காட்சியை நிகழ்த்திக் காட்டியவிதம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. வேத கோஷங்களும் மேளதாளங்களும் முழங்க, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கனகாபிஷேகம் செய்கிறார்கள். அது முடிந்ததும் ஜெயேந்திரர் பெரியவாவிடம், ``பக்தாளுக்கெல்லாம் ஆசீர்வாதம் பண்ணுங்கோ" என்று சொல்ல, காலமெல்லாம் தன் கரங்களை உயர்த்தி ஆசி வழங்கி பல லட்சம்பேரை வாழவைத்த பெரியவா, தளர்ந்த தன் இரு கரங்களையும் மெள்ள உயர்த்தி அனைவரையும் வணங்குகிறார்.

மகா பெரியவா
மகா பெரியவா
Vikatan

அந்தக் கணம், காணும் பார்வையாளர்கள் அனைவரின் கண்களும் கண்ணீரால் நிரம்பின. அத்வைதத்தின் சாரமாகக் காணும் உயிர்களெல்லாம் அந்தக் கடவுளே நிறைந்திருக்கிறான் என்று சொல்லித் துதிக்கும் மகா உன்னதத் தருணம். காண்பது நாடகம் என்கிற நினைவு மாறி அனைவரும் பக்திப் பெருக்கில் கைகூப்பி வணங்கினர். நூறுபேருக்கும் மேலான நடிகர்களை ஒன்றிணைத்து இத்தனை பெரிய நாடகத்தை ஒருங்கிணைப்பது எளிதான காரியம் இல்லை. துளியும் பிசிறின்றி நடித்த அனைவரையும் மனம் திறந்து பாராட்டலாம். குருபூர்ணிமாவை ஒட்டி ஜகத்குருவின் வாழ்க்கையைக் காணும் வாய்ப்பை அளித்த இயக்குநர் இளங்கோ குமணனுக்கு வாழ்த்துகள்..!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு