Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 12

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

ஓவியங்கள்: ஜீவா

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 12

ஓவியங்கள்: ஜீவா

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

நவாபு விடுத்த அழைப்பை ஏற்று, அவருடைய அவைக்கு எழுந்தருளினார் வீரபிரம்மேந்திர ஸ்வாமிகள். அவரை வணங்கி வரவேற்ற நவாபு, ``மகா யோகீஸ்வரரே! இன்று இந்த ஏழையின் உபசரிப்பை ஏற்று ஆசீர்வதிக்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டர்.

நடக்கவிருப்பதை நன்றாகவே அறிந்த ஸ்வாமி சிரித்துக்கொண்டே, “என்னை உபசரிக்க உனக்குச் சகல உரிமைகளையும் அளிக்கிறேன்!” என்றார்.

அப்போது, ஸ்வாமியின் ஆற்றலைச் சோதிக்க எண்ணி அற்பத்தனமான செயலைச் செய்தார் நவாபு. அவரின் உத்தரவுப்படி சேவகர்கள் தங்கத் தட்டு ஒன்றை ஏந்திவந்தனர். அதில் மாமிசத்தை வைத்து பட்டுத்துணியால் மூடி கொண்டு வந்திருந்தனர் சேவகர்கள்.

அந்தத் தட்டை ஸ்வாமியின் முன் வைத்து, தனது காணிக்கையாய் ஏற்கும்படி வேண்டினார் நவாபு. ஸ்வாமி முக்காலமும் உணர்ந்தவர் ஆயிற்றே. நவாபுவின் எண்ணங்களையும் அவர் என்ன செய்திருக்கிறார் என்பதையும் அறியாதவரா என்ன?

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 12

காணிக்கையை ஏற்றுக்கொண்டவராக, சிறு புன்னகையோடு பட்டுத் துணியை விலக்கினார். அவ்வளவுதான் நவாபு நடுங்கிப் போனார். உடல் வியர்த்தது அவருக்கு. காரணம், தட்டில் மாமிசங்களுக்குப் பதிலாக நறுமணப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. மறுகணம், ஸ்வாமியின் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் நவாபு.

“ஸ்வாமி! எனது அற்பத்தனத்தை நினைத்து வெட்கப்படுகிறேன். என்னை மன்னியுங்கள். ஆனால், எனது நோக்கம் தங்களை அவமானப் படுத்துவதல்ல; உமது ஆற்றலைக் குறித்து மற்றவர்கள் கூறியதைக் கேட்ட நான், நேரில் காண ஆர்வம் கொண்டேன். அந்த ஆர்வத்தில் மகா பாவம் செய்துவிட்டேன்... என்னை மன்னியுங்கள்’’ என்று வேண்டினார்.

ஸ்வாமிகளும் அவரை மன்னித்து அருளினார். மறுநாள் காலையில் ஸ்வாமிகளை தரிசித்த நவாபு, “பரமாத்மா! தங்கள் தரிசனத்தால் ஞானம் பெற்றேன். என் பந்தங்களிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டேன். தயைகூர்ந்து, தாங்கள் இயற்றிய காலக்ஞானம் அருள் வாக்குகளை என் தகுதிக்கேற்ப எனக்கு உரைக்க வேண்டுகிறேன்’’ என்றார்.

ஸ்வாமி அவரிடம், `‘குழந்தாய்! நான் சொல்வதை நன்றாகக் கவனித்து கேட்பாயாக. கலியுகத்தின் பேரழிவுக்கு முன் நிகழப்போகும் விஷயங்களை அறிவதன் மூலம், அழியக்கூடிய உலகப் பொருள் களின் மீதான இச்சை நம்மை விட்டு நீங்கும்’’ என்று கூறிவிட்டு, காலக்ஞானத்தைப் பற்றி நவாபுக்கு எடுத்துரைத்தார்.

