மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 36

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா பால் பிரண்டன் இடையேயான உரையாடல் தொடர்கிறது...

கேள்வி: தாங்கள் மனிதனது உலக வாழ்க்கையிலேயே தெய்விகத்தைப் புகுத்தி விடலாமென்று நினைக்கிறீர்களா?

மகாபெரியவா: ஆம். அது சாத்தியமென்றே கருதுகிறேன். அதுதான் எல்லோருக்கும் முடிவு காலத்தில் திருப்தியைத் தரக்கூடிய பயனை அளிக்கும். அந்தப் பயனும் எளிதில் மறைந்துவிடாது. தெய்விக சக்தி வாய்ந்த மனிதர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உலகில் அதிகமாகத் தோன்றுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உலகில் இந்த எண்ணம் சீக்கிரமாகப் பரவும்.

மகா பெரியவா - 36

தெய்வத்தன்மை வாய்ந்த மகான்களைப் பாரத தேச மக்கள் மதிப்புடன் நடத்தி வருகிறார்கள். அதுபோல் உலகில் மற்ற எல்லா தேசங்களும் நடந்து, அந்த மகான்கள் காட்டும் வழியைப் பின்பற்றுவார்களானால், உலகெல்லாம் அமைதியும் சிறப்பும் பெற்று விளங்கும் என்பதில் ஐயமில்லை.

இப்போது நன்மை தீமை இவை இரண்டும் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றன. இனி பிறக்கும் சந்ததியர், அவர்களின் (ஆசிய - ஐரோப்பிய) நாகரிகத்தின் உயரிய கொள்கைகளைக் கடைப்பிடித்து சமுதாயத்தின் சீரிய மக்களாக விளங்கு வார்கள் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: தாங்கள் எத்தனை ஆண்டுகளாக இந்தப் பீடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்?

மகாபெரியவா: 1907-ம் வருடம் நான் இந்தப் பீடத்தில் அமர்ந்தேன். அப்போது எனக்குப் பிராயம் சுமார் 12.

கேள்வி: தாங்கள், தங்கள் நிர்வாக ஸ்தலமாகிய கும்பகோணத்தில் அதிகமாகத் தங்குவதில்லை என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரிதானா?

மகாபெரியவா: ஆம். நான் சென்ற பதினைந்து ஆண்டுகளாக இந்த ஜில்லாக்களில் கிராமம் கிராமமாக யாத்திரை செய்து வருகிறேன். என் யாத்திரையும் மெதுவாகவே நடந்து வருகிறது. இப்போது வடக்கே காசி வரை போவதாகத் திட்டமிட்டுள்ளேன்.

மகா பெரியவா - 36

தொடர்ந்து பால் பிரண்டன், தாம் நாடி வந்த விஷயம் பற்றி சுவாமிகளிடம் பேசத் தொடங்கினார். சுவாமிகளும் அதுவரை பால்பிரண்டன் பாரதத்தில் சந்தித்த யோகிகள் - சாதுக்களைப் பற்றி விசாரித்தார்.

கேள்வி: யோகாப்பியாசத்தில் ஸித்தி பெற்று அதன் பயனை நிதர்சனமாகக் காட்டக்கூடிய ஒரு மகானை நான் காண விரும்புகிறேன். அவரிடம் அதிகமாகப் பேசுவதைக்கூட நான் விரும்பவில்லை. நான் இவ்விதம் கேட்பதால், என் நிலைமைக்கு அதிகமானதொரு பயனை நான் எதிர்பார்ப்பதாகத் தாங்கள் நினைக்க லாம். இவ்விஷயத்தில் தாங்கள் எனக்கு வழிகாட்டுவீர்களா?

மகாபெரியவா: உயரிய யோக மார்க்கத்தை நீங்கள் பயில வேண்டுமென்று நினைப்பதில் எந்தத் தவறுமில்லை. அதில் உங்கள் சிரத்தையே உங்களுக்குப் பயனளிக்கும். தீவிரமான மன உறுதியும் வேண்டும். அவை உங்களிடம் இருப்பதாகவே நினைக்கிறேன். இப்போது உங்கள் உள்ளத்தில் ஓர் ஒளி தோன்ற முற்பட் டிருக்கிறது. அந்த ஒளியே, நீங்கள் கோரும் பயனை அளிப்பதற்கு உங்களுக்கு நிச்சயம் உதவியளிக்கும்.

கேள்வி: தங்களை என்னால் முற்றிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும், இதுவரை நானும் சிந்தனை செய்து வந்திருக்கிறேன். பாரத நாட்டின் பழைய காலத்து ரிஷிகள்கூட கடவுள் நம் இருதயத்திலேயே வசிப்பதாகக் கூறியுள்ளார்கள். அதை எனக்கு விளக்கமாகக் கூறுவீர்களா?

