Published:Updated:

தீவினைகள் நீக்கும் மகா சுதர்சன ஹோமம்!

ஓவியம்: அரசு ஆர்ட்ஸ்

ஹோமங்களில் தலைசிறந்தது ஸ்ரீசுதர்சன ஹோமம். வாழ்வில் பல நன்மைகளை பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம்.

உண்மையான பக்தர்களுக்கு சதாசர்வ காலமும் அபயம் அளிக்கும் ஸ்ரீசுதர்சன சக்கரம், துஷ்டர்களை வதம் செய்யக் கூடியது. பக்தியையும் தர்மத்தையும் நிலை நாட்டும் ஆற்றல், அதர்மத்தின் செருக்கை அடக்கும் வல்லமையைக் கொண்டவர் ஸ்ரீசுதர்சனர்.

சுதர்சன ஹோமம்
சுதர்சன ஹோமம்

ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் அனைத்தும் போற்றுதலுக்கு உரியவை. பகவான் எந்த அவதாரம் எடுத்தாலும், அப்போது அவர் தாங்கியுள்ள ஆயுதங்களும் முக்கியமான இடம் பெற்றுவிடும். மகாவிஷ்ணுவின் ஒவ்வோர் அவதாரத்திலும் ஸ்ரீசுதர்சனரும் உடன் வந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அவற்றைச் சுருக்கமாக இங்கு காண்போம்.

அவதாரங்களில் ஸ்ரீசுதர்சனர்

வராக அவதாரத்தின்போது ஹிரண்யாட்சன் என்னும் அசுரனை அழிக்க வராகத்தின் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்னர் இருந்தார். பக்த பிரகலாதனைக் காப்பாற்ற, நரசிம்ம அவதாரம் எடுத்து, ஹிரண்யகசிபுவை அழித்தபோது, நரசிம்மரின் கை நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர்.

மகாவிஷ்ணு, ராம அவதாரம் எடுத்தபோது அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார் (பரதனாக வந்தவர் ஸ்ரீசுதர்சனர் என்றும் சில புராணங்கள் சொல்கின்றன). பலராமர் அவதாரத்தின்போது அவரது ஏர்க் கலப்பையின் சக்தியாக ஸ்ரீசுதர்சனர் எழுந்தருளி இருந்தார். கிருஷ்ண அவதாரத்தின்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்து நீதி நிலைக்கப் பாடுபட்டார் ஸ்ரீசுதர்சனர்.

பௌண்ட்ர வாசுதேவன், சிசுபாலன், ஜெயத்ரதன் போன்றோரை அழிப்பதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு உதவியது ஸ்ரீசுதர்சனரே. கஜேந்திர மோட்சம் கதையிலும் ஒரு பக்த யானைக்கு உதவ வந்தது ஸ்ரீசுதர்சனர்தான்.

மகாவிஷ்ணுவின் ஆயுதங்கள் எண்ணற்றவை. இருப்பினும் அவற்றுள் மிகவும் போற்றிச் சொல்லப்படுபவை ஐந்து ஆயுதங்கள். சங்கு, கதாயுதம், வாள், வில் மற்றும் சக்கரம். இதில் ஸ்ரீசுதர்சனச் சக்கரமே ஸ்ரீசக்கரத்தாழ்வார் என்னும் பெருமையை அடைகிறது.

ஸ்ரீசுதர்சனரைப் போற்றுவோம்

வழிபாட்டு நூல்கள் ஸ்ரீசுதர்சனரை போற்றுகின்றன! ‘ஆயிரம் கைகளுடன், சிவந்த கண்கள் கொண்டவரும், ஆயிரம் சூரிய ஜுவாலையை அழகான மணிகள் போல் அணிந்தவரும், பஞ்சபூதங்களின் மனோரூபத்தைப் பெற்றவரும், பகவானை மனத்தளவில் நினைத்த மாத்திரத்தில் வரக் கூடியவரும், சூரிய- சந்திரன்- அக்னி போன்று நமக்கு சக்தி கொடுப்பவரும், பக்தர்களுக்கு எப்போதும் சௌக்கியம் தருபவருமான ஸ்ரீசுதர்சனரை வணங்குகிறேன்.

ஞானம்- பலம்- ஐஸ்வர்யம்- வீர்யம் போன்றவற்றை அருள்பவரும், மந்திரங்களில் ராஜா போல் விளங்குபவரும், சத்தியத்தைக் காப்பாற்றுபவரும், விஷ்ணு பக்தியைப் பரப்பக் கூடியவரும் ஆகிய ரிஷி நாராயணனை வணங்குகிறேன்’ - என்று வழிபாட்டு நூல்கள் போற்றுவதிலிருந்து ஸ்ரீசுதர்சனரின் தேஜோ ரூபத்தை (சக்கரத்தின் தன்மையை) அறியலாம்.

