Published:Updated:

மகா பெரியவா - 39

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 39

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

யிரக்கணக்கானோர் சூழ்ந்திருக்க, வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க, பூரணகும்ப மரியாதைகளுடன் பிரயாகையின் எல்லையில் வரவேற்கப்பட்டார், மகா பெரியவா. சுவாமிகள் தங்குவதற்கு `தாராகஞ்ச்' தர்மசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘குரு மகராஜிக்கு ஜே!’ என்று மக்கள் கோஷமிட்டுவர, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார் பெரியவா.

கங்கையில் கலப்பதற்காக 1922-ம் வருடம் ராமேஸ்வரத்தில் சேதுமாதவர் சந்நிதியில் எடுத்துக்கொண்ட மணலை தம் பூஜையிலேயே வைத்திருந்தார் மகா சுவாமிகள். அந்த மணலைக் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சேரும் இடமாகிய பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்தில் கலக்க வேண்டும் என்பது திட்டம். இதற்காக 1934, ஜூலை 25-ம் தேதி நாள் குறிக்கப்பட்டிருந்தது. அந்த சுபயோக சுப நாளில் தம் பரிவாரங்களுடன் திரிவேணி சங்கமத்துக்கு மகா பெரியவா வர, பின்னால் மக்கள் திரண்டு வந்திருந்தார்கள். புரோகிதர்களும் வித்வான்களும் அங்கு இருந்தார்கள். விதிப்படி சங்கல்பம் எடுத்துக்கொண்டார் சுவாமிகள். புரோகிதர்களுக்கும் மற்ற அந்தணர்களுக்கும் தானங்கள் வழங்கினார். வெள்ளிப் பேழையிலிருந்த ராமேஸ்வரம் மணலைக் கையிலெடுத்து புனித கங்கையில் கலந்தார். அந்த வெள்ளிப் பேழையை ஒரு பண்டாவுக்கு தானமாக வழங்கினார். சுவாமிகளுடன், குழுமியிருந்த ஆயிரக்கணக்கானோர் ஸ்நானம் செய்து தங்களைப் புனிதமாக்கிக்கொண்டனர்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அலகாபாத்திலிருந்து 79 மைல் தொலைவிலுள்ள காசிக்கு நடந்தே சென்றிருக்கிறார் மகா பெரியவா. சுமார் 25,000 பேர் மகா சுவாமிகளை வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச்சென்றது வரலாறு. ஊர்வலத்தின் முன்னால், யானைமீது சுவாமி சிவானந்த பிரும்மச்சாரி ரிஷபக்கொடியைத் தாங்கிக்கொண்டு வீற்றிருக்க, பின்னால் மற்றொரு யானையில் ஜகத்குரு ஆதிசங்கரரின் உருவப்படம் பிரகாசித்துக்கொண்டிருக்க, மகா பெரியவா நடந்து சென்றார். மகானின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்குக் கூட்டம் முண்டியடித்தது. பல இடங்களில் தம் பல்லக்கின்மீது ஏறி நின்று பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார் பரமாசார்யர்.

மகா பெரியவா
மகா பெரியவா

காசியில் முகாமிட்டிருந்த தருணம், பண்டித மதன்மோகன மாளவியாவின் அழைப்பை ஏற்று காசி ஹிந்து சர்வ கலாசாலைக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா. பிரத்யேகமான ஆசனத்தில் சுவாமிகள் அமர்ந்திருக்க, ஐந்து சுலோகங்கள் அடங்கிய வரவேற்பை வாசித்து சமர்ப்பணம் செய்தார் பண்டித மாளவியா. அவற்றின் சுருக்கம்:

‘எவருடைய திருவடியை மனிதன் எண்ணிய வுடன் எல்லாவிதமான அஞ்ஞான இருளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடுமோ, எந்த மகானது திருவாக்கிலிருந்து வெளிப்படும் தேன்மொழிகள் உலகத்தின் எல்லா திசைகளிலும் பரவி ஒலிக்கின்றனவோ, எவரிடம் எல்லா சாஸ்திரங்களின் உட்பொருளும் அடங்கி பிறர் அறிய கண்ணாடியைப் போலப் பிரதிபலித்து வருகிறதோ, அத்தகைய மகிமைகள் வாய்ந்த ஸ்ரீசங்கரரது காஞ்சி பீடத்தில் அவரது ஸ்தானத்தில் விளங்கிவரும் அண்ணலே...

