பிலவ வருடம் ஐப்பசி மாதம் 27-ம் தேதி சனிக்கிழமை (13.11.2021) அன்று மாலையில் பிரகஸ்பதியாகிய குருபகவான் மகரம் ராசி யிலிருந்து விலகி கும்ப ராசிக்குள் சென்று அமர்ந்தார். இந்தக் குருப்பெயர்ச்சியின்படி, ஸ்திர வீடான கும்ப ராசியில் குரு அமர்வதால் உலகெங்கும் நோய் பயம், உயிர்ப் பயம் விலகி பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்கின்றன ஜோதிட பலாபலன்கள்.

`மட்டுமன்றி, குரு பகவானின் சஞ்சார பலன்களால் வியாபாரம் சூடு பிடிக்கும்; பணப்புழக்கம் அதிகமாகும். சொத்துக்கள் விலை உயரும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும். மன உளைச்சலிலிருந்து விடுபட்டு மக்கள் மகிழ்ச்சி அடைவர். மொத்தத்தில் மக்கள் மனதில் கலக்கம் நீங்கி உற்சாகம் பிறக்கும்' என்பது ஜோதிட வல்லுநர்களின் கருத்து.
அதேநேரம், இந்தக் குருப்பெயர்ச்சி கால கட்டத்தில் சிற்சில பாதிப்புகளும் உண்டு என்றும் விளக்கம் அளிக்கிறார்கள்.
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ராசியைச் சேர்ந்தவர்களுக்கு சிறிய அளவிலான அலைச்சல், உடல்நலக் குறைபாடு, வேலைச்சுமை, ஏமாற்றங்கள் இருக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.
இதுபோன்ற பாதிப்புகள் நீங்கவும், குருவருளால் எல்லோருக்கும் சகல நன்மை களும் உண்டாகவும், வாசகர்கள் குடும்பங் களில் சுபிட்சம் ஏற்படவும் வேண்டி, சக்தி விகடன் சார்பில் ஶ்ரீகும்ப குருப்பெயர்ச்சி மகா ஹோமம் நடந்தேறியது.
புதுச்சேரி ஶ்ரீவிஜய விஸ்வமாதா ராஜராஜேஸ்வரி பீடமும் சக்தி விகடனும் இணைந்து நடத்திய இந்த மஹாஹோமம், புதுச்சேரி - இடையார் பாளையம் அருகில், ஞானமேடு கிராமத்தில் (சப்தகிரி நகர்) உள்ள ஶ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயத்தில் நடைபெற்றது.
13.11.2021 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெற்ற ஹோமத்தில், வாசகர்களின் பிரார்த்தனை களும் வேண்டுதல்களும் நிறைவேறிட, சிறப்பு சங்கல்பம் செய்யப்பட்டு ஹோம வைபவங் களும் வழிபாடுகளும் சிறப்புற நடந்தேறின.

மகிமைகள் மிகுந்த ஶ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோயில் ஏற்கெனவே வாசகர்களுக்குப் பரிச்சயமான தலம்தான்.
மகான் சேஷாத்திரி ஸ்வாமிகள் தவமிருந்த இடத்திலேயே இந்த ஆலயம் அமைக்கப் பட்டுள்ளது. பல அற்புதங்களும் பரிகார நிவர்த்திகளும் நடைபெறும் இந்த ஆலயத்தில் பைரவ குருஜீ முத்து குருக்கள் தலைமையில் ஹோமபூஜைகள், அபிஷேக ஆராதனைகள் விரிவாக விசேஷமாக நடைபெற்றன.
உலக நன்மைக்காகவும் வாசகர்களின் நலனுக்காகவும் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கிரகங்களின் மூலமந்திர ஹோமம், ம்ருத்யுஞ் ஜய ஹோமம், குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம் என சிறப்புற நடதேறியது இந்த வைபவம். குருபகவானின் திருவருளால் சகலருக்கும் சகல நன்மைகளும் உண்டாகும்!