``உன்னைச் சார்ந்தோர், உன் மரபினர் அனைவரும் இன்னும் சில காலத்தில் இந்தத் தேசத்தைவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால், அச்சம்மாவால் கட்டப்பட்ட மடத்தில், என்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம், சூரியனும் சந்திரனும் உள்ளவரையிலும் நிலைத் திருக்கும்.

அனைவரும் அந்தச் சிவ லிங்கத்தை வழிபட்டுத் தங்களின் பாவக் கணக்குகளைத் தீர்த்துக் கொள்வார்கள். மடத்தில் சிவலிங் கத்தைத் தவிர வேறு எதுவும் எஞ்சி யிருக்காது...’’ என்று நிறைவு செய்தவர், ``நான் இப்போது உங்களிடம் இருந்து விடைபெறும் நேரம் வந்து விட்டது’’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்!

காலக்ஞானி மகா யோகி வீரபிரம்மேந்திரர் தமது 23-ம் வயது வரையிலும் பனகானப்பள்ளி கிராமத்தில் வசித்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு கண்டி மல்லய்யா பள்ளி என்ற கிராமத்தை அடைந்தார். இந்தக் கிராமத்தில்தான் ஸ்வாமி ஜீவ சமாதி அடைந்தார். கடப்பா மாவட்டத்தில் அமைந்த இந்தக் கிராமம், ஸ்வாமியின் வருகைக்குப் பிறகு உலகம் போற்றும் புண்ணிய க்ஷேத்திரம் ஆனது.

இந்தக் கிராமத்துக்கு வந்த ஆரம்ப காலத்தில் தம்மை யாரென்று ஸ்வாமிகள் எவரிடமும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஞானியரும் மகான்களும் சாமானியர்களாக மக்களோடு மக்களாக வாழ்ந்து, நம் பொருட்டு - நம் நன்மைக் காகவே பல இன்னல்களை அனுபவித்தனர்.

ஸ்வாமி வீரபிரம்மேந்திரர், அந்தக் கிராமத்தாரி டம் தன்னை `புடலூரு வீரண்ணா' என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். தச்சுத் தொழில் செய்யும் விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். அவரிடம் கிராமத்தினர் மரச் சாமான்களைக் கொடுத்து, அவற்றைச் சீர்செய்து தரும்படி கேட்டுக்கொண்டனர். வேறு சிலர், புதிய மரச் சாமான்களை உருவாக்கித் தரும் பணியைக் கொடுத்தனர். ஸ்வாமியும் அனைத்துப் பணிகளையும் செவ்வனே செய்து வந்தார்.

வீரபிரம்மேந்திரர்
வீரபிரம்மேந்திரர்


இந்த நிலையில் கிராம தேவதையான பொலேரம்மாவுக்குப் பூஜை செய்யும் நாள் வந்தது. சற்று தூரத்தில் உள்ள அந்த அம்மனின் கோயிலுக்குக் கிராமத்தார் அனைவரும் பாத யாத்திரையாகப் புறப்பட்ட ஆயத்தமாயினர்.

பூஜை மற்றும் கிராமத்தவரின் உணவு தேவைக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பை, கிராம அதிகாரியான கண்டிமல்லய்யா ரெட்டி ஏற்றுக்கொண்டார். விழா செலவுக்காக கிராம மக்களிடம் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது.

கிராமவாசிகள் அவரவர் தகுதிக்கு ஏற்ப நன்கொடை அளித்தனர். வசூல் செய்யும் குழுவினர் ஸ்வாமியின் இல்லத்தை யும் அடைந்தனர். அவர்களில் வயதில் மூத்த ஒருவர், ``வீரண்ணா! பொலேரம்மா விழாவுக்கு வசூல் செய்கிறோம். நீயும் உன்னால் முடிந்த தொகையைக் கொடு’’ என்றார்.

