ஏற்கெனவே வாக்களித்தபடி பூரி ஜகந்நாத் க்ஷேத்திரத்துக்கு விஜயம் செய்தார், மகா பெரியவா. மறுநாள் விடியும் முன்னர் பூரி ஜகந்நாத்தின் எல்லைப்புறத்திலுள்ள சந்தன் தலாப் என்னும் தடாகத்தில் நீராடினார். அந்தத் தடாகத்துக்கு அருகில் ஓர் அலங்காரக் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. பூரியிலுள்ள நான்கு அத்வைத மடங்களின் சந்நியாசிகளும், பூரி ராஜாவும், முக்தி மண்டபப் பண்டிதர் களும், அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் சுவாமிகளை வரவேற்க அதிகாலையிலேயே கூடியிருந்தார்கள். ஊர் முழுவதும் தோரண அலங்காரங்கள் கட்டப்பட்டிருந்தன.

காலை ஏழு மணிக்கு, சந்தன் தலாப்புக்கு அருகில் சுவாமிகளுக்கு வரவேற்புப் பத்திரம் வாசிக்கப்பட்டது. பின்னர் கிளம்பிய பெரிய ஊர்வலத்தில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த விருதுகளும், பூரி ராஜாவின் விருதுகளும், மடத்தின் யானை, குதிரை, பாலா, மகரத் தோரணம், குடைகள் முதலானவையும் முன் செல்ல, நாகஸ்வர வாத்தியங்கள் முழங்கச் சென்ற ஊர்வலம் காலை பத்து மணிக்குக் கடற்கரையிலுள்ள கோவர்த்தன மடத்தை அடைந்தது. மடத்தின் சிம்மாசனத்தில் மகா பெரியவா அமர, கோவர்த்தன மடம், சங்கரானந்த மடம், சிவதீர்த்த மடம், கோபால தீர்த்த மடம் ஆகிய நான்கு மடங்களின் சந்நியாசி களும், நிர்வாகிகளும் அவரை வணங்கினர்.

ஜகந்நாத்தில் பண்டிதர்களின் மகாசபை ஒன்று பழங்காலத் தொட்டு இருந்து வந்தது. பூரியை அடுத்த 18 சாஸனங்களின் பண்டிதர்களும் இந்தச் சபையில் அங்கம் வகித்தார்கள். பூரியிலுள்ள நான்கு அத்வைத மடங்களில் எந்த மடத்தின் அதிபர் அதிக வருடங்கள் சந்நியாச ஆசிரமத்துடன் இருந்துள்ளாரோ, அவரே அந்தச் சபையின் தலைவராக இருந்து வருவது பழங்காலத்து ஏற்பாடு. அந்தப் பகுதியில் தர்மசாஸ்திரம் தொடர்பான சர்ச்சைகள் எழும்போதெல்லாம், அவை பற்றி இந்தச் சபை எடுக்கும் தீர்ப்பே இறுதியானதாகும். ஆலயத்திலுள்ள முக்தி மண்டபம்தான் இந்தச் சபை கூடும் இடம். எனவே ‘முக்தி மண்டப சபை’ என்றே இது அழைக்கப்பட்டது.

இந்த மண்டபத்தின் நடுவில் அமைந்துள்ள, மிகப் புனிதமானதும் பழைமையானதுமான பீடத்தில் ஆதிசங்கரரின் நேர் பரம்பரையைச் சார்ந்த ஆசார்ய புருஷர்களே அமர்வதற்குத் தகுதியுள்ளவர்கள் என்று ஒரு விதி உண்டு. இம்மாதிரி சந்தர்ப்பம் அமைவது மிகவும் அரிது என்பதால், அன்றைய நிகழ்வை ஒரு பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டுமென்று முக்தி மண்டப சபையினர் தீர்மானித்தார்கள். இதை மகா பெரியவாவிடம் விண்ணப்பித்துக்கொள்ள, சுவாமிகளும் அன்றிரவு மறுபடியும் கோயிலுக்கு விஜயம் செய்தார். முக்தி மண்டப சபையின் பீடத் தில் அமர்ந்தார். மகானை புஷ்பங்களால் அர்ச்சித்து வணங்கி ஜெய கோஷம் எழுப்பினார்கள்.

மகா பெரியவா வடமொழியில் ஆற்றிய சொற்பொழிவில், “பாரத நாட்டின் மற்ற பாகங் களைவிட ஒரிசா (ஒடிசா) மாகாணத்தில் வேதக் கலை நன்றாகக் காப்பாற்றப்பட்டு வருகிறது. புனிதமான இந்த ஜதந்நாத் க்ஷேத்திரத்திலுள்ள முக்தி மண்டப சபையார் அளித்த பெருமைகள் எல்லாம், எவருடைய திருவடிகளை யாவரும் வணங்குகிறோமோ, எவருடைய அவதாரத்தினால் நாட்டில் இருந்த பல துர்மதங்கள் மறைந்தனவோ, அந்த ஆதிசங்கர பகவத் பாதருக்கே சாரும்...” என்றார்.