பாரத நாட்டின் தவப்பயனாய், தத்துவம், ஞானம், தவம், கருணை, கொடை, அருள் முதலிய குணங்களின் உருவாகத் தோன்றியிருக்கும் தங்களின் கீர்த்தியும், கருணையும் நாடு முழுவதும் பரவி மக்களைப் புனிதராக்கிப் பிரகாசித்து வருகின்றன...

மிகவும் கொடிய இக்கலியில், தர்மங்களுக்குக் குறைவு ஏற்பட்டுவரும் இத்தருணத்தில், என்றும் அழியாத நலனை மக்கள் அடைவதற்கு ஆதாரமாக உள்ளனவும், தங்கள் திருவாக்கிலிருந்து வெளிவரவிருக்கும் தேன்மயமானவையுமான உபதேச மொழிகளைப் பருக நாங்கள் காத்து நிற்கிறோம். தங்களது உபதேசம் உலகத்தின் நன்மைக்கே அஸ்திவாரமாக விளங்கும்...’

வரவேற்பு வாசித்தளிக்கப்பட்ட பிறகு வடமொழியில் உபதேச மொழிகளை அருளினார் மகா பெரியவா. அவற்றின் சுருக்கம்.

‘உள்ளத்தில் எவ்வளவுக்கெவ்வளவு அமைதி நிலவுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு இன்பம் நேரிடுகிறது என்பது உலக அனுபவம். மன அமைதியின் உயர்நிலையே மேலான புருஷார்த்தமாகும். அமைதி குறைய குறைய துன்பமும் வளரும். மனிதர்கள் தங்கள் துன்பங்கள் நீங்குவதற்கு முயற்சி செய்யும்போது, பிறரை அவர்கள் துன்புறுத்தவும் நேரிடுகிறது. மக்கள் எல்லோரும் புலன்களைப் பறிக்கும் வெளி விஷயங்களிலிருந்து தங்கள் மனத்தைத் திருப்பி, அதைத் தங்கள் வசமாக்கி அமைதியாக இருக்க எப்போது முற்படுகிறார்களோ, அப்போதுதான் துன்பம் அவர்களை அணுகாமல் இருக்கும்.

கல்வியால்தான் மக்கள் அமரத்துவம் (மரணம் இல்லாத்தன்மை) அடைகிறார்கள். எதற்கு மேலாக ஒரு பயன் உலகில் இல்லையோ, அந்தப் பயனைக் கல்வி அளிக்கிறது. அமரத்துவத்தைக் கொடுப்பதே மேலான கல்வி. மற்றவிதமான கல்விப் பயிற்சிகளெல்லாம் உலகப்பயனை அளிக்கின்றன. ஆனால், அவையும் படிப்படியாக இறைவனைச் சேர உபயோகப்படலாம். உலகப்பயன் என்பது பொருள் திரட்டுவதையே குறிக்கிறது. பொருளும் பலவித தர்மங்களைச் செய்ய பயன்படுகிறது. இந்தத் தர்மங்களும் பிரும்மஞானத்துக்குச் சாதகமாகிறது' என்ற ரீதியில் மகா சுவாமிகளின் உபதேச மொழி தொடர்ந்தது.

ஹிந்து சர்வ கலாசாலையின் பாரம்பர்யம் குறித்தும் பண்பாடு குறித்தும் எடுத்துரைத்தார். நிறைவாக, கலாசாலை யில் பயிலும் மாணவர்களுக்கும் உபதேசம் செய்தார்.

