Published:Updated:

மகா பெரியவா - 35

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 35

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

‘மகா பெரியவா’ தொடரின் 7-வது அத்தியாயத்தில் பால் பிரண்டன் என்கிற வெளிநாட்டு அறிஞருக்குப் பெரியவா தரிசனம் கொடுத்தது பற்றி மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தச் சந்திப்பு பற்றி இப்போது முழுமையாகப் பார்ப்போம்.

1931 -ம் வருடம் ஜனவரி மாதம் செங்கல்பட்டுக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா. அங்கே தங்கியிருந்தபோது, ஒவ்வொரு நாள் இரவிலும் சிவன் கோயிலில் பக்தர்களுக்கு உபதேசம் வழங்கி வந்தார். பாரதப் பூமியிலுள்ள யோகிகள் பலரைச் சந்தித்து, அவர்களின் ஆசியைப் பெறும் எண்ணத்துடன் பால்பிரண்டன் இந்தியா வந்திருந்த காலம் அது.

சென்னைக்கு அவர் வந்திருந்தபோது, பிரபல ஆங்கில எழுத்தாளர் கே.எஸ்.வெங்கடரமணியின் அறிமுகம் கிடைத்தது. “வெறும் வேஷதாரிகளான பலரைக் காண்பதில் எனக்கு விருப்பமில்லை. ஸித்தி பெற்ற யோகிகளை நான் பார்க்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் பால் பிரண்டன். மறுநாள் அவருக்குப் பதில் கிடைத்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“தென்னிந்தியாவின் மதத் தலைவரும், எனக்கு மிகுந்த ஆதரவு அளிப்பவருமான கும்பகோணம் சங்கராசார்ய சுவாமிகள் செங்கல்பட்டுக்கு வந்திருப்பதாகத் தகவல். அவர் தவத்தின் உன்னத நிலையை அடைந்த உண்மைத் துறவி. அவர் மூலம் உபயோகமுள்ள முறையில் சில உபதேசங்களைப் பெறலாமென்று நினைக்கிறேன்” என்று பால் பிரண்டனிடம் தெரிவித்தார், கே.எஸ்.வெங்கடரமணி.

மகா பெரியவா - 35

மறுநாள் இருவரும் செங்கல்பட்டுக்குப் பயணித்து சுவாமிகள் விஜயம் செய்திருந்த வீட்டுக்குச் சென்றனர். பால் பிரண்டனின் கைகளில் பூக்களும் ஆரஞ்சுப் பழங்களும். அங்கே மேஜை நாற்காலி எதுவுமில்லாத ஓர் இருட்டறை. மூலையில் எண்ணைய் விளக்கு ஒன்று மங்கலாக எரிந்துகொண்டிருந்தது.

அந்த விளக்கின் நிழலில், அதிக உயரமில்லாத மகா சுவாமிகளின் உருவத்தை பிரண்டன் கண்டார். தாம் எடுத்து வந்திருந்த பழம், புஷ்பம் ஆகியவற்றை மகாபெரியவா முன் சமர்ப்பித்தார். இந்துக்கள் வணங்கும் முறையில் தரையில் விழுந்து வணங்கினார்.

“தாங்கள் என்னை இங்கு வர மிக அன்புடன் அனுமதித்ததற்கு மிகவும் நன்றி” என்றார் ஆங்கிலத்தில். மந்தகாசப் புன்னகையுடன் அவற்றை ஏற்றுக்கொண்டார் மகா பெரியவா.

“நாம் ஆங்கிலத்தில் பேசுவதைப் பெரியவா புரிந்துகொள்வார். ஆனால், தம்முடைய பதிலை இந்தியப் பாஷைகளில் கூறுவார். நான் அதை உங்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுகிறேன்” என்றார் வெங்கடரமணி. உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி மகா சுவாமிகளிடம் கேட்கத் தொடங்கினார் பால் பிரண்டன்.

கேள்வி: உலகத்தின் தற்கால ராஜ்ஜிய நிலையும் பொருளாதார நிலைமையும் எப்போது சீர்ப்படும்?

மகாபெரியவா: நிலைமை திருந்துவதென்பது சுலபமாகவும் வேகமாகவும் நடைபெறக் கூடியத ன்று. அது காலக்கிரமத்தில்தான்நடைபெற வேண்டும். பெரிய நாடுகள், அழிக்கும் ஆயுதங் களை உற்பத்தி செய்வதில் ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான பொருளைச் செலவிட்டுக் கொண் டிருக்கும்போது, எவ்விதம் உலகைச் சீர்திருத்த முடியும்?