1936-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி பூரியில் உள்ள தாஸ்பூர் ராஜாவின் அரண்மனையில் தங்கியிருந்தார் மகா பெரியவா. அன்று பௌர்ணமி. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பௌர்ணமியன்றுதான் சந்நியாசிகள் வபனம் செய்துகொள்வது வழக்கம். அன்று வபன பெளர்ணமி. அந்த நாள்களில் அநேகமாக ஆறுகளிலேயே சுவாமிகள் ஸ்நானம் செய்வது வழக்கம். அன்று மகோததி என்னும் கிழக்குக் கடலில் விதிப்படி நீராடினார். (கிழக்கேயுள்ள வங்கக் கடலுக்கு மகோததி என்றும், மேற்கிலுள்ள அரபிக்கடலுக்கு ரத்னாகரம் என்றும் பெயர்).

தொடர்ந்து, சாக்ஷிகோபால் தலத்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு டிலாங் என்னும் ஊர் வழியாக குர்தா எனும் ஊரை அடைந்தார்.

பிறகு, அங்கிருந்து 85 மைல் தொலைவிலுள்ள சத்திரபூரை நோக்கி யாத்திரை புறப்பட்டது. இவ்வளவு தூரத்தைப் பாதயாத்திரையாகவே கடப்பது எளிதாக இருக்கவில்லை. பாதையில் இரு புறமும் உயர்ந்த மலைத்தொடரும் அடர்ந்த கானகமும் மிரட்டின. வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கும் பகுதி அது.

பகலிலேயே துப்பாக்கிப் பாதுகாப்புடன்தான் அந்தப் பகுதியைக் கடக்கவேண்டும். சுமார் 15 மைல் அகலமும், 50 மைல் நீளமும் உள்ள சில்கா ஏரியின் மேற்குப் பகுதியில், உயர்ந்த மலைகளின் அடிவாரத்தில் அந்தப்பிரதேசம் உள்ளது. தங்குவதற்கு வசதியான இடமோ, குடிநீரோ கிடைப்பது மிகவும் அரிது.

சில மைல் தூரம் இப்படியான பாதையென்றால், அதன்பிறகு மணற்பாங்கான பிரதேசம். மேலும் மலை மீது செல்லும் பாதைகள் ஏற்றஇறக்கத்துடன் கடினமாக இருக்கும். அத்துடன், தாங்கமுடியாத வெயிலின் கொடுமைவேறு! இப்படிப்பட்ட சூழலில், நாள் ஒன்றுக்கு சுமார் 25 மைல் தூரம் பயணித்திருக்கிறார் மகா பெரியவா. நம்மைப் போன்ற சாமான்யர்களால் கற்பனை செய்து பார்க்கவும் இயலாத சாதனை அன்றோ இது!

மகா பெரியவா அவர்களின் மகத்தான புனித யாத்திரை தொடர்ந்தது.

1936-ம் வருடம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி சிகாகோல் என்ற நகருக்கு விஜயம் செய்தார் பெரியவா. அங்கே குஜராத்திப் பேட்டையில் அவர் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. சிகாகோலை அடுத்துக் கடற்கரையில் அமைந் துள்ள ‘ஸ்ரீகூர்மா’ என்னும் தலத்துக்கும் விஜயம் செய்தார். அங்கே, கூர்மாவதாரக் கோலத்தில் ஆமை உருவத்தில் மகாவிஷ்ணு காட்சியளிக்கிறார். மந்தர மலையை மத்தாக வைத்து தேவர்கள் அமிர்தத்தைக் கடைந் தனர். அந்த மந்தர பர்வதம் நிலைகுலையாத வண்ணம், அதைத் தாங்கிக்கொள்ளவே திருமால் கூர்மாவதாரம் எடுத்தார். அந்த ‘கூர்ம க்ஷேத்திரம்’ விஜயநகர எல்லையில் இருந்தது.

விஜயநகரத்தை மகா பெரியவா வந்தடைந்த போது, ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அந்த வருட நவராத்திரி வைபவத்தை சுவாமிகள் அங்கேயே நடத்தவேண்டுமென அவரிடம் ஏற்கெனவே விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கு 50 வருடங்களுக்குமுன், 1885-ல்

காமகோடி பீடத்தின் 65-வது ஆசார்ய சுவாமி களாக விளங்கிய ஸ்ரீமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயநகர சமஸ்தானத்துக்கு விஜயம் செய்து, அந்த வருட நவராத்திரி பூஜையை அங்கு நடத்தியதைப் பதிவு செய்யும்விதமாக, அக்காலத்தில் எழுதி வைக்கப்பட்ட தினக்குறிப்பு களை மகா பெரியவாளிடம் காண்பித்தார்கள்.

விஜயநகரத்தில் பண்டிதர்களும் பொது மக்களும் நிறைந்த பெரும் கூட்டத்தில் ‘அத்வைத சித்தாந்தம்’ பற்றி உபன்யாசம் செய்தார் மகா பெரியவா. சிவ - விஷ்ணு அபேதத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, அதுவே ஹரிஹராத்வைதம் எனக் கூறினார். மேலும், ஸமர்த்த ராமதாஸ் முதலான பக்தர்கள் பக்தியின் பெருமையினாலும் உபாசனா மார்க்கத்தினாலும் இந்தப் பேதமற்ற அத்வைதத்தை மேற்கொண்டே மோட்சம் அடைந்ததாகவும் விளக்கினார்.