மகாபெரியவா: கடவுள் எங்கும் நிறைந்தவர். அவரை ஒருவரின் இருதயத்தில் மட்டும் அடங்கியவராக எண்ணி விடலாகாது. இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் அவரேதான் தாங்கிக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: பின்னர் நான் எந்த மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று எனக்குக் கூறுவீர்களா?

மகாபெரியவா: உங்கள் சுற்றுப்பயணத்தை நீங்கள் மேலும் தொடர்ந்து, அது ஒருவாறு முடிவடைந்தவுடன், நீங்கள் சந்தித்த யோகி களையும் சாதுக்களையும் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவர்களில் யாரை உங்கள் மனதுக்கு உகந்தவர்களாக எண்ணுகிறீர்களோ அவரையே அடையுங்கள். அவர் நீங்கள் கோரும் மார்க்கத்தை உங்களுக்கு உபதேசிப்பார்.

மகா பெரியவா - 36

கேள்வி: என் மனதுக்குத் திருப்தியளிக்கக் கூடியவராக எனக்கு எவருமே கிடைக்காவிட் டால் நான் மேலும் செய்ய வேண்டியது என்ன?

மகாபெரியவா: அவ்விதம் ஒருவரும் கிடைக்கா விட்டால், நீங்களாகவே தனிமையில் முயற்சி செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் தியானத்தில் மனதை ஈடுபடுத்த வேண்டும். அற்ப விஷயங்களையெல்லாம் மனதைவிட்டு அகற்றி உயரிய விஷயங்களை அன்புடன் மனதில் சிந்தனை செய்யவேண்டும். ஆத்மாவைப் பற்றி அடிக்கடி நினைக்கவேண்டும். அதுவே சாதனைக்கு உதவும். இந்த அப்பியாசங்களைச் செய்வதற்கு விடியற்காலையே ஏற்ற காலமாகும். மாலைச் சந்தி நேரங்களில் தியானம் செய்யலாம். இந்த இரண்டு நேரங்களிலுமே அமைதி நிறைந்து இருக்கும். அப்போது தியானத்துக்கு இடையூறும் அதிகமாக ஏற்படாது.

கேள்வி: என் சொந்த முயற்சியிலும் எனக்குப் பயன் கிடைக்காவிட்டால், நான் மறுபடியும் தங்கள் உதவியை நாடலாமா?

மகாபெரியவா: நான் ஒரு பொது ஸ்தாபனத்தின் தலைவனாக அமர்ந்துள்ளேன். அநேகமாக இரவு பகல் முழுவதுமே இந்த ஸ்தாபனத்தில் காரியங்களில் நான் ஈடுபட வேண்டியவனாக இருக்கிறேன். அப்படியிருப்பதால், தனிமையில் காலத்தைச் செலவிட வசதியுள்ள ஒரு குருவையே நீங்கள் நாடவேண்டும்.

கேள்வி: உண்மையான ஆசார்யர்கள் கிடைப்பது அரிதென்றும் அதிலும் ஒரு ஐரோப்பியன் அவர்களைக் காண முடியாதென்றும் கூறுகிறார்களே?

மகாபெரியவா: உலகில் உண்மை இல்லாமலில்லை. அதை நாம் காணவும் முடியும்.

கேள்வி: அப்படியானால் அப்படிப்பட்ட ஓர் உண்மையான ஓர் ஆசார்யரிடம் என்னை அனுப்புவீர்களா?

மகாபெரியவா: அப்படிப்பட்ட இருவரை மட்டும் மனதில் வைத்திருக்கிறேன். அவர்களில் ஒருவர் இந்த நாட்டின் தென் பாகத்தில் அடர்ந்த கானகத்தில் வசித்து மௌனத்தையும் மேற்கொண்டு வருகிறார். வெகு சிலரே அவரைக் காண முடியும். இதுவரை ஐரோப்பியர் எவரும் அவரைக் கண்டதில்லை. நான் அவரிடம் உங்களை அனுப்பலாம். ஆனால் அவர் ஐரோப் பியரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடலாம்.

கேள்வி: மற்றொருவரைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். அவர் யார்?

மகாபெரியவா: மற்றொருவர் உள் நாட்டில்தான் வாசம் செய்கிறார். அவர் ஒரு சீரிய ஞானியாக விளங்குகிறார். நீங்கள் அவரை நாடிச் செல்லலாம்.

கேள்வி: அவரைப் பற்றி மேலும் விவரம் தெரிந்துகொள்ளலாமா?

மகாபெரியவா: அவரை மகரிஷி என்று கூறுவார்கள். வடஆற்காடு ஜில்லா, திருவண்ணாமலை என்னும் ஊரில், ஜோதிமயமாக விளங்கும் அருணாசலத்தில் அவர் வசித்து வருகிறார். அவரை அடைய மேலும் விவரங்களை அவசியமானால் தெரிவிக்கிறேன்.

கேள்வி: தங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். அதே இடத்திலிருந்து என்னைக் காண ஒருவர் வந்திருக்கிறார். தங்களுக்குள்ள எவ்வளவோ முக்கியமான அலுவல்களுக்கிடையில், தங்களது காலத்தை நான் உபயோகப்படுத்திக்கொண்டுவிட்டேன். அதற்காக என்னை மன்னிக்கவேண்டும். எனக்குப் போக விடை தருவீர்களா?

மகாபெரியவா: சரி. நீங்கள் தவறாமல் திருவண்ணாமலைக்குச் செல்வீர்களென்று நினைக்கிறேன்.

கேள்வி: தென்னிந்திய பயணத்தை நான் இன்றுடன் முடித்துக்கொண்டும் நாளை புறப்படு வதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் முன்பே செய்துவிட்டேன். இந்த நிலையில் நான் என்ன செய்வது?

மகாபெரியவா: உங்கள் ஏற்பாட்டை மாற்றிக் கொண்டு, மகரிஷியைச் சந்தித்த பிறகே தென்னிந்தியாவைவிட்டுப் புறப்படுவது என்ற ஒரு தீர்மானத்தைச் செய்துகொள்ளுங் கள். நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். உங்கள் விருப்பமெல்லாம் நன்கு நிறைவேறும்.

மகரிஷியைப் பார்த்துவிட்டுப் பிறகு புறப்படுவதாக மகா சுவாமிகளிடம் வாக்களித்துவிட்டு, பிரிவதற்கு மனமில்லாமல் அவரிடம் விடைபெற்றுக்கொள்கிறார் பால்பிரண்டன். பின்னர், தான் எழுதிய நூலில் தம்முடைய செங்கல்பட்டு அனுபவங்களைப் பதிவு செய்கிறார்.

‘குழந்தைப் பருவத்திலிருந்தே கடவுள் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தப் பெரியவரை விட்டுப் பிரிய எனக்கு மனம் வரவேயில்லை. ஒரு பீடாதிபதியாக இருந்தும் அவரது மனம் அதிகாரத்தை நாடவில்லை. அவர் எல்லா வற்றையும் துறந்தவர். பக்தர்கள் அவருக்கு அளிக்கும் காணிக்கைகளையெல்லாம், அவற்றைப் பெறத் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் கொடுத்துவிடுகிறார். தேஜோமயமான அவரது அழகிய உருவத்தை நான் ஒருபொழுதும் மறக்க முடியாது...'

அன்று மாலை வரை செங்கல்பட்டிலேயே சுற்றிக்கொண்டு, அந்த ஊரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாலும் புறப்படுமுன் மறுபடியும் ஒரு முறை சுவாமிகளைப் பார்த்துவிட விரும்பி யிருக்கிறார், பால்பிரண்டன்.

`அப்போது அந்த ஊரின் பெரிய ஆலயம் ஒன்றில் கூடியிருந்த பெரிய கூட்டத்தின் நடுவில் சுவாமிகள் அமர்ந்து சில உபதேச மொழிகளைக் கூறிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் பெரியோர்கள், பெண்கள், குழந்தைகள் யாவரும் உட்கார்ந்திருந்தனர். அவர் பேசிய மொழி எனக்குப் புரியாவிடினும், நல்ல கல்வி அறிவுள்ள பிராமணனும், படிப்பில்லாத குடியானவனும் ஒரேவிதமாக சுவாமிகளின் உபதேச மொழிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மட்டும் நான் தெரிந்துகொண்டேன்.

சுவாமிகளின் அழகிய திருமேனி என் உள்ளத்தைக் கவர்ந்தது. அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களின் திடமான நம்பிக்கையைக் கண்டு நான் பொறாமைகொண்டேன். அவர்களது வாழ்க்கையில் அவர்கள் சந்தேகம் கொள்ளவில்லை. ‘கடவுள் ஒருவர் இருக்கிறார்’ என்ற எண்ணம் அவர்களது வாழ்க்கையை மேலும் திடப்படுத்தியிருந்தது.

அவர்கள் வேறு எந்தச் சிந்தனையிலும் தங்கள் மனதை ஈடுபடுத்தவில்லை. மேடு பள்ளமான இந்த உலக வாழ்க்கையைப் பற்றியோ, பிரபஞ்சத்தின் ஒரு பாகமான பூமியின் அழிவைப் பற்றியோ அவர்கள் கவலை கொள்ளவில்லை” என்று எழுதியிருக்கிறார் பால் பிரண்டன்.

மகா பெரியவா - பால்பிரண்டன் இடையே நடந்த அந்த ஆழமிக்க உரையாடலை ஒரு முறைக்கு இருமுறை படிக்கும்போது, சுவாமிகள் அன்று தெரிவித்த கருத்துகள் பால்பிரண்டனுக்கு மட்டுமே ஆனதில்லை என்பதும் பக்தர்கள் ஒவ்வொருவமே தெரிந்துகொள்ளவும், புரிந்து கொள்ளவுமான அரிதான விஷயங்கள் இவற்றில் புதைந்திருக்கின்றன என்பதும் தெளிவாகும்.

மகா பெரியவா மகிமை அது!

- வளரும்...