‘உங்களது புண்ணியம் எத்தகையது என்று எளிதில் கூற முடியாது. ஞானம், விவேகம் இவை இரண்டும் வாழ்க்கையில் பயன்தரக்கூடிய வகையில், புனிதமான இம்மனித ஜன்மாவை அடைந்திருக்கிறீர்கள். நாட்டின் நலனுக்கும் அபிவிருத்திக்கும் இவை இரண்டும் உதவுமாறு நீங்கள் ஊழியம் செய்ய வேண்டும். இப்போதெல்லாம் கால வேறுபாட்டினால் மக்கள் மனத்தில் பலவித மாறுபாடான எண்ணங்கள் தோன்றி வருகின்றன. ஆற்றின் வெள்ளம்போல் பாய்ந்து வரும் அரசியல் மாறுபாடுகளால் உதவியின்றித் தனித்து நிற்கும் இந்த சநாதன தர்மமானது துன்புறுத்தப்படும் நிலையிலும் இருந்து வருகிறது.

மகா பெரியவா
மகா பெரியவா

ஜன சமுதாயமும் மாறிக்கொண்டே வருகிறது. ஆகையால், இந்த சர்வ கலாசாலையில் கல்வி கற்று விவேகிகளாகவும் வித்வான்களாகவும் வெளிவருபவர்கள், மிகவும் தீரத்துடன் அரசியல் விஷயத்தில் முன்னேறும் வழிகளில் பிரவேசித்து தர்மத்துக்கு இடையூறு இல்லாமல் நாட்டின் நன்மைக்காக உழைக்க முற்பட வேண்டும். உங்கள் படிப்பின் தன்மையானது மக்களின் நல்வாழ்வுக்கு உதவும் படியாகவும், அரசியல் நிர்வாகத்தை எளிதாக செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இங்கிருந்து வெகுசமீபத்தில் வடபுறமாகக் கங்கை நதி ஓடுகிறது. அதன் கரையில் நின்று வணங்கும் புண்ணியவான்களின் எதிரில் சூரியன் பிரகாசிக்கிறார். இந்தப் பாரத நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் தங்கள் பெற்றோர்களால் இந்த இடத்துக்கு அனுப்பப்படும் மாணவன் ஒவ்வொருவனும், தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் புனிதமான கங்கைக் கரையில் அமைந்திருக்கும் இந்த விசாலமான மண்டபத்தில் அவரவர் வழக்கப்படி கடவுள் வழிபாட்டைச் செய்து, அன்பை வளர்த்துத் தர்மம் மற்றும் ஒழுக்கத்தினின்று பிறழாமலிருக்க உறுதிகொள்ள வேண்டும்.'

மகா பெரியவா மேற்கொண்ட மகத்தான யாத்திரை தொடர்ந்தது. போகும் ஊர்களிலெல்லாம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஒன்றுகூடி மகானுக்கு வரவேற்பளித்து உவகை பூண்டார்கள்.

- வளரும்...

தீர்த்தகிரி அற்புதங்கள்!

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் பாலாற்றின் தென் கரையில் புதுவசூர் எனும் கிராமத்தில் மலைமீது அமைந்துள்ளது, தீர்த்தகிரி முருகன் கோயில். வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்துக்குக் கிழக்கே 8 கி.மீ தொலைவிலும், ரத்தினகிரி முருகன் ஆலயத்துக்கு மேற்கே 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது, இந்த தலம்.

தீர்த்தகிரி அற்புதங்கள்
தீர்த்தகிரி அற்புதங்கள்

‘சுட்ட பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா’ என்று முருகன், ஒளவையிடம் சொல்லாடல் புரிந்த தலம் இது என்கிறார்கள். பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கடும் கோடையிலும் வற்றாத நீர் ஊற்று ஒன்றும் புனிதக் கிணறு ஒன்றும் உள்ளன. இவற்றின் தீர்த்தம், நோய் தீர்க்கும் சக்தி வாய்ந்தது.

மலைக்கோயில் பிராகாரத்துக்கு எதிரேயுள்ள கன்னிக் கோயிலில், கன்னிகைகள் மஞ்சள் அரைக்கப் பயன்படுத்திய கல்லை இன்றும் காணலாம். மேலும், மலைமீது திகழும் முருகனின் திருப்பாதங்கள் பதிந்த இரு இடங்களையும் புனிதமாகப் போற்றுகிறார்கள் பக்தர்கள்!

- கீர்த்தனா வேலு, காவேரிப்பாக்கம்