Published:Updated:

மகா பெரியவா - 38

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 38

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

‘சந்தியா காலமென்னும் பிரதோஷ காலத்தில் ஆனந்தத் தாண்டவமாடி புஷ்பம் போல் மலர்கின்றவரும், வேதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்கும் உபநிடதங்களில் தங்கியிருப்பவரும், தன்மீது எப்போதும் ஆசை கொண்டு விளங்கும் இனிமையான வண்டின் பெயரைக்கொண்ட பிரமராம்பிகையால் அழகுபடுத்தப்பட்டவரும், சத்துவக் குணத்துடன் விளங்கி எல்லா தேவர் களாலும் பூஜிக்கத்தக்கவரும், சிவா என்னும் பெயருடன் விளங்கும் அம்பிகையால் தழுவப் பெற்றவருமான ஸ்ரீசைலத்தில் விளங்கும் மல்லிகாஜுன மகாலிங்கத்தை வணங்குகிறேன்.'

- ஆதிசங்கரர் பாரத பூமியைச் சுற்றி வந்தபோது, ஸ்ரீசைலத்தை அடைந்து அங்கு அமைந்துள்ள மல்லிகார்ஜுன மகாலிங்கத்தை தரிசனம் செய்ததற்குச் சான்றாக விளங்கும் சுலோகம் இது. பகவத்பாதாள் இயற்றிய சிவானந்த லஹரியில் இடம்பெற்றுள்ளது இது.

மகா பெரியவா மனத்துக்கு மிகவும் பிடித்தமான சுலோகங்களில் இதுவும் ஒன்று. இதை அடிக்கடி தமது இனிமையான குரலில் பாடி, ஈசனை அவர் துதி செய்தது உண்டு. பக்தர்கள் பலரும் சுவாமிகள் பாடக்கேட்டுப் பரவசப்பட்டிருக்கிறார்கள்.

மகா பெரியவா - 38

கர்னூலில் மகா சுவாமிகள் முகாமிட்டிருந்த போது ஸ்ரீசைல யாத்திரை சென்று வர வேண்டும் என்று கருதி, அத்தலத்துக்குச் செல்லும் வழியைப் பற்றி உள்ளூர்வாசிகளிடம் வினவினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அன்று கிரகணம் இரவு 9.30 மணிக்குப் பிடித்து 10.45 மணிக்கு விட்டது. கானகத்தில், ஓங்கி வளர்ந்திருந்த மரக்கூட்டம் நிலவின் ஒளியைக்கூட கண்களுக்குப் புலப்படாத அளவு செய்துவிட்டது!

சிவராத்திரி முதலான விசேஷ நாள்களில் அங்கு பயமின்றி சென்று வரலாமென்றும், “அடுத்த மாதம் சிவராத்திரி வருது பெரியவா... அப்போ சௌகரியமா போயிட்டு வந்துடலாம்” என்றும் சொல்லப்பட்டது.

தாமதப்படுத்துவதில் சுவாமிகளுக்கு மனம் இல்லை. எனவே, ஸ்ரீசைலத்துக்கு விரைவில் சென்று வர ஏதுவாக ஒரு மார்க்கம் குறித்து தாமே ஆலோசித்தார். கடப்பைக் கால்வாய் வழியாகப் படகில் போய் வருவதென்று தீர்மானமாயிற்று. அதன்படியே, ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் பூஜைக்குவேண்டிய சாமான்களுடன், சிறு பரிஜனக் கூட்டத்தையும் உடன்வரப் பணித்து, கர்னூலிலிருந்து படகில் பயணித்தார் மகா பெரியவா. வழியில் நான்கு நாள்கள் வெவ்வேறு ஊர்களில் தங்கி, அன்றாட நித்ய பூஜைகளை முடித்துக்கொண்டார்.