ஞான மார்க்கத்தைப் பற்றி விளக்கியபோது, ஞானியானவன் குருவின் உபதேசத்தினால் சிறிது சிறிதாக உலகப் பற்றை நீக்கி, வைராக்கியத்துடன் இருந்து, தனது சொந்த அனுபவத்தைக் கொண்டு மோட்சம் அடைவதாகவும், அதுவே ‘ஜீவபிரும்ம அத்வைதம்’ என்றார் மகா பெரியவா.

அன்று மாலை பெரியவா முன்னிலையில் சமஸ்தான சங்கீத வித்வான் வீணை வேங்கடரமண தாஸ், கச்சேரி செய்தார். நிறைவில், அவருக்குப் பீதாம்பரம் அளித்து அவரைப் பெருமைப் படுத்தினார் சுவாமிகள். மறுநாள் சிம்ஹாசல க்ஷேத்திரம் நோக்கிப் பயணப்பட்டார்.

ஆந்திராவில் சிவாலயங்களைவிட, விஷ்ணு ஆலயங்களே அதிகம். அதிலும் நரசிம்ம அவதாரத்தையே ஆந்திரர்கள் விசேஷமாகக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஆந்திராவின் பல பாகங்களில் நரசிம்ம மூர்த்தியின் ஆலயங்கள் அமைந்துள்ளன.

கர்னூல் மாவட்டத்தின் நந்தியாலிலிருந்து 37 மைல் தொலைவில், ஜன நடமாட்டமற்ற விசாலமான கானகத்தின் நடுவில் அகோபிலம் என்னும் க்ஷேத்திரம் இருக்கிறது. இதுவும் மிகவும் பழைமையான நரசிம்ம க்ஷேத்திரம். அழகிய சிங்கர் என்னும் சிறப்புப் பெயரை வைணவ வடகலைச் சம்பிரதாய மடாதிபதிகளான ஜீயர் சுவாமிகள் தாங்கி வருகிறார்கள். சிங்கர் என்னும் சொல் நரசிம்மத்தையே குறிக்கிறது.

அகோபிலத்திலுள்ள நரசிம்மப் பெருமாள் அந்த மடத்தின் உபாசனா மூர்த்தி. எனவே அந்த மடத்துக்கு, ‘அகோபில மடம்’ என்று பெயர். இதைப்போல புராணப் பிரசித்தி பெற்ற பல நரசிம்ம ஆலயங்களில் சிம்ஹாசல ஆலயமும் ஒன்று. இங்கு அமைந்துள்ள நரசிம்ம மூர்த்தியைப் பக்த பிரகலாதன் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுவது உண்டு. சுமார் 1000 அடி உயரமுள்ள சிம்ஹாசலம் என்னும் மலையில், 800 அடி உயரத்தில் இந்த நரசிம்மர் ஆலயம் நிர்மாணிக்கப் பட்டுள்ளது.

1936-ல் இங்கு விஜயம் செய்த மகா பெரியவா மலையின் அடி வாரத்திலுள்ள தேவஸ்தான விடுதியில் தங்கவைக்கப்பட்டார். மறுநாள் அதிகாலையில் ஸ்நான அனுஷ்டானங்களை முடிந்துக் கொண்ட மகா பெரியவா, மலை மீது ஏறி, வழியிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துகொண்டார்.

தேவஜர் மகாராணி உள்ளிட்ட பண்டிதர்கள் பலரும், நூற்றுக்கணக்கான கிராமவாசி களும், ஆதிவாசிகளும், சமஸ்தான அதிகாரிகளும் பின்தொடர மகான் மலையேறிய காட்சியை இப்போது கற்பனை செய்து பார்த்தாலும் சிலிர்க்கவைக்கிறது.

பின்னர், அருகிலுள்ள ஸ்ரீதிருபுராந்தகேசுவரர் ஆலயத்தை தரிசித்தார். மேலும், மலையில் அமைந்துள்ள கங்கதாரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றார். தொடர்ந்து அந்தப் புனித நதியில் ஸ்நானம் செய்தவர், தமது தண்டத்தினால் நீரைத் தொட்டு அதை மேலும் புனிதமாக்கினார்.

நாலாபுறமும் செடிகொடிகள் அடர்ந்து வெகு அழகாகக் காணப்பட்ட அந்தப் பகுதியில் ஒரு பாறையின்மீது அமர்ந்து, ஒரு மணி நேரம் தியானம் செய்தார் மகா பெரியவா. பின்னர், பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, புதிதாகத் தயாரிக்கப்பட்ட டோலியில் அமர்ந்து, ரம்மியமாகக் காணப்பட்ட இயற்கை அழகை அனுபவித்தவாறு மலையிலிருந்து கீழிறங்கினார் மகா பெரியவா.

- வளரும்...