கேள்வி: உலகில் ஆயுத ஒழிப்புப் பேச்சுகளும் இப்போது நடைபெற்று வருகின்றனவே. அதனால் ஏதாவது பயன் ஏற்படுமா?

மகாபெரியவா: உங்கள் சண்டைக் கப்பல்களை உடைத்தெறிந்தாலும், இயங்கும் பீரங்கிகளைத் துருப்பிடிக்கச் செய்தாலும் அவையொன்றும் சண்டையை நிற்கச் செய்யாது. கையில் கம்புகளை ஏந்தியாவது ஜனங்கள் சண்டையிடுவார்கள்.

கேள்வி: அப்படியென்றால், உலகம் சீர் அடைய என்னதான் வழியெனத் தாங்கள் நினைக்கிறீர்கள்?

மகாபெரியவா: ஆன்மிகத் துறையில் ஒரு நாடு மற்றொரு நாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாளிகள் ஏழைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனால்தான் ஒருவருக்கொருவர் நல்லெண்ணம் ஏற்படும். இவ்வித நல்லெண்ணம் ஏற்படுவதால், உண்மையான சமாதானமும் தேசங்களுக்கு நன்மையும் உண்டாகும்.

கேள்வி: தாங்கள் கூறுவது எளிதில் நடைபெறக் கூடியதாக நான் நினைக்கவில்லை. ஆகையால், எங்களுக்கு (ஐரோப்பியர்களுக்கு) ஒருபோதும் மன நிம்மதி கிடைக்காதென்றே நாங்கள் முடிவுக்கு வரவேண்டுமா?

மகாபெரியவா: அவ்விதம் நினைப்பதற்கில்லை. நம்மை எல்லாம் ஆளும் கடவுளின் சக்தி ஒன்று உலகில் இருக்கிறது.

கேள்வி: கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றாலும் அவரை அடைவது எளிதான காரியம் இல்லையே?

மகாபெரியவா: மனித சமுதாயத்தில் எப்போதும் கடவுள் அன்புகொண்டவராகவே இருக்கிறார். அன்பு நிறைந்த இடத்தில் கடவுளைக் காணலாம்.

கேள்வி: தற்காலம் உலகில் வியாபித்திருக்கும் அமைதியின்மையையும் அக்கிரமங்களையும் கவனிக்கும்போது, மக்களைப் பற்றி கடவுள் சற்றும் கவலைகொள்ளாமல் இருக்கிறாரோ என நினைக்கவேண்டியிருக்கிறது அல்லவா?

மகாபெரியவா: அவ்விதம் நினைப்பதற்கில்லை. பொறுமையுடன் இருப்பவன், எதிர்காலத்தை ஆழ்ந்த சிந்தனையுடன் காண்பான். கடவுள் மனித உருவத்திலேயே தோன்றி ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்தச் சிக்கல்களையெல்லாம் சீர்ப்படுத்துவார்.

பெரிய சாம்ராஜ்ஜியங்களுக்குள் ஏற்பட்டிருக் கும் சச்சரவுகளும் கோடிக்கணக்கான ஏழைகளின் கஷ்டங்களும் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகின்றனவோ, அப்போதுதான் ஒரு மாறுதலுக்கும் சந்தர்ப்பம் நேரிடும். தெய்விக சக்தி வாய்ந்த மனிதன் ஒருவன் அப்போதுதான் தோன்றுவான். இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் அந்த மனிதன் மூலம் ஒரு முடிவு ஏற்படும்.

ஒவ்வொரு நாட்டிலும் இவ்விதமான புருஷன் தோன்றி மக்களைக் காப்பாற்றலாம். பௌதீக சாஸ்திரத்தின் நியாயத்தைப்போல், இந்த மாறுதல் உலகில் படிப்படியாக ஏற்படும்.

மக்களது நாத்திகக் கொள்கைகளாலும் தன்னை உணராதத் தன்மையாலும் எவ்வளவு வேகமாகத் துன்பங்கள் பரவுகின்றனவோ, அவ்வளவு வேகமாகவே உலகத்தைக் காப்பாற்றவும் கடவுள் சக்தியுடன் இந்த மனிதன் தோன்றுவான்.

கேள்வி: அப்படியெனில், நமது காலத்தில்கூட அத்தகைய மனிதன் அவதரிப்பானெனத் தாங்கள் நினைக்கின்றீர்களா?

மகாபெரியவா: ஆம். எங்கள் நாட்டிலேயே அவ்வித அவதார புருஷன் தோன்றலாம். இந்த அவதாரத்துக்கு இப்போது அவசியமும் ஏற்பட்டு விட்டது. உலகில் அஞ்ஞான இருளும் அதிகமாகப் பரவியிருக்கிறது.

கேள்வி: உங்கள் மக்கள் இப்போது மிகவும் கேவலமான நிலையை அடைந்துவிட்டதாகத் தாங்கள் கருதுகிறீர்களா?

மகாபெரியவா: இல்லை. ஒவ்வொரு மனிதனின் இருதயத்திலும் ஆத்ம சக்தி நிறைந்திருக்கிறது. அந்தச் சக்தியானது முடிவில் அவனைக் கடவுளிடமே கொண்டுபோய்விடுகிறது.

கேள்வி: மேல் நாடுகளில் இப்போது மனிதனின் இருதயத்தில் பைசாசங்கள் அல்லவோ புகுந்திருக்கின்றன! அவர்கள் செயல்களும் அவ்விதம்தான் இருக்கின்றன. இந்த விஷயத்தை தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

மகாபெரியவா: மனித வர்க்கத்தை அவ்விதம் குறை கூற வேண்டாம். அவரவர் பிறந்த சூழ்நிலையில் அவரவர் நடந்துகொள்கிறார்கள். உண்மையில் எவரும் அவ்வளவு மோசமானவர்கள் கிடையாது. சந்தர்ப்பங்களை ஒட்டியே அவர்கள் மோசமாக நடந்துகொள்ளும்படி நேரிடுகிறது.

இந்த உண்மை மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் ஒன்றேதான். உலகெல்லாம் ஓர் உயர்ந்த கொள்கை பரவவேண்டும். இன்று நாம் பார்ப்பதும் அனுபவிப்பதும்தான் உண்மை என்ற எண்ணத்தை மனதில் மாற்றிக்கொண்டு, மனித சக்திக்கு மேல் ஒரு தெய்வ சக்தி இருக்கிறதென்பதை அவன் உணரவேண்டும்.

அப்போதுதான் உலகத்தில் துன்பங்களுக் கெல்லாம் ஒரு முடிவு காணலாம். எல்லா நாடுகளிலும் மக்கள் இவ்வித துன்பங்களில் மக்கள் மூழ்கியிருக்கிறார்கள். ஒருவனது தவறு உச்சநிலையை அடையும் போது, அவனுக்குப் புதிதாக ஒரு நல்ல மார்க்கம் தோன்றுவது போல், ஓர் உலக மாறுதலை இப்போது நாம் காண வேண்டும்.

மகா பெரியவா - பால் பிரண்டன் உரையாடல் தொடர்ந்தது. மகா சுவாமிகள் பற்றிய விஷயங் களைச் சில கேள்விகள் மூலம் கேட்கத் தொடங் கினார் பால் பிரண்டன்.

- வளரும்...

கிருஷ்ணர் விளையாடிய இடம்!

டமதுராவில், யமுனை நதிக் கரையில் அமைந்துள்ளது ‘விஸ்ராம் காட்’. வராஹ அவதாரத்தின்போது இறைவன் ஓய்வெடுத்த இடம் இது.

மகா பெரியவா - 35

கம்சனைக் கொன்ற பின் கண்ணபிரான் ஓய்வெடுத்த இடம் என்றும் கூறுவர். கண்ணபிரான், கம்சனை வதம் செய்த இடம் ‘கம்ஸட்டிலா’ எனப்படுகிறது. இதேபோல், காம்யக வனம் எனும் இடத்தில் உள்ள ஒரு பாறைக்கு, ‘பிசாலினி சிலா’ என்று பெயர். இந்தப் பாறையில்தான் கிருஷ்ணர் தனது தோழர்களுடன் சறுக்கி விளையாடினாராம். இங்கு வரும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்தப் பாறையில் சறுக்கி விளையாடுகின்றனர். இந்தப் பாறையில் விளையாடிச் சென்றால், வாழ்க்கையில் சறுக்கி விடாமல் கிருஷ்ணர் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை!

வ்யோமாசுரன் என்பவன், கண்ணனுடன் விளையாடும் குழந்தைகளைத் தூக்கி வந்து, ஓரிடத்தில் மறைத்து வைத்தான். இதையறிந்த பலராமர் அங்கு சென்று வ்யோமாசுரனுடன் போரிட்டு, குழந்தைகளை மீட்டார். வ்ரஜ பூமியில் உள்ள அந்த இடம், ‘வ்யோமாசுரபூபா’ எனப்படுகிறது.

- அபர்ணா சுப்ரமணியம், சென்னை-4