Published:Updated:

‘இதுதான் பூஜை!’

மகாபெரியவர்
பிரீமியம் ஸ்டோரி
News
மகாபெரியவர் ( ம.செ. )

மகா பெரியவரின் வழிகாட்டல்

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காஞ்சி மகாமுனிவர் தஞ்சை மாவட்டத்தில் யாத்திரை செய்து வரும்போது குடவாச லிலிருந்து கொரடாச்சேரிக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

வழியில் திருக்களம்பூர் என்ற பாடல் பெற்ற சிவ ஸ்தலத்துக்கு கிழக்கே சாலை ஓரத்தில், அந்த சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ஏழை மக்கள் எல்லோரும் மஹா பெரியவாளை தரிசிப்பதற்காகக் குழுமியிருந்தனர். தீனரிலும் தீனரான அம்மக்கள் தங்கள் சேரியிலேயே வசூல் செய்த சிறு தொகையுடன், பழம் புஷ்பம் முதலியவற்றையும் ஆசாரிய சுவாமிகளுக்குச் சமர்ப்பிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

‘இதுதான் பூஜை!’


மஹா பெரியவா அவர்களுக்கெல்லாம் திவ்ய தரிசனம் தந்தார். அந்த எளிய மக்கள் சமர்ப்பித்த காணிக்கையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார். அவர்கள் அளித்த திரவியத்தை எண்ணிப் பார்க்கச் செய்தார். உடனே அந்த இடத்திலேயே அதனைப் போல் பல மடங்கு தொகையை மடத்திலிருந்து எடுத்துச் சேர்த்து, அந்த ஜனங்கள் யாவருக்கும் வேஷ்டி, புடவைகள் வாங்கிவர உத்தரவிட்டார்.

உள்ளூரில் கடைகள் கிடையாது. மடத்துச் சிப்பந்திகள் குடவாசலுக்கே சென்றனர். ‘அவர்கள் திரும்பிவர மிகவும் பொழு தாகுமே! அதன் பின் விநியோகம் செய்துவிட்டு, ஆசாரியர்கள் அடுத்த முகாமுக்குச் சென்று பூஜை முடிப்பதென்றால் சாயங்காலமாகிவிடுமே! பெரியவர்கள் அதன்பின்தானே ஆகாரம் கொள்வார்கள்?’ என அவர் அடியார்கள் கலங்கினர்.

ஆனாலும், ஆசாரியர் இதை சற்றும் பொருட்படுத்தாமல் அந்த ஜனங்களின் க்ஷேமங்களைப் பற்றி அன்போடு விசாரித்துக் கொண்டேயிருந்தார். மாலை நேரமான போதுதான் புடவை, வேஷ்டிகள் வந்து சேர்ந்தன. அவை அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அந்த ஏழை மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கும், அதைக் கண்டு மஹா பெரியவா அடைந்த ஆனந்தத்துக்கும் எல்லையே இல்லை.

“பூஜைக்குத்தான் மிகவும் நேரமாகிவிட்டது” என்று அருகிலிருந்த காரியஸ்தர் ஒருவர் கூறினார். மஹா பெரியவா சுற்றியிருந்த ஏழை மக்களையெல்லாம் அன்பொழுகப் பார்த்தார். பிறகு அந்த சிப்பந்தியைத் தமது கனிவு ததும்பும் கண்களால் நோக்கினார்.

அன்பு வழியும் மதுரக்குரலில், “பூஜைக்கா, நேரமா? இதுதான் பூஜை” என்றார்.

- க.புவனேஸ்வரி, சென்னை-87