பெத்தசெறு எனும் இடத்திலிருந்து நடைபயணமாக மலையின்மீது ஏறி, சுக்ல பர்வதம் என்று அறியப்பட்ட மிகக் கடுமையான ஏற்றத்தைக்கடந்து, மல்லிகார்ஜுனரையும் பிரமராம்பிகையையும் தரிசித்தார். வெகுநேரம் ஈசன் சந்நிதியிலும் அம்பிகை சந்நிதியிலும் நின்று, ஸ்ரீஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரியி லிருந்தும் சௌந்தர்ய லஹரியிலிருந்தும் பல சுலோகங்களைப் பாடி துதி செய்தார்.

அடுத்த நாள் சந்திர கிரகணம். கிரகண ஸ்நானத்துக்கென்று பாதாள கங்கைக்குச் சென்றார் மகா பெரியவா. அந்த இடத்துக்கு 900 படிகள் இறங்கிச் செல்ல வேண்டும். அன்று கிரகணம் இரவு 9.30 மணிக்குப் பிடித்து 10.45 மணிக்கு விட்டது. மலைமீது அமைந்துள்ள அடர்ந்த கானகத்தில், ஓங்கி வளர்ந்திருந்த மரக் கூட்டம் நிலவின் ஒளியைக்கூட கண்களுக்குப் புலப்படாத அளவு செய்துவிட்டது.

பாதாள கங்கையின் கரையோரமாக மரக் கிளைகளையும் காட்டுத் தழைகளையும் கொண்டு பர்ணசாலை அமைக்கப்பெற்றது. அன்றிரவு அந்தப் பர்ணசாலையில்தான் சுவாமிகளின் ஸ்ரீசந்திர மௌளீஸ்வரர் பூஜை நடைபெற்றது. பெரிய தீவட்டங்களைச் சிப்பந்திகள் இரவு முழுவதும் எரியவிட்டனர். குளிர் நீங்குவதற்குக் காட்டுத் தழைகளையும், மரச்சுள்ளிகளையும் சேகரித்து நெருப்பு ஜுவாலையை உண்டாக்கினார்கள்.

மறுநாள் காலையில் புறப்பட்டு 900 படிகள் மேலே ஏறி, மறுபடியும் ஸ்ரீசைலத்தை அடைந்து, இரண்டு நாள்கள் அங்கே தங்கி, பின்னர் பெத்த செறுவை அடைந்து, அங்கிருந்து படகு மூலம் கர்னூலுக்குப் பயணமானார்.

மகா பெரியவா - 38

மகா சுவாமிகளின் ஸ்ரீசைலம் விஜயம் பற்றி அறிந்த அந்தப் பகுதி ஆதிவாசிகள் - சுமார் 100 பேர் அடங்கிய குழு - நாகலூட்டியில் தரிசனம் செய்து மகிழ்ந்தார்கள். முன்னதாக சுவாமிகளின் கோஷ்டியைத் தங்கள் பகைவர்கள் என்று நினைத்துவிட்டார்கள் இவர்கள். பின்னர் உண்மையறிந்து, அந்தக் கோஷ்டிக்கு வனவிலங்கு களால் எவ்வித ஆபத்தும் நேராத வண்ணம் அவர்கள் காவல் காத்தார்கள். சாமான்களை மலைமீது ஏற்றிச் செல்வதற்கும் உதவி செய்தார்கள். மடத்திலிருந்து இவர்களுக்குப் பண உதவி செய்ய முன்வந்தபோது, ஏற்க மறுத்துவிட்டார்கள்.

“இந்தப் பகுதிக்கு பெரியவங்க யாரேனும் விஜயம் செய்யும்போதெல்லாம் அவங்க முன்னாடி நடனமாடி களிப்புற செய்யறது எங்க வழக்கம். சாமியும் எங்க நடனத்தைப் பார்வையிட்டு ஆசி வழங்கணும்...” என்றார்கள்.

சுவாமிகள் சம்மதித்தார். சிறிது நேரம் நடனம் நடந்தது. சிறிய பெண் குழந்தைகளும் நடனத்தில் கலந்துகொண்டு அவர்களது பழைமையான முறைப்படி நடனமாடினார்கள். அவர்கள் அனைவருக்கும் விபூதி பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்தார் மகா பெரியவா.