ஸ்வாமி அவர்களிடம் பணிவாகக் கூறினார்: ``ஐயா! உங்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். நானோ ஏழை பக்கிரி. என்னிடம் வசூல் செய்வதைத் தவிர்க்க முடியாதா?’’

ஸ்வாமி இப்படிக் கேட்டதும் குழுவில் ஒருவன் குரல் உயர்த்திச் சொன்னான்... “ஏய் பைத்தியக்காரா! எல்லோரும் நன்கொடை தரும்போது, உனக்கு மட்டும் விதிவிலக்கா? நீயும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு தொகையை அளித்தே ஆக வேண்டும்’’ என்று சீறினான்.

மந் நாராயணின் அம்சமாகப் போற்றப்பட்டவர் ஸ்வாமி. ஆயினும் மனிதர் எதிர்கொள்ளும் எல்லா அவமானங்களையும் ஏற்க சித்தமாகவே இருந்தார். அவர்களிடம் தன் நிலையைப் பணிவுடன் தெரிவித்தார். ஆனால், பணிந்து செல்பவரிடம் அதீத அதிகாரத்தைச் செலுத்துவது மனிதர்களின் இயல்பாயிற்றே. ஆகவே ஸ்வாமியிடமும் அதிகாரத்தைக் காட்டினார்கள்.

கூட்டத்தில் ஒருவன் குரல் உயர்த்தி அதட்டிய நிலையில், ஒரு விநாடி மௌனமாக இருந்தார் ஸ்வாமி. பிறகு அவர்களிடம், “சரி, நீங்கள் விரும்பியபடியே நன்கொடை தருகிறேன். ஆனால், முதலில் நீங்கள் என்னை உங்களின் குலதேவதை போலேரம்மா அருள்பாலிக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு சென்றதும் நன்கொடை தருகிறேன்’’ என்றார்.

கிராமத்தவரும் ஸ்வாமியை போலேரம்மா கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். வாயிலை அடைந்ததும்... அந்த வனப் புறத்தில், தரையில் கிடந்த புகைக்கும் பொருள் ஒன்றை கையில் எடுத்த ஸ்வாமி, அங்கிருந்தபடியே உள்ளே அருள்பாலிக்கும் பொலேரம்மா விக்கிரகத்தைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்.

``தாயே! போலேரம்மா... நான் புகைப்பிடிக்க நெருப்பு வேண்டும். நீதான் எனக்கு நெருப்பைத் தர வேண்டும்’’ என்றார்.

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 12

மறுகணம் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சிலையின் பக்கத்தில் கனன்று கொண்டிருந்த கரித் துண்டு (கங்கு) ஒன்று பறந்து வந்து வாசலில் நின்றிருந்த ஸ்வாமியின் தட்டில் வந்து விழுந்தது. தொடர்ந்து, தட்டுக்குள் விழுந்த கனலில் சுடர் எழுந்தது. ஸ்வாமி புகைக்கும் பொருளில் நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டார். பின்னர், ``வேலை முடித்துவிட்டது தாயே. கரித் துண்டை எடுத்துக் கொள்ளுங்கள்’’என்றார். அடுத்த விநாடி, கனல் துண்டு மீண்டும் ஆகாயத் தில் பறந்து, தேவியின் சிலைக்கு அருகில் சென்று விழுந்தது.இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வசூல் குழுவினர் திகைத்துப் போனார்கள். தங்களின் தவறை உணர்ந்து ஸ்வாமியின் திருவடி யில் விழுந்தார்கள்.

“ஹே மஹாத்மா! நாங்கள் அனைவரும் முட்டாள்கள். உங்களைப் பைத்தியக்காரன் என்று நினைத்து, பல வேலைகளைச் செய்யக் கூறினோம். நீங்களும் மறுவார்த்தை பேசாமல், அனைத்துப் பணிகளையும் செய்து முடித்தீர்கள். நாங்கள் பலவாறு உங்களை வசைபாடியபோதும், நீங்கள் எவ்வித மறுப்பும் வெறுப்பும் காட்டவில்லை. தாங்களே பரமாத்மா என்பதை அறியாமல் நாங்கள் செய்த தவறை மன்னித்து, எங்களை நல்வழி நடத்தவேண்டும்’’ என்று கோரினார்கள்.

‘`பிள்ளைகளே! உங்களின் நிலையானது சமையல் பாத்திரத்தின் நிலை போன்றது. அந்தப் பாத்திரத்தில் அறுசுவைப் பொருள்களை இட்டு சமைத்தாலும், உணவின் சுவையைப் பாத்திரத் தால் அறிய இயலாது!’’ என்றார் ஸ்வாமி.

அந்தக் குழுவில் இருந்தவர்கள், “ஆம் ஸ்வாமி! தாங்கள் கூறுவது மிகச்சரி. தாங்களே எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். பக்தி மார்க்கம் குறித்தும், அதில் நுழைவதற்கான வழிமுறைகள் பற்றியும் போதிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார் கள். ஸ்வாமியும் அவர்களுக்கு நல்லவற்றை எடுத்துரைத்தார்.

“இந்த உலகில் மிக உயர்ந்த சொல் பக்தி. பக்தி மார்க்கம் எல்லோருக்கும் எளிதல்ல. பக்தியை இதயத்தில் விதைக்கவேண்டும்; புறத்தில் காண இயலாது. நாம் காணும் ஆயிரம் பேரில் முக்தி அடையும் எண்ணம் ஒருவருக்கு மட்டுமே இருக்கும். அவரால் மட்டுமே இதயத்தில் ஆழமாக பக்தியை விதைக்க இயலும்; முக்தியை அடைய இயலும்’’ என்று விளக்கினார்.

`பக்தியால் மட்டுமே ஒருவர், நிரந்தர அமைதி யைத் தரக்கூடிய விடுதலை நிலையை அடைய இயலும்’ என்றே பகவத்கீதையும் உபதேசிக்கிறது. இதைவிட எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எவராலும் விளக்க இயலாது என்பதை உணர்ந்த அந்தக் குழுவினர், மகிழ்ச்சியுடன் ஸ்வாமியை வணங்கி விடைபெற்றனர்.

இதன் பிற்கு கண்டிமல்லய்யாபள்ளி கிராமத்தில் சில நாள்கள் தங்கி யிருந்த ஸ்வாமிகள், அங்கிருந்து பல கிராமங்களுக்குச் சென்று வந்தார். அவ்வகையில் பெத்த கொமார்லா என்ற கிராமத்துக்கும் சென்றார். அங்கு ஸ்வாமியின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது!

- தரிசிப்போம்...`பிள்ளைகளே! உங்களின் நிலை சமையல் பாத்திரத்தின் நிலை போன்றது. அந்தப் பாத்திரத்தில் அறுசுவைப் பொருள்களை இட்டு சமைத்தாலும், உணவின் சுவையைப் பாத்திரத்தால் அறிய இயலாது!

****

'பிள்ளையார் தரிசனம்!

பிள்ளையார்
பிள்ளையார்


மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணிக் உருவான விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும்.

உப்பால் உருவான விநாயகரை வணங்கினால், சத்ரு ஜயம் உண்டாகும்.

கல்லால் அமைந்த விநாயகரை வழிபட, சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

மாவால் செய்த பிள்ளையாரை வழிபட்டால், வெற்றி கிட்டும்

வெள்ளெருக்கால் செய்த பிள்ளையாரை வழிபட செல்வம் கிட்டும்.

மஞ்சள் தூளினால் பிள்ளையார் செய்து வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

வெல்லத்தினால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை வணங்கினால் வாழ்வு வளம் பெறும்.

பசுஞ்சாணியால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை வழிபட, பிணிகள் நீங்கி வளம் பெறலாம்.

- எஸ்.விஜயலக்ஷ்மி, சென்னை-88

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism