Published:Updated:

மகா சிவராத்திரி!

மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி

மகாசிவராத்திரி விரத நியதிகள்...

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலை சிறந்தது சிவ ராத்திரி விரதம். `எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்’ - என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் எனும் நூல் தெரிவிக்கிறது.

எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி, அன்பு உள்ளவர்கள் ஆனாலும் சரி... சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.

அம்பாள் பூஜித்த புண்ணிய இரவு!

பிரம்மாவும் மகாவிஷ்ணுவும், சிவபெருமா னின் முடி-அடி தேடிய வரலாறு நமக்குத் தெரியும். இது நிகழ்ந்தது, மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினத்தன்று. அந்த நாளே சிவராத்திரி என்கிறது ஸ்காந்த மஹாபுராணம்

மற்றோர் அற்புதமான கதையும் உண்டு. பிரளய காலம் முடிந்த அன்றைய இரவில், நான்கு ஜாமங்களிலும் சிவனாரை ஆகம முறைப்படி பூஜை செய்தாள் உமாதேவி.

பொழுது விடிந்தது. சிவனாரை வணங்கிய அம்பிகை, ‘‘ஸ்வாமி! தங்களை நான் பூஜித்த இந்த இரவு சிவராத்திரி என வழங்கப்படவேண்டும். இந்தத் தினத்தில் சூரிய அஸ்தமனம் முதல், மறு நாள் காலை சூரிய உதயம் வரையிலும் தங்களை பூஜிப்பவர்களுக்குச் சர்வ மங்கலங் களுடன் நிறைவில் முக்திப் பேறையும் அருள வேண்டும்!’’ என வேண்டினாள். பரமசிவனும், ‘‘அப்படியே ஆகுக!’’ என்று அருள்புரிந்தார். அம்பிகை பூஜித்த அந்த நாளே மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.

ஐந்து வகை சிவராத்திரிகள்!

புண்ணிய சிவராத்திரி ஐந்து வகையாகத் திகழ்கிறது.

மாக சிவராத்திரி: மாக சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும்.

யோக சிவராத்திரி: திங்கள் கிழமை யோடு இணைந்து வரும் சிவராத்திரி தினத்தை யோக சிவராத்திரி என்பர்.

நித்திய சிவராத்திரி: வருடத்தின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறைகளில் சதுர்த்தசி திதி இடம்பெறும் இருபத்துநான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி.

பட்ச சிவராத்திரி: தை - தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, 13 நாள்கள் தினமும் ஒரு பொழுது உணவு உண்டு, பதினாலாம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப் பது, பட்ச சிவராத்திரி எனப்படும்.

மாத சிவராத்திரி: பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும். ஆனால் மாத சிவராத்திரி, மாதத்தின் மற்ற திதிகளிலும் வரும்.

மாசி - தேய்பிறை சதுர்த்தசி, பங்குனி - வளர்பிறை திருதியை, சித்திரை - தேய்பிறை அஷ்டமி, வைகாசி - வளர்பிறை அஷ்டமி, ஆனி- வளர்பிறை சதுர்த்தசி, ஆடி- தேய்பிறைப் பஞ்சமி, ஆவணி - வளர் பிறை அஷ்டமி, புரட்டாசி- வளர் பிறை திரயோதசி, ஐப்பசி - வளர்பிறை துவாதசி, கார்த்திகை- வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி, மார்கழி - வளர்பிறை சதுர்த்தசி- தேய்பிறை சதுர்த்தசி, தை-வளர்பிறை திருதியை ஆகிய 14 நாள்களும் மாத சிவராத்திரி எனப்படும்.

மகா சிவராத்திரி!

மூன்றுகோடி
சிவராத்திரி தினங்கள்...
விரதம் இருந்த புண்ணியம்!

ந்து வகை சிவராத்திரியில் ஒன்று யோக சிவராத்திரி. இதுவும் நான்குவிதமாக விளக்கப் படுகிறது.

1. திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல்- இரவு சேர்ந்த அறுபது நாழிகை(24 மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி.

2. திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் அன்று இரவு 4 ஜாமமும் (12 மணி நேரம்) தேய்பிறை சதுர்த் தசி இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரி.

3. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணியில் இருந்து 6 மணி வரை உள்ள நேரத்தில்), அமாவாசை அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந் தாலும் அன்று யோக சிவராத்திரி.

4. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால் அன்றும் யோக சிவராத்திரி.

இந்த நான்கு ‘யோக’ சிவராத்திரி களில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரி யன்று விரதம் இருந்தாலும் அதற்கு ‘மூன்று கோடி சிவராத்திரி’ விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

மகா சிவராத்திரி!

சிவராத்திரி விரத நியதிகள்!

மார்கழி மாத வளர்பிறை சதுர்த் தசி, திருவாதிரை நட்சத்திரத்துடன் வந்தாலும், மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வந்தா லும், அந்த சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்குச் சமம்!சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களைச் (பூஜைகள் போன்றவற்றை) செய்த பின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.

ஆலய தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.

பின்னர் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருள்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவன் கோயிலில் கொண்டுபோய்க் கொடுத்து, சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர அனுஷ்டானங்களை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் பரமேஸ்வரனை (சிவலிங்கத்தை) வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.

சிவராத்திரி பூஜை மாலை 6 மணிக்குத் தொடங்கி மறு நாள் காலை 6 மணி வரையிலும் நான்கு காலமாகச் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் அதற்குரிய அபிஷேக, அர்ச்சனைப் பொருள்கள், நைவேத்தியத்தைச் சமர்ப்பித்து, ஸ்தோத்திரம் பதிகப் பாடல்களைப் பாடி வழிபட வேண்டும் (நான்கு காலங்களுக்கும் உரிய அர்ச்சனைப்பூக்கள், அபிஷேக திரவியங்கள், நைவேத்தியம், பதிகம் முதலான விவரங்களை தொடர்ந்து வரும் பக்கங்களில் காணலாம்).

இங்ஙனம் இரவு முழுக்க விழித்திருந்து வழிபட்டு, மறுநாள் விடியலில் நீராடி, காலை அனுஷ்டானங் களுடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடிக்கவேண்டும்.

அதன் பின் நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.

சிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், கோயில்களில் நடக்கும் பூஜையில் கலந்துகொள்ளலாம்.

சிவராத்திரி (வைகுண்ட ஏகாதசியும்தான்) அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.

தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலான வற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கவோ வேண்டும்.

சிவராத்திரி அன்று இரவு முழு வதும் ‘சிவபுராண’ உபன்யாசம், சிறப்புச் சொற்பொழிவுகள் பெரும்பாலான கோயில்களில் நடைபெறுகின்றன. அவற்றைக் கேட்டு மகிழலாம்.

மகா சிவராத்திரி!

விசேஷமான எட்டு சிவ நாமங்கள்

மகா சிவராத்திரி தினத்தில் கீழ்க்காணும் எட்டு திருப்பெயர்களைக் கூறி சிவனாரைப் போற்றி துதித்தால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் ஸித்திக்கும்.

1. பவாய நம:, 2. சர்வாய நம:, 3. ருத்ராய நம:, 4. பசுபதயே நம:, 5. உக்ராய நம:, 6. மகாதேவாய நம:, 7. பீமாய நம:, 8. ஈசாநாய நம:

மகா சிவராத்திரி!

காசியில் சிவராத்திரி!

சிவத் தலங்களில் தலைமையாகக் கருதப்படுவது காசி. அங்குள்ள சிவன் கோயில்களைக் கணக்கிட முடியாது. காசி நகருக்கு இதயம் போலக் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கிறது. அங்கு சிவ ராத்திரி அன்று ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு முறைப்படி ஹோமங்களும், சிவனைப் பற்றிய துதிகளின் பாராயணமும் விசேஷமாக நடைபெறும். காசியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அபிஷேகமும் அலங்காரமும் அன்று முழுவதுமே நடத்தப்படும். சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றுவார்கள். ஒரே வரியில் சொல்வதானால், காசி முழுவதுமே அன்று ஜகஜ்ஜோதியாக இருக்கும்

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால்கூட, ‘லிங்கோற்பவ’ காலமா கிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன ஞானநூல்கள்.

மகா சிவராத்திரி!

மகத்தான பலன்கள் அருளும் மகா லிங்கோத்பவ காலம்!

சிவபெருமான் லிங்க வடிவமாகத் தோன்றிய காலம் - லிங்கோற்பவ காலம். இவ்வேளையில் சிவலிங்க திருவடிவின் மகிமைகளைப் படிப்பதும் சிந்திப்பதும் சிறப்பு!

உருவம் - அருவம் - அருஉருவம்!

ஸ்காந்த புராணத்தில் பார்வதி திருக் கல்யாணத்தை விவரிக்கும் பகுதியில் லிங்கத் தைப் பற்றிய உண்மையான தகவல் இருக்கிறது. தமிழில் திருமந்திரம் சிவலிங்க தத்துவத்தை விளக்கும்.

வழிபாட்டில் மூன்று வகை உண்டு. உருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு, அருவ வழிபாடு. இவற்றில் நாம் பெரும்பாலும் செய்து வருவது உருவ வழிபாடு. அருவ வழிபாடு என்பது, உருவமற்ற பரம்பொருளைக் குறிக்கும். இதையே வேறு விதமாக பார்த்தால், ‘பார்க்கும் அனைத்தையும் பரம்பொருளாகவே பார்ப்பது’ என்பதே பொருள். ‘பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே!’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொல்கிறாரே, அந்த நிலை. மகான்கள் பலர் சொல்வதும் வேதங்கள் சொல்வதும் இந்த வழிபாட்டைத்தான்.

உருவ வழிபாட்டுக்கும், அருவ வழிபாட்டுக் கும் நடுவில் இருப்பது ‘அருஉருவ வழிபாடு’. லிங்க வழிபாடு இவ்வகையானது.

திசைகளே வஸ்திரம்!

சிவலிங்கத்தைத் தாங்கும் பீடத்துக்கு ‘ஆவுடையார்’ என்று பெயர். இது சக்தியின் வடிவான பூமியைக் குறிக்கும். சிவலிங்கம் ஆகாயத்தைக் குறிக்கும்.

அசையும் பொருள்- அசையாப் பொருள் என அனைத்துமே, ஆகாயம் என்னும் அந்த ஒரே கூரையின் கீழேதான் இருக்கின்றன. அந்த ஆகாயத்தை ‘அண்ட லிங்கம்’ என்று மகான்கள் சொல்வார்கள்.

சிவம் அபிஷேகப் பிரியராயிச்சே! எனில், `இதுவே எல்லை' என்று அளவிடமுடியாத ஆகாய லிங்கத்தை அபிஷேகிக்க, தீர்த்தம் அதிகம் வேண்டுமே, அணிவிக்க பூமாலை யாது, வஸ்திரத்துக்கு எங்கே போவது?

ஆகாய லிங்கத்துக்கு கடல் நீரே தீர்த்தம், நட்சத்திரத் தொகுப்புகளே பூமாலை, திசை களே வஸ்திரங்களாம். இந்தக் கருத்தைச் சொல்லும்படி, அருமையான ஒரு பாடலை திருமூலரின் திருமந்திரத்தில் காணலாம்.

தரை உற்ற சக்தி தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீரது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை
கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே


ஆக, புண்ணிய சிவராத்திரி தினத்தில் கோயிலுக்குச் செல்ல முடியாத சூழலில் - இடத்தில் உள்ளோமே என்ற சங்கடம் தேவை இல்லை. இருக்கும் இடத்தில் இருந்தபடி விண்ணையும் மண்ணையுமே சிவசக்தியாய் பாவித்து வணங்கலாம்; வரம் பெறலாம்!

மூன்றாம் கால பூஜை!

புண்ணிய மகா சிவராத்திரியின் மூன்றாம் காலமே லிங்கோத்பவ காலம் ஆகும். இந்தப் பூஜை வேளையில் சிவ லிங்க மூர்த்தியையும், கருவறைக்குப் பின்னால் கோஷ்டத்தில் உள்ள லிங்கோற்பவ மூர்த்தியையும் நெய் பூசி வென்னீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

கம்பளியால் நெய்த ஆடை களை அணிவித்து மலர்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

லிங்கோற்பவ மூர்த்தியை ருத்ர மந்திரம், சமகம் பாடியபடி அபிஷேகிப்பது விசேஷம்.

நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானைப் பிரம்மனும் திருமாலும் ஆயிரமாயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். இதனை நினைவுகூரும் வகையில் ருத்திரருக்கு வணக்கங்களைக்கூறும் ருத்ரத்தை ஓதுவது சிறப்பு.

பக்தர்கள் `இருநீலனாய் தீயாகி' எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகைப் பாடல்களையும் ஓதி வழிபடலாம்.

மகா சிவராத்திரி!

வீட்டிலேயே பூஜிக்க எளிய வழி!

மூவேழு உலகங்களும் மகேஸ்வரனைப் போற்றித் துதிக்கும் ராத்திரி சிவராத்திரி. இந்த இரவில் ஈசனைத் துதிப்பவர்களைக் கண்டு காலனும் அஞ்சுவான். ஏழ்மையும் இன்மையும் விலகி ஓடும். பகை விலகும். இருவினை நீங்கும். இறைவன் அருள் சேரும்.

இத்தனை சிறப்புகளையும் கொண்டதால்தான் அந்த ராத்திரி மகா சிவராத்திரி. இந்த நாளில் ஆலயங்களில் நான்கு கால பூஜை விமர்சியாக நடைபெறும். அதைக் கண்டு தரிசித்து வழிபட்டால் இணையில்லாப் புண்ணியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் கோயில்களுக்குச் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்காகக் கலங்க வேண்டியதில்லை. வீட்டிலேயே ஈசனுக்கு பூஜை செய்து அற்புத பலன்களைப் பெறலாம்.

நான்கு காலத்துக்கும் தனித்தனியே சிறிய நான்கு ஷணிக லிங்கங்களை உருவாக்கி, ஒவ்வொரு காலத்துக்குமான விசேஷப் பொருள் களைக் கொண்டு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்து வழிபட்டு, அற்புத பலன்களை வீட்டிலிருந்தே வழிபட்டுப் பெறலாம். ஒவ்வொரு காலத்துக்குமான பூஜை விவரங்கள் இங்கே உங்களுக்காக...

மகா சிவராத்திரி!

முதல் கால பூஜை : (இரவு 10 மணி)

வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்

அபிஷேகம் - பஞ்சகவ்யம்

அலங்காரம் - வில்வம்

அர்ச்சனை - தாமரை

நிவேதனம் - பால் அன்னம்

பழம் - வில்வம்

வஸ்திரம் - சிவப்பு

சாத்தும் திரவியம் - பச்சைக் கற்பூரம்

தூபம் - சாம்பிராணி

தீபம் - புஷ்ப தீபம்

பதிகம்: சிவமகாபுராணம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில்

நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க...

மகா சிவராத்திரி!

இரண்டாம் கால பூஜை : (இரவு 12 மணி)

வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்

அபிஷேகம் - பஞ்சாமிர்தம்

அலங்காரம் - குருந்தை

அர்ச்சனை - மல்லிகை, முல்லை

நிவேதனம் - பாயசம்

பழம் - பலா

வஸ்திரம் - மஞ்சள்

சாத்தும் திரவியம் - அகில், சந்தனம்

தூபம் - குங்கிலியம்

தீபம்- நட்சத்திர தீபம்

பதிகம் : கீர்த்தி திருஅகவல்

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்

கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு

அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை

இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்

பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் 145

ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே.

மகா சிவராத்திரி!

மூன்றாம் கால பூஜை : ( நள்ளிரவு 2 மணி)

வழிபட வேண்டிய மூர்த்தம் - லிங்கோத்பவர்

அபிஷேகம் - தேன்

அலங்காரம் - கிளுவை, விளா

அர்ச்சனை - வில்வம், சாதி மலர்

நிவேதனம் - எள்அன்னம்

பழம் - மாதுளம்

வஸ்திரம் - வெண்பட்டு

சாத்தும் திரவியம் - கஸ்தூரி சேர்ந்த சந்தனம்

தூபம் - தேவதாரு

தீபம்- ஐந்து முக தீபம்

பதிகம் : திருவண்டப்பகுதி

இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க

அரிய அதில் அரிய அரியோன் காண்க

மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க

நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க

மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க

நான்காம் கால பூஜை : (அதிகாலை 4 மணி)

வழிபட வேண்டிய மூர்த்தம் - ரிஷபாரூடர்

அபிஷேகம் - கருப்பஞ்சாறு

அலங்காரம் - கருநொச்சி, ரோஜா

அர்ச்சனை - நந்தியாவட்டை

நிவேதனம் - வெண்சாதம்

பழம் - நானாவித பழங்கள்

வஸ்திரம் - நீலம்

சாத்தும் திரவியம் - புனுகு

தூபம் - லவங்கம்

தீபம் - மூன்று முக தீபம்

பதிகம் : போற்றித் திருஅகவல்

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி

பாகம் பெண் உரு ஆனாய் போற்றி

பராய்த் துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

மகா சிவராத்திரி!

மகாசிவராத்திரி... உள்ளத்தை உருக்கும்சிவப்பாடல்...

அடுத்த கட்டுரைக்கு