மகா பெரியவா விஜயம் செய்த அடுத்த நகரம் ஹைதராபாத். சுவாமிகள் இங்கே தங்கியிருந்த போது, அரசக் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு மரணத்தை யொட்டி சில நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப் பட்டது. துக்க நாள்களில் நகரத்தில் எந்தவித வாத்தியமும் இசைக் கச்சேரிகளும் நடைபெறக் கூடாது என்பது அரசு விதி. அப்படியிருந்தும் சுவாமிகளின் நித்ய பூஜைக்கு நாகஸ்வரம் வாசிக்க ஏதுவாக, நிஜாம் விதிவிலக்கு அளித்திருந்தார்.

நாற்பது நாள்களுக்கு மேல் ஹைதராபாத்தில் தங்கியிருந்தார் மகா பெரியவா. பின்னர் கங்கா யாத்திரை தொடர்ந்தது. ஜன நெருக்கடியற்ற பிரதேசங்களின் வழியே பயணம் செய்தாக வேண்டிய நிலை. எனவே, தன் பரிவாரங்களின் ஒரு பிரிவை ஹைதராபாத்திலேயே விட்டு வைப்பதென தீர்மானித்தார். எனவே, மடத்தின் வண்டிகள், கால்நடைகள், சாமான்கள் போன்ற சிலவற்றை அங்கே விட்டுவைக்க, சிஷ்யர்கள் சிலர் அவற்றைப் பொறுப்புடன் கவனித்துக்கொண்டனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மகா பெரியவா ஆந்திர தேசத்துக்குத் திரும்பியபோது, அவற்றை மடத்தில் ஒப்படைத்தார்கள்.

மகா பெரியவா - 38

சுமார் இரண்டு வாரங்கள் நாக்பூரில் தங்கியிருந்து விட்டு, காம்டி, மன்ஸேர், தியோல்பார், காவாஸா, கோராய், மூர்க்கான் வழியாக சியோனி எனும் ஜில்லா தலைநகருக்குச் சென்றார் மகா பெரியவா. வந்த வழி முழுவதும் மலைப்பிரதேசங்கள். அங்கே தண்ணீர் கிடைப்பதே அரிதாக இருந்திருக்கிறது. ஜூன் மாதம் என்பதால் 120 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.

சுவாமிகளின் ஸ்நானத்துக்கும், பூஜைக்கும், கால்நடைகளுக்கும், நூற்றுக்கணக்கான மடத்து ஊழியர்களுக்கும் தண்ணீர் வசதியும், உணவு வசதியும் செய்துகொடுக்க மிகவும் கஷ்டப்பட வேண்டியதாயிற்று. பகல் நேரத்திலெல்லாம் வனப் பிரதேசங்களில் கூடாரங்கள் அமைத்து, அவற்றில் தங்கியிருந்தார்கள்.

இரவில் பெரிய தீவட்டிகளின் உதவியுடன் பயணத்தைத் தொடரவேண்டிய நிலை. பயணம் எவ்வளவு கடுமையாக இருந்தபோதும், வழியில் இன்னல்கள் பல நேர்ந்தபோதும், மிகவும் திடமான மனத்துடன் பசி, தாகம் இரண்டையும் மறந்தவர்களாக, ஆசார்ய மூர்த்தியின் சேவையே தங்களின் லட்சியம் என மதித்து, எவ்வகையிலும் சுவாமிகளின் கங்கா யாத்திரையை முடிக்கச் சேவை செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்ட அந்த சிஷ்யர்களின் பெருமையும், பக்தியும் ஈடற்றவை.

நாள் ஒன்றுக்கு சுமார் 15 மைல்கள் செல்லக் கூடிய யாத்திரை. அந்தப் பிரதேசத்தில் சுமார் 25 மைல்களுக்கு மேல் செல்ல வேண்டியதாயிற்று. சுவாமிகளின் இந்த யாத்திரை முழுவதும் நடை பயணமாகவே நிகழ்ந்திருக்கிறது. பல்லக்கைச் சுமப்பவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் எனும் கருணையுடன் பலநேரம் சிவிகையில் ஏறாமல் வெகு தொலைவு நடந்தே சென்றிருக்கிறார் மகா பெரியவா. போகிகள் என்று அறியப்பட்ட பல்லக்கு சுமக்கும் ஊழியர்கள், பெரியவா நடப்பது பார்த்து கண்ணீர் வடித்தார்களாம். சிவிகையில் ஏறுமாறு அவரை வேண்டினார்களாம். சுவாமிகளின் பரிவாரங்களான யானை, குதிரைகள், மாடுகள் போன்ற வாயில்லா ஜீவன்களும் இந்தக் கடுமையான பயணத்தை மேற்கொண்டு புண்ணியப் பயனைப் பெற்றன.

மடத்து ஊழியர்கள் சம்பந்தப்பட்டவரையில், மொழி பெரிய பிரச்னையாகி எளிதில் சமாளிக்க முடியாததாக இருந்தது. மகா பெரியவா அந்தந்தப் பிரதேச மொழிகளை எளிதில் பேசக் கூடியவராக இருந்ததால், தேவை ஏற்பட்டபோதெல்லாம் சுவாமி களே அந்த மொழியை பேச வேண்டியிருந்தது.

மத்திய மாகாணத்தின் ஒரு ஜில்லா தலை நகராகிய `சீயோனி' எனும் ஊரில், பொது மக்கள் மகா பெரியாவாவுக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். அவர் தங்குவதற்கு வசதிகள்கூடிய இடம் ஒன்றையும் அமைத்திருந்தார்கள். ஒரு வாரமாவது பெரியவா அங்கே தங்கிச் செல்ல வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை. ஆனால், சாதுர்மாத சங்கல்பத்தை மேற்கொள்ள ஒரு மாதமே இருந்தது.

அந்தச் சங்கல்பத்தை `அலகாபாத்' எனும் பிரயாகையில் முடிக்க வேண்டும் என்பது சுவாமிகளின் தீர்மானம். அதற்கு மேலும் 400 மைல்கள் பயணிக்க வேண்டியிருந்தது. எனவே, ஊர் மக்களின் பிரார்த்தனையை ஏற்க முடியவில்லை. அதன்பின்னர் வேறு பல சிற்றூர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, ஜூலை 23-ம் தேதி திங்கள்கிழமை அலகாபாத் என்னும் பிரயாகை புண்ணியத் தலத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா.

- வளரும்...

கல்யாண வரம் தரும் செவ்வரளி மாலை!

ரோடு மாவட்டம், கோபிசெட்டிப் பாளையம் அருகில் உள்ள ஊர் மலையப்பப்பாளையம். இங்குள்ள அழகிய மலையை உதயகிரி என்று சொல்வார்கள். இதன் மீது கோயில் கொண்டிருக்கிறார் உதயகிரி முத்துவேலாயுத ஸ்வாமி!

மகா பெரியவா - 38

சிறந்த வரப்பிரசாதி இந்த முருகன். கோயிலுக்கு வடக்கே சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. உடலில் தேமல், கட்டி போன்ற ஏதேனும் தோல் வியாதிகள் வந்து அவதிப்படுவோர், தீர்த்தப் பொய்கையில் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலையை இட்டு முருகக் கடவுளை வழிபட்டால், விரைவில் தோல் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்!

அதேபோல், உதயகிரிநாதனுக்குச் செவ்வரளி மாலை சார்த்தி, 108 தீபமேற்றி வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடி வரும்; பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும்; கடன் தொல்லைகள் நீங்கி சுபிட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.

சித்திரை மாதம் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முருகக்கடவுளின் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுவதை தரிசிக்கலாம். இந்த நாளில் முருகனை தரிசிப்பது விசேஷம்!

- கே.ராமநாதன், திருப்பூர்