இத்தகு மகிமைகள் கொண்ட ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கி, அவரின் பேரருளைப் பெறும் வகையில் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.

சுதர்சன சக்கரம்
சுதர்சன சக்கரம்

மகா ஸ்ரீசுதர்சன ஹோமமும் நியதிகளும்...

பொதுவாக ஹோமங்களை இரண்டு வகையாகச் சொல்வார்கள். ஒன்று- காம்ய ஹோமம்; மற்றொன்று - நைமித்திக ஹோமம். செல்வம், உடல் நலம் போன்ற வளங்களை பெறும் பொருட்டு, தனிப்பட்ட முறையில் அவரவர்கள் வசிக்கும் வீட்டிலேயே செய்யும் ஹோமங்கள், காம்ய ஹோமம் ஆகும்.

அடுத்த வகையான நைமித்திக ஹோமத்தை உலக நலனுக்காகவும் அமைதிக்காகவும் பொதுவான ஓர் இடத்தில் செய்வார்கள். நாட்டில் சுபிட்சம் நிலவவும் மழை வேண்டியும் கோயில் மாதிரியான பொது இடங்களில் பலர் முன்னிலையில் இத்தகைய ஹோமங்களைச் செய்வார்கள் (இவற்றில் சில ஹோமங்களைச் சூழ்நிலை கருதி வீட்டிலும் செய்வது உண்டு).

இப்படியான ஹோமங்களில் மிகுந்த வல்லமை பெற்றது மகா ஸ்ரீசுதர்சன ஹோமம். நம் வீடுகளில் நடக்கும் கிரகப்பிரவேசம், ஆயுஷ்ய ஹோமம் போன்ற எந்த ஒரு விசேஷத்தின்போதும் குடும்ப ஐஸ்வர்யம் கருதி, ஸ்ரீசுதர்சன ஹோமத்தையும் சேர்த்தே நடத்தி வைப்பது உண்டு.

அற்புதமான இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றைச் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும். ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரத்தை 12 லட்சம் தடவை உச்சரித்து ஒருவர் ஹோமம் செய்தால் இந்த மந்திரத்துக்கு உண்டான ஸித்தி கிடைக்கும் என்பார்கள்.

எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம் ஆகிய ஒவ்வொன்றையும் கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் உரிய மந்திரத்தை உளமார உச்சரித்து ஜபிக்க வேண்டும் என்கின்றன ஞான நூல்கள்.

மகா சுதர்சன ஹோமத்தின்போது, சக்தி வாய்ந்த பல மந்திரங்கள் சொல்லி ஹோமப் பொருட்களை அக்னி பகவானுக்குச் சமர்ப்பிக் கிறோம். பொதுவாக இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஸ்ரீசுதர்சன காயத்ரீ, ஸ்ரீசுதர்சன மாலா மந்திரம், ஸ்ரீநரசிம்ம மந்திரம், ஸ்ரீநரசிம்ம காயத்ரி, ஸ்ரீவிஷ்ணு காயத்ரி, ஸ்ரீலட்சுமி காயத்ரி, ஸ்ரீலட்சுமி மந்திரம், ஸ்ரீதன்வந்திரி மந்திரம், பஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வது உண்டு. இதனால் இந்த ஹோமத்தின் பலன் அளவிடற்கரியதாக விளங்குகிறது.

சுதர்சன மூர்த்தி
சுதர்சன மூர்த்தி

இனி, ஸ்ரீசுதர்சன ஹோமங்களை எந்தெந்தப் பிரச்னைகளுக்காக எல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

மகா ஸ்ரீசுதர்சன ஹோமம் அருளும் பலன்கள்

தீர்க்க ஆயுசு கிடைக்க: பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும், கொடும் நோய்கள் நம்மை விட்டு நீங்கவும் சுதர்சன ஹோமம் அருள் செய்யும். அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்க: வறுமை எனும் கொடிய துன்பத்தை விரட்ட சுதர்சனரின் அருளைப்பெற்றுத் தரும்.

சத்ரு பயம் நீங்கும்: பகவானின் பிரயோகச் சக்கரமான ஸ்ரீசுதர்சன மூர்த்தியை மனதார தியானித்து, உளமாரப் பிரார்த்தித்துச் செய்யப்படும் இந்த ஹோமத்தால் சத்ரு பயம் நீங்கும். எதிரிகளின் சூழ்சிகள், சதித் திட்டங்கள் முதலானவற்றிலிருந்து இந்த ஹோமம் நம்மைக் காக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

ஸ்ரீசுதர்சன மூர்த்தியை தியானித்து வணங்கிச் செய்யப்படும் இந்த ஹோமம் ஆபத்துகளிலிருந்து நம்மைக் காக்கும். பயணம், நெருப்பு தொடர்பான பணிகள், போர்ச் சுழல், காட்டுப் பணிகள் முதலான சூழலில் நம்முடன் இருந்து ரக்ஷிக்கும் சுதர்சனமூர்த்தியின் துணையை இந்த ஹோமம் பெற்றுத் தரும்.

தீவினைகள் நீங்கவும் தீய சக்திகள் விலகவும்: பூர்வஜன்ம வினைப் பயனால் சிலர் தீவினைகளுக்கும் தீய சக்திகளின் பாதிப்பு களுக்கும் ஆளாக நேரிடும். இதுபோன்ற பாதிப்புகள் நம்மை அணுகவிடாமல் காக்கும் வல்லமை கொண்டது ஸ்ரீசுதர்சன ஹோமம்.

மேலும் மகா சுதர்சன ஹோமத்தில் சங்கல்பித்து வழிபடுவதால், எளிதில் கிரஹிக்கும் ஆற்றல் கிடைக்கும், வீட்டில் கால்நடைச் செல்வங்கள் நிறைய பலனளிக்கும், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாவார்கள், கண்ணுக்குத் தெரியாத நோய்கள் குணமாகும். அத்துடன், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய பாவம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

பாரத பூமி, கர்ம பூமி. எந்த ஒரு செயலை உத்தேசித்தும் இங்கு சொல்லப்படும் மந்திரங்கள் ஸித்திக்கும். அதாவது பலிக்கும். இந்த பூமிக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. ஆகவே நம் தேசத்தில் செய்யப்படும் ஹோமங்களும் மந்திர ஜபங்களும் கோடானுகோடி பலன்களை நமக்கு அள்ளித் தரும்.

அவ்வகையில் உலக நன்மைக்காகவும் வாசகர்கள் பலன் பெறவும், அவர்களின் குடும்பம் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனை வரும் செழித்தோங்கும் பொருட்டும் மிக வல்லமை மிக்க மகா மகா ஸ்ரீசுதர்சன ஹோமம் நடைபெறவுள்ளது.

சக்தி விகடனும் திருவள்ளூர் - பூங்காநகர் சிவாவிஷ்ணு ஆலய நிர்வாகக் குழுவினரும் இணைந்து நடத்தும் மகா சுதர்சன ஹோமம், நிகழும் சார்வரி வருடம் மாசி மாதம் 11-ம் தேதி (பிப்ரவரி-23) செவ்வாய்க்கிழமை அன்று, திருவள்ளூர் பூங்காநகரில் அமைந்துள்ள அருள்மிகு சிவாவிஷ்ணு ஆலயத்தில் வைத்து நடைபெறவுள்ளது. மாசி ஏகாதசிப் புண்ணிய தினத்தில் ஹோமம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது.

ஜல நாராயணர் தரிசனம்!

மகாவிஷ்ணு ஆழிசூழ் நாயகனாக திருப்பாற்கடலில் அருள் பாலிப்பார். பூலோகத்தில் ஸ்வாமி ஜலநாராயணராக அருளும் தலங்கள் வெகுஅபூர்வம். நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் எம்பெரு மானை ஜலநாராயணராக பக்தர்கள் தரிசிக்கலாம். நம் தமிழகத்தில் - திருவள்ளூர் பூங்காநகரில் அமைந்துள்ள ஆலயத்தில் ஸ்ரீஜலநாராயணர் அருள்பாலிக்கிறார். வரம்பல அருளும் அற்புதராய் அருள்கிறார் இந்த ஸ்வாமி.

சிவபிரானும், மகாவிஷ்ணுவும் குடிகொண்டிருக்கும் இந்தக் கோயிலில், காலையில் 10 முதல் மதியம் 2 மணி வரை ஹோம வைபவம், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அற்புதமான இந்த ஹோமத்தில் வாசகர்கள் தங்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், உறவினர் மற்றும் நண்பர்களுக்காகவும் சங்கல்பம் செய்து பலன் அடையலாம்.

ஸ்ரீசுதர்சன மூலமந்திரம்

ஓம் சஹஸ்ரார ஹும்பட்

ஸ்ரீசுதர்சன காயத்ரீ

ஸுதர்சனாய வித்மஹே

மஹா ஜ்வாலாய தீமஹி

தந்நோ சக்ர ப்ரசோதயாத்:

வாசகர்களின் கவனத்துக்கு:

ந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்), திருவள்ளூர் - பூங்காநகர் சிவாவிஷ்ணு ஆலயத்தில் அருள்மிகு ஜலநாராயணர் சந்நிதியில் விசேஷமாய்ப் பூஜிக்கப்பட்ட காப்பு ரக்ஷை ஆகியவை (5.3.2021 தேதிக்குள்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் யூடியூப் சேனல் மற்றும் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன் பதிவு செய்ய க்ளிக் செய்யவும்: https://events.vikatan.com/204-maha-sudarsana-homam/

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு:

89390 30246

மகா சுதர்சன ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களுக்கு,

ஓர் ஆண்டுக்கான சக்திவிகடன் டிஜிட்டல் சந்தா பரிசு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு