பிரீமியம் ஸ்டோரி

மகா பெரியவர் ஜயந்தி: மே -26

டமாடும் தெய்வம் என்று ஆன்மிக உலகத்தினரால் போற்றிக் கொண்டாடப்பட்ட மகான் காஞ்சி மகாபெரியவர். காஞ்சி மகாபெரிய வரின் ஆயுட்காலம் 100 வருடங்கள். துல்லியமாகச் சொல்வதானால் 100-க்கு 4 மாதங்கள் குறைவு. அதாவது 99 வருடங்கள் எட்டு மாதங்கள்.

எந்த நட்சத்திரம், திதியில் பிறந்தாரோ அதிலேயே முக்தியும் காண்பதென்பது, பலகோடி பேர்களில் ஒருவருக்குக்கூடக் கிட்டாத ஓர் ஆச்சர்யமான விஷயம். ஆனால், மகாபெரியவருக்கு அது சாத்தியமாயிற்று. 13 வயதில் சந்நியாசம். போகிறது என்று அந்த 13 ஆண்டுகளைக் கழித்தால் 87 ஆண்டு காலம் சந்நியாசி வாசம். இதில் மிக முதிர்ந்த கடைசி 2 ஆண்டுகளைக் கழித்தால் 85 ஆண்டுகள்.

இந்த 85 வருடங்களில் அவர் ஒரு நாள்கூட தன் சந்நியாசக் கடமைகளை மறந்ததில்லை. காய்ச்சல் வந்து சுருண்டு படுத்த நிலை வந்த போதும், ஜபமும் தியானமும் அவரிடம் தடைப்பட்டதில்லை. கூடுதலாய் ஒரு விஷயம், இந்த 85 வருடங்களில் இவர் தன்னைச் சந்திக்க வந்த பக்தர்களைச் சந்திக்காமலும் இருந்ததில்லை. அந்த வகையில் பக்தர்களுக்கும் இவருக்குமான அனுபவங்கள் இருக்கின்றனவே... அவை மகா தெய்விகம்!

தினம் ஓர் அதிசயம்... தினம் ஒரு கருணாஜாலம்... அவற்றில் சிலரின் அனுபவங்கள் நமக்குப் பரவசம் தருவன மட்டுமல்ல; நமக்கான பாடமும் கூட!

ஒரு முறை சிறுமி ஒருத்தி பெரியவரிடம் அவரின் ஆட்டோ கிராப் வேண்டும் என்று இயல்பாகக் கேட்டுவிட்டாள்.

“உம்மாச்சி தாத்தா... உங்க ஞாபகமா எனக்குக் கையெழுத்து போட்டுத் தாங்கோ...” என்கிற அவளின் கேள்விக்குப் பின்னால், இப்படி யாராவது கேட்கக்கூட சொல்லியிருக்க லாம். மகாபெரியவரின் கையெழுத்தையே அவராக பாவித்து வணங்கி வாழ முடிவும் செய்திருக்கலாம். அதுபற்றித் தெரியாது. பெரியவர் என்ன செய்தார் என்பதுதான் இங்கே முக்கியம்.

சந்நியாசி என்பவர் எல்லாவற்றையும் துறந்துவிட்டவர். அவருக்கான பெயர்கூட பிறர் அழைப்பதற்காகத்தான். பெயர்கூட சொந்தம் கிடையாது. கையெழுத்து என்பதோ ஒருவரின் பிரதி மூலம். அவரையே தாங்கி நிற்கும் வரிவடிவம். அப்படியிருக்க, ஒரு சந்நியாசி கையொப்பமிட்டால், அவர் தன்னைத் துறக்கவில்லை என்பதோடு பொதுமை நீங்கி பிரத்தியேகமாகவும் ஆகிவிடுகிறார். இதனாலேயே அந்த சந்நியாசியின் வழிகாட்டுதலில், மடத்துக்கான கடிதப் போக்குவரத்துக்களில் ‘ஸ்ரீகார்யம்’ எனப்படும் காரியதரிசியே கையொப்பம் இடுவார். இதெல்லாம் வெகு ஜனங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக அந்தச் சிறுமிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவள் ஒரு வி.ஐ.பியிடம் கேட்பதுபோல் கேட்டுவிட்டாள்.

மகாபெரியவர் பதிலுக்கு அவளிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டார். “நீ எனக்கு உன் கையெழுத்தைப் போட்டுக் கொடு... நான் பத்திரமா வெச்சுக்கறேன்” என்றார். அந்தப் பெண்ணுக்குத் திகைப்பு.

“என்ன பாக்குற உனக்கு என் ஞாபகம்தானே முக்கியம். நீ எப்பல்லாம் உன் கையெழுத்தைப் போடுறியோ, அப்பல்லாம் என் ஞாபகம் உனக்கு வருமே. நான் சொல்றது சரிதானே” என்று கூறி அவளின் கையெழுத்தையும் கேட்டு வாங்கி வைத்துக்கொண்டார்.

அவளைத் திருப்திப்படுத்தியது போலும் ஆயிற்று; தன் சந்நியாச தர்மத்தையும் காப்பாற்றிக் கொண்டாயிற்று.

இப்படித்தான் மேல்நாடு சென்றுவிட்டு திரும்பியிருந்த பக்தர் ஒருவர், பெரியவர் கையால் தீர்த்தப் பிரசாதம் பெற வரிசையில் வந்தார். அவர் அருகே வரவும் அவருக்கு மட்டும் தேங்காயை உடைத்து, அதன் இளநீரைச் சொரிந்து தந்தார். அவர் தனக்குப் பெரியவர் விசேஷமாக இளநீர் தருவதாகக் கருதிக்கொண்டு பெரிதும் மகிழ்ந்தார்.

ஆனால் உண்மையில் அவருக்குப் பூஜித்த பிரசாத நீரைத் தர சம்பிரதாயத்தில் இடமில்லை. ஒரு பிராமணன் கடல் தாண்டிச் செல்லக் கூடாது. அப்படிச் செல்லும் பட்சத்தில், அவன் தன் பிரம்மண்யத்தை இழந்தவனாகிறான். அப்படி இழந்தவர்க்கு ஒரு மடாதிபதி சந்நியாசி நெறிமுறைப்படி தீர்த்தம் தரக்கூடாது. ‘தரமாட்டேன்’ என்று சொல்லி அவரை வருந்த வைக்கப் பெரியவர் விரும்ப வில்லை. அதேநேரம் சுதர்மத்தையும் காப்பாற்ற வேண்டும். இப்படி ஓர் இக்கட்டில்தான் அவர் இளநீருக்கு மாறி சமாளித்தார்.

காரணம் கருணை உள்ளம்!

ன்று நவீன விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். ஒரு கைபேசிக்குள் சர்வலோகத்தையும் அடக்கி விட்டோம். உடம்புச் செல்களில் உயிர் இருப்பது அன்று... இன்று நம் எல்லோர் உயிருமே நம் கைபேசி செல்லுக்குள்தான் உள்ளது. அதனுள் வங்கிக் கணக்கு முதல் பாஸ்போர்ட் ஆதார் என்று சகலமும் அடக்கம். சிலர், சொத்து பத்திரங்களைக் கூட ஜிப் ஃபைலுக்குள் போட்டு கையோடு வைத்துக் கொண்டுள்ளனர்!

விஞ்ஞான உச்சம் என்று இதைத் தாராளமாகக் கூறலாம். இதனால் நம் ஆன்மிகம் சார்ந்த பல செயல்களில், நம் பிள்ளைகள் சில கேள்விகளைக் கேட்கும்போது, நமக்குப் பதில் சொல்லத் தெரிய வில்லை. உதாரணமாக சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும் விஷயம்.

சுவாமி படம் முன்னால் பாயசம், பொங்கல் என்று வைத்து வணங்கு வதைப் பார்க்கும் நம் பிள்ளைகள் ‘எதற்கு இந்த பாவனை... நிஜமாக சாமி சாப்பிடும் என்றால் இப்படி வைப்போமா... சாமிக்கு என்று வைத்துவிட்டு நாம்தானே சாப்பிடுகிறோம். இது சாமியை ஏமாற்றுவதாக ஆகாதா?’ என்று கேட்கின்றனர்.

இந்திரா சௌந்தரராஜன்
இந்திரா சௌந்தரராஜன்


இதற்கு நாம் அவர்களுக்குத் திருப்தியான ஒரு பதிலைச் சொல்லி இருக்கிறோமா?

மகாபெரியவரிடம் ஒரு பிள்ளை இதே கேள்வியைக் கேட்டுவிட்டான். பெரியவர் பதிலுக்கு ஒரு புத்தகத்தைத் தந்து, அதைப் படித்துவிட்டு அந்த புத்தகத்துடன் திரும்பி வரச் சொன்னார். அவனும் வந்தான்.

“புத்தகத்தைப் படித்து விட்டாயா...” என்று கேட்டார்.

“ஆயிற்று” என்றான்.

“அப்படியானால் இந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்கள் நீ படிக்கப் படிக்க உனக்குள் நுழைந்துவிட்டது... அப்படித் தானே?” என்று திருப்பிக் கேட்டார்.

“ஆமாம் ஒரு வரி விடாமல் படித்துவிட்டேன்” என்று அழுத்தமாகக் கூறினான். உடனே புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த பெரியவர், “என்ன இது... புத்தகத்தில் அவ்வளவு வரிகளும் அப்படியே உள்ளதே?” என்று திருப்பிக் கேட்டார்.

அவனுக்கோ திகைப்பு! `புத்தகத்தில் இருப்பது எப்படி பிறர் படிப்பதால் அழிந்துபோகும். அது அப்படியே அல்லவா இருக்கும்’ என்று எண்ணியவன் அதுகுறித்து மகாபெரியவரிடம் கேட்கவும் செய்தான்.

பெரியவரும் சிரித்தபடியே, “நல்ல புத்தகம் போலத்தான் நல்ல பிரசாதமும். அதன் ஆவியை இறைவன் ஏற்கிறான். அன்னம் நமக்காகிறது. அது அப்படியேதான் இருக்கும். அதனால் அவன் ஏற்கவில்லை என்று பொருளில்லை” என்று கூறவும் அவனுக்குப் புரிந்தது.

எவ்வளவு நுட்பமான செயல்பாடு இது!

மகாபெரியவரின் அன்றாட வாழ்வில் இதுபோல் ஒன்றல்ல... இரண்டல்ல... ஆயிரமாயிரம் சம்பவங்கள்.

அவை சம்பவத்துக்குச் சம்பவம் - பாடத்துக்குப் பாடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு