Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்!

`பாபா மாமி' ரமா சுப்ரமணியன் ஓவியம்: GVA

பிரீமியம் ஸ்டோரி

மகன் சித்தய்யாவை அழைத்துவர கண்டிமல்லய்யாபள்ளி கிராமத்துக்கு வந்து சேர்ந்தார் பீர்சாஹிபு. மடத்தில் சித்தய்யாவைக் கண்டதும், ஓடிச்சென்று அணைத்துக்கொண்டார். ``உடனே புறப்படு. இனியும் உன் அன்னை யால் ஒரு விநாடிகூட உன்னைப் பிரிந்து இருக்க முடியாது’’ என்றார். ஆனால் சித்தய்யா ‘`தந்தையே! நான் திரும்பிச் செல்வதற்காக இந்த இடத்துக்கு வரவில்லை!’’ என்றார்.

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்!

கன் ஏதோ குழந்தைத்தனமாகப் பேசுகிறான் என்று கருதிய பீர்சாஹிபு, “மகனே! வீட்டுக்கு வராமல் இங்கிருந்துகொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?’’ எனக் கேட்டார்.

``கல்வி கற்கப் போகிறேன்’’

``கல்வியைத் தொடர நம் கிராமத்து அருகிலேயே சிறந்த கல்விக் கூடங்கள் இருக்கின் றனவே?!’’

தந்தையின் இந்தக் கேள்விக்கு சித்தய்யா சொன்ன பதில் அனை வரையும் வியக்க வைத்தது.

“இந்த உலகில் எல்லோரும் கற்க விரும்பும் கல்வி எல்லா இடங்களிலும் கிடைக்கும். ஆனால், நான் கற்க விரும்பும் பிரம்ம வித்தை இங்கு மட்டுமே கிடைக்கும்; வேறெங்கும் கிடைக்காது’’ என்றான் சித்தய்யா. அவன் கூறியது பீர்சாஹிபுவுக்குப் புரியவில்லை.

``பிரம்ம வித்தை என்றால் என்ன?’’ என்று கேட்டார்.

சித்தய்யா பொறுமையாக பதில் உரைத்தான்.

“தந்தையே! பிரம்ம வித்தை என்பது எல்லோருக்கும் கிடைக்காத, எல்லோராலும் அடைய இயலாத தெய்விக ஞானமாகும். ஆத்ம ஞானியர் மட்டுமே இத்தகைய அறிவைப் பெறுவதற்குத் தகுதியை உடையவர்கள். இந்த ஞானம் மாயையிலிருந்து விடுதலைச் செய்து, சத்தியத்தை உணரச் செய்யும். ஒருவர் தன்னை அறிந்துகொள்ள உதவும். அற்புதமான இந்த வித்தையைக் கற்கவே உறவுகளை விட்டுவிட்டு இங்கே ஸ்வாமியிடம் வந்துள்ளேன்!’’

தனது மகன் இவ்வாறு பிடிவாதம் செய்வதைக் கண்ட பீர்சாஹீபு, “மகனே! இந்தச் சிறிய வயதிலேயே ஏன் சாதுக்களுக்கு சேவை செய்கிறாய்? நாம் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வாறிருக்க, உனக்கு இந்து மத குருவின் உபதேசம் ஏன் தேவைப்படுகிறது?

இந்து மத சாஸ்திரங்களும் தாய் தந்தையை இறைவனாகப் போற்றச் சொல்கின்றன. நீயோ எங்களைத் தனியே தவிக்கவிட்டு இங்கு வந்து தங்குவது நியாயமா? பெற்றோரைத் தவித்துக்கொண்டிருக்க நீ குருவுக்கு சேவை செய்தால், முக்தி எவ்வாறு கிட்டும்...’’

சித்தய்யாவின் தந்தை இவ்வாறு பேசிக் கொண்டிருக்க, அந்தச் சிறுவனோ குருவின் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டான்.

அவனது செயலைக் கண்டு தந்தை கோபம் கொண்டார்; குருவை நிந்தனை செய்ய ஆரம்பித்தார்.

“மகனே! இதுபோன்ற குருமார்களைப் பற்றி நீ அறியமாட்டாய். இவர்கள் உபதேசம் செய்கிறேன் என்று கூறி மாயை என்ற இருளில் மூழ்கடித்துவிடுவர்கள். சீக்கிரம் புறப்படு... உடனே நாம் இந்த இடத்தைவிட்டுச் சென்றாக வேண்டும்’’ என்று கூறி அவன் கையைப் பிடித்து இழுத்தார்.

அவனோ அமைதியாகச் சொன்னான்: “தந்தையே! குரு உபதேசம் என்பது மாயாவில் மூழ்கடிப்பதல்ல; மாயையில் இருந்து நம்மை மீட்பது. தாங்கள் அறியாமையால் இவ்வாறு பேசுகிறீர்கள். உலக வாழ்க்கை மாயையால் சூழப்பட்டது. கர்வமும் அறியாமையும் நம் புலன்களை இறைவனை நோக்கிச் செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றன. குருவருள் இருந்தால் மட்டுமே நாம் விடுதலை அடையமுடியும். என்னை மன்னித்துவிடுங்கள்... நான் கூறியதை ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்... உண்மையை உணர்வீர்கள்!’’ என்றான்.

இதைக் கேட்டதும் அவன் தந்தை பொறுமை இழந்தார். உணர்ச்சி வயப்பட்டவராக பேசி னார்: “மகனே! நீ மணவாழ்வில் நுழைய வேண்டும். அதுவே எங்கள் விருப்பம். நம் உறவினரின் பெண் ஒருத்தி உனக்காகவே வளர் கிறாள் என்பதையும் நீ அறிவாய். ஆகவே, இப்போது புறப்படு... நாம் கிளம்புவோம்’’ என்றார்.

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்!

சித்தய்யா, “மன்னியுங்கள் தந்தையே! உலகின் சுகபோக வாழ்வை விடுத்து, என் குருநாதருக்கு சேவை செய்து வாழும் வாழ்வையே உயர்ந்த தாகக் கருதுகிறேன்.

மட்டுமன்றி இங்கிருக் கும் ஸ்வாமி வீரபிரம்மேந்திரரைப் பற்றி தாங்கள் முழுமை யாக அறியவில்லை. அவர் ஆத்மஞானத்தை அடைந்தவர். எல்லாம் வல்ல இறைவனின் அவதாரம் அவர். அவரின் துணையோடு என் பயணம் ஆரம்பமாகும்.

எனக்குத் தெரியும்... ஆத்ம ஞானத்தைத் தேடும் எனது இந்தப் பயணம் கடின மானதுதான். இதில் வெற்றி பெற நீங்களும் என்னை ஆசீர்வதியுங்கள்... தயைகூர்ந்து இதற்குமேல் என்னை வற்புறுத் தாதீர்கள்’’ என்று உறுதிபடத் தெரிவித்தவன், தந்தையின் ஆசியையும் வேண்டி நின்றான்.

பதினைந்தே வயதான தன் செல்வ மகனின் பேச்சு பீர்சாஹிபுவின் மனதைத் தொட்டது. அவனுடைய உறுதியான நிலைப்பாட்டை புரிந்துகொண்டார். கண்ணீ ருடன் மகனை இறுக அணைத்துக் கொண்டார்.

“அன்பு குமாரனே! இந்தச் சிறிய வயதில் உனக்குள் இவ்வளவு உயர்ந்த சிந்தனை களா... பெருமிதமாக உள்ளது... ஒரு தந்தையாக என் நிலையில் மட்டும் இருந்து சிந்தித்ததால் ஏதேதோ பேசிவிட்டேன். இறைவனின் தீர்மானம் எப்படியோ அப்படியே நடக்கட்டும்’’ என்றார்.

சித்தய்யாவும் மனம் உருகினான்.

“தந்தையே! மனிதர்கள் சம்சாரம் என்ற சூரியனின் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க, ஆத்ம ஞானம் என்ற மிகப்பெரிய மரம் ஒன்றுதான் உதவும். அதுவே நிரந்தமான அமைதியும், ஆனந்தமும் ஆகும். அவ்வகையில் நம்மை நல்வழியில் நடத்திச் சென்று, ஆத்ம ஞானத்தை அடையச் செய்யும் சத்குருவைத் தேடிச் செல்லும் பயணம் ஒன்றே, நமக்கு நிரந்தர ஆனந்தத்தை தரவல்லது. நான் என் சத்குருவைக் கண்டுகொண்டேன். தாங்கள் கவலையின்றி செல்லுங்கள். அன்னைக்கும் உண்மையைப் புரிய வைத்து ஆறுதல்படுத்துங்கள்’’ எனக் கூறி கரம் கூப்பி வணங்கினான்.

பீர்சாஹிபு மகனின் சிந்தனையைக் கண்டு பெருமிதம் கொண்டாலும், அவனைப் பிரியப் போகிறோமே என்று உள்ளுக்குள் பரிதவிக்கவும் செய்தார். வீரபிரம்மேந்திர ஸ்வாமியை நோக்கி, ``ஸ்வாமி! என் மகன் உம்மையே நம்பி வந்துள்ளான். அவன் விரும்பும் ஞானத்தை அளித்து, அவனை உங்களின் புத்திரனைப் போல பாதுகாத்துக் காப்பாற்றுங்கள். உங்களுக்கு என் சலாம்...’’ என்று கூறி அவரை வணங்கிவிட்டு, தமது மகனை இறுக அணைத்துக்கொண்டார்.

“மகனே! பணிவான சேவையின் மூலம் குருவின் அன்புக்குப் பாத்திரமாக வேண்டும். நீ தேடும் ஞானத்தை அடைய என் மனம் நிறைந்த ஆசிகளும் வாழ்த்துகளும்!’’ எனக்கூறி வாழ்த்தினார்.

பின்னர் ஸ்வாமியின் துணைவியான ஶ்ரீகோவிந்தம்மாவை வணங்கி, ``என் மகன் சிறுவன். அவன் ஏதேனும் தவறு செய்தாலும் மன்னித்து நல்வழிப்படுத்துங்கள்’’ என்று வேண்டிக்கொண்டார்.

அத்துடன் அங்கிருந்த மற்ற சீடர்களிடம், ``இன்று முதல் என் சித்தய்யா உங்களில் ஒருவன். மதத்தைக் காரணம் காட்டி அவனைப் புறக்கணித்து, அவன் மனதைப் புண்படுத்தி விடாதீர்கள்’’ என்று கேட்டுக்கொண்டார். பிறகு, கனத்த மனத்துடன் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டார் பீர்சாஹிபு.

கிராமத்திலிருந்து வெளியேறுவதற்குமுன் அங்கு வசித்த தன் நண்பர் ரெட்டியின் வீட்டுக் குச் சென்றார். நண்பரிடம் வீரபிரம்மேந் திரரின் மடத்தில் மகன் இருக்கும் தகவலைச் சொல்லி, அவ்வப்போது மடத்துக்குச் சென்று அவனின் நலன் அறிந்து விவரம் சொல்லும்படி வேண்டிக் கொண்டார்.

பிறகு, தன் கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் மூலம் அனைத்தையும் அறிந்த சித்தய்யாவின் அன்னையும் மகனின் நிலையைப் புரிந்துகொண்டார். தன் புதல்வன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசீர்வதித்தார். அதற்குப்பின்னர் சித்தய்யாவின் பெற்றோர் இறைப்பணியில் தங்களை அர்ப்பணித்து பல சேவைகள் செய்து வாழ்ந்தனர்.

இங்கே, சித்தய்யாவை சீடராக ஏற்குமுன்னர் அவர் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாரா என்று சோதிக்க விரும்பினார். குருவின் உபதேசமும் முக்தி நிலை என்ற விடுதலை உணர்வும் பல சோதனைகளைக் கடந்த பிறகே ஒருவருக்கு வாய்க்கும். சித்தய்யாவுக்கும் அப்படியான சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், சித்தய்யா எதன்பொருட்டும் தன் நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை.

ஸ்வாமி, “சித்தய்யா! இவ்வுலகில் வாழும் மனிதர்கள் பதிமூன்று விதமான மாயைகளால் சூழப்பட்டு, அவற்றிலிருந்து வெளியே வர இயலாமல் மேலும் மேலும் அவற்றுக்குள்ளேயே சிக்கித் தவிக்கின்றனர். பெரியவர்களின் நிலையே அவ்வாறிருக்க, சிறியவனான நீ எவ்வாறு அவற்றிலிருந்து மீண்டு வருவாய். பரசிவ யோகத்தைப் பற்றி அறியும் வயது உனக்கில்லை. அதைக் காண்பதற்கும் உணர்வதற்கும் திவ்யமான பேரொளி தேவை. அந்த ஒளியை உன்னால் தாங்க இயலாது. ஒருவேளை அந்த ஒளியை நீ தாங்கிக்கொண்டாலும் அதன் தத்துவத்தை உன்னால் உணர இயலாது. ஆகவே குழந்தைத் தனமாக பேசுவதை விடுத்து, உன் பெற்றோரிடம் செல்!’’ என்றார்.

ஆனால் சித்தய்யா உறுதியாகச் சொன்னார்: ``எத்தகைய மூடனாக இருந்தாலும் ஸ்வாமியின் பரிபூரண கிருபை இருந்தால் போதும் அவன் ஞானியாக முடியும். உங்களின் பாதங்களை இறுகப்பற்றிக் கொண்டிருக்கும் நான், எந்த நிலையில் இருந்தாலும் என்னை மாற்றும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதை அறிவேன். ஸ்வாமி! இனியும் என்னைச் சோதிக்காதீர்கள். அவ்வாறு சோதித்தால் இங்கேயே என் உயிரை தியாகம் செய்துவிடுவேன்!’’

ஸ்வாமியின் மனம் கரைந்தது. “என் அன்பு சித்தா! உன்னைப் போல வைராக்கியம் உடைய பாலகனை நான் இதுவரை கண்டதில்லை. உனது குருபக்தி மகத்துவம் வாய்ந்தது.

பூர்வஜன்ம பயனாலேயே இங்கு வந்து சேர்ந்திருக்கிறாய். இனி நீ வருந்த வேண்டிய அவசியம் இல்லை. சுக - துக்கங்களை சமமாக பாவிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள். அருகில் வா... பத்மாசனத்தில் அமர்ந்துகொள். பத்மாசன நிலையே ஒருவருக்குக் கற்பிக்கப்படும் உபதேசத்தின் முதற்படி” என்று கூறினார்.

சித்தய்யா அகமகிழ்ந்தார்; முகம் மலர்ந்தார். குரு சொன்னபடியே பத்மாசனத்தில் அமர்ந் தார்; ஶ்ரீவீரபிரம்மேந்திரரின் உபதேசம் கிடைக்கப்பெற்றார்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு